search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "power locomotive"

    • ராஜபாளையத்தில், நூல் விலை உயர்வை திரும்ப பெறக்கோரி விசைத்தறி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் 22-வது நாளாக நீடிக்கப்பட்டது.
    • 5-ந் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் ஆவரம்பட்டி பகுதிகளில் பருத்தி கலர் சேலை உற்பத்தி செய்யும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன.

    இந்த தறிகளை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

    நாள் ஒன்றுக்கு ரூ. 16 லட்சம் மதிப்புள்ள 4 ஆயிரம் நூல் சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், தொழிலாளர்கள் சுமார் ரூ.5 லட்சம் வரை தினமும் ஊதியமாக பெற்று வந்தனர்.

    கடந்த ஒரு வருடத்தில் நூல் விலை சுமார் 230 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக குற்றம் சாட்டி, நூல் விலை உயர்வை ரத்து செய்யக் கோரி சிறு விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த 5-ந் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த போராட்டம் 22-வது நாளை கடந்தும் அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிப்பதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

    இந்த போராட்டத்தால் வேலை இழந்துள்ள தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு ரூ. 1 கோடியை தாண்டி உள்ளது. உற்பத்தி இழப்பு ரூ. 3.36 கோடியை தாண்டும் என தெரிகிறது. அரசுக்கு ஏற்பட்டுள்ள வரி இழப்பு ரூ.16.80 லட்சமாகவும் உள்ளது.

    கடந்த 22 நாட்களாக வேலையின்றி உள்ளதால், ஒவ்வொரு குடும்பத்திற்கும் சுமார் ரூ. 10 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தைகளுக்கு பால் வாங்குவதற்கு கூட பணமின்றி தவிப்பதாகவும், கியாஸ், காய்கறி மற்றும் பலசரக்கு பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் கடன் வாங்கியும், வட்டி கட்டியும் சிரமத்தில் இருப்பதாகவும் தொழிலாளர்கள் வேதனை தெரிவித்தனர்.

    இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தொழிலாளர் நலத்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவரம்பட்டியை சேர்ந்த விசைத்தறி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ×