search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம்பெண்ணை கேலி செய்த தகராறில் கோஷ்டி மோதல்- 7 பேர் கைது
    X

    இளம்பெண்ணை கேலி செய்த தகராறில் கோஷ்டி மோதல்- 7 பேர் கைது

    • ராஜபாளையத்தில் இளம்பெண்ணை கேலி செய்த தகராறில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • 3 மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்து எரித்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், நரிமேடு, காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் அந்தப்பகுதியில் தண்ணீர் பிடிக்க சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த ராஜகுரு(வயது 19) என்பவர் கேலி கிண்டல் செய்துள்ளார். இதுபற்றி அந்த இளம்பெண், அவரது தந்தையிடம் கூறியதையடுத்து அவரது உறவினர்கள் சுரேஷ்குமார், இசக்கிகுமார் ஆகியோர் ராஜகுருவின் வீட்டிற்கு சென்று கண்டித்துள்ளனர்.

    அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் பெண்ணின் தந்தை பால்பாண்டி புகார் செய்தார். போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் சுரேஷ்குமார் உள்ளிட்ட 3 பேரின் வீடுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதுபற்றி அறிந்ததும் சுரேஷ்குமார் உள்ளிட்ட சிலர் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தபோது, ராஜகுரு மற்றும் 7 பேர் பெட்ரோல் கேன்களுடன் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் நின்றிருந்தனர்.

    இதனை பார்த்த சுரேஷ்குமார், முனியசாமி உள்ளிட்ட சிலர் விரட்டினர். சிறிது தூரம் சென்றபோது ராஜகுரு உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் இவர்களை வழிமறித்து அரிவாள் மற்றும் கத்தியால் வெட்டி விட்டு ஓடி விட்டனர்.

    இதில் முனியசாமி (வயது 50) என்பவருக்கு பலத்த வெட்டு விழுந்தது. படுகாயமடைந்த முனியசாமி ஆபத்தான நிலையில் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

    இந்த சம்பவம் தொடர்பாக ராஜபாளையம் தெற்கு இன்ஸ்பெக்டர் மன்னவன் வழக்குப்பதிவு செய்து மோதலில் ஈடுபட்ட ராஜகுரு மற்றும் அவரது உறவினர்கள் மகேஸ்வரன், முனியசாமி, கிருஷ்ணமூர்த்தி, மாரிமுத்து, சக்திவேல், அன்புசெல்வன் ஆகிய 7 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 7 பேரும் ராஜபாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த மோதல் காரணமாக அந்தப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பதட்டம் நிலவுவதால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×