என் மலர்
விருதுநகர்
- பள்ளி மாணவியிடம் சில்மிஷம்: தட்டிக்கேட்டவர்களுக்கு கத்திக்குத்து விழுந்தது.
- கந்தன்,சாமிபிள்ளை மகன் பாண்டியராஜன், கருப்பசாமி, ராஜபாண்டி மகன் ராஜலிங்கம் ஆகியோரை தேடிவருகின்றனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் சம்மந்தபுரத்தைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவியிடம் இதே பகுதியைச் சேர்ந்த கந்தன் அவதூறாக பேசி சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
இது உறவினர்களுக்கு தெரியவரவே,அதை கந்தனிடம் நல்லதம்பி (29), சோமையாபுரம் சாந்தகுமார் (31) ஆகியோர் மாணவியிடம் பேசவேண்டாம் என கேட்டுக்கொண்டனர். அப்போது ஏற்பட்ட தகராறில் 4 பேர் சூழ்ந்து கொண்டு இருவரையும் தாக்கினர்.
இதில் நல்லதம்பிக்கு கத்திக்குத்து விழுந்தது.இதனை தடுக்கச் சென்ற சாந்தகுமாருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதையடுத்து 4 பேரும் கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பினர். காயமடைந்த நல்லதம்பி, சாந்தகுமார் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
இதுகுறித்து வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியைச் சேர்ந்த சுப்பையா மகன் கந்தன்,சாமிபிள்ளை மகன் பாண்டியராஜன், கருப்பசாமி, ராஜபாண்டி மகன் ராஜலிங்கம் ஆகியோரை தேடிவருகின்றனர்.
- வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- தமிழன்னை நண்பர்கள் குழு, தமிழ் சங்கம், அன்னை தெரசா நற்பணி இயக்கத்தினரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
ராஜபாளையம், செப்.19-
ராஜபாளையம் நகரில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டம், தாமிரபரணி கூட்டு குழுவின் திட்டம், ெரயில்வே மேம்பால பணிகள் மெத்தன போக்கில் நடைபெற்று வருவதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல தொழில் வர்த்தக சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடந்தது.
இதையொட்டி பல்வேறு கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் இணைந்து ஜவகர் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தின. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் அர்ஜூனன் தொடக்க உரையாற்றினார்.
பார்வர்டு பிளாக் மாவட்ட செயலாளர் நல்லமுத்து, விடுதலை சிறுத்தைகள் தொகுதி செயலாளர் சரவணன், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் கண்மணி காதர், முகநூல் நண்பர்கள் குழு செல்வகுமார், அறம் அறக்கட்டளை மணிகண்டன், சி.ஐ.டி.யு. டாக்சி-ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் கண்ணன், நேதாஜி ரத்ததான கழகம் முருகானந்தம், ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்கம் கண்ணன், நாம் தமிழர் கட்சி ராமசுப்பிரமணியன், வணிகர் சங்க பேரமைப்பு லட்சுமணப் பெருமாள், பார்வர்டு பிளாக் மாநில நிர்வாகி சுப்புராஜ், சி.ஐ.டி.யு. மாவட்ட துணை தலைவர் கணேசன் ஆகியோர் பேசினர். தமிழன்னை நண்பர்கள் குழு, தமிழ் சங்கம், அன்னை தெரசா நற்பணி இயக்கத்தினரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
- ராம்கோ நூற்பாலை பணியாளர்களின் குழந்தைகளுக்கு ரூ.42 லட்சம் இலவச கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
- தலைவர் மோகனரங்கன், துணைத்தலைவர் (மனிதவளம்) நாகராஜன், மூத்த பொது மேலாளர் (பணிகள்) பாலாஜி ஆகிேயார் கல்வி உதவித்தொகையை வழங்கினர்.
ராஜபாளையம்
ராம்கோ நூற்பாலைகளில் பணிபுரியும் பணியாளர்களின் குழந்தைகளுக்கு வருடா வருடம் இலவச கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த வருடமும் ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட்டில் இந்த நிகழ்ச்சி நடந்தது.
சுமார் 1,905 தொழிலாளர்கள் குழந்தைகளுடன் வந்து கல்வி உதவித்தொகையாக ரூ.42 லட்சம் பெற்றனர். விழாவில் தலைவர் மோகனரங்கன், துணைத்தலைவர் (மனிதவளம்) நாகராஜன், மூத்த பொது மேலாளர் (பணிகள்) பாலாஜி ஆகியோர் கல்வி உதவித்தொகையை வழங்கினர்.
தொழிற்சங்கத்தின் சார்பில் எச்.எம்.எஸ். பொது செயலாளர் என்.கண்ணன், ஐ.என்.டி.யு.சி. தலைவர் ஆர். கண்ணன், ஏ.ஐ.டி.யு.சி. பொது செயலாளர் விஜயன் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- தகவல் தொழில்நுட்பவியல் துறை கருத்தரங்கு நடந்தது.
- ‘ஜாவா நிரலாக்கம்’’ என்பது உலகின் முதன்மையான மொழி ஆகும்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரி தகவல் தொழில்நுட்பவியல் துறையின் சார்பில் ''மேம்படுத்தப்பட்ட ஜாவா நிரலாக்கத்தை நெட்பீன்ஸ் எனும் மென்பொருள் மூலம் பயன்படுத்துவது'' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.
இதில் சிறப்பு விருந்தின ராக சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரியின் கணினிப் பயன்பாட்டியல் துறை உதவிப்பேராசிரியை கங்காதேவி கலந்து கொண்டார். 3-ம் ஆண்டு மாணவி துர்கா தேவி வரவேற்றார். துணை முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.
துறைத்தலைவர் பாலாஜி வாழ்த்துரை வழங்கினார். உதவிப்பேராசிரியர் முத்துகுமார் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினரான உதவிப்பேராசிரியை கங்காதேவி பேசுகையில், ''ஜாவா நிரலாக்கம்'' என்பது உலகின் முதன்மையான மொழி ஆகும். இதில் உள்ள தரவு வகைகள், ஆப்ரேட்டர்கள் பற்றி எடுத்துரைத்தார்.
நெட்பீன்ஸ் எனும் மென்பொருள் ஒருங்கிணைந்த வளர்ச்சி சூழல் என்றும் இதன் மூலம் ஜாவா மொழி திட்டங்களை எவ்வாறு இயக்குவது? என்பதை செயல் விளக்கம் மூலம் செய்து காட்டினார்.
இந்த நிகழ்வில் தகவல் தொழில்நுட்பவியல் துறையை சேர்ந்த 96 மாணவர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினரை கவுரவிக்கும் வகையில் அவருக்கு, துணை முதல்வர் நினைவுப் பரிசு வழங்கினார். 2-ம் ஆண்டு மாணவி தீபா நன்றி கூறினார்.
- கல்வெட்டு கி.பி.10 அல்லது 11-ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த பாண்டியர்கள் காலத்தை சேர்ந்தது என கருதப்படுகிறது.
- கல்வெட்டு உள்ள கண்மாய்க்கரையானது மழைக்காலங்களில் நீர்வரத்து அதிகரிக்கும்போது உடைப்பு ஏற்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை:
அருப்புக்கோட்டை வரலாற்றுத்துறை பேராசிரியர் விஜயராகவன் மற்றும் தொல்லியல் மாணவர் ராஜபாண்டி ஆகிய இருவரும் திருச்சுழி சுற்றுவட்டார பகுதிகளில் மேற்புற கள ஆய்வு செய்தனர். அப்போது அப்பகுதியிலுள்ள மூலைக்கரைப்பட்டி என்னும் ஊரில் கண்மாய் கரையின் ஓரமாக கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
மூலைக்கரைப்பட்டி கிராமத்தில் கண்மாய் கரை ஓரமாக 4 அடி உயரமும், அரை அடி அகலமும் கொண்ட ஒரு கல்லின் மேற்புறம் 13 வரிகள் மற்றும் வலதுபுறம் 7 வரிகள் என இருபக்கங்களிலும் எழுத்துக்கள் தென்பட்டன. இதனை ஓய்வுபெற்ற தொல்லியல் இயக்குனரும் பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மைய செயலாளருமான சாந்தலிங்கம் உதவியோடு படிக்கப்பெற்றது. இந்த கல்வெட்டு கி.பி.10 அல்லது 11-ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த பாண்டியர்கள் காலத்தை சேர்ந்தது என கருதப்படுகிறது.
இந்த கல்வெட்டு உள்ள கண்மாய்க்கரையானது மழைக்காலங்களில் நீர்வரத்து அதிகரிக்கும்போது உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை இப்பகுதியைச் சேர்ந்த வணிகனான பெற்றான் கழியன் என்பவர் சீரமைத்து கொடுத்துள்ளார். பின்னர் மீண்டும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த வணிகரின் மகளான கோதிலால் நங்கை என்பவள் கற்களைக் கொண்டு உடைப்பு ஏற்பட்ட கரையினை சரிசெய்து அதற்காக இக்கல்வெட்டினையும் ஏற்படுத்தினார் என்று கல்வெட்டு கூறுகிறது. நீரின் முக்கியத்துவத்தை அறிந்த இப்பகுதியை சேர்ந்த வணிகர்களும் நீர்நிலைகளைப் பேணிக்காத்துள்ளனர் என்பதனை இந்த கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
- மாவட்ட பொருளாளர் விநாயகமூர்த்தி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ராஜபாளையம்
தந்தை பெரியாரின் 144-வது பிறந்தநாளையொட்டி ராஜபாளையம் நகர அ.தி.மு.க. சார்பில் வடக்கு நகர செயலாளர் வக்கீல் துரை முருகேசன் தலைமையில் மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர் சிவகுருநாத பாக்கியம் முன்னிலையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் மாவட்ட பேரவை துணைச் செயலாளர் ராசா, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் யோக சேகரன், மாவட்ட பேரவை துணைத் தலைவர் திருப்பதி, பிரதிநிதி கிருஷ்ணமூர்த்தி, வர்த்தக பிரிவு வெங்கடேஷ் ராஜா, அவைத்தலைவர் கணேசன், பொருளாளர் ஜீவா, சிறுபான்மை பிரிவு மைதீன் என்ற ராஜப்பா, ஆந்திரா குமார், விக்னேசுவரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ராமர், ராமராஜா, ஹரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்
ராஜபாளையம் நகர ம.தி.மு.க. சார்பில் பெரியார் சிலைக்கு விருதுநகர் மாவட்ட பொருளாளர் விநாயகமூர்த்தி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நகரசெயலாளர் மதியழகன் முன்னிலை வகித்தார். கிழக்கு ஒன்றிய செயலாளர் வில்லிசை மனோகரன், தலைமை கழக பேச்சாளர் ஆசிலாபுரம் பாண்டுரங்கன், நகர அவைத்தலைவர் சேது.இன்பமணி, மாவட்ட பிரதிநிதிகள் புஷ்பவேல், ஞானசேகரன், நகரத் துணைச் செயலாளர்கள் அக்பர்அலி, லிங்கம், நகர இளைஞரணி அமைப்பாளர் கே.எஸ்.நிஜாமுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- போலீஸ் காவலில் இருந்த வாலிபர் மர்மமாக இறந்தார்.
- அருப்புக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அருப்புக்கோட்டை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்ைடயை அடுத்த செம்பட்டியை சேர்ந்த வாலிபர் தங்க பாண்டியன். இவர் ஒரு வழக்கு தொடர்பாக கடந்த 13-ந்தேதி போலீசாரால் அழைத்து செல்லப்பட்டார்.
அப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட தால் அவரை ஆஸ்பத்திரி யில் அனுமதித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் தங்க பாண்டியன் இறந்து விட்டார். அவரை போலீ சார் அடித்து கொன்று விட்டதாக தெரிவித்து அவரது உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி அறிந்த மதுரை டி.ஐ.ஜி. பொன்னி, மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு மனோகரன் ஆகியோர் சம்பவ இடம் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம்ட பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து தங்கபாண்டியன் உடல் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரி சோதனை செய்யப்பட்டது.
அதன் பின்னர் உற வினர்கள் தங்கபாண்டியன் உடலை வாங்க மறுத்து அவரது உடல் பாகங்களை மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அதனை ஏற்று அவ ரது உடல் பாகங்கள் எடுக்கப்பட்டு உடற்கூறு ஆய்வுக்காக ராமநாதபுரத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அருப்புக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.
- மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை மற்றும் UDID மாற்றுத்திறனாளி அட்டை பதிவு செய்யும் முகாமும் நடைபெற உள்ளது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ெரயில்வே பீடர் ரோட்டில் அமைந்து ள்ள காமராஜர் திருமண மண்டபத்தில் நாளை (19-ந் தேதி) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஐ.ஓ.சி.எல். & அலிம்கோ மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் இணைந்து ரூ.1 கோடி மதிப்பில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான செயற்கை உறுப்புகள், உபகரணங்கள் வழங்குவதற்கு ஏதுவாக அவர்களின் தேவையை மதிப்பீடு செய்ய மருத்துவர்கள், அலிம்கோ நிறுவன அதிகாரிகள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்கும் முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் தகுதியுடைய, தேவையுள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளி அடையாள அட்டை அசல் மற்றும் நகல் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 5, மாத வருமானம் ரூ.22 ஆயிரத்து 500-க்குள் உள்ள வருமான சான்று ஆகியவற்றுடன் பங்கேற்று பயன்பெறலாம்.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி 3 சக்கர வாகனம், நடைக்குச்சி, காதொலி கருவி, கண் கண்ணாடிகள், செயற்கை கை, கால்கள் போன்ற எண்ணற்ற உபகரணங்களும் உதவிகளும் பெற்று பயன்பெறலாம்.
மேலும் இந்த முகாமில் புதிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை மற்றும் UDID மாற்றுத்திறனாளி அட்டை பதிவு செய்யும் முகாமும் நடைபெற உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வீடு திரும்பிய செந்தில்வேல் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- செந்தில்வேல் அருப்புக்கோட்டை டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அருப்புக்கோட்டை:
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கணேஷ் நகரை சேர்ந்தவர் செந்தில்வேல் (வயது 60). இவர் அதே பகுதியில் உள்ள பேப்பர் மில்லில் வேலை பார்த்து ஓய்வுபெற்றவர்.
இவரது மனைவி ஞான சக்திகுமாரி உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்று விட்டனர்.
இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்கு ஒரு பையில் வைக்கப்பட்டிருந்த 17 பவுன் நகை, ரூ.35 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர்.
இந்த நிலையில் வீடு திரும்பிய செந்தில்வேல் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் அருப்புக்கோட்டை டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. இந்த கொள்ளையில் தொடர்புடைய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சமீப காலமாக அருப்புக்கோட்டை பகுதியில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கொள்ளையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ரூ.2.75 கோடியில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட 2-ம் கட்ட பணிகள் நடந்தது.
- கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமை தாங்கினார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி யூனியன் கம்பிக்குடி ஊராட்சி வினோபா நகரில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைசார்பில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் - II கீழ் ரூ.275.179 லட்சம் மதிப்பில் 63 பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமை தாங்கினார். ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி, சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன் முன்னிலை வகித்தனர்.
இதில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்ட 2-ம் கட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினர்.
இதில் அமைச்சர்கள் பேசுகையில், விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-II-ன் மூலம் 2021-2022-ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 92 கிராம ஊராட்சிகளிலும், 2022-2023-ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 94 கிராம ஊராட்சிகளிலும் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களில் 100 சதவீதம் விடுதலின்றி நடைபெறுகிறது.
காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், டி.கடம்பன்குளம் ஊராட்சியில் 12 பணிகள் ரூ.43.95 லட்சம் மதிப்பிலும், கம்பிக்குடி ஊராட்சியில் 10 பணிகள் ரூ.46.725 லட்சம் மதிப்பிலும், கிழவனேரி ஊராட்சியில் 7 பணிகள் ரூ.31.93 லட்சம் மதிப்பிலும்,மாங்குளம் ஊராட்சியில் 7 பணிகள் ரூ.31.96 லட்சம் மதிப்பிலும், முடுக்கன் குளம் ஊராட்சியில் 9 பணிகள் ரூ.45.119 லட்சம் மதிப்பிலும்,சூரனூர் ஊராட்சியில் 10 பணிகள் ரூ.41.445 லட்சம் மதிப்பிலும், வலுக்கலொட்டி ஊராட்சியில் 8 பணிகள் ரூ.34.05 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் ரூ.275.179 லட்சம் மதிப்பில் கண்மாய், ஊரணி ஆழப்படுத்துதல், பேவர் பிளாக் சாலை அமைத்தல், கதிரடிக்கும் தளம் அமைத்தல், கழிப்பறை, பூங்கா, நர்சரி உள்ளிட்ட 63 பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்றனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் திலகவதி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் ராஜம், செயற்பொறியாளர் சக்திமுருகன், அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் கல்யாணகுமார், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் முத்துமாரி, பேரூராட்சி தலைவர் செந்தில், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராஜேந்திரன்,மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தங்கதமிழ்வாணன், பிரமுகர் கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், மாரியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ராஜபாளையத்தில் இன்று கடையடைப்பு போராட்டம் நடந்தது.
- குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சத்திரப்பட்டி சாலையில் ெரயில்வே மேம்பால பணிகள், ராஜபாளையம் நகர் பகுதி முழுவதும் பாதாள சாக்கடை திட்டம், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் ஆகிய 3 பணிகளும் ஒரே சமயத்தில் தொடங்கப்பட்டது. இதனால் அனைத்து பாதைகளும் குண்டும் குழியுமாகி விட்டது.
பொதுமக்கள் அன்றாடம் செத்துப் பிழைக்கும் நிலை இருந்து வருகிறது. குறிப்பாக ராஜபாளையத்தில் பிரதான சாலையான தென்காசி தேசிய நெடுஞ்சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
இதில் ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் முதல் புதுப்பாளையம் மாரியம்மன் கோவில் வரை செல்வதற்கு குறைந்தபட்சம் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் ஆகிறது.
இதனால் ராஜபாளையம் வழியாக செல்லும் கனரக வாகனங்கள் பெரும்பாலும் ராஜபாளையத்தை தவிர்த்து வேறு வழியாக சென்று வருகின்றனர். உள்ளூர் வாசிகள் சென்றாக வேண்டிய கட்டா யத்தில் தூசிகளுக்கிடையே சென்று வருகிறார்கள்.
இது குறித்து பலமுறை அதிகாரிகளுக்கும், கலெக்டருக்கும் ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் சார்பில் நினைவூட்டல் செய்தும் எந்த ஒரு பலனும் இல்லை.
இதை கண்டித்தும், சாலை மற்றும் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வலிறுத்தி தொழில் வர்த்தக சங்கம் சார்பில் இன்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. 95 சதவீத கடைகள் அடைக்கப்பட்டதால் முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. கடை அடைப்பால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
- அருப்புக்கோட்டை அருகே குடும்ப பிரச்சினையில் தீக்குளித்த இளம்பெண் பரிதாபமாக இறந்தார்.
- அவரை காப்பாற்ற சென்ற கணவரும் படுகாயம் அடைந்தார்.
விருதுநகர்
அருப்புக்கோட்டை அருகே உள்ள தமிழ்பாடியைச் சேர்ந்தவர் அலெக்ஸ்பாண்டி. இவரும், குல்லூர் சந்தையைச் சேர்ந்த பாண்டிச்செல்வி (27) என்பவரும் கடந்த 2020-ம் ஆண்டு வீட்டின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் இருவ ருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக ெதரிகிறது. இதன் காரணமாக அலெக்ஸ்பாண்டி அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணை 2வதாக திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பாக பாண்டிச்செ ல்வி விருதுநகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கைதாகாமல் இருக்க அலெக்ஸ்பாண்டி குடும்பத்தினர் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு செய்தனர்.
மனுவை விசாரித்த நீதிமன்றம் சமரச தீர்வு மையத்தில் ஆஜராகுமாறு அறிவுறுத்தினர். இதைத்தொ டர்ந்து சம்பவத்தன்று அலெக்ஸ்பாண்டி மோட்டார் சைக்கிளில் பாண்டிச்செல்வியை சமரச தீர்வு மையத்திற்கு அழைத்துச் சென்றார். வழியில் அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த பாண்டிச்செல்வி நடுரோட்டிலேயே தான் கொண்டு வந்திருந்த ஸ்பிரேயை உடலில் அடித்து க்கொண்டு தீ வைத்துக் கொண்டார். இதில் அவரது உடல் முழுவதும் தீ பரவியது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அலெக்ஸ்பாண்டியன் மனைவியை காப்பாற்ற முயன்றார். அவருக்கு தீக்காயம் ஏற்பட்டது. இருவரும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பாண்டிச்செல்வி இறந்தார்.
அலெக்ஸ்பாண்டி சிகிச்சையில் உள்ளார். இதுகுறித்து திருச்சுழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






