என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி விரட்டிப்பிடித்த அதிகபட்ச இலக்கு இது தான். இந்த வெற்றியின் மூலம் தொடரை பாகிஸ்தான் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
    கராச்சி:

    பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நேற்றிரவு நடந்தது. இதில் கொரோனா தாக்கத்துக்கு மத்தியில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட்டுக்கு 207 ரன்கள் குவித்தது. கேப்டன் நிகோலஸ் பூரன் 64 ரன்களும் (37 பந்து, 2 பவுண்டரி, 6 சிக்சர்), ஷமர் புரூக்ஸ் 49 ரன்களும் விளாசினர். 

    அடுத்து கடின இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் பாபர் அசாமும் (79 ரன், 53 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்), விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வானும் (87 ரன், 45 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்) அதிரடியாக ரன்மழை பொழிந்து வெற்றிப்பாதையை சுலபமாக்கினர். 

    அந்த அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 208 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆசிப் அலி 7 பந்தில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 21 ரன்கள் திரட்டி களத்தில் நின்றார். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி விரட்டிப்பிடித்த (சேசிங்) அதிகபட்ச இலக்கு இது தான். இந்த வெற்றியின் மூலம் தொடரை பாகிஸ்தான் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
    விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியபோது நாங்கள் அவரை தொடர்புகொண்டு கேப்டன் பதவியில் நீடிக்க வலியுறுத்தினோம் என கங்குலி கூறினார்.
    புதுடெல்லி: 

    இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. அந்த சுற்றுப்பயணத்தின் ஒருநாள் போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டுள்ளார். 

    ஏற்கனவே அவர் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகியது தொடர்பாக பிசிசிஐ தலைவர் கங்குலி, ‘விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியபோது நாங்கள் அவரை தொடர்புகொண்டு கேப்டன் பதவியில் நீடிக்க வலியுறுத்தினோம்’ என கூறினார். 

    இதுகுறித்து நேற்று விராட் கோலியிடம் கேட்டபோது, ‘பிசிசிஐ-ல் இருந்து யாரும் என்னை தொடர்புகொண்டு பேசவே இல்லை’என பதிலளித்திருந்தார். இதையடுத்து விராட் கோலி - கங்குலிக்கு இடையே மோதல் நிலவுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. 

    விராட் கோலி, கங்குலி

    இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவிக்கையில், ‘கங்குலி - கோலி இருவரும் பெரிய பதவியில் இருப்பவர்கள். அவர்கள் பொது இடங்களில் ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டி சண்டை போட்டுக்கொள்ளவது சரியல்ல. இந்த பிரச்சனையை பிறகு பார்த்துகொள்ளுங்கள். இப்போது சர்ச்சையை கிளப்பாமல் வர இருக்கும் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் கவனம் செலுத்துங்கள்’ என அறிவுரை கூறியுள்ளார்.
    கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலிக்கும், விராட் கோலிக்கும் இடையே மோதல் இருப்பது தெளிவாக தெரிகிறது.
    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணிக்கு 3 வடிவிலான போட்டிகளுக்கும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) விராட் கோலி கேப்டனாக பணியாற்றினார். கோலியிடம் இருந்த 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டி கேப்டன் பதவி பறிக்கப்பட்டு ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. கோலி டெஸ்ட் போட்டிக்கு மட்டுமே கேப்டனாக செயல்படுவார்.

    விராட் கோலி 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து மட்டுமே விலகினார். அதே நேரத்தில் ஒருநாள் போட் டிக்கான கேப்டன் பதவியில் இருந்து அவரை கிரிக்கெட் வாரியம் அதிரடியாக நீக்கியது.

    காயம் காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ரோகித் சர்மா விலகினார். அதே நேரத்தில் ஒருநாள் தொடரில் விராட் கோலி ஆடமாட்டார் என்று தகவல் வெளியானது. இதனால் இருவருக்கும் மோதல் இருப்பதாக கூறப்பட்டது.

    இந்த நிலையில் விராட் கோலி நேற்று அளித்த பேட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவேன் என்றும், ரோகித் சர்மாவுடன் தனக்கு எந்த மோதலும் இல்லை என்றும் தெரிவித்தார்.

    மேலும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியுடன் நான் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன் என்று முடிவை தெரிவித்தபோது, கிரிக்கெட் வாரியம் எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. நல்ல முறையில் ஏற்றுக்கொண்டனர். வேண்டாம் ராஜினாமா செய்யாதீர்கள் என்று கூறவும் இல்லை. தயக்கம் காட்டவும் இல்லை. ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் என்னை நீக்கினார்கள் என்றார்.

    ஆனால் 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து கோலி விலகியது குறித்து கங்குலி கூறும்போது, கிரிக்கெட் வாரியம் தரப்பிலிருந்து அவரிடம் பேசி கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் கோலி அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்று தெரிவித்து இருந்தார்.

    கங்குலி தெரிவித்த கருத்துக்கும் தற்போது கோலி கூறியதற்கும் நிறைய முரண்பாடுகள் இருக்கிறது. இதில் உண்மையை சொல்வது யார் என்பது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலிக்கும், விராட் கோலிக்கும் இடையே மோதல் இருப்பது தெளிவாக தெரிகிறது.
    இங்கிலாந்துக்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா தேனீர் இடைவேளை ஒரு விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் சேர்த்துள்ளது.
    ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் அடிலெய்டில் இன்று தொடங்கியது. பகல்- இரவு போட்டியான இதில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

    டேவிட் வார்னர், மார்கஸ் ஹாரிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மார்கஸ் ஹாரிஸ் 3 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

    அடுத்து வார்னர் உடன் லாபஸ்சேன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த ஜோடியை இங்கிலாந்து பந்து வீச்சாளர்களால் பிரிக்க முடியவில்லை.

    டேவிட் வார்னர், லாபஸ்சேன்

    டேவிட் வார்னர் 108 பந்தில் அரைசதம் அடித்தார். லாபஸ்சேன் 156 பந்தில் அரைசதம் அடித்தார். தேனீர் இடைவேளை வரை ஆஸ்திரேலியா 53 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் சேர்த்துள்ளது.
    பாகிஸ்தான் சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து இதுவரை 6 வீரர்கள் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
    கராச்சி:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான மூன்று 20 ஓவர் போட்டியில் பாகிஸ்தான் முதல் 2 ஆட்டத்தில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது.

    பாகிஸ்தான்-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி கராச்சியில் இன்று நடக்கிறது.

    இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விக்கெட் கீப்பர் ‌ஷகிஹோப், இடது கை சுழற்பந்து வீரர் ஹோசின், ஆல் ரவுண்டர் ஜஸ்டின் கிரிவேஸ் ஆகிய 3 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இது தவிர அணியில் உள்ள 2 ஊழியர்களுக்கும் பாதிப்பு உள்ளது. மொத்தம் 5 பேர் நோய் தொற்றுக்கு உள்ளானார்கள்.

    ஏற்கனவே ஹோட்ரல், ரோஸ்டன் சேஸ், கெய்ல் மேயர்ஸ் ஆகிய 3 வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதுவரை 6 வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
    கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியான நபருடன் தொடர்பில் இருந்ததால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு அதிரடி முடிவு எடுத்துள்ளது.
    ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இன்று அடிலெய்டில் 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக தொடங்குகிறது. இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் ஏற்கனவே காயம் காரணமாக விலகியுள்ளார்.

    இந்த நிலையில் தற்போது கேப்டன் பேட் கம்மின்ஸ் அடிலெய்டு டெஸ்டில் விளையாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அவர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவருடன் தொடர்பில் இருந்ததாக, ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு இந்த முடிவை அதிரடியாக எடுத்துள்ளது.

    ஆனால், மெல்போர்னில் நடைபெற இருக்கும் பாக்சிங் டே டெஸ்டில் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு கேட்கவே இல்லை என இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    இந்தியா- தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் வரும் டிசம்பர் 26-ம் தேதி தொடங்குகிறது. ஒருநாள் கிரிக்கெட் அணிக்கான கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டு ரோகித் சர்மா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விரக்தியில், விராட் கோலி ஓய்வு கேட்டதை தொடர்ந்து அவர் அணியில் இடம்பெற வாய்ப்பில்லை என செய்திகள் வெளியாகின.

    மேலும், பல்வேறு வதந்திகள் வெளியாகின. இந்த நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்து விராட் கோலி விளக்கம் அளித்துள்ளார்.

    தன்னுடைய விளக்கத்தில் ‘நான் டி20 அணி கேப்டன் பதவியில் இருந்து மட்டுமே விலகுவதாக அணி தலைமையிடம் பேசியிருந்தேன். ஆனால் டெஸ்ட் அணி அறிவிப்பதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்னர் தலைமை அணி தேர்வாளர் அழைத்து  ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து என்னை நீக்கிவிட்டதாக கூறினார்.

    அதற்கு முன் என்னிடம் இதுகுறித்து யாரும் எதுவும் பேசவே இல்லை. கேப்டன் பதவிக்கு ரோகித் சர்மா நியமிக்கப்பட்டத்தில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ரோகித் திறமையான வீரர். கேப்டன் பதவிக்கு தகுதியானவர். நான் இப்போதும் இந்திய அணிக்காக தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் விளையாட தயாராகவே இருக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.
    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க முடியாததை விராட் கோலி தெரிவித்துள்ளார். டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக விளையாட முடியாத தகவலை ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணிக்கு தற்போது வெவ்வேறு கேப்டன்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 3 வடிவிலான போட்டிகளுக்கும் விராட் கோலி கேப்டனாக பணியாற்றினார்.

    கோலியிடம் இருந்த 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டி கேப்டன் பதவி பறிக்கப்பட்டு ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. கோலி டெஸ்ட் போட்டிக்கு மட்டுமே கேப்டனாக செயல்படுவார்.

    ஒயிட்பால் (20 ஓவர், ஒருநாள் ஆட்டம்) போட்டிகளுக்கு ரோகித் சர்மா கேப்டனாக பணியாற்றுவார். வீராட் கோலி 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து மட்டுமே விலகினார். அதே நேரத்தில் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து அவரை கிரிக்கெட் வாரியம் அதிரடியாக நீக்கியது.

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக ரோகித் சர்மா விளையாடவில்லை. டெஸ்டுக்கு துணை கேப்டனாக இருக்கும் அவர், தசைப்பிடிப்பு காரணமாக டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

    விராட் கோலி

    இந்த நிலையில் டெஸ்ட் கேப்டனான விராட் கோலி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடமாட்டார் என்று தகவல் வெளியானது. அவரது குழந்தைக்கு முதல் பிறந்தநாள் என்பதால் ஒருநாள் தொடரில் இருந்து விலக உள்ளார்.

    ஆனால் அவர் அதிகாரப்பூர்வமாக இது குறித்து வெளியிடவில்லை என்று கூறப்படுகிறது.

    தென் ஆப்பிரிக்க சுற்றுப் பயணத்தில் விராட் கோலி தலைமையில் விளையாட உள்ள டெஸ்ட் அணியில் ரோகித் சர்மாவும், ரோகித் சர்மா தலைமையில் விளையாட உள்ள ஒருநாள் போட்டி அணியில் கோலியும் ஆடாதது பல்வேறு யூகங்களை ஏற்படுத்தி உள்ளது.

    இருவருக்கும் மோதல் இருப்பதாகவும், இதனால் அணி பிளவுபட்டு உள்ள தாகவும் கூறப்படுகிறது. ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால் கோலி அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது.

    குடும்பத்தை காரணம் காட்டி கோலி ஒருநாள் தொடரில் இருந்து விலக்கு கேட்கிறாரா? அல்லது ரோகித் சர்மா தலைமையில் விளையாடுவதற்கு அவரின் மனநிலை இடம்கொடுக்க வில்லையா? என்பது தெரியவில்லை.

    இந்த நிலையில் இது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவருமான முகமது அசாருதீன் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க முடியாததை விராட் கோலி தெரிவித்துள்ளார். டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக விளையாட முடியாத தகவலை ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

    கோலி ஓய்வு எடுப்பதில் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் அதற்காக சரியான நேரத்தில் ஓய்வு எடுக்க வேண்டும். இருவருக்கும் (கோலி, ரோகித் சர்மா) இடையிலான பிளவு குறித்த யூகங்களை இந்த செயல் உறுதி செய்கிறது. இருவருமே டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை விட்டுக்கொடுக்காதவர்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    முன்னாள் வீரர் கீர்த்தி ஆசாத் கூறும்போது, ‘ரோகித் சர்மாவும், விராட் கோலியும் இணைந்து ஆடாமல் போனால் அது அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். கடந்த காலங்களில் பல வீரர்கள் இதுமாதிரியான நிலையில் இணைந்து ஆடி இருக்கிறார்கள்’ என்றார்.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய நிர்வாகி ஒருவர் கூறும்போது, விராட் கோலி ஒருநாள் தொடரில் இருந்து விலகுவதாக வெளியான தகவல்கள் யூகங்கள் அடிப்படையிலானது. அவர் கிரிக்கெட் வாரியத்திடம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. இந்திய அணியில் பிளவு எதுவும் இல்லை. அந்த தகவலை மறுக்கிறேன் என்றார்.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி பங்கேற்பார் என பி.சி.சி.ஐ. அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. ஒருநாள் அணி கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டதால் அவர் அதிருப்தியுடன் இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

    மேலும் ரோகித் சர்மா- விராட் கோலி இடையே மோதல் போக்கு இருப்பதால் டெஸ்ட் தொடரில் இருந்து ரோகித் சர்மா விலகியதாகவும், ஒருநாள் தொடரை விராட் கோலி புறக்கணிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

    இதனால் இந்திய அணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அணி வீரர்கள் கோஷ்டி மோதல் இல்லாமல் விளையாடுவார்களா? என்ற கேள்வி எழுந்தது.

    இந்த நிலையில் தென்ஆப்பிரிக்காவுக்க எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடலில் விராட் கோலி விளையாடும் என்று பி.சி.சி.ஐ. அதிகாரப்பூர்வமாக அறிவித்து யூகச் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.


    பட்டம் வெல்லும் வாய்ப்பில் இருந்த உலகின் நம்பர் ஒன் வீரரும், ஒலிம்பிக் சாம்பியனுமான விக்டர் ஆக்சல்சென் (டென்மார்க்) தனது தொடக்க ஆட்டத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
    வெல்வா:

    26-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்பெயினின் வெல்வா நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேரடியாக 2-வது சுற்றில் களம் இறங்கிய நடப்பு சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து 21-7, 21-9 என்ற நேர் செட்டில் மார்ட்டினா ரெபிஸ்காவை (சுலோவக்கியா) துவம்சம் செய்து கால்இறுதிக்கு முந்தைய 3-வது சுற்றுக்குள் நுழைந்தார். இந்த வெற்றியை பெற சிந்துவுக்கு வெறும் 24 நிமிடங்களே தேவைப்பட்டது. சிந்து அடுத்து தாய்லாந்து வீராங்கனை போர்ன்பவீ சோச்சுவோங்கை எதிர்கொள்கிறார். கடந்த வாரம் நடந்த உலக டூர் இறுதி சுற்றின் லீக் ஆட்டத்தில் இதே சோச்சுவோங்கிடம் சிந்து தோல்வி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீரரான இந்தியாவின் ஸ்ரீகாந்த் 15-21, 21-18, 21-17 என்ற செட் கணக்கில் லி ஷி பெங்கை (சீனா) தோற்கடித்து 3-வது சுற்றை எட்டினார். இதே போல் இந்திய இளம் வீரர் லக்‌ஷயா சென் 22-20, 15-21, 21-18 என்ற செட் கணக்கில் போராடி கென்டா நிஷிமோட்டோவை (ஜப்பான்) வெளியேற்றினார். திரில்லிங்கான இந்த ஆட்டம் 1 மணி 22 நிமிடங்கள் நீடித்தது. ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி 27-25, 21-17 என்ற நேர் செட்டில் சீனத்தைபேயின் லீ ஜெ ஹூய்- யாங் போ ஹூவான் ஜோடியை விரட்டியடித்தது.

    பட்டம் வெல்லும் வாய்ப்பில் இருந்த உலகின் ‘நம்பர் ஒன்’ வீரரும், ஒலிம்பிக் சாம்பியனுமான விக்டர் ஆக்சல்சென் (டென்மார்க்) தனது தொடக்க ஆட்டத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவரை 22-ம் நிலை வீரரான லோ கியான் யேவ் (சிங்கப்பூர்) 14-21, 21-9, 21-6 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். இதன் மூலம் சமீபத்தில் இந்தோனேஷிய ஓபன் இறுதி ஆட்டத்தில் அவரிடம் அடைந்த தோல்விக்கு லோ கியான் பழிதீர்த்துக் கொண்டார்.
    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது ஆட்டத்திலும் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 20 ஓவர் தொடரை கைப்பற்றியது.
    கராச்சி:

    பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நேற்றிரவு நடந்தது. இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுக்கு 172 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 38 ரன்கள் எடுத்தார். கேப்டன் பாபர் அசாம் 7 ரன்னில் ரன்-அவுட் ஆனார். கடைசி கட்டத்தில் ஷதப் கான் 12 பந்துகளில் ஒரு பவுண்டரி, 3 சிக்சருடன் 28 ரன்கள் விளாசி ஸ்கோரை கணிசமாக உயர்த்தினார்.

    அடுத்து களம் புகுந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 163 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. இதனால் பாகிஸ்தான் 9 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிரான்டன் கிங் அரைசதம் அடித்தும் (67 ரன், 43 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) பலன் இல்லை.

    இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை பாகிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தான் 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. கடைசி 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.
    அடிலெய்டில் நாளை தொடங்கும் பகல்-இரவு டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்துக்கு இங்கிலாந்து அணி முற்றுப்புள்ளி வைக்குமா? என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
    அடிலெய்டு:

    ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பிரிஸ்பேனில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து மோதும் 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நாளை (வியாழக்கிழமை) பகல்-இரவு ஆட்டமாக தொடங்குகிறது. இதையொட்டி இரு அணியினரும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

    மின்னொளியின் கீழ் நடைபெறும் பகல்-இரவு டெஸ்டில் பிரத்யேகமாக இளஞ்சிவப்பு நிற பந்து (பிங்க் பால்) பயன்படுத்தப்படுகிறது. பிங்க் பந்து பெரும்பாலும் வேகப்பந்து வீச்சுக்கு உகந்த வகையில் இருக்கும் என்பதால் இந்த டெஸ்டில் வேகப்பந்து வீச்சாளர்கள் மிரட்டலாம்.

    டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 2015-ம் ஆண்டில் இருந்து இதுவரை 16 டெஸ்ட் போட்டிகள் பகல்-இரவாக நடத்தப்பட்டு உள்ளன. இவற்றில் 8 பகல்-இரவு டெஸ்டில் ஆடியுள்ள ஆஸ்திரேலியா 8 போட்டியிலும் வெற்றி பெற்று அசைக்க முடியாத அணியாக விளங்குகிறது. குறிப்பாக கடந்த ஆண்டு இதே மைதானத்தில் நடந்த பிங்க் பந்து டெஸ்டில் ஆஸ்திரேலியா வெறும் 36 ரன்னில் இந்தியாவை சுருட்டியது நினைவுகூரத்தக்கது. ஆனால் இந்த வகை டெஸ்டில் 32 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கும் வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் காயத்தால் விலகி இருப்பது அந்த அணிக்கு சற்று பின்னடைவாகும்.

    பகல்-இரவு டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் வீறுநடைக்கு இங்கிலாந்து அணியினர் முட்டுக்கட்டை போடுவார்களா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இங்கிலாந்து அணி இதுவரை நான்கு பகல்-இரவு டெஸ்டில் விளையாடி அவற்றில் ஒன்றில் வெற்றியும், 3-ல் தோல்வியும் சந்தித்துள்ளது.

    தொடக்க டெஸ்டில் வெளியே உட்கார வைக்கப்பட்ட அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் களம் திரும்புவது இங்கிலாந்துக்கு நம்பிக்கை அளிக்கிறது. இதே போல் கால்முட்டி வலியால் அவதிப்பட்ட ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் நேற்று முழு உத்வேகத்துடன் வலை பயிற்சியில் ஈடுபட்டார். அவர் வீசிய ஒரு பந்து இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டின் ஹெல்மெட்டை தாக்கியது.

    அதே சமயம் பிரிஸ்பேன் போட்டியில் 13 ஓவர்களில் 102 ரன்களை வாரி வழங்கிய இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ஜாக் லீச்சை மாற்றுவது குறித்து அணி நிர்வாகம் யோசிக்கிறது. ஆனால் அடுத்து வரும் போட்டிகளில் அவரால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

    இந்திய நேரப்படி நாளை காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென்3, 4 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
    ×