என் மலர்
விருதுநகர்
- ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி நடந்தது.
- பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியப் பயிற்றுநர் முத்துராஜ் செய்திருந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூரில் 4-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை கற்றுத்தரும் ஆசிரியர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஸ் பயிற்சி நடந்தது.
கிருஷ்ணன்கோவிலில் உள்ள வட்டார வளமையத்தில் இந்த பயிற்சி அளிக்கப்பட்டது. ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதுநிலை பேராசிரியர் மகாலிங்கம் தலைமையில், ஆசிரியர்கள் பத்மா, பூமா, சத்யா, ஜஸ்டின் தங்கராஜ், தேரிச்செல்வம், வரமணி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
பயிற்சியை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் உதவி திட்ட அலுவலர் ஜோதிமணிராஜன் பார்வையிட்டார்.
அவர் கூறிகையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் 993 பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
பயிற்சியை பெற்ற ஆசிரியர்கள் முழுமையாக செயல்படுத்தி, மாணவர்கள் கல்வித் தரம் மேம்படச் செய்ய வேண்டும் என்றார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியப் பயிற்றுநர் முத்துராஜ் செய்திருந்தார்.
- ராஜபாளையத்தில், நூல் விலை உயர்வை திரும்ப பெறக்கோரி விசைத்தறி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் 22-வது நாளாக நீடிக்கப்பட்டது.
- 5-ந் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் ஆவரம்பட்டி பகுதிகளில் பருத்தி கலர் சேலை உற்பத்தி செய்யும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன.
இந்த தறிகளை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
நாள் ஒன்றுக்கு ரூ. 16 லட்சம் மதிப்புள்ள 4 ஆயிரம் நூல் சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், தொழிலாளர்கள் சுமார் ரூ.5 லட்சம் வரை தினமும் ஊதியமாக பெற்று வந்தனர்.
கடந்த ஒரு வருடத்தில் நூல் விலை சுமார் 230 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக குற்றம் சாட்டி, நூல் விலை உயர்வை ரத்து செய்யக் கோரி சிறு விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த 5-ந் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டம் 22-வது நாளை கடந்தும் அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிப்பதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
இந்த போராட்டத்தால் வேலை இழந்துள்ள தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு ரூ. 1 கோடியை தாண்டி உள்ளது. உற்பத்தி இழப்பு ரூ. 3.36 கோடியை தாண்டும் என தெரிகிறது. அரசுக்கு ஏற்பட்டுள்ள வரி இழப்பு ரூ.16.80 லட்சமாகவும் உள்ளது.
கடந்த 22 நாட்களாக வேலையின்றி உள்ளதால், ஒவ்வொரு குடும்பத்திற்கும் சுமார் ரூ. 10 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தைகளுக்கு பால் வாங்குவதற்கு கூட பணமின்றி தவிப்பதாகவும், கியாஸ், காய்கறி மற்றும் பலசரக்கு பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் கடன் வாங்கியும், வட்டி கட்டியும் சிரமத்தில் இருப்பதாகவும் தொழிலாளர்கள் வேதனை தெரிவித்தனர்.
இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தொழிலாளர் நலத்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவரம்பட்டியை சேர்ந்த விசைத்தறி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
- தூய்மை குறித்த துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.
- இந்த நிகழ்ச்சி வார்டு வாரியாக நடந்தது.
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை நகராட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி புதன்கிழமை தோறும் உலர் கழிவுகளை மட்டும் தனியாக பிரித்து வாங்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது.
பொதுமக்கள் வீடுகளில் தினசரி சேகரமாகும் குப்பை கழிவுகளை மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகள் என தனித்தனியாக பிரித்து வழங்க வேண்டும் என்று நகராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. அருப்புக்கோட்டை நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளது. இந்த நிகழ்ச்சி வார்டு வாரியாக நடந்தது.
ஆணையாளர்அசோக் குமார் தலைமையில் ெபாதுமக்களுக்கு தூய்மை குறித்த துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. பின்னர் ''என் குப்பை என் பொறுப்பு'' என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இதில் நகர்மன்றத் தலைவர் சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம், துணைத்தலைவர் பழனிச்சாமி மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள், சுகாதார ஆய்வாளர் அய்யப்பன் ஆகியோர் பங்கேற்றனர்.
- டிராக்டர் கவிழ்ந்து பெண் தொழிலாளி பலியானார்.
- விபத்து குறித்து சேத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜபாளையம்
தென்காசி மாவட்டம் தேவிபட்டினம் அருகே உள்ளகீழூர் ராமசாமியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 11 பேர் ஒரு டிராக்டரில், விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தோட்டத்தில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பணி முடிந்து அனைவரையும் டிராக்டரில் ஏற்றி ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். ஒரு வளைவில் திரும்பும் போது டிராக்டர் கவிழ்ந்து விபத்துகுள்ளானது. இதில் தேவிபட்டினம் கீழூர் ராமசாமியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி மனைவி சுந்தரம்மாள் (வயது 65) டிராக்டருக்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
டிராக்டர் டிரைவர் விருதுநகர் எரிச்சநத்தம் பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி (34) படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். டிராக்டரில் பயணம் செய்த தேவிபட்டினம் கீழூர் ராமசாமியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மரிய பாக்கியம் (75), மரியசெல்வம் (56), ராஜலட்சுமி (51), கடல் மாதா (42), கோமதி (63), தங்கமலை (50), கிறிஸ்து மேரி (49), செல்வம் (52), ஜெயமேரி (47), முத்துமாரி (50) ஆகிய 10 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் அனைவரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து சேத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலியானார்.
- சேத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே முத்துசாமி புரத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி பூபதி அம்மாள் (வயது 50).
இவர் தேவஸ்தானத்தில் உள்ள இசக்கிஅம்மன் கோவில் திருவிழாவுக்கு சென்றார்.அங்கு பொங்கலிட்டு வழிபாடு செய்துவிட்டு சாலை ஓரம் அமர்ந்து தனது உறவினர்கள் தேவி, பொன்னம்மாள் ஆகியோர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக முத்துகிருஷ்ணன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பூபதி அம்மாளின் மீது மோதியது.இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் முத்துகிருஷ்ணன் காயமடைந்தார்.
இதுபற்றி சேத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- காதல் மனைவி கொடுத்த குளிர்பானத்தை குடித்த வாலிபர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
- ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த புதுசூரங்குடியை சேர்ந்தவர் சிவா (வயது 23), ஆட்ேடா டிரைவர். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து திரு மணம் செய்து கொண்டார்.
அந்த பெண் திருமண வயதை அடையவில்லை என்பதால் சிவாவை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவர் கடந்த 15-ந்தேதி ஜாமீனில் வெளியே வந்தார்.
அவர் தினமும் ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் தினமும் கையெழுத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி அவர் கையெழுத்திட வந்தபோது அவர் காதலித்து திருமணம் செய்த பெண்ணும், மகா லட்சுமி என்பவரும் அவரிடம் பேச்சு கொடுத்து குடிக்க குளிர்பானம் கொடுத்தனர். அதனை வாங்கி குடித்ததும் சிவா மயங்கி விழுந்தார்.
அவரை மீட்டு சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றிய புகாரின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- செல்பி எடுத்த மோகத்தில் சுஜிதா தனது கைப்பையை மறந்து விட்டு பெருமாள் கோவிலுக்கு சென்றார்.
- சுஜிதா ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசில் புகார் செய்தார்.
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி தேவர்குளத்தைச் சேர்ந்தவர் தமிழரசன்.இவரது மனைவி சுஜிதா(வயது 34).
சம்பவத்தன்று இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை பெருமாள் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தார். அங்குள்ள அலமேலு கோவிலுக்கு செல்லும் சந்திப்பில் ராமர், சீதை புகைப்படத்திற்கு அருகில் சுஜிதா, தனது கைப்பையை வைத்துவிட்டு செல்பி எடுத்தார்.
செல்பி எடுத்த மோகத்தில் சுஜிதா தனது கைப்பையை மறந்து விட்டு பெருமாள் கோவிலுக்கு சென்றார். திடீரென்று அவருக்கு ஞானோதயம் வரவே கைப்பை வைத்த இடத்தில் தேடிப் பார்த்த போது பையை காணவில்லை. அதில் ரூ. 3 லட்சம் நகைகள் இருந்தன.
இதுகுறித்து சுஜிதா ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் பதிவாகியிருந்த வீடியோ காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது சாமி கும்பிட வந்திருந்த தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா வெள்ளாங்குளம் பாண்டியபுரத்தைச் சேர்ந்த செல்வ மாரி(வயது 38)என்பவர், சுஜிதாவின் கைப்பை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி செல்வமாரியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- மாணவர்கள் சிலருக்கு கொரோனா மற்றும் காய்ச்சல் அறிகுறி இருந்தது.
- மாணவர்களுக்கு வகுப்பு எடுத்த பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
விருதுநகர்:
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தின் அருகே செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 125 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக விடுதி வசதியும் இருக்கிறது.
இந்த நிலையில் மாணவர்கள் சிலருக்கு கொரோனா மற்றும் காய்ச்சல் அறிகுறி இருந்தது. இதையடுத்து விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரியின் மாணவ-மாணவிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த 3 மாணவர்களும் தனிமைபடுத்தப்பட்டனர். அவர்களை தொடர்ந்து தனிமைப்படுத்தி வைத்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்த பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து மருத்துவக்கல்லூரியின் வகுப்பறைகள், விடுதி அறைகள் மற்றும் அனைத்து இடங்களிலும் இன்று கிருமினிநாசினி தெளித்தல் உள்ளிட்ட சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்லூரியின் டீன் சங்குமணி தெரிவித்தார்.
- ராஜபாளையத்தில் இளம்பெண்ணை கேலி செய்த தகராறில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
- 3 மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்து எரித்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், நரிமேடு, காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் அந்தப்பகுதியில் தண்ணீர் பிடிக்க சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த ராஜகுரு(வயது 19) என்பவர் கேலி கிண்டல் செய்துள்ளார். இதுபற்றி அந்த இளம்பெண், அவரது தந்தையிடம் கூறியதையடுத்து அவரது உறவினர்கள் சுரேஷ்குமார், இசக்கிகுமார் ஆகியோர் ராஜகுருவின் வீட்டிற்கு சென்று கண்டித்துள்ளனர்.
அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் பெண்ணின் தந்தை பால்பாண்டி புகார் செய்தார். போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் சுரேஷ்குமார் உள்ளிட்ட 3 பேரின் வீடுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதுபற்றி அறிந்ததும் சுரேஷ்குமார் உள்ளிட்ட சிலர் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தபோது, ராஜகுரு மற்றும் 7 பேர் பெட்ரோல் கேன்களுடன் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் நின்றிருந்தனர்.
இதனை பார்த்த சுரேஷ்குமார், முனியசாமி உள்ளிட்ட சிலர் விரட்டினர். சிறிது தூரம் சென்றபோது ராஜகுரு உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் இவர்களை வழிமறித்து அரிவாள் மற்றும் கத்தியால் வெட்டி விட்டு ஓடி விட்டனர்.
இதில் முனியசாமி (வயது 50) என்பவருக்கு பலத்த வெட்டு விழுந்தது. படுகாயமடைந்த முனியசாமி ஆபத்தான நிலையில் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக ராஜபாளையம் தெற்கு இன்ஸ்பெக்டர் மன்னவன் வழக்குப்பதிவு செய்து மோதலில் ஈடுபட்ட ராஜகுரு மற்றும் அவரது உறவினர்கள் மகேஸ்வரன், முனியசாமி, கிருஷ்ணமூர்த்தி, மாரிமுத்து, சக்திவேல், அன்புசெல்வன் ஆகிய 7 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 7 பேரும் ராஜபாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த மோதல் காரணமாக அந்தப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பதட்டம் நிலவுவதால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
- மாணவிக்கு கட்டாய திருமணம் செய்த வாலிபரை விசாரித்து வருகின்றனர்.
- சிறுமி திருமணம் குறித்து குழந்தைகள் நல அமைப்புக்கு புகார் வந்தது.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 7-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும், சிவகாசியை சேர்ந்த சாமுவேல் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் காதலித்தனர். இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி மாணவி மற்றும் சாமுவேலுக்கு திருச்செந்தூரில் திருமணம் நடந்தது. இதற்கு மாணவியின் பெற்றோர்கள் உடந்தையாக இருந்துள்ளனர்.
இந்த நிலையில் சாமுவேல் குடும்பத்தினர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தால் மாணவியை அவரது வீட்டில் விட்டு சென்று விட்டார். சிறுமி திருமணம் குறித்து குழந்தைகள் நல அமைப்புக்கு புகார் வந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் சமூக நல விரிவாக்க நல அலுவலர் ராஜேஸ்வரி ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் சாமுவேல் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாற்றுத்திறனாளியை 2-வது திருமணம் செய்து 10 பவுன் நகை-ரூ.8 லட்சம் மோசடி செய்தனர்.
- போலீசார் பாலசுப்பிரமணயின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள சூலக்கரையை சேர்ந்தவர் கவிதா (வயது 29). மாற்றுத்திறனாளியான இவருக்கும், புதுக்கோட்டை மாவட்டம் மேலமங்களத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (33) என்பவருக்கும் செல்போன் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அப்போது பாலசுப்பிரமணியன் வெளிநாட்டில் வேலை பார்ப்பதாகவும், திருமணம் செய்ய விருப்பம் உள்ளதாகவும் கவிதாவிடம் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் இருவருக்கும் திருமணம் நடந்தது.
இந்த நிலையில் கவிதா சூலக்கரை போலீசில் புகார் செய்துள்ளார். அதில் பாலசுப்பிரமணியன் ஏற்கனவே திருமணமானதை மறைத்து என்னை 2-வதாக திருமணம் செய்து கொண்டு 10 பவுன் நகை ரூ. 8 லட்சம் ரொக்கம் மோசடி செய்து விட்டதாகவும், மேலும் பணம் கேட்டு என்னையும், என் குடும்பத்தினரையும் பாலசுப்பிரமணியன் மிரட்டி வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து 10 பவுன் நகை, ரூ.8 லட்சம் மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் போலீசார் பாலசுப்பிரமணயின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாலிபர் தலை துண்டித்து கொலை வழக்கில் தொடர்புடைய 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் பரிந்துரையின் பேரில் கலெக்டர் மேகநாத ரெட்டி கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்
காரியாபட்டி
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி, வீரசோழன் அருகே உள்ள பாப்பாங்குளத்தைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 24). இவரது நண்பர்கள் ராமநாதபுரம் மாவட்டம் தரைக்குடியைச் சேர்ந்த வசந்தபாண்டி (23), கமுதி கோட்டைமேட்டை சேர்ந்த இருள் என்ற இருளாண்டி (31), இருளாண்டி (19), சிலம்பரசன் (40) ஆகிய 4 பேரும் சேர்ந்து சில மாதங்களுக்கு முன்பு பாப்பாங்குளத்தில் உள்ள மயானத்தில் ஒன்றாக அமர்ந்து மது குடித்தனர்.
அப்போது ஆனந்தராஜூக்கும், நண்பர்கள் 4 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்தவர் நண்பர்கள் ஆனந்தராஜை கழுத்தை அறுத்து கொன்றனர்.
திருச்சுழி போலீஸ் துணை சூப்பிரண்டு மதியழகன், நரிக்குடி இன்ஸ்பெக்டர் ராமநாராயணன் ஆகியோரது தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த கொலை சம்பந்தமாக வீரசோழன் போலீசார் வழக்குப்பதிவு செய்து நண்பர்கள் 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதில் இருள் என்ற இருளாண்டி, வசந்த பாண்டி ஆகியோர் மீது பல்வேறு வழக்குகள் இருந்தன. இதையடுத்து இருவரையும் குண்டர் சட்டத்தின் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் பரிந்துரையின் பேரில் கலெக்டர் மேகநாத ரெட்டி கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.






