search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஒற்றை மொழியான இந்தியை திணிப்பதை ஏற்க முடியாது- முப்பெரும் விழாவில் முழங்கிய மு.க.ஸ்டாலின்
    X

    ஒற்றை மொழியான இந்தியை திணிப்பதை ஏற்க முடியாது- முப்பெரும் விழாவில் முழங்கிய மு.க.ஸ்டாலின்

    • திராவிடம் என்றால் எல்லாருக்கும் எல்லாம் என்பதுதான் பொருள் என்றார் மு.க.ஸ்டாலின்
    • ஆளுநர்கள் மூலமாக மத்திய அரசு இரட்டை ஆட்சி நடத்தப்பார்ப்பதாக குற்றச்சாட்டு

    விருதுநகர்:

    விருதுநகர் அருகே பட்டம்புதூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் கட்சியின் தலைவரும் முதலமைச்சருமன மு.க.ஸ்டாலின தலைமை உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    திமுக ஆட்சி அமைந்தபோது இது ஆட்சி அல்ல, இது ஒரு கட்சியின் ஆட்சி அல்ல, இது ஒரு இனத்தின் ஆட்சி என்று சொன்னேன். இந்த ஆட்சிக்கு திராவிட மாடல் என பெயர் சூட்டினேன். இது பலருக்கும் வியப்பை அளித்தது. காமராஜர் ஆட்சி, அண்ணா ஆட்சி, கருணாநிதி ஆட்சி என்பதுபோல, ஸ்டாலின் ஆட்சி என்று சொல்லாமல் திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லியதை பாராட்டி பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் முரசொலியில் கட்டுரை தீட்டியிருந்தார்கள்.

    திராவிட மாடல் என்று சொன்னபிறகு திராவிடம் என்ற சொல் இந்தியா முழுமைக்கும் அரசியல் கவனத்தை ஈர்த்தது. திராவிடம் என்பது ஒரு காலத்தில் இனத்தின் பெயராக, மொழியின் பெயராக இருந்தது. இன்று, ஒரு அரசியல் கொள்கையின் பெயராக இருக்கிறது. திராவிடம் என்றால் எல்லாருக்கும் எல்லாம் என்பதுதான் பொருள்.

    இன்னாருக்கு கல்வியை கொடு, இன்னாருக்கு கொடுக்காதே, இன்னாரை கோயிலில் விடு, இன்னாரை கோயிலில் விடாதே... என்பது ஆரிய மாடல். உயர்ந்தவர், தாழ்ந்தவர் என பிரிப்பதுதான் தான் ஆரிய மாடல். இதற்கு நேர் எதிரானது திராவிட மாடல். அனைத்து துறை வளர்ச்சி, அனைவருக்குமான வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி என்பதை இந்த ஆட்சியின் விரிந்த எல்லையாக நான் அறிவித்திருக்கிறேன்.

    முப்பெரும் விழாவில் பங்கேற்ற நிர்வாகிகள், தொண்டர்கள்

    தமிழகத்தை அனைத்து வளங்களும் கொண்ட மாநிலமாக மாற்றி வருகிறோம். கூட்டாட்சியை, மாநில சுயாட்சியை, மதச்சார்பின்மையை, சமத்துவத்தை, சகோதரத்துவத்தை, சமதர்மத்தை, சமூக நீதியை இந்தியா முழுமைக்கும் நாம் நிலைநாட்டவேண்டும்.

    வலுமான மாநிலங்கள்தான் கூட்டாட்சியின் அடிப்படை. நாம் வலுவான அதிகாரம் நிறைந்த தன்னிறைவு பெற்ற மாநிலமாக இருந்தால் மட்டும் போதாது, இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் அப்படி ஆக வேண்டும். அதுதான் திராவிட முன்னேற்ற கழகத்தின் அரசியல் கொள்கை.

    நாம் வலிமையான வளமான மாநிலமாக இருப்பதால்தான் மக்களுக்கு இந்த அளவு நன்மைகள் செய்ய முடிகிறது. இந்த அதிகாரம் பறிக்கப்படுமானால், தடுக்கப்படுமானால், இந்த அளவு நன்மைகள் செய்ய முடியாது. ஒற்றைத் தன்மை கொண்டதாகவும், ஒற்றை மொழியான இந்தியை திணிப்பதையும் நாம் ஏற்க முடியாது. ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி மூலமாக நிதி உரிமை பறிக்கப்பட்டுவிட்டது. நீட், கல்விக்கொள்கை, அதன்மூலம் நமது உரிமை மறுக்கப்பட்டுவிட்டது. ஒன்றிய அரசின் பல்வேறு சட்டங்கள் மக்கள் விரோத சட்டங்களாக இருக்கின்றன. ஆளுநர்கள் மூலமாக இரட்டை ஆட்சி நடத்தப்பார்க்கிறார்கள்.

    இவற்றைத் தடுக்க நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டில் இருந்தும் புதுவையில் இருந்தும் நமது கூட்டணியின் சார்பில் 40 உறுப்பினர்கள் இருந்தாக வெண்டும். இந்தியாவின் மூன்றாவது கட்சியாக நமது இயக்கம் அமர்ந்திருப்பது நமக்கு பெருமை. அது தொடர இப்போதே நீங்கள் களப்பணியாற்ற வேண்டும். வெற்றிக்கனியை பறித்து கழகத்திற்கும் உங்களுக்கும் புகழ் சேர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×