என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள்
- வருகிற 17-ந் தேதி ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உளது.
- இந்த தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 17-ந்தேதி மாவட்ட அளவிலான ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை தாங்குகிறார். சென்னை ஓய்வூதிய இயக்குநர் முன்னிலை வகிக்கிறார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோர் தங்களது ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதிய பலன்கள் பெறுவதில் பிரச்சினைகள் ஏதும் இருப்பின் அது தொடர்பான கோரிக்கை மனுக்களை வருகிற 8-ந் தேதிக்குள் விருதுநகர் மாவட்ட கலெக்டருக்கு இரட்டைப் பிரதிகளில் அனுப்பி வைக்கலாம்.
விண்ணப்பங்களில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் மனு என குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தில் மனுதாரர் கோரிக்கை விவரத்துடன் ஓய்வூதியதாரர் பெயர், குடும்ப ஓய்வூதியம் என்றால் உறவுமுறை, பணியிலிருந்து ஓய்வு பெற்ற நாள், கடைசியாக பணிபுரிந்த அலுவலகம், ஓய்வூதிய எண் மற்றும் ஓய்வூதியம் பெறும் கருவூலம் ஆகிய விவரங்கள் குறிப்பிடப்பட வேண்டும்.
தற்போது ஓய்வூதியம் பெறுவதில் உள்ள குறைபாடுகள் குறித்து ஏற்கனவே சென்னை யிலுள்ள மாநில கணக்காயருக்கு அனுப்பப்பட்டு அது தொடர்பான பதில் ஏதும் பெற்றிருப்பின் அதன் விவரங்களும் இணைக்கப்பட வேண்டும்.
ஓய்வூதியர்களுக்கு உள்ள குறைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் விவாதித்து, ஓய்வூதியர்களின் குறைகளை தீர்க்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த தகவலை கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.






