என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • ராஜபாளையத்தில் இயற்கை பேரிடர் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
    • இதில் 600-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் கிங் சிட்டி ரோட்டரி சங்கத்தின் துணை அமைப்பான இண்ட்ராக்ட் அமைப்பின் சார்பில் அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் இயற்கைப் பேரிடர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் பள்ளிச்செயலர் கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமையில் நடந்தது. ரோட்டரி கிளப் செயலர் வியாஷ் மற்றும் சுந்தர் முன்னிலை வகித்தனர்.

    இண்ட்ராக்ட் கிளப்பின் தலைவர் பிரகாஷ் வரவேற்றார். தலைமையாசிரியர் ரமேஷ், கருத்தாளர், சிவகுமார் ஆகியோர் பேசினர். சத்ய சாய் அமைப்பின் இயற்கைப் பேரிடர் மேலாண்மை குழுவின் தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், செல்வக்குமார் ஆகியோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்துக்களை காணொலி காட்சிகளின் மூலம் விளக்கினர்.

    மாணவர்களுக்கு ஏற்படும் ரத்தக்காயங்கள், எலும்பு முறிவு, மயக்கம், கை, கால் வலிப்பு, மூச்சுத்திணறல் போன்ற சூழ்நிலைகளில் எவ்வாறு முதலுதவி செய்ய வேண்டும் என்பது குறித்தும் விளக்கப்பட்டது. இண்ட்ராக்ட் கிளப்பின் செயலர் யுவராஜன் நன்றி கூறினார். இதில் 600-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர்.

    • கலசலிங்கம் பல்கலைகழகத்தில் தேசிய சினிமா நாள் விழா துணைத்தலைவர் எஸ்.சசிஆனந்த் தலைமையில் நடந்தது.
    • இதில் மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கலசலிங்கம் பல்கலைகழகத்தில் விஷுவல் கம்யூனிகேஷன் துறை சார்பில் தேசிய சினிமா நாள் விழா துணைத்தலைவர் எஸ்.சசிஆனந்த் தலைமையில் நடந்தது. பதிவாளர் வாசுதேவன் வாழ்த்துரை வழங்கினார். திரைப்பட ஒளிப்பதிவாளர் சுகுமாரன் சுந்தர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திரைப்பட ஒளிப்பதிவு நுணுக்கங்கள், சினிமா தயாரிப்பு பற்றி பேசினார். விஸ்காம் துறையில் "சினிமா கிளப்பை'' டீன் பாண்டியராஜன் தொடங்கி வைத்தார். துறைத்தலைவர் கற்பக சுந்தரம் நன்றி கூறினார். இதில் மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    • ராஜபாளையம் அன்னப்பராஜா பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
    • தலைமையாசிரியர் ரமேஷ் வரவேற்றார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா பள்ளிச்செயலர் கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமையில் நடந்தது. தலைமையாசிரியர் ரமேஷ் வரவேற்றார். ராஜபாளையம் நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷியாம்ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விலையில்லா சைக்கிள்களை மாணவ,மாணவிகளுக்கு வழங்கி பேசினார்.

    ராமச்சந்திர ராஜா அறக்கட்டளை தாளாளர் மஞ்சுளா கிருஷ்ணமூர்த்திராஜா, அறக்கட்டளை உறுப்பினர்கள் ராம்விஷ்ணு ராஜா, ராம்வெங்கட்ராஜா மற்றும் ராகஜோதி ராம்விஷ்ணு ராஜா, கருத்தாளர்கள் சிவகுமார், பழனியப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர். உதவி தலைமையாசிரியர் மாரியப்பன் நன்றி கூறினார்.

    • ராஜபாளையத்தில் காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    • அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்

    திருச்சியை அடுத்த பெரியமிளகு பாறையை சேர்ந்த கணேசன் என்பவர் மகள் கோகிலா (வயது23). இவரும் ராஜபாளையத்தை சேர்ந்த குருமூர்த்தி (25) என்பவரும் கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் குருமூர்த்தி மனைவியிடம் வரதட்சணை வாங்கி வரும்படி வற்புறுத்தி உள்ளார். இதில் மனமுடைந்த கோகிலா விஷம் குடித்து விட்டார். அவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி கோகிலாவின் தாய் மஞ்சுளா ராஜபாளையம் தெற்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் ரோபாடிக்ஸ்- ஆட்டோமேஷன் கருத்தரங்கம் நடந்தது.
    • ரோபோடிக்ஸ் பயிற்சியை சிறப்பு விருந்தினர் நடத்தினார்.

    சிவகாசி

    பொறியாளர் தினத்தை முன்னிட்டு சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் இயந்திரவியல் துறையின் மாணவர்கள் சங்க தொடக்க விழா மற்றும் "ரோபாடிக்ஸ் ஆண்டு ஆட்டோமேஷன்" என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஆகியவை நடந்தது.

    கல்லூரியின் தாளாளர் ஆர்.சோலைச்சாமி தலைமை தாங்கினார். கல்லூரி இயக்குநர் எஸ்.விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். கல்லூரியின் டீன் பி.மாரிச்சாமி சிறப்புரையாற்றினார். துறைத்தலைவர் எச். கனகசபாபதி வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் பி.ஜி.விஷ்ணுராம் வாழ்த்தி பேசினார்.

    இதில் சிறப்பு விருந்தினராக மேட் லேப் என்ஜினீயரிங் பிரைவேட் லிமிடெட் சேவை மேலாளர் எஸ்.முத்துக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர் தினத்தை தொடங்கி வைத்தார். இந்த சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளராக தேர்ந்தெ டுக்கப்பட்ட கே.ராஜபாண்டி, கே.தேவராஜ் (4-ம் ஆண்டு), கோபி ஆனந்த் (3-ம் ஆண்டு) ஆகியோர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

    விழாவை முன்னிட்டு இறுதி யாண்டு மாணவர்க ளுக்கு ரோபோடிக்ஸ் பயிற்சியை சிறப்பு விருந்தினர் நடத்தினார். இந்த பயிற்சியில் நவீன இயந்திரவியல் துறையில் ரோபோடிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் தானியங்கி கருவிகளின் சிறப்பு அம்சங்களையும் அவற்றின் செயல்பாட்டினையும் எடுத்துரைத்தார்.

    இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி இயந்திரவியல் துறை பேராசிரியர்கள் குமாரசாமி, கார்த்திக் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் முத்தையா நன்றி கூறினார்.

    • ராஜபாளையத்தை தவிர்த்து வேறு வழியாக சென்று வருகின்றனர்.
    • உள்ளூர் வாசிகள் சென்றாக வேண்டிய கட்டாயத்தில் தூசிகளுக்கிடையே சென்று வருகிறார்கள்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சத்திரப்பட்டி சாலையில் ரெயில்வே மேம்பால பணிகள், ராஜபாளையம் நகர் பகுதி முழுவதும் பாதாள சாக்கடை திட்டம், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் ஆகிய 3 பணிகளும் ஒரே சமயத்தில் தொடங்கப்பட்டது. இதனால் அனைத்து பாதைகளும் குண்டும் குழியுமாகி விட்டது.

    பொதுமக்கள் அன்றாடம் செத்துப் பிழைக்கும் நிலை இருந்து வருகிறது. குறிப்பாக ராஜபாளையத்தில் பிரதான சாலையான தென்காசி தேசிய நெடுஞ்சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

    இதில் ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் முதல் புதுப்பாளையம் மாரியம்மன் கோவில் வரை செல்வதற்கு குறைந்தபட்சம் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் ஆகிறது.

    இதனால் ராஜபாளையம் வழியாக செல்லும் கனரக வாகனங்கள் பெரும்பாலும் ராஜபாளையத்தை தவிர்த்து வேறு வழியாக சென்று வருகின்றனர். உள்ளூர் வாசிகள் சென்றாக வேண்டிய கட்டாயத்தில் தூசிகளுக்கிடையே சென்று வருகிறார்கள்.

    இது குறித்து பலமுறை அதிகாரிகளுக்கும், கலெக்டருக்கும் ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் சார்பில் நினைவூட்டல் செய்தும் எந்த ஒரு பலனும் இல்லை.

    இதை கண்டித்தும், சாலை மற்றும் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வலிறுத்தி தொழில் வர்த்தக சங்கம் சார்பில் இன்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. 95 சதவீத கடைகள் அடைக்கப்பட்டதால் முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. கடை அடைப்பால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

    • விருதுநகர் அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    திருச்சுழி அருகே உள்ள தென்னிலைக்குடியைச் சேர்ந்தவர் சந்தானம். இவரது மனைவி வள்ளி (வயது 65). இவருக்கு கடந்த சில வருடங்களாக உடல்நல பாதிப்பு இருந்தது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த வள்ளி சம்பவத்தன்று உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். படுகாயமடைந்த அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வள்ளி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • பாதாள சாக்கடை, தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், ெரயில்வே மேம்பாலப்பணியில் மெத்தப்போக்கை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் பாதாள சாக்கடை, தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், ெரயில்வே மேம்பாலப்பணியில் மெத்தப்போக்கை கண்டித்து மக்களின் பாதிப்பை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் நாளை நடத்தும் கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திர ராஜா தலைமையில் நடந்தது.

    நகர செயலாளர் மாரியப்பன், பார்வர்டு பிளாக் கட்சி மாவட்ட செயலாளர் நல்லமுத்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர் தாமஸ், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் கண்மணி காதர், ஆதித்தமிழர் கட்சி வேல்முருகன், ராஜபாளையம் முகநூல் நண்பர்கள் குழு சரவணன், அறம் அறக்கட்டளை மணிகண்டன், அன்னை தெரசா நற்பணி இயக்கம் ஜெகன், டாச்சி தொழிலாளர் சங்கம் கண்ணன், சி.ஐ.டி.யு. தொழிற்சங்க தலைவர்கள் கணேசன், சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நாளை (17-ந்தேதி) ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் நடத்தும் கடை அடைப்பு போராட்டத்திற்கு முழு ஆதரவு அளிப்பது, அன்றைய தினம் ராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற உறுதிமொழி ஏற்போம் என்று விருதுநகரில் நடந்த முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
    • தொண்டர்களுக்கு 4 ஆயிரத்து 41 கடிதங்கள் எழுதியவர் கலைஞர்தான்.

    விருதுநகர்

    விருதுநகர் - சாத்தூர் இடையே பட்டம்புதூர் அண்ணா நகரில் 200 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட கலைஞர் திடலில், அண்ணா பிறந்த தினம், தி.மு.க. உதயமான தினம், தந்தை பெரியார் பிறந்த தினம் ஆகிய தி.மு.க. முப்பெரும் விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவில் தி.மு.க. தலைவரும், முதல் அமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    தந்தை பெரியார் பிறந்தநாள், அறிஞர் அண்ணா பிறந்தநாள், தி.மு.க. உதயமான நாள் ஆகிய 3-ம் இணைந்ததுதான் இந்த முப்பெரும் விழாவாகும்.

    இந்த நாள் திருநாள் நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ளும் நாள். 5 பேருக்கு இங்கு விருது தரப்பட்டுள்ளது. இவர்கள் தி.மு.க.வின் முகமாக இருப்பவர்கள். கலைஞர் கடிதம் மூலம் உடன்பிறப்புகளை திரட்டக் கூடியவர். வரலாற்று சிறப்புமிக்க இவ்விழாவில் மகுடம் சூட்டுவது போல் உடன்பிறப்புகளுக்கு கலைஞர் எழுதிய கடிதங்கள் வெளியிடப்படுகிறது.

    தொண்டர்களுக்கு 4 ஆயிரத்து 41 கடிதங்கள் எழுதியவர் கலைஞர்தான். இவர் எழுதிய 21 ஆயிரத்து 501 பக்கங்கள் 54 தொகுதிகளாக பதிக்கப்பட்டுள்ளது. கலைஞர் எழுதிய கடிதங்களை, மொத்த பேச்சை, எழுத்தை தொகுத்தால்

    250-க்கும் மேற்பட்ட தொகுதிகள் கொண்ட புத்தகங்களை வெளியிடலாம்.

    கலைஞரின் கடிதங்களை படித்தாலே தமிழகத்தின், இந்தியாவின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். சில கடிதங்கள் மூலம் ஆட்சி அமைப்பார். சர்வாதிகாரத்தை வீழ்த்தி விடுவார். இந்த கடித தொகுதி தொண்டர்கள் அனைவரது இல்லங்களிலும் இருக்க வேண்டும் என கேட்டுக் கெள்கிறேன்.

    இவ்விழாவில், எனது திராவிட மாடல் என்ற நூல் வெளியிடப்பட்டுள்ளது. திராவிடம் என்றால் எல்லோருக்கும் கொடு என்பதாகும், கல்வியானாலும், வேலை வாய்ப்பானாலும், கோவிலானாலும் அனைவரும் சமம் என்ற கோட்பாடுடையது.

    எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிடம். உயர்ந்தவர், தாழ்ந்தவர், வேலை வாய்ப்பு தராதது, கோவிலுக்கு நுழைய விடாதது இதுதான் ஆரிய மாடல். இதற்கு நேர் எதிரானது திராவிட மாடல்.

    நான் தனிப்பட்ட ஸ்டாலின் அல்ல. ஒரு தலைமை தொண்டராக அமர்ந்துள்ளேன். உடன்பிறப்புகளால் உட்கார வைக்கப்பட்டுள்ளேன். கட்சியையும், ஆட்சியையும் ஒரு சேர வழி நடத்திவருகிறேன். கட்சி இல்லாமல் ஆட்சி இல்லை. இனியும் தமிழ்நாட்டை தி.மு.க.தான் ஆளும் எனச் சொல்லி வருகிறேன். இதனை அகங்காரத்தில் சொல்லவில்லை.

    கலைஞரின் லட்சோப லட்ச தொண்டர்கள் மீது நம்பிக்கை வைத்துதான் இதைச் சொல்கிறேன். ஆட்சி இருந்தால்தான் இந்த நாட்டை வாழ்விக்க முடியும். கனவுத்திட்டத்தை உருவாக்க முடியும்.

    கட்சியை, ஆட்சியை இரு கண்களாக காக்க வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். மக்களும் மகிழ்ச்சி அடைய வேண்டும், கட்சி தொண்டர்களும் மகிழ்ச்சி அடைய வேண்டும். அத்தகைய சூழலை நாம் எப்போதும் தக்க வைக்க வேண்டும்.

    கூட்டாட்சி, மாநில சுயாட்சி, சகோதரத்துவம், சமத்துவத்தை இந்தியா முழுமைக்கும் உருவாக்க வேண்டும். நாம் வளமான மாநிலமாக இருப்பதால்தான் நன்மைகள் செய்ய முடிகிறது. அதிகாரத்தை நம்மிடமிருந்து பறிக்க பார்க்கிறார்கள்.

    ஒன்றிய அரசால் சரக்கு சேவை வரி மூலம் நிதியுரிமை பறிக்கப்பட்டுள்ளது. நீட் போன்றவற்றால் நமது கல்விக்கொள்கையும் மறுக்கப்பட்டுள்ளது. இவை மக்கள் விரோத சட்டங்களாக இருக்கிறது. மக்களுக்கு துரோகம் செய்து வருகின்றனர். ஆளுநர்கள் மூலம் இரட்டை ஆட்சி நடத்த பார்க்கிறார்கள். அதை தடுக்க வேண்டும்.

    நமது எம்.பி.க்கள் தமிழகம், புதுவையில் 40-க்கு 40 உறுப்பினர்கள் இருந்தாக வேண்டும். தற்போதுள்ள எம்.பி.க்கள் பதவியேற்ற போது, தமிழ் வாழ்க, அண்ணா வாழ்க, கலைஞர் வாழ்க என்று பாராளுமன்றத்தையே அதிர வைத்தனர். நாட்டின் 3-வது கட்சியாக தி.மு.க. அமைந்திருப்பது பெருமை. இது தொடர பணியாற்ற வேண்டும். 40-க்கு 40 என்ற வெற்றியை நாம் அடைந்தாக வேண்டும்.

    2004-ல் இதே விருதுநகரில் நாடாளுமன்ற தேர்தலின்போது கலைஞர் முழு வெற்றி பெறுவோம் என சூளுரைத்து முழக்கமிட்டார். அதேபோல், 2019-ல் உங்களின் ஒருவனாக நான் சூளுரைத்து முழங்கினேன். அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக ''நாளும் நமதே நாற்பதும் நமதே'' என உறுதி ஏற்போம். அதற்கு இந்த விருதுநகர் விழா தொடக்கமாக அமையட்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், சாத்தூர் ராமச்சந்திரன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர் ப.செல்வராஜ், எம்.எல்.ஏ.க்கள் தங்கபாண்டியன், ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், ராஜபாளையம் நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷியாம் ராஜா, சிவகாசி மாநகர மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன், கோகுலம் தங்கராஜ், மாலா தங்கராஜ், கே.கே.வி. எஸ்.டி. சுப்பாராஜ், விருதுநகர் யூனியன் சேர்மன் சுமதி ராஜசேகர், விருதுநகர் வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜகுரு, வழக்கறிஞர் அய்யாவு பாண்டியன், இளைஞர் அணி கிருஷ்ணகுமார், வெயில்ராஜ், சிதம்பர பாரதி, சேகர், ஜெகன், அருப்புக்கோட்டை நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி, சிவபிரகாசம், முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி.ராஜன், சிவகாசி மாநகர தி.மு.க. செயலாளர் உதயசூரியன், சாத்தூர் கிழக்கு, மேற்கு ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், கடற்கரை ராஜ், குருசாமி, ஒன்றிய சேர்மன் நிர்மலா கடற்கரை ராஜ், மதுரை கே.கே. நகர் பகுதி செயலாளர் அக்ரி கணேசன், காரியாபட்டி பேரூராட்சி தலைவர் செந்தில், நரிக்குடி ஒன்றிய செயலாளர் போஸ் தேவர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அமைச்சர் தங்கம் தென்னரசு நன்றி கூறினார்.

    • மீன்கள் போதிய வளர்ச்சி இல்லாமல் கண்மாயில் செத்து மிதந்தன.
    • தமிழக அரசு மீன் குஞ்சுகளை விற்பனை செய்ய மீன்வளத்துறை மூலம் ஏற்பாடு செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தெற்கு வெங்காநல்லூர் பஞ்சாயத்துக்குட்பட்ட குலசேரிபெரிகண்மாய் பகுதியில் பொதுப்பணித்துறை சார்பில் கண்மாய் ஏலம் விடப்பட்டது.

    இந்த கண்மாயை தெற்கு வெங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த பிள்ளையார் சாமி என்பவர் ஏலம் எடுத்து கர்நாடகாவில் இருந்து மீன் குஞ்சுகள் வாங்கி வந்து கண்மாயில் விட்டுள்ளார். மீன்கள் போதிய வளர்ச்சி இல்லாமல் கண்மாயில் செத்து மிதந்தன. இதனால் ரூ. 13 லட்ச வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக குத்தகை எடுத்தவர் வேதனை தெரிவித்தார்.

    தமிழக அரசு மீன் குஞ்சுகளை இதுபோன்ற கண்மாய்களுக்கு நேரடியாக விற்பனை செய்தால் குஞ்சுகள் தரம் தெரிந்து கண்மாய்களில் விட்டு நல்ல வளர்ச்சி அடைந்தவுடன் விற்பனை செய்ய முடியும். வெளிமாநிலங்களில் இருந்து வாங்கி வரும் மீன்குஞ்சுகள் வளர்ச்சி இல்லாமல் செத்து மிதப்பதால் நஷ்டம் ஏற்படுவதாகவும் குத்தகை எடுத்தவர்கள் வேதனை தெரிவித்தனர்.

    தமிழக அரசு மீன் குஞ்சுகளை விற்பனை செய்ய மீன்வளத்துறை மூலம் ஏற்பாடு செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

    • போக்குவரத்து நெரிசல் காரணமாக தாமதமாக சென்று மொரார்ஜி தேசாயை சந்தித்திருக்கிறார் கலைஞர்
    • என் வீட்டு தோட்டத்திலே பணம் காய்க்கும் மரமா இருக்கிறது? என மொரார்ஜி தேசாய் கேட்டுள்ளார்

    விருதுநகர்:

    விருதுநகர் அருகே பட்டம்புதூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசியதாவது:

    அண்ணா மாநிலங்களவைக்கு சென்றபிறகுதான் அவர் அறிவாற்றலை கண்டு அனைவரும் வியந்தனர். அதேபோல் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக முதன் முதலாக டெல்லி சென்றபோது மிக சாதாரணமாக நினைத்தார்கள். மொரார்ஜி தேசாயை பார்க்க போனார். அவரை 5 மணிக்கு சந்திக்க அவகாசம் அளிக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசல் காரணமாக 10 நிமிடம் லேட்டாக போனார் கலைஞர். அப்போது கலைஞருக்கு வாழ்த்துகூட சொல்லாமல் மொரார்ஜி தேசாய், 'உங்கள் வீட்டு வேலைக்காரனா நான், உங்களுக்காக காத்துக்கொண்டிருப்பதற்கு?' என்று எடுத்தவுடனே நெருப்பை கொட்டியிருக்கிறார்.

    அப்போது கலைஞர் கூறுகையில், 'அந்த நாற்காலியில் அமர்வதற்கு கூட எனக்கு மனமில்லை. இருந்தாலும் நெருப்பின் மீது உட்காருவதுபோல் அந்த நாற்காலியில் நான் உட்கார்ந்தேன்' என்று கூறியிருக்கிறார்.

    அடுத்து 'எங்கே வந்தீர்கள்? என்று மொரார்ஜி தேசாய் கேட்டிருக்கிறார். நிதி கேட்பதற்கு, என கலைஞர் கூறியிருக்கிறார். அப்போது மொரார்ஜி தேசாய், நிதி எங்கே கொட்டிக்கிடக்கிறது? என் வீட்டு தோட்டத்திலே பணம் காய்க்கும் மரமா இருக்கிறது, உனக்கு அறுத்து கொடுப்பதற்கு? என மீண்டும் சாடியிருக்கிறார்.

    அதுவரை பொறுமை காத்த கலைஞர் சொன்னாராம், பணம் காய்க்கும் மரமே உலகத்தில் கிடையாது, பிறகு உங்கள் தோட்டத்தில் எப்படியய்யா இருக்கும்? என்று கேட்டபொழுதுதான், இவரிடத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என நினைத்துள்ளார்.

    பிறகு பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கு, குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு கருணாநிதியால்தான் முடியும் என்று இந்தியாவே ஒப்புக்கொண்டு போனது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • திராவிடம் என்றால் எல்லாருக்கும் எல்லாம் என்பதுதான் பொருள் என்றார் மு.க.ஸ்டாலின்
    • ஆளுநர்கள் மூலமாக மத்திய அரசு இரட்டை ஆட்சி நடத்தப்பார்ப்பதாக குற்றச்சாட்டு

    விருதுநகர்:

    விருதுநகர் அருகே பட்டம்புதூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் கட்சியின் தலைவரும் முதலமைச்சருமன மு.க.ஸ்டாலின தலைமை உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    திமுக ஆட்சி அமைந்தபோது இது ஆட்சி அல்ல, இது ஒரு கட்சியின் ஆட்சி அல்ல, இது ஒரு இனத்தின் ஆட்சி என்று சொன்னேன். இந்த ஆட்சிக்கு திராவிட மாடல் என பெயர் சூட்டினேன். இது பலருக்கும் வியப்பை அளித்தது. காமராஜர் ஆட்சி, அண்ணா ஆட்சி, கருணாநிதி ஆட்சி என்பதுபோல, ஸ்டாலின் ஆட்சி என்று சொல்லாமல் திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லியதை பாராட்டி பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் முரசொலியில் கட்டுரை தீட்டியிருந்தார்கள்.

    திராவிட மாடல் என்று சொன்னபிறகு திராவிடம் என்ற சொல் இந்தியா முழுமைக்கும் அரசியல் கவனத்தை ஈர்த்தது. திராவிடம் என்பது ஒரு காலத்தில் இனத்தின் பெயராக, மொழியின் பெயராக இருந்தது. இன்று, ஒரு அரசியல் கொள்கையின் பெயராக இருக்கிறது. திராவிடம் என்றால் எல்லாருக்கும் எல்லாம் என்பதுதான் பொருள்.

    இன்னாருக்கு கல்வியை கொடு, இன்னாருக்கு கொடுக்காதே, இன்னாரை கோயிலில் விடு, இன்னாரை கோயிலில் விடாதே... என்பது ஆரிய மாடல். உயர்ந்தவர், தாழ்ந்தவர் என பிரிப்பதுதான் தான் ஆரிய மாடல். இதற்கு நேர் எதிரானது திராவிட மாடல். அனைத்து துறை வளர்ச்சி, அனைவருக்குமான வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி என்பதை இந்த ஆட்சியின் விரிந்த எல்லையாக நான் அறிவித்திருக்கிறேன்.

    முப்பெரும் விழாவில் பங்கேற்ற நிர்வாகிகள், தொண்டர்கள்
    முப்பெரும் விழாவில் பங்கேற்ற நிர்வாகிகள், தொண்டர்கள்

    தமிழகத்தை அனைத்து வளங்களும் கொண்ட மாநிலமாக மாற்றி வருகிறோம். கூட்டாட்சியை, மாநில சுயாட்சியை, மதச்சார்பின்மையை, சமத்துவத்தை, சகோதரத்துவத்தை, சமதர்மத்தை, சமூக நீதியை இந்தியா முழுமைக்கும் நாம் நிலைநாட்டவேண்டும்.

    வலுமான மாநிலங்கள்தான் கூட்டாட்சியின் அடிப்படை. நாம் வலுவான அதிகாரம் நிறைந்த தன்னிறைவு பெற்ற மாநிலமாக இருந்தால் மட்டும் போதாது, இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் அப்படி ஆக வேண்டும். அதுதான் திராவிட முன்னேற்ற கழகத்தின் அரசியல் கொள்கை.

    நாம் வலிமையான வளமான மாநிலமாக இருப்பதால்தான் மக்களுக்கு இந்த அளவு நன்மைகள் செய்ய முடிகிறது. இந்த அதிகாரம் பறிக்கப்படுமானால், தடுக்கப்படுமானால், இந்த அளவு நன்மைகள் செய்ய முடியாது. ஒற்றைத் தன்மை கொண்டதாகவும், ஒற்றை மொழியான இந்தியை திணிப்பதையும் நாம் ஏற்க முடியாது. ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி மூலமாக நிதி உரிமை பறிக்கப்பட்டுவிட்டது. நீட், கல்விக்கொள்கை, அதன்மூலம் நமது உரிமை மறுக்கப்பட்டுவிட்டது. ஒன்றிய அரசின் பல்வேறு சட்டங்கள் மக்கள் விரோத சட்டங்களாக இருக்கின்றன. ஆளுநர்கள் மூலமாக இரட்டை ஆட்சி நடத்தப்பார்க்கிறார்கள்.

    இவற்றைத் தடுக்க நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டில் இருந்தும் புதுவையில் இருந்தும் நமது கூட்டணியின் சார்பில் 40 உறுப்பினர்கள் இருந்தாக வெண்டும். இந்தியாவின் மூன்றாவது கட்சியாக நமது இயக்கம் அமர்ந்திருப்பது நமக்கு பெருமை. அது தொடர இப்போதே நீங்கள் களப்பணியாற்ற வேண்டும். வெற்றிக்கனியை பறித்து கழகத்திற்கும் உங்களுக்கும் புகழ் சேர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×