search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை காணலாம்
    X
    பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை காணலாம்

    விழுப்புரத்தில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி விற்ற 2 பேர் கைது

    விழுப்புரத்தில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    வில்லியனூர்:

    கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் புதுவை, தமிழகத்தில் அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டன. இந்த நிலையில் தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.

    புதுவையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மதுக்கடைகளை திறக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு ஒப்புதல் கேட்டு கவர்னர் கிரண்பெடிக்கு கோப்பு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் கோவிட் வரியை உயர்த்துமாறு தெரிவித்து கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் அளிக்க மறுத்து வருகிறார். இதனால் மதுக்கடைகளை திறப்பதில் புதுவையில் சிக்கல் நீடித்து வருகிறது. மதுக்கடைகள் திறக்கப்படும் என எதிர்பார்த்த மது பிரியர்கள் இந்த நடவடிக்கையால் அதிருப்தி அடைந்தனர்.

    புதுவையில் மதுக்கடைகள் திறக்காத விரக்தியில் மதுபிரியர்கள் தமிழக பகுதியான கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்திற்கு சென்று மதுபாட்டில்கள் வாங்கி குடித்து வருகின்றனர். வேறு சிலர் இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி தமிழகத்தில் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி புதுவைக்கு கடத்தி வந்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து மதுபாட்டில்கள் வாங்கி வந்து வில்லியனூர் அருகே உள்ள பிள்ளையார்குப்பம் பகுதியில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக வில்லியனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேலு, சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் அந்த பகுதியில் நீண்ட நேரமாக சுற்றி வந்தனர். இதைப் பார்த்து சந்தேகமடைந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். இதில் அவர்கள் அகரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 36), புதுநகரை சேர்ந்த அய்யனார் (35) என்பது தெரியவந்தது. அவர்கள் விழுப்புரத்தில் இருந்து கடத்தி வந்து மது பிரியர்களுக்கு அதிக விலைக்கு மது பாட்டில்களை விற்று கொள்ளை லாபம் சம்பாதிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 35 மதுபாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×