என் மலர்
விருதுநகர்
- விபத்தில் சிக்கிய வாலிபர் பலியானார்.
- திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டது.
விருதுநகர்
சிவகாசி சீனிவாசன் நகரை சேர்ந்தவர் தேசிங்கு ராஜா (வயது19). இவரது சகோதரர் பார்த்தசாரதி (22). இவர்கள் இருவரும் சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் இருவரும் காயம் அடைந்தனர். பின்னர் வீட்டுக்கு சென்ற சிறிது நேரத்தில் தேசிங்கு ராஜாவுக்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டது. உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.ஆனால் செல்லும் வழியில் தேசிங்குராஜா இறந்தார்.
இதுகுறித்து பார்த்தசாரதி கொடுத்த புகாரின் பேரில் மல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விருதுநகர் மாவட்டத்தை குடிநீர் பற்றாக்குறை இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் பேசினார்.
- குடிநீர் பற்றாக்குறை இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி களிலும் பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். கலெக்டர் ஜெயசீலன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் அமைச்சர் பேசுகையில், பொதுமக்க ளுக்கு குடிநீர் வழங்கும் பணி தான் அரசின் முதன்மையான பணியாகும். ஆகவே அதற்கு அனைத்து அதிகாரிகளும் ஒன்றி ணைந்து செயல்பட வேண்டும். அதற்கு தேவை யான நிதி பெற்று தரப்படும்.மேலும் விருதுநகர் மாவட் டம் குடிநீர் பற்றாக்குறை இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும் என்றார்.
தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
ராஜபாளையம் நகராட்சி யில் 1 முதல் 21 வார்டு பகுதிகளில் 7 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறையும் 22 முதல் 42 வார்டு பகுதி களில் 10 முதல் 15 நாட்க ளுக்கு ஒரு முறையும் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இதனை சரி செய்து 5 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என பொதுமக்கள் கேட்கின்றனர். தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டமும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தவுடன் 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட வேண்டும். பேரூராட்சி மற்றும் ஊராட்சி கிராம பகுதிகளிலும் முறையாக குடிநீர் வழங்கப்படுவதை உறுதி செய்ய இதுபோல் ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர், கண்டிப்பாக கிராம பகுதிகளிலும் முறை யாக குடிநீர் வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என உறுதியளித்தார்.
கூட்டத்தில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள அனைத்து சட்ட மன்ற உறுப்பினர்கள், நகராட்சி சேர்மன்கள், கமிஷனர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அரசு பஸ் கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- போக்குவரத்து அதிகாரியிடம் எம்.எல்.ஏ வலியுறுத்தினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கலிங்கபட்டிக்கு செல்லும் அரசு பஸ் வன்னியம்பட்டி, பெருமாள் தேவன்பட்டி, அட்டைமில், கீழராஜகுலராமன், வடகரை, கொருக்காம்பட்டி வழியாக தினசரி மகளிர் கட்டணமில்லா பஸ்சாக இயக்கப்படுகிறது. இந்த பஸ் ஸ்ரீவில்லி புத்தூர், ராஜபாளையம், வெம்பக்கோட்டை, சங்கரன்கோவில் ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள கிராமப்பகுதி மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்- கலிங்கபட்டி பஸ் சரியாக இயக்கப்படாதது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போக்குவரத்து கழகத்தில் சிலர் புகார் அளித்தனர்.
இந்நிலையில் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கலிங்கபட்டிக்கு காலை 10.30 மணிக்கு அந்த பஸ் புறப்பட்டது. பஸ்சில் கொருக்கும்பட்டியில் கல்லூரி மாணவி ஒருவர் ஏறி உள்ளார்.
அப்போது அவரிடம் நடத்துநர் தங்கவேலு, பஸ் சரியாக வர வில்லை என உங்கள் ஊரில் இருந்து புகார் அளித்துள்ள தாக கூறி மாணவியை அவதூறாக பேசி உள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர், ரகுராமன் எம்.எல்.ஏ.விடம் தெரிவித்தனர்.
இதையடுத்து ஸ்ரீவில்லி புத்தூர் போக்குவரத்து கழகத்திற்கு வந்த ரகுராமன் எம்.எல்.ஏ. சம்பந்தப்பட்ட கண்டக்டர், மாணவியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், மேலும் அவர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 15 நாட்களில் கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து பணிமனை மேலாளர் உறுதி அளித்திருப்பதாக கூறப்படுகிறது.
- ஆண்டாள் கோவிலில் சுக்கிரவார ஊஞ்சல் சேவை நடந்தது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
108 வைணவத் திருத்தலங்களில் பிரசித்தி பெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில். இங்கு ஆடிப்பூரம், வைகுண்ட ஏகாதசி, மார்கழி எண்ணெய் காப்பு உற்சவம், பங்குனி திருக்கல்யாணம் உள்ளிட்ட திருவிழாக்கள் விமரிசையாக நடைபெறும். மேலும் ஆண்டு முழுவதும் பல்வேறு வைபவங்கள் நடைபெறும். அதில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை குறடு மண்டபத்தில் ஆண்டாள்-ரெங்கமன்னாருக்கு நடைபெறும் ஊஞ்சல் சேவை பிரசித்தி பெற்றது.
அதன்படி வைகாசி மாத கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று சுக்கிர வார ஊஞ்சல் சேவை நடந்தது. சர்வ அலங்காரத்தில் ஆண்டாள்- ரெங்கமன்னார் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சிய ளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஆண்டாள்கோவில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
- ராஜபாளையம் பஸ் நிலையத்தில் நகர்மன்ற தலைவர் திடீர் ஆய்வு செய்தார்.
- ஆட்டோ டிரைவர்களிடம் கேட்ட பவித்ரா ஷியாம் குறைகளை கேட்டார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் பஸ் நிலையத்தில் நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷியாம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பயணிகளுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் அங்கு செயல்படும் உணவகங்களில் சுகாதாரமான முறையில் உணவு தயாரித்து விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்தும் ஆய்வு நடத்தினார்.
பஸ் நிலையத்தில் உள்ள சுகாதார வளாகம், கட்டண கழிப்பறைகள், பயணிகள் அமரும் இருக்கைகள் ஆகியவற்றை பராமரிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து ஆட்டோ டிரைவர்களிடம் கேட்ட பவித்ரா ஷியாம் குறைகளை கேட்டார்.
- நூதனமாக பேசி 3 பவுன் நகையை திருடியவர் கைது.
- சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
சிவகாசி
சிவகாசி நேரு காலனி சேர்ந்தவர் ஜோதி (வயது 38). இவர் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வந்தார். அவர் மதுரையில் வசிக்கும் உங்கள் சகோதரரின் நண்பர் என ஜோதியிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார். இதனை நம்பிய ஜோதி அந்த நபரை வீட்டிற்குள் அழைத்து பேசினார். அப்போது அந்த நபர் தான் விருதுநகரில் உள்ள ரேசன் கடையில் வேலை பார்ப்பதாகவும், அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் தேவைப்பட்டால் இலவசமாக வாங்கி தருகிறேன் என கூறியுள்ளார்.
இதையடுத்து ஜோதி அந்த நபருக்காக குளிர்பானம் வாங்க கடைக்குச் சென்றுள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர் வீட்டின் பீரோவில் இருந்த 3 பவுன் நகை திருடி கொண்டு தப்பினார். இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
- நரிக்குடி ஒன்றியம் சார்பில் கோடைகால சுற்றுலாவுக்கு புறப்பட்டனர்.
- ஊராட்சி ஒன்றிய அலுவலக அலுவ லர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் அகத்தாகுளம் ஊராட்சி மன்றத்தலைவர் நாகவள்ளி சீனிவாசன் தலைைமயில் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்கு நர்கள், தூய்மைப்பணியாளர்கள், பணித்தள பொறுப்பாளர்கள், நூலகர் திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோர்களை ஒருங்கிணைத்து நரிக்குடி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து அகத்தாகுளம் ஊராட்சி நிர்வாகம் சார்பாக கோடைகால சுற்றுலாவுக்கு புறப்பட்டனர். சுற்றுலா வாகனத்தை நரிக்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுகி (கி.ஊ) வழியனுப்பி வைத்தார். இதில் ஊராட்சி ஒன்றிய அலுவலக அலுவ லர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- போலீஸ் நிலையங்களில் 2400 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
- போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்.
விருதுநகர்
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி விருதுநகர் மாவட்ட போலீசார் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி இன்று நடந்தது. அதன்படி மாவட்டத்தில் உள்ள 46 போலீஸ் நிலையங்கள், 11 போலீஸ் குடியிருப்புகள், 3 ஆயுதப்படை மைதானங்கள் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் பலன் தரும் 600 மரக்கன்றுகள் உள்பட 2400 மரக்கன்றுகள் இன்று நடப்பட்டது.விருதுநகர் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
- ராஜபாளையம் ரெயில்வே மேம்பாலத்தில் தார்சாலை அமைக்கும் பணி நிறைவு பெற்றது.
- இரவு முழுவதும் எம்.எல்.ஏ. கண்காணித்தார்.
ராஜபாளையம்
ராஜபாளையம்-சத்திரப்பட்டி-வெம்பக்கோட்டை ரெயில்வே மேம்பாலத்தில் தார்ச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தபணிகளை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. நேற்று இரவு முழுவதும் அங்கிருந்து கண்காணித்தார். இதைத்தொடர்ந்து தார்சாலை அமைக்கும் பணி முடிவடைந்து பாலத்தில் போக்குவரத்து தொடங்கியது. இதுகுறித்து எம்.எல்.ஏ. கூறியதாவது:-
ரெயில்வே மேம்பாலத்தில் தார்ச்சாலை அமைக்கும் பணி ஓரிரு நாட்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு பணிகளை துரிதப்படுத்தி முடிக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல் வழக்கம் போல் மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்படுத்தலாம். மேலும் சர்வீஸ் ரோடு அமைக்கும் பணியும் வேகமாக நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தொழிலாளர்கள் நல வாரியத்தில் கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
- கலெக்டர் ஜெயசீலன் வலியுறுத்தினார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள அமைப்பு சாரா தொழில்க ளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பணி நிலைமைகளை ஒழுங்கு படுத்தவும் அவர்களுக்கு சமூகபாதுகாப்பு அளிக்க வும், தமிழ்நாடு அரசு 1982-ஆம் ஆண்டில் தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலா ளர்கள் (வேலை மற்றும் பணி நிலைமைகள் முறை படுத்துதல்) சட்டத்தினை இயற்றியது.
அதன்படி தமிழ்நாடு அரசின் கீழ் கட்டுமான தொழிலாளர் நலவாரியம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம் உட்பட 18 அமைப்புசாரா தொழிலாளர் நலவாரி யங்கள் செயல்பட்டு வருகிறது. பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்க ளுக்கான தனி நலவாரியமாக தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நலவா ரியம் அமைக்கப்பட்டு 1.1.2021 முதல் செயல் படுத்தப்பட்டு வருகிறது.
மேற்படி 18 அமைப்பு சாரா தொழிலாளர் நலவா ரியங்களின் நலத்திட்டங்கள் முறையே கல்வி உதவித்தொ கை, திருமண உதவித்தொ கை, மகப்பேறு உதவித்தொ கை, கண்கண்ணாடி உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, விபத்து மரண உதவித்தொ கை, பணியிடத்து விபத்து மரண உதவித்தொகை, விபத்து ஊன உதவித்தொ கை, ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் உதவித்தொகை ஆகிய நலத்திட்டங்களுக் கான உதவித்தொகைகள் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகங்களின் மூலம் செயல்படுத்தப்படு கிறது.
பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலில், பணிபுரியும் இ.எஸ்.ஐ. மற்றும் பி.எப். பிடித்தம் செய்யப்படாத அமைப்பு சாரா தொழிலாளர்களை உடனடியாக பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழி லாளர் நலவாரியத்தில் கட்டாயமாக உறுப்பினராக சேர்க்குமாறு வேலை யளிப்ப வர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தர விட்டுள்ளார்.
தற்போது மேற்படி வாரியத்தில் பதிவுபெற்ற உறுப்பினர்களுக்கு விபத்து மரண உதவித்தொகைரூ.2 லட்சமாக உயர்த்தப் பட்டுள்ளது.
மேலும் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழில் உற்பத்தியாளர்கள் தங்களிடம் பணிபுரியும் அமைப்புசாரா தொழிலா ளர்களுக்கு பங்களிப்புத் தொகை ஒவ்வொரு தொழிலாளிக்கும் தலாரூ.200 வீதம் 'செயலா ளர், தமிழ்நாடு பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர்கள் நலவாரியம் என்ற பெயரில் வரைவோலை எடுத்து படிவம் வி-ன் படியான தொழிலாளர் விவரப் பட்டியலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையருக்கு அனுப்ப வேண்டும்.
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலில் ஈடுபடும், இ.எஸ்.ஐ., பி.எப். பிடித்தம் செய்யப்படாத அமைப்பு சாரா தொழிலா ளர்களை பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நலவா ரியத்தில் உறுப்பினராக சேர்ப்பதற்கு தொழிலாளர் துறையில் tnuwwb.tn.gov.in இணையதள முகவரியில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- முகமது இப்ராகிம் இறந்த சில நாட்களில் அவரே தனக்கு சொத்துக்களை உயில் எழுதி வைத்ததாக அப்துல் ஹக் போலி ஆவணம் தயாரித்துள்ளார்.
- முகமது இப்ராகிமின் மனைவி ரஹிமா பீவி மோசடி குறித்து வீரசோழன் போலீசில் புகார் செய்தார்.
திருச்சுழி:
விருதுநகர் மாவட்டம் நரிக்குடியை அடுத்துள்ள வீரசோழன் மேலவண்டல் தெருவை சேர்ந்தவர் முகமது இப்ராகிம். இவருக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அதே பகுதியை சேர்ந்த ஜவுளிக்கடை உரிமையாளர் அப்துல் ஹக் போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்ததாக தெரிகிறது.
முகமது இப்ராகிம் இறந்த சில நாட்களில் அவரே தனக்கு சொத்துக்களை உயில் எழுதி வைத்ததாக அப்துல் ஹக் போலி ஆவணம் தயாரித்துள்ளார். இதனை தனது பெயருக்கு மாற்ற பல்வேறு மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இதையறிந்த முகமது இப்ராகிமின் மனைவி ரஹிமா பீவி மோசடி குறித்து வீரசோழன் போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையடுத்து ரஹிமா பீவி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த கோர்ட்டு சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு வீரசோழன் போலீசாருக்கு உத்தரவிட்டனர். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், இறந்தவர் தனக்கு உயில் எழுதி வைத்தது போல் போலி ஆவணம் தயாரித்து பல கோடி மதிப்புள்ள நிலத்தை அப்துல் ஹக் அபகரிக்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
- அதிகாரிகள் மாப்பிள்ளையின் வீட்டை கண்டுபிடித்து அங்கு சென்றபோது இரவு 10 மணியாகி விட்டது.
- 12 வயது சிறுமிக்கு திருமணம் நடத்தி வைத்தது தொடர்பாக ஊர்நல அலுவலர் கோவிந்தம்மாள் புகார் கொடுத்தார்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்ட சைல்டு லைன் கண்காணிப்பாளர் அன்புச்செல்விக்கு 1098 லைல்டு லைன் தொடர்பு எண்ணில் ஒரு புகார் வந்தது. அதில் ராஜபாளையம் அருகே சேத்தூர் பகுதியில் 12 வயது சிறுமிக்கு திருமணம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக அன்புச்செல்வி உத்தரவின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் சமூக நலத்துறை ஊர்நல அலுவலர் கோவிந்தம்மாள் மற்றும் அலுவலர்கள் விசாரணை நடத்தினர். சிறுமியின் முகவரி மற்றும் வாலிபரின் முகவரியை கண்டுபிடித்து விசாரித்தனர்.
அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள இனாம் செட்டிக்குளம் ஒத்தப்பட்டியை சேர்ந்த தம்பதியரின் 12 வயது மகளுக்கும், சேத்தூர் மேட்டுப்பட்டி புது வண்ணார் தெருவை சேர்ந்த பெரியசாமி-பேச்சியம்மாள் தம்பதியரின் மகன் மாரிமுத்து (22) என்பவருக்கும் திருமணம் நடந்தது தெரியவந்தது.
இதையடுத்து அதிகாரிகள் மாப்பிள்ளையின் வீட்டை கண்டுபிடித்து அங்கு சென்றபோது இரவு 10 மணியாகி விட்டது. அதிகாரிகள் விசாரித்தபோது மாப்பிள்ளையும், பெண்ணும் முதலிரவு அறைக்கு சென்று விட்டதாக உறவினர்கள் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், அவர்களை அழைத்து வரும்படி கூறினர்.
இதையடுத்து உறவினர்கள் அவர்களை வெளியே அழைத்து வந்தனர். மேலும் அதிகாரிகள் விசாரித்தபோது மாரிமுத்து, சிறுமியின் சொந்த அத்தை மகன் என்பதும், இருவரும் காதலித்து வந்ததும், இருவீட்டாரும் பேசி முடிவு செய்து திருமணத்தை நடத்தி வைத்ததும் தெரியவந்தது.
அதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அவர்களை கண்டித்து சிறுமியை மீட்டு விருதுநகர் சைல்டு லைன் காப்பகத்தில் சேர்த்தனர். 12 வயது சிறுமிக்கு திருமணம் நடத்தி வைத்தது தொடர்பாக ஊர்நல அலுவலர் கோவிந்தம்மாள் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கண்ணாத்தாள், சிறுமியை திருமணம் செய்த மாரிமுத்துவை கைது செய்தார். மேலும் வாலிபரின் பெற்றோர், சிறுமியின் தந்தை ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






