என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவையில் தற்போது 23 பேரும், மாகியில் 2 என மொத்தம் 25 பேர் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறினார்.
    புதுச்சேரி:

    புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    புதுவையில் நேற்று மாலை 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை வடமங்கலம், குரும்பாபேட், வேல்முருகன் நகரை சேர்ந்த தலா ஒருவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இவர்கள் அனைவரும் கொரோனா தொற்றுடன் இருந்தவர்களுடன் தொடர்புடையவர்கள். இதன்மூலம் புதுவையில் தற்போது 23 பேரும், மாகியில் 2 என மொத்தம் 25 பேர் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காரைக்காலில் சிகிச்சை பெற்றவர் வீடு திரும்பிவிட்டார். இந்த பட்டியலில் கேரளா மாநிலம் கன்னூர், சென்னை, ஜிப்மரில் சிகிச்சை பெற்று வரும் புதுவையை சேர்ந்த 3 பேரும் அடங்குவர்.

    வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து புதுவைக்கு திரும்புவோர்களால் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருக்கனூர் அருகே வீடு கட்டும் தகராறில் அண்ணன்-தம்பி மோதல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருக்கனூர்:

    திருக்கனூர் அருகே குமாரபாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வீர ராகவேல் (வயது40). இவரது அண்ணன் மோகன் (55). இருவரும் விவசாயிகள். இவர்கள் இருவருக்கும் பொதுவாக உள்ள இடத்தில் வீடு கட்டுவது சம்பந்தமாக தகராறு இருந்து வந்தது.

    சம்பவத்தன்று இது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது மோகன் அவரது மனைவி லட்சுமி, மகன் பார்த்தீபன், மகள் பவித்ரா மற்றும் உறவினர் ஹரிஷ் ஆகிய 5 பேரும் சேர்ந்து வீர ராகவேலுவை செங்கல் மற்றும் தடி-இரும்பு பைப்பால் சரமாரியாக தாக்கினர்.

    மேலும் கத்தியை எடுத்து வந்து கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர். இந்த தாக்குதலில் காயமடைந்த வீர ராகவேலு கதிர்காமம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் இதுகுறித்து காட்டேரிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருக்கனூர் அருகே செல்லிப்பட்டு புதுகாலனியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது24). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மினிவேன் டிரைவர் சபரி என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று இவர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது.

    இதில் ஆத்திரமடைந்த சபரி மற்றும் அவரது தரப்பை சேர்ந்த அம்மனங்குப்பம் வெங்கட்டராமன் மற்றும் செந்தில் ஆகிய 3 பேரும் சேர்ந்து அவரை தடியாலும், கல்லாலும் தாக்கினர். இதில் மணிகண்டன் காயமடைந்தார்.

    இதுகுறித்து மணிகண்டன் திருக்கனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சபரி உள்பட 3 பேரையும் தேடி வருகிறார்கள்.

    மதுக்கடை உரிமத்தை ஏலம் விட வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில வளர்ச்சி தொடர்பாக எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், அன்பழகன் ஆகியோர் அனுப்பியுள்ள கடிதம் தொடர்பாகவும், மாநில வளர்ச்சி தொடர்பான விபரங்களை குறிப்பிட்டு கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    கவர்னர் அலுவலகம் கடந்த 4 ஆண்டாக மதுக் கடைக்கான உரிமத்தை ஏலம் விட ஒரு பொதுவான கொள்கை உருவாக்க வலியுறுத்தி வருகிறது. இதன்மூலம் அரசின் கருவூலத்திற்கு வருவாயை கணிசமாக உயர்த்தலாம். கலால் துறையிலும் வெளிப்படையான மேலாண்மை உருவாகும்.

    தனியார் நிறுவனங்களின் சொத்துக்களுக்கு வரி விதிப்பு, கேபிள் டி.வி. மீட்டெடுப்பு, நகராட்சி சேவைகளுக்கு பயனாளிகளிடம் கட்டணம் வசூலிப்பை முறைப்படுத்துவது, மின்சாரம், வணிகவரி மற்றும் சொத்துவரி உள்ளிட்ட பல நிலுவைத் தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளோம்.

    குறிப்பாக பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடு தொடர்பான விஜயன் கமிட்டி அறிக்கையை செயல்படுத்த வலியுறுத்தினோம். அரசு சொத்துக்களை மீட்கவும், வாடகை வருவாயை சீரமைக்கவும் கோரினோம். மோட்டார் வாகன சட்டத்தை நடைமுறைப்படுத்தவும், மீறுவோர் மீது உடனடி அபராத முறையை கொண்டு வந்து சாலை பாதுகாப்பு நிதி கணக்கில் சேர்க்கவும் வலியுறுத்தப்பட்டது.

    இந்த நிதி திரட்டும் நடவடிக்கைகள் அனைத்தும் அரசியல் விருப்பத்திற்காகவே காத்திருக்கிறது. குறிப்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமிநாராயணன் கடிதத்தின் அடிப்படையில், புதுவை அரசு இத்திட்டங்களை செயல்படுத்தினால் ரூ.4 ஆயிரம் கோடி பெற முடியும். அவரது கடிதத்தை அரசு பார்க்க வேண்டும். இந்த ஆதாரங்களின் அடிப்படையை பார்ப்பது அவசியம்.

    மத்திய அரசும் பல நிபந்தனைகளை கடுமையாக விதித்துள்ளது. இதுபோன்ற நிலையை புரிந்துகொள்ளவும், செயல்படுத்தவும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம். வளங்களை திரட்டவும், அரசாங்க நிதியை புத்திசாலித்தனமாக பயன்படுத்தவும் ஒரு கூட்டு அரசியல் விருப்பம் தேவை. கவர்னர் அலுவலகம் முழு ஆதரவையும் இப்பணிகளுக்கு வழங்கும்.

    இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

    ஆதாரமற்ற புகார்களை கூறியவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையின் வருமானத்தை பெருக்க மதுக்கடைகளை திறக்க அமைச்சரவையில் முடிவு செய்து கோப்பு அனுப்பினோம். கவர்னர் கிரண்பேடி தமிழகத்தில் உள்ளதை போல மது விற்க வேண்டும் என உத்தர விட்டார். இதனால் மறுபரிசீலனை செய்து கோப்பு அனுப்பினோம். இன்னும் அந்த பிரச்சினை தீராத நிலையில் உள்ளது. அதற்கு ஒரு முடிவினை அரசு எடுக்கும்.

    வெகுவிரைவில் மதுக்கடைகள் திறக்கப்படும். சென்னை ஐகோர்ட்டில் காரைக்காலை சேர்ந்த ஒருவர் புதுவையில் உரிமம் ரத்தானால் மதுக்கடைகளை திறக்கக்கூடாது எனவும், என் மீதும் தனிப்பட்ட குற்றச்சாட்டை கூறி மனு தாக்கல் செய்திருந்தார். மனு விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள், மதுக் கடை திறப்பது அரசின் கொள்கை முடிவு. சி.பி.ஐ. விசாரணைக்கும், மதுக்கடைக்கும் சம்பந்தம் கிடையாது.

    தற்காலிக உரிமம் ரத்து செய்யப்பட்ட மதுக் கடைகளை திறக்கக்கூடாது. ஆனால் கலால்துறை விதிப்படி எந்த நடவடிக்கை எடுக்கவும் கலால்துறைக்கு அதிகாரம் உண்டு என்று கூறியுள்ளனர்.

    மேலும் என்மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர். நீதிமன்ற உத்தரவு வந்த பிறகு என் மீது ஆதாரமற்ற புகார்களை கூறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன். வெளி நாட்டில் இருந்து வருபவர்களின் விபரங்களை மத்திய அரசு தருவதில்லை. இதுகுறித்து மத்திய அரசு, தமிழக அரசு மற்றும் சென்னை விமான நிலையத்திற்கு கடிதம் எழுதி விபரம் கேட்க கலெக்டருக்கு உத்தர விடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    வேகமாக பரவும் கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
    புதுச்சேரி:

    புதுவையில் 25 பேர் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    புதுவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பது என சட்டசபை வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.

    கூட்டத்தில் அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ், கலெக்டர் அருண், சுகாதாரத்துறை செயலர் பிரசாந்தகுமார் பாண்டே, இயக்குனர் மோகன்குமார் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    வேகமாக பரவும் கொரோனாவை கட்டுப்படுத்த கூடுதலாக என்ன கட்டுப்பாடுகள் விதிப்பது, என்ன நடவடிக்கை எடுப்பது என ஆலோசிக்கப்பட்டது.

    விழுப்புரத்தில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    வில்லியனூர்:

    கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் புதுவை, தமிழகத்தில் அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டன. இந்த நிலையில் தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.

    புதுவையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மதுக்கடைகளை திறக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு ஒப்புதல் கேட்டு கவர்னர் கிரண்பெடிக்கு கோப்பு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் கோவிட் வரியை உயர்த்துமாறு தெரிவித்து கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் அளிக்க மறுத்து வருகிறார். இதனால் மதுக்கடைகளை திறப்பதில் புதுவையில் சிக்கல் நீடித்து வருகிறது. மதுக்கடைகள் திறக்கப்படும் என எதிர்பார்த்த மது பிரியர்கள் இந்த நடவடிக்கையால் அதிருப்தி அடைந்தனர்.

    புதுவையில் மதுக்கடைகள் திறக்காத விரக்தியில் மதுபிரியர்கள் தமிழக பகுதியான கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்திற்கு சென்று மதுபாட்டில்கள் வாங்கி குடித்து வருகின்றனர். வேறு சிலர் இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி தமிழகத்தில் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி புதுவைக்கு கடத்தி வந்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து மதுபாட்டில்கள் வாங்கி வந்து வில்லியனூர் அருகே உள்ள பிள்ளையார்குப்பம் பகுதியில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக வில்லியனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேலு, சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் அந்த பகுதியில் நீண்ட நேரமாக சுற்றி வந்தனர். இதைப் பார்த்து சந்தேகமடைந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். இதில் அவர்கள் அகரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 36), புதுநகரை சேர்ந்த அய்யனார் (35) என்பது தெரியவந்தது. அவர்கள் விழுப்புரத்தில் இருந்து கடத்தி வந்து மது பிரியர்களுக்கு அதிக விலைக்கு மது பாட்டில்களை விற்று கொள்ளை லாபம் சம்பாதிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 35 மதுபாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
    புதுச்சேரி மக்களுக்கு சேவை புரிய வாய்ப்பு அளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று கவர்னர் கிரண்பேடி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலத்தின் கவர்னராக கிரண்பேடி கடந்த 22.5.2016 அன்று நியமிக்கப்பட்டார். அதனையடுத்து புதுச்சேரி வந்து 29.5.2016 அன்று கவர்னராக அவர் பதவியேற்றுக் கொண்டார். ஆனால் அதற்கு முந்தைய தினமே புதுச்சேரி அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டமும் நடத்தினார். அன்றைய தினம் முதல் தற்போது வரை அவரது செயல்பாடுகள் பல்வேறு விமர்சனங்களுக்குள்ளாகி வருகின்றது.

    இந்தநிலையில் கவர்னர் கிரண்பேடி தனது சமூக வலைதளத்தில், புதுச்சேரி மக்களுக்கு சேவை புரிய வாய்ப்பு அளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.
    கோரிமேட்டில் வீட்டு வாசலில் கோலம் போட்ட பெண்ணிடம் ரூ.1 லட்சம் மதிப்புள்ள நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    புதுவை கோரிமேடு காமராஜர் நகர் வாணிதாசன் நகரை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி விமலா (வயது 40). இவர், துப்புரவு பணியில் தினக்கூலி ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று அதிகாலை விமலா வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டு இருந்தார். அப்போது முகத்தில் பனியனால் மூடியபடி வந்த ஒரு வாலிபர் திடீரென விமலா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயினை பறித்துக்கொண்டு ஓடினான்.

    விமலா திருடன்... திருடன் என அலறல் சத்தம் போடுவதற்குள் அந்த மர்ம நபர் தப்பி ஓடிவிட்டான். பறிபோன தங்க செயினின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

    இதுகுறித்து விமலா கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இனியன் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா மூலம் ஆய்வு செய்து செயினை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்.

    செயினை பறித்து சென்ற மர்ம நபர் அருகில் உள்ள தமிழக பகுதியை சேர்ந்த மேலும் 2 பெண்களிடம் செயின் பறிப்பு முயற்சி செய்துள்ளார். ஆனால், அந்த பெண்கள் விழிப்புடன் இருந்ததால் அவர்களிடம் இருந்த நகை தப்பியது.

    இந்த சம்பவம் காரணமாக அப்பகுதி பெண்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
    கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தால் ஆரஞ்சு மண்டலமாக இருக்கும் புதுவை சிவப்பு மண்டலமாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பின்னர் உலகம் முழுவதும் பரவ தொடங்கியது. இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவ தொடங்கியபோது புதுவை மாநிலத்தில் மாகி மண்டலத்தில் ஒருவர் மட்டும் பாதிக்கப்பட்டார்.

    பின்னர் படிப்படியாக புதுவையிலும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது.

    டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பிய அரியாங்குப்பம் மற்றும் திருபுவனை பகுதியை சேர்ந்த 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

    அதன்பின்னர் அவர்களுடன் தொடர்புடைய ஓரிருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று இருந்ததால் அவர்கள் அனைவரும் புதுவை கதிர்காமம் இந்திராகாந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதற்கிடையே புதுவையை யொட்டி அமைந்துள்ள தமிழக பகுதியான கடலூர் - விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    அவ்வாறாக கடந்த 50 நாட்களில் புதுவை மற்றும் காரைக்கால், மாகி பகுதியில் 9 பேரும், கடலூர், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 5 பேரும் என மொத்தமே 15 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு புதுவை இந்திரா காந்தி அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

    இதில், புதுவையை சேர்ந்தவர்கள் முழுமையாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதனால் ஆரஞ்சு மண்டலமாக இருந்த புதுவை பச்சை மண்டலமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று வந்த வகையில் திருபுவனை அருகே க.குச்சிப் பாளையத்தை சேர்ந்த ஒருவரும், திருபுவனை செல்லிப்பட்டை சேர்ந்த மற்றொருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு புதுவை இந்திராகாந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    மேலும் அரும்பார்த்த புரத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் மற்றும் அவரது மனைவி, குழந்தை மற்றும் பண்ட சோழநல்லூரை சேர்ந்த மற்றொருவர் என படிப்படியாக புதுவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல் கூடிக்கொண்டே வந்தது.

    நேற்று மட்டும் புதுவையில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

    புதுவை குரும்பாபேட்டு பகுதியை சேர்ந்த மளிகை கடை வியாபாரியின் மகன் மற்றும் துபாயில் இருந்து புதுவை திரும்பிய லாஸ்பேட்டை மகாவீர் நகரை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் புதுவையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

    எனவே, கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 15 ஆனால் ஆரஞ்சு மண்டலமாக இருந்த புதுவை சிவப்பு மண்டலமாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    லாஸ்பேட்டையில் பொதுப்பணித்துறை ஊழியர் உள்பட 3 பேரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை லாஸ்பேட்டை கருவடிக்குப்பம் மெயின் ரோடு பாரதி நகரை சேர்ந்தவர் குமார் (வயது 34). இவர் பொதுப்பணித்துறையில் தினக்கூலி ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு இவர் இடையன்சாவடி ரோட்டில் குமாரின் நண்பர்களான இடையன்சாவடியை சேர்ந்த வசந்தகுமார், அகிலன், புண்ணியகோடி ஆகியோருடன் பேசிக் கொண்டு இருந்தார்.

    அப்போது கருவடிக்குப்பத்தை சேர்ந்த சரவணன் (வயது 36), விக்கி (27), பாலா (27) மற்றும் சாரதி (20) ஆகியோருடன் அங்கு வந்தனர்.

    அவர்கள் குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி கையால் சரமாரியாக தாக்கினர். மேலும் இதனை தடுக்க முயன்ற புண்ணியகோடியை பீர் பாட்டிலாலும், வசந்த குமாரை இரும்பு பைப்பாலும் தாக்கினர்.

    அதோடு கத்தியை காட்டி கோழியை அறுப்பது போல் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்.

    இதனை பார்த்து பயந்து போன குமார், வசந்தகுமார், புண்ணியகோடி மற்றும் அகிலன் ஆகியோர் அலறல் சத்தம் போட்டனர்.

    இந்த அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்ததும் தாக்கிய கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த குமார் உள்பட 3 பேரும் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

    இதுகுறித்து குமார் லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சரவணன் உள்பட 4 பேரை தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரியில் உண்ணாவிரத போராட்டம் நடத்திய தொழிற்சங்கத்தினர் 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    மத்திய தொழிற்சங்கங்களின் அழைப்பின்படி புதுவை அனைத்த தொழிற் சங்கம் சார்பில் கடலூர் சாலை தியாகிகள் சிலை முன்பு இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

    போராட்டத்தை ஏ.ஐ.டி.யூ.சி. அபிஷேகம், சி.ஐ.டி.யூ. முருகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தொழிற்சங்க தலைவர்கள் ஏ.ஐ.டி.யூ.சி. சேதுசெல்வம், தினேஷ் பொன்னையா, ஐ.என்.டி.யூ.சி. ஞானசேகரன், முத்துராமன், சி.ஐ.டி.யூ. சீனுவாசன், பிரபுராஜ், என்.ஆர்.டி.யூ.சி. மோகன் தாஸ், ஞானப்பிரகாசம், அண்ணாதொழிற்சங்கம் பாப்புசாமி, பழனிவேல், ஏ.ஐ.சி.சி.டி.யூ. மோதிலால், புருஷோத்தமன், ஏ.ஐ.யூ.டி.யூ.சி. சிவக்குமார், சங்கரன், எல்.எல்.எப். செந்தில், கதிர்வேல், பாட்டாளி தொழிற்சங்கம் சிவப்பிரகாசம், தமிழ் செல்வன், எம்.எல்.எப். வேதாவேணுகோபால், மாசிலாமணி,

    அரசு ஊழியர் சம்மேளனம் பிரேமதாசன், ராதாகிருஷ்ணன், தென்னிந்திய தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு பூர்த்தி, சரளா உள்ளிட்ட தொழிற் சங்க தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ரூ.7 ஆயிரத்து 500 நிவாரணம் வழங்க வேண்டும். நலவாரிய, அமைப்புசாரா, கட்டுமானம், ஆட்டோ தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.

    வேலைநேரம் அதிகரிப்பு முயற்சியை கைவிட வேண்டும். ரே‌ஷன் கடைகளை திறந்து பொருட்களை வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு பஞ்சப்படி உயர்வு ரத்து முடிவை கைவிட வேண்டும்.

    புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப இலவச போக்குவரத்து வசதி செய்துதர வேண்டும். அரசு ஊழியர்கள் சம்பளத்தை பிடித்தம் செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

    காலை 6 மணிக்கு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க நிர்வாகிகளிடம் அனுமதியின்றி போராட்டம் நடத்தக் கூடாது என போலீசார் எச்சரிக்கை செய்தனர்.

    இருப்பினும் நிர்வாகிகள் சமூக இடைவெளியுடன் உண்ணா விரத போராட்டத்தை தொடர்ந்தனர். இதனையடுத்து போலீசார் தொழிற்சங்க நிர்வாகிகள் 15 பேரை கைது செய்தனர். மேலும் போராட்டத்திற்காக அமைக்கப்பட்ட சாமியானா பந்தல், சேர்கள், பேனர்களையும் போலீசார் அகற்றினர்.

    இருப்பினும் தொழிற்சங்க நிர்வாகிகளின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட இடங்களில் சமூக இடைவெளியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
    மதகடிப்பட்டு ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு விவசாயிகள் கொண்டு வந்த நெல் ரகங்களை முதல்-அமைச்சர் நாராயணசாமி, பார்வையிட்டு நேரடி நெல் கொள்முதலை தொடங்கி வைத்தார்.
    புதுச்சேரி:

    புதுவை நெல் விவசாயிகளிடம் இருந்து சுமார் 20 ஆயரிம் மெட்ரிக் டன் அரிசி அளவிற்கான நெல்லை இந்திய உணவுக்கழகம் நேரடியாக கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

    புதுவை, காரைக்காலில் மே 20-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும் என அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்தார்.

    இதன்படி புதுவையில் தட்டாஞ்சாவடி, மதகடிப்பட்டு, கன்னியக்கோவில், கரையாம்புத்தூர், காரைக்கால், தென்னங்குடி ஆகிய பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட தொடங்கியுள்ளது.

    மதகடிப்பட்டு ஒழுங்கு முறை விற்பனைக்கூட நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இந்திய உணவுக்கழகம் மூலம் நெல்கொள்முதல் பணி தொடங்கியது.

    வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் தலைமையில், அமைச்சர் கந்தசாமி, செயலாளர் அன்பரசு முன்னிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பணிகளை தொடங்கி வைத்தார்.

    விவசாயிகளிடம் இருந்து சன்னரகம் குவிண்டால் ரூ.1835, மோட்டா ரகம் ரூ.1815க்கு இந்திய உணவுக்கழகம் கொள்முதல் செய்தது.

    நிகழ்ச்சியில் இயக்குனர் பாலகாந்தி, கூடுதல் இயக்குனர் வசந்தகுமார், விற்பனைக்கூட செயலாளர் செழியன்பாடு, வேளாண் அலுவலர் தமிழ்செல்வன், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×