என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • பட்டிய பயிற்சி விண்ணப்பம் பெற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • விருதுநகர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மேலாண்மை கூட்டுறவு பயிற்சி நிலையத்தில் தற்போது பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பங்கள் பெறுவதற்கு வருகிற 18-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வருகிற 22-ந் தேதி மாலை 5 மணிக்குள் சாத்தூர் மேலாண்மை நிலையத்திற்கு தபால் மூலமாகவோ, கூரியர் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.

    பயிற்சி கட்டணம் ரூ.18 ஆயிரத்து 850 ஆகும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாணவ-மாணவிகள் கூட்டுறவு பட்டய பயிற்சியில் சேருவதற்கு மேலாண்மை நிலைய முதல்வரை அணுகலாம்.

    மேற்கண்ட தகவலை விருதுநகர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

    • வீடுதோறும் தேசியக்கொடி இயக்கம் நடந்தது.
    • தன்னார்வலர்களுக்கு தேசிய கொடியை ஒருங்கிணைப்பாளர் வழங்கினார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    இல்லம் தேடி கல்வித் திட்டம் சார்பில் வீடுதோறும் தேசியக்கொடி இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வது குறித்து குறுவளமைய தன்னார்வலர் ஒருங்கிணைப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊரணிபட்டி நடுநிலைப்பள்ளியில் நடந்தது.

    திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் தலைமை தாங்கினார். குறுவளமைய தன்னார்வலர் ஒருங்கிணைப்பாளர் மகாலட்சுமி வரவேற்றார்.

    ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் பேசுகையில், 75-வது சுதந்திர தினத்தையொட்டி ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி என்ற திட்டத்தின்படி வருகிற 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை அனைத்து வீடுகளிலும் மூவர்ண தேசியக் கொடியை பறக்கவிட வேண்டும்.

    இந்த கொண்டாட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். இதற்கு இல்லம் தேடி கல்வி திட்டத்தின் தன்னார்வலர்கள், தங்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடியை பறக்கவிடும் வகையில் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். முன்னதாக வீடுதோறும் தேசியக்கொடி இயக்கத்தை தொடங்கும் வகையில் தன்னார்வலர்களுக்கு தேசிய கொடியை ஒருங்கிணைப்பாளர் வழங்கினார்.

    இதில் தன்னார்வலர்கள் சூர்யா, சித்ரா, நிரோஷா, ஈஸ்வரி, அமுதவல்லி, சுமதி, கவிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தன்னார்வலர் சிவகாமி நன்றி கூறினார்.

    • செஸ் ஒலிம்பியாட்போட்டி சிவகாசி-குற்றாலத்திற்கு சைக்கிள் பேரணி சென்ற கல்லூரி மாணவர்களை ராஜபாளையத்தில் வரவேற்றனர்.
    • 240 கி.மீ. தூர சைக்கிள் பேரணியை தொடங்கினார்கள்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள தனியார்கல்லூரியின் உடற் கல்வியியல் துறை மாணவர்கள் 210 பேர் தமிழக அரசு சார்பாக மாமல்லபுரத்தில்நடந்து வரும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி பற்றியவிழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த திட்டமிட்டனர்.

    இதைத்தொடர்ந்து சிவகாசியில் இருந்து குற்றாலம் வரை 240 கி.மீ. தூர சைக்கிள் பேரணியை தொடங்கினார்கள். கல்லூரி வளாகத்தில் இருந்து தொடங்கிய இந்த சைக்கிள் பேரணி ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக ராஜபாளையம் வந்தடைந்தது.

    ராஜபாளையம் அன்ன ப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் வைத்து தாளாளர்

    என். ஆர்.கிருஷ்ணமூர்த்தி ராஜா, தலைமை ஆசிரியர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் உடற்கல்வி மாணவர்கள் வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் தளவாய்புரம், முகவூர், தேவதானம்

    • ராஜபாளையம் சுற்று வட்டாரத்தில் தனியார் ரக சோளம் விளைச்சல் அதிகரித்துள்ளது.
    • இந்த சோளம் 110 முதல் 120 நாட்களுக்குள் அறுவடைக்கு தயாராகி விடும்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒட்டு ரக சோளம் விளைவிக்கப்பட்டுள்ளது. தனியார் ரகமான இது 5 சதவீதம் வரை ஒட்டு ரகத்தையும், மீதி நாட்டு ரகமான சோளத்தையும் கொண்டுள்ளது.

    சித்திரைப் பட்டத்தில் விதைக்கப்படும் இந்த சோளம் 110 முதல் 120 நாட்களுக்குள் அறுவடைக்கு தயாராகி விடும்.

    அறுவடையின் போது கிலோ ரூ.35 வரை விலை போகும். குறைந்தது ஹெக்டேர் ஒன்றுக்கு 4 1/2 டன் சோளம் கிடைக்கும்.

    நிலத்தை தரிசாக போடுவதை விடுத்து இந்த சோளத்தை பயிரிட்டால் அதிக செலவு இல்லாமலும் நல்ல வருமானம் கிடைப்பதாகவும் இருக்கும். இதன் காரணமாக இந்த தனியார் ரக சோளம் விளைச்சலில் சக்கை போடுபோடுகிறது.

    ராஜபாளையம் சுற்று வட்டாரங்களில் இந்த ரக சோளத்தை விவசாயிகள் விரும்பி பயிரிட்டு பயனடைந்து வருகின்றனர்.

    சந்தையில் இதன் விலை உயர்ந்துள்ளதை விவசாயிகள் மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.

    • ராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில அளவிலான யூத் சாம்பியன்ஷிப் கைப்பந்து போட்டி 6-ந் தேதி தொடங்குகிறது.
    • போட்டியில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகளுக்கு தங்கும் இடம், உணவு வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்ட கைப்பந்துக் கழகத்தின் தலைவர் செல்வகணேஷ், பொருளாளர் துரை சிங், தலைமையக செயலாளர் பொன்னியின்செல்வன், பொருளாளர் விநாயகமூர்த்திஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மாநில கைப்பந்து கழகத்தின் திட்டங்களில் ஒன்றான மாநில யூத் சாம்பியன்ஷிப் போட்டிகள் ராஜபாளையத்தில் நடைபெற உள்ளது.

    இதில் தமிழகத்தின் 38 மாவட்டங்கை சேர்ந்த ஆண், பெண் அணிகள் கலந்து கொள்கின்றனர். இந்த போட்டியில் 21 வயதுக்கு உட்பட்டவர்கள் கலந்து கொள்கின்றனர்.

    இந்த போட்டிகள் விருதுநகர் மாவட்ட கைப்பந்து கழகத்தின் சார்பாக வருகிற 6-ந்தேதி தொடங்கி 9-ந்தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது.

    ராஜபாளையம் ரெயில்வேபீடர் ரோட்டில் உள்ள கிருஷ்ணம ராஜபாளையம் நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட நாடார் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம், ராம்கோ ஊர்காவல்படை மைதானத்தில் நடைபெறும்.

    இந்த போட்டிகளுக்காக 5மைதானங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் 3 மைதானங்களில் மின் ஒளி வசதி செய்யப்பட்டுள்ளது.

    போட்டியில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகளுக்கு தங்கும் இடம், உணவு வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    போட்டிகளின் தொடக்க விழா போட்டி வருகிற 6-ந்தேதியன்று மாலை 3 மணி அளவில் நாடார் மேல்நிலை பள்ளியில் நடைபெறும்.

    இதில் 1000 போட்டி யாளர்கள், 50 நடுவர்கள் மற்றும் தேர்வுகுழு உறுப்பினர்கள் பங்கேற்கிறார்கள். பார்வையாளர்கள் அமர்ந்து விளையாட்டை கண்டு ரசிக்க காலரி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைவரும் ஆதரவு தர வேண்டுகிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விருதுநகர் மாவட்டத்தில் 2 சிறுமிகள் உள்பட 4 பேர் மாயமானார்கள்.
    • காரியாபட்டி, வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    காரியாபட்டி ஜெகஜீவன்ராம் தெருவைச் சேர்ந்தவர் கருணாகரன் (வயது 20). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்த புகாரின் பேரில் காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு ரத வீதியைச் சேர்ந்தவர் கல்யாணி (86). சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவர் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் பலனில்லை. இதுகுறித்து அவரது மகன் கல்யாணசுந்தரம் கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    சிவகாசியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமி பள்ளிக்கு செல்லாமல் பெற்றோருக்கு உதவியாக வீட்டில் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று வெளியே சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. சிவகாசி கிழக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல் விருதுநகர் அருகே உள்ள கோட்டூரைச் சேர்ந்த 17 வயது சிறுமியும் மாயமானது தொடர்பாக வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அருப்புக்கோட்டையில் உயிரை பணயம் வைத்து மாணவர்கள் பஸ்சின் படியில் பயணம் செய்கின்றனர்.
    • கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ -மாணவிகள் மற்றும் தொழிலாளர்கள் மதுரை, விருதுநகரில் நாள்தோறும் பள்ளி, கல்லூரிகளுக்கு மற்றும் வேலைக்கு சென்று வருகின்றனர்.

    இதன் காரணமாக அருப்புக்கோட்டையில் இருந்து காலை நேரங்களில் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் கூட்டம் அலைமோதும். இதில் மாணவ-மாணவிகள் உரிய நேரத்தில் பள்ளி, கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் கூட்ட நெரிசலையும் பொருட்படுத்தாமல் பஸ்சில் முண்டியடித்துக் கொண்டு ஏறுகின்றனர். இதில் மாணவர்கள் பஸ்சின் படியில் ஆபத்தான முறையில் உயிரை பணயம் வைத்து செல்கிறார்கள்.

    இந்த காட்சிகளை காலை மற்றும் மாலை நேரங்களில் காண முடியும். சில நேரங்களில் சிலர் பஸ்சில் இருந்து தவறி விழுந்து காயமடைவது வழக்கமாக இருந்து வருகிறது.

    எனவே அருப்புக்கோட்டைக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வருகிற 17-ந் தேதி ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உளது.
    • இந்த தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 17-ந்தேதி மாவட்ட அளவிலான ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை தாங்குகிறார். சென்னை ஓய்வூதிய இயக்குநர் முன்னிலை வகிக்கிறார்.

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோர் தங்களது ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதிய பலன்கள் பெறுவதில் பிரச்சினைகள் ஏதும் இருப்பின் அது தொடர்பான கோரிக்கை மனுக்களை வருகிற 8-ந் தேதிக்குள் விருதுநகர் மாவட்ட கலெக்டருக்கு இரட்டைப் பிரதிகளில் அனுப்பி வைக்கலாம்.

    விண்ணப்பங்களில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் மனு என குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தில் மனுதாரர் கோரிக்கை விவரத்துடன் ஓய்வூதியதாரர் பெயர், குடும்ப ஓய்வூதியம் என்றால் உறவுமுறை, பணியிலிருந்து ஓய்வு பெற்ற நாள், கடைசியாக பணிபுரிந்த அலுவலகம், ஓய்வூதிய எண் மற்றும் ஓய்வூதியம் பெறும் கருவூலம் ஆகிய விவரங்கள் குறிப்பிடப்பட வேண்டும்.

    தற்போது ஓய்வூதியம் பெறுவதில் உள்ள குறைபாடுகள் குறித்து ஏற்கனவே சென்னை யிலுள்ள மாநில கணக்காயருக்கு அனுப்பப்பட்டு அது தொடர்பான பதில் ஏதும் பெற்றிருப்பின் அதன் விவரங்களும் இணைக்கப்பட வேண்டும்.

    ஓய்வூதியர்களுக்கு உள்ள குறைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் விவாதித்து, ஓய்வூதியர்களின் குறைகளை தீர்க்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இந்த தகவலை கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

    • மதுரை அருகே பெண் தொழிலாளி-மாணவன் மாயமானார்கள்.
    • 2 பேர் மாயமானது குறித்து கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள குப்பச்சிபட்டியைச் சேர்ந்தவர் பாக்கியராஜ். இவரது மகள் கணவரை பிரிந்து தந்தையுடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்த இவர் சம்பவத்தன்று திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் பலனில்லை.

    வத்திராயிருப்பு எஸ்.ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் மதன்குமார் (வயது 14). 10-ம் வகுப்பு படித்து வந்த இவர் சம்பவத்தன்று மாயமானார்.

    2 பேர் மாயமானது குறித்து கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சாத்தூரில் நிதி நிறுவன உரிமையாளரிடம் ரூ.14.5 லட்சம் மோசடி செய்யப்பட்டது.
    • இது தொடர்பாக ஒரு பெண்ணை கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் வைரமுத்து (வயது 34). இவர் அதே பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இருக்கன்குடியைச் சேர்ந்த மாரிச்செல்வி (38), கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள காரக்காடு பகுதியைச் சேர்ந்த பைசல் ஆகியோர் நிதி நிறுவனத்துக்கு வந்தனர். அங்கு வைரமுத்துவிடம் எங்களுக்கு சொந்தமான 458 கிராம் தங்க நகை, சாத்தூர் அரசு வங்கியில் அடகு வைத்திருப்பதாகவும், அதனை மீட்டு மறு அடகு வைக்க பணம் உதவி செய்யுமாறு கேட்டுள்ளனர்.

    இதை நம்பி வைரமுத்து ரூ.14.5 லட்சத்தை 2 பேரிடமும் கொடுத்துள்ளர். மேலும் அவர்களுடன் பாலாஜி என்பவரை வைரமுத்து அனுப்பி வைத்துள்ளார்.

    பைசல், மாரிச்செல்வி வங்கிக்கு செல்வது போல் நடித்து பாலாஜியை ஏமாற்றி பணத்துடன் தப்பினர். இதனால் அதிர்ச்சியடைந்த வைரமுத்து மோசடி தொடர்பாக சாத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தார்.

    2 தனிப்படைகளை அமைத்து போலீசார் கேரளா மற்றும் தென்காசிக்கு சென்று 2 பேரையும் பிடிக்க முயற்சிகள் மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் இன்று காலை தென்காசியில் பதுங்கி இருந்த மாரிச்செல்வியை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்த 2 கார்களையும் பறிமுதல் செய்த போலீசார் மாரிச்செல்வியை சாத்தூருக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முக்கிய குற்றவாளியான பைசலை போலீசார் தேடி வருகின்றனர்.

    • திருத்தங்கல்லில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் 16 வயது சிறுமி கர்ப்பமானார்.
    • இந்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்லைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி 9-ம் வகுப்பு வரை படித்து வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருந்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது தாயார் அந்த சிறுமிைய தேராம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டில் விட்டுச் சென்றார்.

    இந்த நிலையில் சிறுமிக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து குடும்பத்தினர் சிறுமியை விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்ததில் அவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி யடைந்த டாக்டர்கள் இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் திருத்தங்கல் சத்யா நகரைச் சேர்ந்த வைரமுத்து (வயது 22), பரமசிவம் (44) ஆகிய 2 பேர் 2 வருடங்களாக சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.

    இதில் சிறுமி கர்ப்பமானது தெரியவந்துள்ளது.

    இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

    • ராஜபாளையத்திற்கு முதல் முறையாக பெண் போலீஸ் டி.எஸ்.பி. நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • புதிய வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு காண இருப்பதாக கூறினார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் காவல்துறை துணை காண்காணிப்பாளரின் (டி.எஸ்.பி.) கீழ் 5 காவல் நிலையங்கள், மகளிர் காவல் நிலையம், போக்குவரத்து காவல் நிலையம் என மொத்தம் 7 காவல் நிலையங்கள் உள்ளன. தனியாக டி.எஸ்.பி. அலுவலகமும் செயல்பட்டு வருகிறது.

    ராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சேத்தூர், ராஜபாளையம் வடக்கு பகுதிகள் குற்றச்சம்பவங்கள் அதிகமாக நடைபெறுகிறது.

    இந்த பகுதிகளில் குற்ற சம்பவங்கள் தற்போது குறைந்து இருந்தாலும் அவ்வப்போது சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதுமாக இருந்து வருகிறது .

    இந்த நிலையில் ராஜபாளையம் பகுதியில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பதவி 3 மாதங்களாக காலியாக இருந்த நிலையில் தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க் ராஜபாளையம் பகுதிக்கு நேரடியாக டி.எஸ்.பி. தேர்வு எழுதி பயிற்சி முடித்தவரே டி.எஸ்.பி.யாக நியமனம் செய்யப்படுவார் என தெரிவித்த நிலையில், இன்று ராஜபாளையத்திற்கு புதிய பெண்போலீஸ் டி.எஸ்.பி.யாக ப்ரீத்தி நியமிக்கப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டார்.

    இவர் 2020-ம் ஆண்டு நேரடி டி.எஸ்.பி.யாக தேர்வு எழுதி சேலத்தில் பயிற்சி முடித்து ராஜபாளையத்தில் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்.

    கடந்த 3 மாதங்களில் ராஜபாளையம் பகுதியில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகம் நடந்துள்ளது.

    மேலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளை விரைந்து முடிக்கவும், புதிய வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு காண இருப்பதாகவும் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட டி.எஸ்.பி. பிரீத்தி தெரிவித்தார்.

    பொதுமக்கள் தங்கள் பகுதியில் குற்ற சம்பவங்கள் கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனை நடைபெற்றால் தயங்காமல் காவல்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.


    ×