என் மலர்
விருதுநகர்
- ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் செயின் பறிக்கப்பட்டது.
- 10 பவுன் தாலி செயினை கண்ணி மைக்கும் நேரத்தில் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி நடராஜா காலனியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி கிரகலட்சுமி (வயது 49). சம்பவத்தன்று இவர் தனது சகோதரியின் பிள்ளைகளை அவரது வீட்டில் விட்டுவிட்டு மீண்டும் தனது வீட்டுக்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த ஒரு நபர் கிரகலட்சுமி கழுத்தில் அணிந்து இருந்த 10 பவுன் தாலி செயினை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். இது குறித்து சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தில் கிரகலட்சுமி புகார் செய்தார்.
அதன் பெயரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாலிச் சேனை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
- சிறுவன் மாயமானார்.
- ஆலங்குளம் போலீசில் பண்டாரசாமி புகார் செய்தார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் டி.கரிசல் குளத்தை சேர்ந்தவர் பண்டாரசாமி (வயது 54). இவரது பேரன் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான்.
அவன் வீட்டில் இருந்த 4 ஆயிரம் ரூபாயை யாருக்கும் தெரியாமல் எடுத்து விளையாட்டு பொருட்கள் வாங்கியதாக கூறப்படுகிறது. இதை அறிந்த பண்டாரசாமி சிறுவனை கண்டித்துள்ளார்.
இந்த நிலையில் சிறுவன் வீட்டில் இருந்து மாயமானார். அவன் எங்கு சென்றான் என தெரியவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.
இதையடுத்து பேரனை கண்டுபிடித்து தருமாறு ஆலங்குளம் போலீசில் பண்டாரசாமி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நள்ளிரவில் சைக்கிளில் சென்று போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.
- பொங்கல் விழா பாதுகாப்புப் பணிக்காக சென்றிருப்பதாக காவலர் தெரிவித்தார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் நேற்று நள்ளிரவில் சாதாரண உடையில் சைக்கிளில் ரோந்து சென்றார். அப்போது திடீரென அவர் மேற்கு காவல் நிலையத்தில் உள்ளே சென்றார் அங்கு ஒரே ஒரு காவலர் பணியில் இருந்தார் அவரிடம் தான் யார் என கூறாமல் மனு கொடுக்க வந்திருப்பதாக சூப்பிரண்டு கூறினார்.
அவரை அடையாளம் கண்டு கொள்ளாத காவலர், இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் வெளியே சென்றிருப்பதாகவும், வந்தவுடன் அவர்களிடம் மனு கொடுக்குமாறும் கூறியுள்ளார். இதையடுத்து இன்ஸ்பெக்டரின் இருக்கையில் அமர்ந்த சூப்பிரண்டு அங்கிருந்த கோப்புகளை ஆய்வு செய்துள்ளார். அப்போதுதான் பணியில் இருந்த காவலருக்கு யாரோ உயர் அதிகாரி வந்திருப்பதாக தெரியவந்துள்ளது. இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் எங்கு சென்றிருக்கிறார்கள் என காவலரிடம் போலீஸ் சூப்பிரண்டு விசாரித்தார்.
அவர்கள் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழா பாதுகாப்புப் பணிக்காக சென்றிருப்பதாக காவலர் தெரிவித்தார். மேலும் காவலரிடம் தன்னை இதற்கு முன்பு பார்த்திருக்கிறீர்களா என்று போலீஸ் சூப்பிரண்டு கேட்டுள்ளார். அப்போது அவரைப் பார்த்ததில்லை என்று காவலர் கூறியுள்ளார். அவரிடம் தான் தான் போலீஸ் சூப்பிரண்டு என்பதை தெரிவித்துவிட்டு மீண்டும் தான் வந்த சைக்கிளில் ஏறி அவர் அங்கிருந்து சென்றார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாதாரண உடையில் சைக்கிளில் வந்து போலீஸ் ஸ்டேசனில் ஆய்வு செய்தது விருதுநகர் மாவட்டத்தில் போலீசார் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மதுரை மாவட்டம் சிந்துபட்டி அருகே வீடு, தோட்டத்தில் கொள்ளை நடந்தது.
- போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் சிந்துபட்டி போலீஸ் சரகம் தும்மக்குண்டு கிருஷ்ணாபுரம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் மனைவி மீனாட்சி(வயது65). இவரது வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ. 30 ஆயிரம் ரொக்கம், 4 கிராம் நகை ஆகியவை திருடுபோனது.இதுகுறித்து சிந்துபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை திருப்பாலை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார்(59).இவருடைய தோட்டம் கூடக்கோவில் அருகே உள்ள நெடுமதுரையில் உள்ளது. தோட்டத்தை நெடுமதுரை சேர்ந்த ஆண்டி என்பவர் பரமாரித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று தோட்டத்தில் உள்ள வீட்டின் முன்புற கதவை உடைத்த மர்ம நபர்கள் அங்கிருந்த மோட்டார் வயர் காயில், வான்கோழி, கின்னி கோழி, நாட்டுக்கோழி மற்றும் இடுபொருட்கள், ரொக்கம் ரூ. 6 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக ஜெயக்குமார் கூடக்கோவில் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
- சிவகாசி பி.எஸ்.ஆர். கல்லூரியில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.
- சுகாதார ஆய்வாளர் ராகவன் பரிசோதனைகளை செய்தார்.
சிவகாசி
சிவகாசி பி.எஸ்.ஆர். கல்லூரியில் பயோமெடிக்கல் துறையின் சார்பில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான உடல் மற்றும் ரத்த பரிசோதனை முகாம் நடந்தது.
இந்த முகாமில் பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி தொடங்கி வைத்தார். இதில் டாக்டர் செந்தட்டிகாளை, சுகாதார ஆய்வாளர் ராகவன் மற்றும் மருத்துவ குழுவினர் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு உடல், கண், ரத்த பரிசோத னைகளை இலவசமாக செய்தனர்.
இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை பயோமெடிக்கல் துறை தலைவர் மணிகண்டன், பேராசிரியர்கள் பபிதா தங்கமலர், கிருத்திகா ஆகியோர் செய்திருந்தனர்.
- பாம்பு கடித்து விவசாயி இறந்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள உலக்குடியை சேர்ந்தவர் பூமிநாதன் (வயது 49). சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது அவரை பாம்பு கடித்தது.
உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பூமிநாதனின் மனைவி ஆறுமுகம் நரிக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
- வாலிபர் தூக்குப்போட்டு இறந்தார்.
- அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
விருதுநகர்
விருதுநகர் அம்பேத்கார் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ்(28), ஓட்டலில் மாஸ்டராக வேலை பார்த்தார். இவரது மனைவி திலகவதி. இவர்களுக்கு திருமணமாகி 4 வயதில் ஒரு மகளும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் விக்னேஷ் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போது உறவினர்கள் அவரை காப்பாற்றி சமாதானப்படுத்தினர். இந்த நிலையில் சம்பவத்தன்று மீண்டும் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் விரக்தியடைந்த விக்னேஷ் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். விக்னேசின் தாய் குருவம்மாள் கொடுத்த புகாரின்பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக 3 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர்
சாத்தூர் அருகே உள்ள ஒத்தையால் பகுதியில் செயல்படும் பட்டாசு ஆலையில் 2 தினங்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டு 3 அறைகள் சேதமாகின.
இதுகுறித்து ஒத்தையால் கிராம நிர்வாக அதிகாரி மணிகண்டன் அங்கு ஆய்வு செய்து விருதுநகர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசார் ஆலையின் உரிமையாளர் சிவகாசியை சேர்ந்த மாரியப்பன், ஆலையை குத்தகைக்கு எடுத்து நடத்திய தாயில்பட்டியை சேர்ந்த வினோத், அன்பில் நகரத்தை சேர்ந்த பாண்டி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் கோவில் கேட் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் கொள்ளையடித்த நபர்களை தேடி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள வடமலாபுரம் தாயில்பட்டி ரோட்டில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இப்பகுதியில் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் விசேஷ நாட்களில் பக்த ர்கள் அதிகளவில் திரண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.
கோவிலில் அதே பகுதியை சேர்ந்த பால்பாண்டியன் என்பவர் பூசாரியாக உள்ளார். இவர் இரவு பூஜைகளை முடித்து விட்டு வழக்கம்போல் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் கோவில் கேட் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் கோவில் கருவறையில் இருந்த 4 குத்து விளக்குகள், ஆம்பிளி பயர், யூபிஎஸ் பேட்டரி, தண்ணீர் மோட்டார், ஸ்பீக்கர் பாக்ஸ் உள்ளிட்டவைகளை திருடிச் சென்றனர்.
மறுநாள் காலையில் கோவிலை திறக்க வந்த பூசாரி கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து சாத்தூர் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் கொள்ளையடித்த நபர்களை தேடி வருகின்றனர்.
- ரூ.3.83 கோடியில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சி பகுதி மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் தேரிருவேலி ஊராட்சியில் அனைத்து கிராம மேம்பாட்டு திட்டத்தில் காகித மில்லத் வீதியில் ரூ.4.20 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார். ராவுத்தர் சாகிப் மேல்நிலைப் பள்ளியில் பாராளுமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஊராட்சியின் மூலம் நன்றாக பராமரிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பிரதமரின் குடியிருப்பு திட்டத்தின் கீழ் 2 பயனாளி களுக்கு தலா ரூ.1.70 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக வீடுகள் கட்டப்பட்டு வருவதை கலெக்டர் பார்வையிட்டு உரிய காலத்திற்குள் கட்டி முடிக்க அறிவுரை வழங்கினார்.
தேரிருவேலி பெரிய கண்மாயில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ரூ.8.99 லட்சம் மதிப்பீட்டில் கண்மாய்யை சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு பணியாளர்களிடம் இதை நன்றாக சீரமைத்தால் உங்களுக்கு நீண்ட நாள் பயனுள்ளதாக இருக்கும். அதே போல் அரசு வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு பணியாளரும் உரிய அளவீட்டு பணியை நாள் ஒன்றுக்கு சரியாக மேற்கொள்ளும் பொழுது அதிகபட்ச ஊதிய தொகையை எளிதாக பெற முடியும்.
பணியா ளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு முழுமையான ஊதியத்தை பெற வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார். பின்னர் அந்த பகுதி பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதனடிப்படையில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும் என தெரிவித்தார்.
தேரிருவேலி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கலெக்டர் பார்வையிட்டு மருத்துவர்களிடம் சிகிச்சை வழங்குவது குறித்தும், நாள்தோறும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்தும், மருந்துகள் இருப்பு குறித்தும் கேட்டறிந்தார்.
முதுகுளத்தூர் பேரூராட்சியில் பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் நீர்நிலை ஆதாரங்களை மேம்படுத்தும் வகையில் திடல் சிறையத்தேவன் ஊரணியில் ரூ.119.80 லட்சம் மதிப்பீட்டில் சீரமைத்து கரையை பலப்படுத்தி பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு உரிய காலத்திற்குள் பணிகளை முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
முதுகுளத்தூரில் ரூ.242.85 லட்சம் மதிப்பீட்டில் வாரச்சந்தை மற்றும் வணிக வளாகம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு பணிகள் நடைபெறும் பொழுது பொறியாளர் ஆய்வு செய்து தரத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது முதுகுளத்தூர் பேரூராட்சி தலைவர் ஷாஜகான், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜானகி, பிரியதர்ஷினி, பொறியாளர் ஜம்பு முத்து ராமலிங்கம், பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி, தேரிருவேலி ஊராட்சி மன்றத்தலைவர் அபுபக்கர் சித்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- ராஜபாளையம் அருகே ஸ்ரீராம் மழலையர் தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடந்தது.
- மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே முறம்பில் உள்ள ஸ்ரீராம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் பள்ளியின் 34-வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவில் ராம்கோ சிமெண்ட் துணை மேலாளர் முத்துக்குமார், சத்யா வித்யாலயா பள்ளி குழுமங்களின் தாளாளர் குமரேசன், எல்.ஐ.சி. கமலக்கண்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினர். டாக்டர் பிரியதர்ஷினி முத்துக்குமார் ஆண்டறிக்கை வாசித்தார். ஆசிரியர் கவுசல்யா வரவேற்று பேசினார்.
விளையாட்டு போட்டியில் ஓட்டப்பந்தயம், பலூன் ஊதுதல் மற்றும் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. எல். கே.ஜி., யு.கே.ஜி. பயிலும் அரும்பு மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் அனைவரது மனதையும் கவர்ந்தது. முடிவில் சித்ராதேவி நன்றி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர் ராமராஜ், பெற்றோர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை அனைத்து ஆசிரியர்களும் செய்திருந்தனர்.
- தம்பியை கத்தியால் குத்திய அண்ணன் கைது செய்யப்பட்டார்.
- திருவிழாவில் சாமி கும்பிட்டு விட்டு பூர்விக வீட்டிற்கு சென்றனர்.
விருதுநகர்
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர் (வயது42). இவர்களது அண்ணன் இவரது அண்ணன் சோமு (53). இவர்களுக்கு விருதுநகர் அருகே உள்ள பாவாலி சங்கரநாராயணபுரத்தில் பூர்வீக வீடு உள்ளது. இந்த நிலையில் இவர்கள் குடும்பத்துடன் விருதுநகர் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவிற்காக சென்றனர்.
திருவிழாவில் சாமி கும்பிட்டு விட்டு பூர்விக வீட்டிற்கு சென்றனர். அங்கு வைத்து சுந்தர், சோமு இருவரும் மது குடித்துள்ளனர். அப்போது குடும்பப் பிரச்சனை தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றிய கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த சோமு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுந்தரை குத்தினார்.
உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சுந்தரின் மகன் அரவிந்த் ஆமத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து சோமுவை கைது செய்தனர்.






