என் மலர்
விருதுநகர்
- விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்க தொழில்முனைவோர் விண்ணப்பிக்கலாம்.
- இந்த தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி, விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி ஆகிேயார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு செயல்படுத்திவரும் பல திட்டங்களுள் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டமும் ஒன்றாகும். இந்த திட்டத்தின் கீழ் குறைந்த பட்சம் 2 ஏக்கர் நிலப்பரப்பில் குறைந்தபட்சம் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும்.
தகுதிவாய்ந்த திட்ட மதிப்பில் (பொது உள்கட்டமைப்பு வசதிகள், பொதுப் பயன்பாட்டுக்கான கட்டிடங்கள்) 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி இவற்றில் எது குறைவானதோ அது தமிழ்நாடு அரசின் மானியமாக வழங்கப்படுகிறது.
தற்பொழுது தொழில்முனைவோரின் கோரிக்கையைத் தொடர்ந்து தகுதி வாய்ந்த திட்ட மதிப்பீட்டில் ஜவுளித் தொழிற்கூடங்கள் அமைப்பதற்கான கட்டிடங்களையும் சேர்த்து தமிழ்நாடு அரசினால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சிறிய அளவிலான ஜவுளிபபூங்காக்கள் அமைப்பதன் மூலம் வளர்ச்சி ஏற்பட்டு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பெருகும், அதிகளவில் அன்னியச் செலாவணி ஈட்டுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும்.
எனவே சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வழங்கும் சலுகைகளை சிவகங்கை மாவட்டத்தில் பயன்படுத்தி, தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை பெருக்கவும் அனைத்து தொழில்முனைவோரும் முன்வர வேண்டும்.
இந்த திட்டம் தொடர்பான விவரங்களுக்கு 39, விஸ்வநாதபும் மெயின்ரோடு, மதுரை-14 என்ற முகவரியில் உள்ள துணிநூல் துறை மதுரை மண்டல துணை இயக்குநரைத் தொடர்பு கொள்ளலாம். தொடர்பு எண்.94435 55581.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ராஜபாளையம் அருகே உள்ள சிமெண்டு ஆலையை நவீனப்படுத்தி வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என வாலிபர் சங்க மாநாடு நடந்தது.
- மாவட்டத் தலைவராக கருப்பசாமி, செயலாளராக ஜெயம் பாரத், பொருளாளராக கணேசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
ராஜபாளையம்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட 17-வது மாநாடு ராஜபாளையத்தில் நடந்தது.
மாவட்டத் தலைவர் கருப்பசாமி தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் உச்சிமாகாளி தொடங்கி வைத்தார். நந்தன் கனகராஜ் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயந்தி, இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜோதீஸ்வரன், மாதர் சங்க நகர தலைவர் மைதிலி ஆகியோர் பேசினர்.
புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத் தலைவராக கருப்பசாமி, செயலாளராக ஜெயம் பாரத், பொருளாளராக கணேசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலத் தலைவர் ரெஜிஸ் குமார் நிறைவுரையாற்றினார்.வரவேற்பு குழு பொருளாளர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.
ராஜபாளையம் நகரச் செயலாளர் செந்தமிழ் செல்வன், நகர தலைவர் அய்யப்பன், பொருளாளர் திருப்பதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ராஜபாளையத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டும், ராஜபாளையத்தில் திட்டப்பணிகளால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சிரமங்களில் முக்கியமாக வாகன நெரிசலை முறை ப்படுத்த வேண்டும், செண்பகவல்லி தடுப்பை ணையை சீரமைக்க வேண்டும்.
ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் ரத்த வங்கியினை ஏற்படுத்த வேண்டும், ராஜபாளையம் அருகே உள்ள ஆலங்குளம் சிமெண்டு ஆலையை நவீனப்படுத்தி வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழக அரசு நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தி மூடி கிடக்கும் கூட்டுறவு நூற்பாலைகளை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அச்சன்கோவில்- பம்பை ஆறு இணைந்த அழகர் அணை திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- கலை இலக்கிய பெருமன்ற கூட்டம் நடைபெற்றது.
- எம்.என்.டி.ஏ ஆரம்பப் பள்ளியில் நடந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ஸ்ரீவில்லிபுத்தூர் கிளையின் 230-வது எழுத்தாளர் சந்திப்பு மற்றும் படைப்பரங்கக் கூட்டம் எம்.என்.டி.ஏ ஆரம்பப் பள்ளியில் நடந்தது. கிளைத் தலைவர் கோதையூர் மணியன் தலைமை தாங்கினார். நூலகர் கந்தசாமி பாடல்கள் பாடினார்.
கவிஞர் சந்திரசேகர் வரவேற்றார். உடுமலைப்பேட்டை கவிஞர் ஆருத்ரா எழுதிய 'சக்கர வாகம்' என்ற கவிதைத் தொகுப்பு குறித்து, அய்யநாடார் ஜானகியம்மாள் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் சிவநேசன், பேராசிரியர் திருநாவுக்கரசு, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாவட்டத் தலைவர் செண்பகராஜன், பொருளாளர் நித்யா, சிலம்பாட்டக் கலைஞர் காயத்ரி, கலசலிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன உதவிப் பேராசிரியர் சங்கீதா ஆகியோர் பேசினர். 'கவிதையும் பாடலும்' என்ற தலைப்பில் புலவர் சிவனணைந்தபெருமாள் பேசினார்.
நூலாசிரியர் ஆருத்ரா ஏற்புரை வழங்கினார். 'தமிழ்நாடு முதலமைச்சர் காமராஜரும், எதிர்க்கட்சி தலைவர் ஜீவானந்தம் ஆகியோரின் நட்பு இலக்கிய இலக்கணம்' என்ற தலைப்பில் பேராசிரியர் காளியப்பன் பேசினார். அய்யநாடார் ஜானகியம்மாள் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் பொன்னுராஜன், சமூகநல ஆர்வலர் துள்ளுக்குட்டி, தங்கமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அடைக்கலம் நன்றி கூறினார்.
- அன்னப்பராஜா மேல்நிலைப்பள்ளியில் நிலத்தடி நீர் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
- முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
ராஜபாளையம்
ராஜபாளையத்தில் நிலத்தடி நீர் விழிப்புணர்வு முகாம் அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. பள்ளிச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமை தாங்கினார். பரமக்குடி நிலநீர் உப கோட்டத்தின் பொறியாளர் சந்திரன் முன்னிலை வகித்து ஜல் சக்தி அபியான் குறித்து பேசினார்.
தலைமையாசிரியர் ரமேஷ் வரவேற்றார். ராம்கோ சிமெண்ட் தோட்டக்கலைப் பிரிவின் பொறியாளர் ஈஸ்வரன், ராம்கோ டெக்ஸ்டைல் மண்டல மக்கள் தொடர்பு அலுவலர் சுரேஷ்குமார், தன்னார்வ தொண்டு நிறுவனமான துளி அமைப்பின் தலைவர் ராம்குமார், விஷ்ணு ஆகியோரும் பேசினர். நிலத்தடி நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு காணொளிக் காட்சிகள் காண்பிக்கப்பட்டன. மாணவர்களுக்குவினாடி வினாப் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் சிறப்பிடம் பெற்றவர்களுக்குப் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
விருதுநகர் நீர்வளத்துறை நிலநீர்ப்பிரிவு அலுவலர் சந்திரமோகன் நன்றி கூறினார். முகாமிற்கான ஏற்பாடுகளை தலைமையாசிரியர் உள்ளிட்ட சமூக அறிவியல் மன்ற ஆசிரியர்-ஆசிரியைகள் செய்திருந்தனர்.
- அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.2 கோடியில் தொழிற்சாலை பாதுகாப்பு மேலாண்மை பணிமனையை காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- அதனை தொடர்ந்து, இந்த புதிய பணிமனை மற்றும் வகுப்பறை கட்டிட வளாகத்தில் கலெக்டர் மேகநாத ரெட்டி குத்து விளக்கேற்றி வைத்து, வகுப்பறைகளை பார்வையிட்டார்.
விருதுநகர்
விருதுநகர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில், ரூ.2.05 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு தொழில்நுட்பம் மற்றும் தொழிற்சாலை பாதுகாப்பு மேலாண்மை என்ற புதிய தொழிற்பிரிவிற்கான பணிமனை மற்றும் வகுப்பறை கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.
மாணவர்கள் தொழிற்ப யிற்சி பெறுவதன் மூலம், வேலைக்கேற்ற திறனைப் பெற்று தகுதியான வேலைவாய்ப்பை பெறவும், சமூக பொருளா தார நிலையை உயர்த்திக் கொள்ளவும் இயலும் என்பதை கருத்தில் கொண்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்பயிற்சி நிலையங்கள் தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையால் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன்மூலம் மாணவர்களின் வேலைவாய்ப்பு பெறும் திறன் அதிகரிக்கும். இத்தகைய தொழில் திறன் பெற்ற மனிதவளத்தை உருவாக்க புதிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களை தொடங்குதல், அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், புதிய தொழிற்பிரிவுகளை தொடங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், விருதுநகர் அரசினர் தொ ழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.2.05 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய தீயணைப்பு தொழில்நுட்பம் மற்றும் தொழிற்சாலை பாதுகாப்பு மேலாண்மை என்ற புதிய தொழிற்பிரிவிற்கான பணிமனை மற்றும் வகுப்பறை கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து, இந்த புதிய பணிமனை மற்றும் வகுப்பறை கட்டிட வளாகத்தில் கலெக்டர் மேகநாத ரெட்டி குத்து விளக்கேற்றி வைத்து, வகுப்பறைகளை பார்வை யிட்டார்.
பின்னர், இந்த ஆண்டி ற்கான பயிற்சி யாளர்கள் சேர்க்கைக்கு அனுமதி க்கப்பட்ட தொழிற்பி ரிவு பயிற்சி யாளர்க ளுக்கு சேர்க்கை ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.
அதனை தொடர்ந்து, தொழிற்ப யிற்சி நிலைய வளாகத்தில் கலெக்டர் மே கநாதரெட்டி மரக்க ன்றினை நட்டு வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், மண்டல பயிற்சி இணை இயக்குநர்(திருநெல்வேலி) செல்வக்குமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செல்வராஜ், தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ராதாகிருஷ்ணன், நிலைய மேலாண்மை குழு உறுப்பினர் பிருந்தாவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- எடை அளவுகளை முத்திரையிடாமல் பயன்படுத்திய வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
- இந்த தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் ஆணையின்படியும், மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன் ஆலோசனையின்படியும் மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரமணியன் வழிகாட்டுதலின்படியும். விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வர்கள் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வர்கள் அடங்கிய குழுவினர் விருதுநகர் மாவட்டத்தில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், சிகரெட் லைட்டர் விற்பனை செய்யும் கடைகளிலும், பழைய இரும்பு வியாபாரம், வேஸ்ட் பேப்பர் கடைகளிலும் சட்டமுறை எடையளவு சட்டம், பொட்டலப் பொருட்கள் விதிகளின் கீழ் சிறப்பாய்வு மேற்கொண்டனர்.
எடையளவுகளை உரிய காலத்தில் பரிசீலனை செய்து முத்திரையிடாமல் வியாபார உபயோகத்தில் வைத்திருந்த 7 வணிகர்கள் மீதும், எடையளவுகள் மறுமுத்திரையிடப்ப ட்டதற்கான சான்றினை நுகர்வோர் பார்க்கும் வகையில் வைக்காத 10 வணிகர்கள் மீதும், பொது பயன்பாட்டில் இருந்து தடை செய்யப்பட்டதும், மெட்ரிக் எடையளவுகளின் கீழ் வரையறை செய்யப்படாததுமான அளவைகளை வியாபார பயன்பாட்டிற்காக பயன்படுத்திய 4 வணிகர்கள் மீதும், சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எடைஅளவுகளை உரிய காலத்தில் முத்திரையிடாமல் பயன்படுத்தும் வணிகர்களு க்கு, சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் முதலாம் குற்றச்சாட்டிற்கு ரூ.25 ஆயிரம் வரை அபராதமும், 2-ம் மற்றும் அதற்கு அடுத்த குற்றங்களுக்கு 6 மாதம் வரை சிறை தண்டனை மற்றும் அபராதமும் நீதிமன்றத்தின் மூலம் விதிக்க வழிவகை உள்ளது. மேற்கண்ட சிறப்பாய்வில் சிவகாசி தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் முத்து, சதாசிவம், விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர். ராஜபாளையம் மற்றும் உசிலம்பட்டி தொழிலாளர் உதவி ஆய்வர்கள் தயாநிதி, உமாமகேஸ்வரன், துர்கா, சிவசங்கரி ஆகியோர் இணைந்து கூட்டாய்வு மேற்கொண்டனர்.
இந்த தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்துள்ளார்.
- அ.தி.மு.க.வில் உள்ள உண்மையான தொண்டன் எதிர்பார்ப்பை பிரதிபலிக்கும் வண்ணம் கோர்ட்டு தீர்ப்பு அமையும்.
- கட்சியில் இருக்கும் கருத்து வேறுபாடுகளை தாண்டி தற்போது வரை அ.தி.மு.க. எம்.பி.யாக நான் மக்களவையில் பணியாற்றி வருகிறேன்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், தேனி தொகுதி எம்.பி. ரவீந்திரநாத் ஆதரவாளர்களை சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க முடியாது. அ.தி.மு.க.வை பொறுத்தவரை எளிய தொண்டன்தான் தலைமை பொறுப்புக்கு வர முடியும். தலைமை கழகம் யாருக்கு சொந்தம் என்று தற்போது தெளிவுபடுத்த முடியாத நிலை உள்ளது.
கோர்ட்டு உத்தரவுப்படி தலைமைக்கழக அலுவலகத்தில் சாவி கொடுக்கப்பட்டது. இதுகுறித்து மேல் முறையீடு செய்தபோது 2 வாரங்களில் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது. அ.தி.மு.க.வில் உள்ள உண்மையான தொண்டன் எதிர்பார்ப்பை பிரதிபலிக்கும் வண்ணம் கோர்ட்டு தீர்ப்பு அமையும்.
தற்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் புதிய பொறுப்பாளர்கள் நியமனம் நடைபெற்று வருகிறது. என்னுடைய பங்களிப்பு குறித்து ஒருங்கிணைப்பாளர்தான் முடிவு எடுப்பார்.
டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு நடைபெறுமா? என்பது தொண்டர்களின் மனதை பொறுத்து அமையும்.
கட்சியில் இருக்கும் கருத்து வேறுபாடுகளை தாண்டி தற்போது வரை அ.தி.மு.க. எம்.பி.யாக நான் மக்களவையில் பணியாற்றி வருகிறேன். அ.தி.மு.க. பொதுக்குழு குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- பிளஸ்-2 மாணவர்களுக்கான கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் தாமு பங்கேற்றார்.
- மாணவ-மாணவிகள் சமூக வலைதளங்களில் நேரத்தை வீணடிக்காமல் படிப்பில் அக்கறை காட்ட வேண்டும்.
சிவகாசி
சிவகாசி பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் சார்பில் பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கான கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி ''எதிர்காலம்? மேற்படிப்பிற்கான பயணம்...'' என்ற தலைப்பில் கல்லூரி கலையரங்கத்தில் நடந்தது. பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி தலைமை தாங்கினார். இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் விஷ்ணுராம் வரவேற்றார். டீன் மாரிசாமி உள்பட பலர் பேசினர்.
சிறப்பு விருந்தினராக சினிமா நடிகரும், பலகுரல் கலைஞர் மற்றும் அப்துல்கலாமின் சீடருமான தாமு கலந்து கொண்டார். இவர் 2021-ம் ஆண்டிற்கான சிறந்த கல்வி சேவைக்கான தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விழாவில் நடிகர் தாமு பேசியதாவது:-
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசிய இதே கல்லூரி மேடையில் பேசுவதை பெருமையாக கருதுகிறேன். மாணவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த லட்சியத்தை விதைக்க வேண்டும். அந்த லட்சியத்தை அடைவதற்கான அறிவை தேட ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது ஆகும்.
ஆசிரியர்கள் 2-வது பெற்றோர்கள். அவர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். மாணவ-மாணவிகள் சமூக வலைதளங்களில் நேரத்தை வீணடிக்காமல் படிப்பில் அக்கறை காட்ட வேண்டும். ஆன்லைன் கேம்ஸ், வீடியோ கேம்ஸ் போன்றவைகளில் கவனம் செலுத்தக்கூடாது.
உலக அரங்கில் இந்தியாவை வல்லரசாக்கும் அதீத சக்தி இன்றைய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கையில்தான் உள்ளது. ''கனவு காணுங்கள்'' என்ற அப்துல்கலாமின் வார்த்தைகளை நனவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பி.எஸ்.ஆர்.ஆர். பொறியியல் கல்லூரி முதல்வர் பாலசுப்பிரமணியன், பி.எஸ்.ஆர். கலை மற்றும் அறிவியில் கல்லூரி முதல்வர் சுந்தரராஜ், கல்வி இயக்குநர் கோபால்சாமி, பி.எஸ்.ஆர். பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் திருப்பரங்கிரிராஜன், பி.எஸ்.ஆர். கல்வியல் கல்லூரி முதல்வர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், அனைத்து கல்லூரிகளின் பேராசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர். விழாவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். சயின்ஸ் மற்றும் ஹூமானிட்டிஸ் துறைத்தலைவர் ஸ்ரீராம் நன்றி கூறினார்.
- சிவன் கோவிலில் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினார்கள்.
- இன்னும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டால் பல உண்மைகள் தெரிய வரும் எனவும் தெரிவித்தனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம்- திருநெல்வேலி சாலையில் அமைந்துள்ள பறவை அன்னம் காத்தருளியசாமி கோவிலில் வரலாற்றுக் கள ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தினார்கள்.
ராஜபாளையம் நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி ஏற்பாட்டின் பேரில் நடத்தப்பட்ட ஆய்வில் அங்கு கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டில் பல உண்மைகள் தெரிய வந்துள்ளது கிபி 11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவில் 12-ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இந்த கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தியதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
தற்போது உள்ள பறவை அன்னம் காத்தருளிய சுவாமி விக்ரகம் ஏற்கனவே உள்ள ஒரு பாழடைந்த மண்டபத்தில் இருந்ததாகவும் தற்போது பாதுகாப்பு காரணம் கருதி அந்த மண்டபத்திலிருந்து வேறொரு மண்டபத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கன்னிமூல திசையில் இருந்த கணபதி தற்போது சிவன் உள்ள கருவறையில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் முருகன் சந்நிதியும் இதர சன்னதிகளும் பாழடைந்த நிலையில் காணப்பட்டுள்ளன. இந்த சன்னதிகளை தொல்பொருள் ஆராய்ச்சி துறை சார்பில் ஆய்வு செய்து உரிய ஏற்பாடுகள் செய்தால் பல உண்மைகள் தெரியவரும் எனவும் வரலாற்று கள ஆராய்ச்சியா ளர்கள் தெரிவிக்கின்றனர்.
வரலாற்று கள ஆராய்ச்சி யாளர் சார்பில் வெங்கடேஷ், நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி, சுகாதார ஆய்வாளர்கள் காளி, பழனி குரு உள்பட பலர் இதில் கலந்துகொண்டு ஏற்பாடுகளை செய்திருந்தனர். இன்னும் ஆராய்ச்சி களை மேற்கொண்டால் பல உண்மைகள் தெரிய வரும் எனவும் தெரிவித்தனர்.
- கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக தேரோட்டம் நடைபெறவில்லை.
- 2 ஆண்டுகளுக்கு பின்னர் தேரோட்டம் நடைபெற்றதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வைணவ திருத்தலங்களில் முக்கியமானதாக கருதப்படும் ஆண்டாள் கோவில் அமைந்துள்ளது. சிறு வயதில் பெருமாள் மீது பக்தி கொண்ட ஆண்டாள் திருப்பாவை பாடல்களை பாடி இறைவனை கணவனாக அடைந்தார் என்பது வரலாறு.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூர தேர்த்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக தேரோட்டம் நடைபெறவில்லை.
இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர திருவிழா கடந்த ஜூலை 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவை முன்னிட்டு தினமும் காலை ஆண்டாள்-ரெங்கமன்னார் மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி மற்றும் இரவு வாகனங்களில் வீதிஉலா நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது பக்தர்கள் "கோவிந்தா... கோபாலா..." என்ற கோஷம் எழுப்பியபடி சென்றனர்.
முன்னதாக அமைச்ச ர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி, தக்கார் ரவிச்சந்திரன், நகராட்சி தலைவர் தங்கம் ரவிக்கண்ணன், செயல் அலுவலர் முத்துராஜா, நகராட்சி ஆணையாளர் ராஜமாணிக்கம், மாவட்ட நீதிபதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். தேர் 4 ரத வீதிகளிலும் அசைந்தாடி சென்றது.
2 ஆண்டுகளுக்கு பின்னர் தேரோட்டம் நடைபெற்றதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் ஆண்டாள் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இதனால் மாவட்ட மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பாதுகாப்பு பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். மேலும் திருவிழாவையொட்டி ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரம் மும்முரமாக நடைபெற்றது.
- உயர்த்தப்பட்ட குடிநீர் கட்டணத்தை குறைக்க நகரசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- தி.மு.க உறுப்பினர்கள் கரவொலி எழுப்பி வரவேற்றனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் நகராட்சி அவசரக் கூட்டம் தலைவர் பவித்ராஷியாம்ராஜா தலைமையில் நடந்தது. துணை தலைவர் கல்பனாகுழந்தைவேல் முன்னிலை வகித்தார். ஆணையாளர் பார்த்தசாரதி, பொறியாளர் ராமலிங்கம்,நகர்நல அலுவலர் சரோஜா மற்றும் அனைத்து வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தலைவரின் நேர்முக உதவியாளர் முருகன் தீர்மானங்களை வாசித்தார்.
ராஜபாளையம் நகராட்சி யில் குடிநீர் கட்டணம் 2022-23 முதல் சதுர அடிக்கு ஏற்ப பல மடங்கு உயர்த்தப்பட்டிருப்பதை பொது மக்களின் நலன் கருதி குடியிருப்புகளுக்கு 500சதுர அடிக்கு குறைவானதுக்கு மாதம் ஓன்றுக்கு ரூ.100 என்றும், 500 சதுர அடிக்கு மேல் ரூ.150 என்றும், வணிகம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு 300 சதுர அடிக்கு குறைவானதுக்கு ரூ.200 என்றும், 300 முதல் 500 சதுர அடிவரை ரூ.300 என்றும், 501 முதல் 1000 சதுர அடிவரை ரூ.450 என்றும், 1001 சதுர அடிக்கு மேல் ரூ.570 என்றும் நிர்ணயம் செய்ய தலைவர் பவித்ரா ஷியாம்ராஜா அதிரடியாக கொண்டு வந்த குடிநீர் வரி குறைப்பு தீர்மானம் உட்பட73 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.குடிநீர் கட்டண குறைப்பு தீர்மானத்தை தி.மு.க உறுப்பினர்கள் கரவொலி எழுப்பி வரவேற்றனர்.
- பணம் கையாடல்; அஞ்சலக அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டார்.
- ரூ. 23 ஆயிரத்தை சுந்தரமூர்த்தி கையாடல் செய்ததாக தெரிகிறது.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள சூலக்கரையைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (39). இவர் இனாம் ரெட்டியப்பட்டி அஞ்சல் அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். பணியில் இருந்த போது வாடிக்கையாளரின் ரூ. 23 ஆயிரத்தை சுந்தரமூர்த்தி கையாடல் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்திய பின் சுந்தரமூர்த்தியை உயரதிகாரிகள் பணி நீக்கம் செய்தனர்.
இந்த நிலையில் விருதுநகர் அஞ்சல் துறை உப கோட்ட ஆய்வாளர் ராமசாமி கையாடல் செய்து தொடர்பாக சுந்தரமூர்த்தி மீது போலீசில் புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில் சூலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






