

அருப்புக்கோட்டை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ -மாணவிகள் மற்றும் தொழிலாளர்கள் மதுரை, விருதுநகரில் நாள்தோறும் பள்ளி, கல்லூரிகளுக்கு மற்றும் வேலைக்கு சென்று வருகின்றனர்.
இதன் காரணமாக அருப்புக்கோட்டையில் இருந்து காலை நேரங்களில் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் கூட்டம் அலைமோதும். இதில் மாணவ-மாணவிகள் உரிய நேரத்தில் பள்ளி, கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் கூட்ட நெரிசலையும் பொருட்படுத்தாமல் பஸ்சில் முண்டியடித்துக் கொண்டு ஏறுகின்றனர். இதில் மாணவர்கள் பஸ்சின் படியில் ஆபத்தான முறையில் உயிரை பணயம் வைத்து செல்கிறார்கள்.
இந்த காட்சிகளை காலை மற்றும் மாலை நேரங்களில் காண முடியும். சில நேரங்களில் சிலர் பஸ்சில் இருந்து தவறி விழுந்து காயமடைவது வழக்கமாக இருந்து வருகிறது.
எனவே அருப்புக்கோட்டைக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.