என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற உறுதிமொழி: மு.க.ஸ்டாலின் பேச்சு
    X

    முப்பெரும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியபோது எடுத்த படம். அருகில் அமைச்சர்கள் உள்ளனர்.

    40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற உறுதிமொழி: மு.க.ஸ்டாலின் பேச்சு

    • பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற உறுதிமொழி ஏற்போம் என்று விருதுநகரில் நடந்த முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
    • தொண்டர்களுக்கு 4 ஆயிரத்து 41 கடிதங்கள் எழுதியவர் கலைஞர்தான்.

    விருதுநகர்

    விருதுநகர் - சாத்தூர் இடையே பட்டம்புதூர் அண்ணா நகரில் 200 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட கலைஞர் திடலில், அண்ணா பிறந்த தினம், தி.மு.க. உதயமான தினம், தந்தை பெரியார் பிறந்த தினம் ஆகிய தி.மு.க. முப்பெரும் விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவில் தி.மு.க. தலைவரும், முதல் அமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    தந்தை பெரியார் பிறந்தநாள், அறிஞர் அண்ணா பிறந்தநாள், தி.மு.க. உதயமான நாள் ஆகிய 3-ம் இணைந்ததுதான் இந்த முப்பெரும் விழாவாகும்.

    இந்த நாள் திருநாள் நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ளும் நாள். 5 பேருக்கு இங்கு விருது தரப்பட்டுள்ளது. இவர்கள் தி.மு.க.வின் முகமாக இருப்பவர்கள். கலைஞர் கடிதம் மூலம் உடன்பிறப்புகளை திரட்டக் கூடியவர். வரலாற்று சிறப்புமிக்க இவ்விழாவில் மகுடம் சூட்டுவது போல் உடன்பிறப்புகளுக்கு கலைஞர் எழுதிய கடிதங்கள் வெளியிடப்படுகிறது.

    தொண்டர்களுக்கு 4 ஆயிரத்து 41 கடிதங்கள் எழுதியவர் கலைஞர்தான். இவர் எழுதிய 21 ஆயிரத்து 501 பக்கங்கள் 54 தொகுதிகளாக பதிக்கப்பட்டுள்ளது. கலைஞர் எழுதிய கடிதங்களை, மொத்த பேச்சை, எழுத்தை தொகுத்தால்

    250-க்கும் மேற்பட்ட தொகுதிகள் கொண்ட புத்தகங்களை வெளியிடலாம்.

    கலைஞரின் கடிதங்களை படித்தாலே தமிழகத்தின், இந்தியாவின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். சில கடிதங்கள் மூலம் ஆட்சி அமைப்பார். சர்வாதிகாரத்தை வீழ்த்தி விடுவார். இந்த கடித தொகுதி தொண்டர்கள் அனைவரது இல்லங்களிலும் இருக்க வேண்டும் என கேட்டுக் கெள்கிறேன்.

    இவ்விழாவில், எனது திராவிட மாடல் என்ற நூல் வெளியிடப்பட்டுள்ளது. திராவிடம் என்றால் எல்லோருக்கும் கொடு என்பதாகும், கல்வியானாலும், வேலை வாய்ப்பானாலும், கோவிலானாலும் அனைவரும் சமம் என்ற கோட்பாடுடையது.

    எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிடம். உயர்ந்தவர், தாழ்ந்தவர், வேலை வாய்ப்பு தராதது, கோவிலுக்கு நுழைய விடாதது இதுதான் ஆரிய மாடல். இதற்கு நேர் எதிரானது திராவிட மாடல்.

    நான் தனிப்பட்ட ஸ்டாலின் அல்ல. ஒரு தலைமை தொண்டராக அமர்ந்துள்ளேன். உடன்பிறப்புகளால் உட்கார வைக்கப்பட்டுள்ளேன். கட்சியையும், ஆட்சியையும் ஒரு சேர வழி நடத்திவருகிறேன். கட்சி இல்லாமல் ஆட்சி இல்லை. இனியும் தமிழ்நாட்டை தி.மு.க.தான் ஆளும் எனச் சொல்லி வருகிறேன். இதனை அகங்காரத்தில் சொல்லவில்லை.

    கலைஞரின் லட்சோப லட்ச தொண்டர்கள் மீது நம்பிக்கை வைத்துதான் இதைச் சொல்கிறேன். ஆட்சி இருந்தால்தான் இந்த நாட்டை வாழ்விக்க முடியும். கனவுத்திட்டத்தை உருவாக்க முடியும்.

    கட்சியை, ஆட்சியை இரு கண்களாக காக்க வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். மக்களும் மகிழ்ச்சி அடைய வேண்டும், கட்சி தொண்டர்களும் மகிழ்ச்சி அடைய வேண்டும். அத்தகைய சூழலை நாம் எப்போதும் தக்க வைக்க வேண்டும்.

    கூட்டாட்சி, மாநில சுயாட்சி, சகோதரத்துவம், சமத்துவத்தை இந்தியா முழுமைக்கும் உருவாக்க வேண்டும். நாம் வளமான மாநிலமாக இருப்பதால்தான் நன்மைகள் செய்ய முடிகிறது. அதிகாரத்தை நம்மிடமிருந்து பறிக்க பார்க்கிறார்கள்.

    ஒன்றிய அரசால் சரக்கு சேவை வரி மூலம் நிதியுரிமை பறிக்கப்பட்டுள்ளது. நீட் போன்றவற்றால் நமது கல்விக்கொள்கையும் மறுக்கப்பட்டுள்ளது. இவை மக்கள் விரோத சட்டங்களாக இருக்கிறது. மக்களுக்கு துரோகம் செய்து வருகின்றனர். ஆளுநர்கள் மூலம் இரட்டை ஆட்சி நடத்த பார்க்கிறார்கள். அதை தடுக்க வேண்டும்.

    நமது எம்.பி.க்கள் தமிழகம், புதுவையில் 40-க்கு 40 உறுப்பினர்கள் இருந்தாக வேண்டும். தற்போதுள்ள எம்.பி.க்கள் பதவியேற்ற போது, தமிழ் வாழ்க, அண்ணா வாழ்க, கலைஞர் வாழ்க என்று பாராளுமன்றத்தையே அதிர வைத்தனர். நாட்டின் 3-வது கட்சியாக தி.மு.க. அமைந்திருப்பது பெருமை. இது தொடர பணியாற்ற வேண்டும். 40-க்கு 40 என்ற வெற்றியை நாம் அடைந்தாக வேண்டும்.

    2004-ல் இதே விருதுநகரில் நாடாளுமன்ற தேர்தலின்போது கலைஞர் முழு வெற்றி பெறுவோம் என சூளுரைத்து முழக்கமிட்டார். அதேபோல், 2019-ல் உங்களின் ஒருவனாக நான் சூளுரைத்து முழங்கினேன். அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக ''நாளும் நமதே நாற்பதும் நமதே'' என உறுதி ஏற்போம். அதற்கு இந்த விருதுநகர் விழா தொடக்கமாக அமையட்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், சாத்தூர் ராமச்சந்திரன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர் ப.செல்வராஜ், எம்.எல்.ஏ.க்கள் தங்கபாண்டியன், ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், ராஜபாளையம் நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷியாம் ராஜா, சிவகாசி மாநகர மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன், கோகுலம் தங்கராஜ், மாலா தங்கராஜ், கே.கே.வி. எஸ்.டி. சுப்பாராஜ், விருதுநகர் யூனியன் சேர்மன் சுமதி ராஜசேகர், விருதுநகர் வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜகுரு, வழக்கறிஞர் அய்யாவு பாண்டியன், இளைஞர் அணி கிருஷ்ணகுமார், வெயில்ராஜ், சிதம்பர பாரதி, சேகர், ஜெகன், அருப்புக்கோட்டை நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி, சிவபிரகாசம், முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி.ராஜன், சிவகாசி மாநகர தி.மு.க. செயலாளர் உதயசூரியன், சாத்தூர் கிழக்கு, மேற்கு ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், கடற்கரை ராஜ், குருசாமி, ஒன்றிய சேர்மன் நிர்மலா கடற்கரை ராஜ், மதுரை கே.கே. நகர் பகுதி செயலாளர் அக்ரி கணேசன், காரியாபட்டி பேரூராட்சி தலைவர் செந்தில், நரிக்குடி ஒன்றிய செயலாளர் போஸ் தேவர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அமைச்சர் தங்கம் தென்னரசு நன்றி கூறினார்.

    Next Story
    ×