என் மலர்
விழுப்புரம்
- 3 பேரும் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
- போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வானூர்:
விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியில் புதுச்சேரி-திண்டிவனம் 4 வழிச்சாலை உள்ளது. இந்த சாலையில் திண்டிவனத்தில் இருந்து தைலாபுரத்திற்கு ஒரு காரில் 3 பேர் இன்று காலை வந்து கொண்டிருந்தனர். அப்போது புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 3 பேர் மற்றொரு காரில் சென்று கொண்டிருந்தனர்.
இவ்விரு கார்களும் மொளச்சூர் பகுதியில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் தைலாபுரம் செல்லும் காரில் வந்த ஒருவரும், தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த காரில் வந்த ஒருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். படுகாயமடைந்த 4 பேரையும், அவ்வழியே சென்றவர்கள் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் தெலுங்கானாவை சேர்ந்த பெண் சிகிச்சை பலனின்றி பலியானார். தொடர்ந்து மீதமிருந்த 3 பேரும் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், 4 வழிச்சாலையில் நேருக்கு நேர் மோதி விபத்து நடந்தது எப்படி? இறந்தவர்கள் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தனியாருக்கு சொந்தமான மருத்துவ கழிவு அரவை தொழிற்சாலை உள்ளது.
- மக்கள் சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலை புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விக்கிரவாண்டி:
விழுப்புரம் அருகே வேடம்பட்டில் மருத்துவ கழிவு தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறிய விஷக்காற்றால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 20 பெண்கள் உட்பட 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் அடுத்த வேடம்பட்டில் தனியாருக்கு சொந்தமான மருத்துவ கழிவு அரவை தொழிற்சாலை உள்ளது. இன்று அதிகாலை 1 மணி அளவில் இப்பகுதியில் இருந்து வெளியேறிய நச்சு காற்றால் அருகில் இருந்த வேடம்பட்டு காலனி பொதுமக்கள் இக்காற்றை சுவாசிக்கும் போது மூச்சு திணறல் ஏற்பட்டு அதிகாலை 1 மணி முதல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் வேடம்பட்டை சேர்ந்த அங்காளவள்ளி, ஜெயலட்சுமி, சவுமியா, மாரியம்மாள், சுசிலா, ரேணுகா, மதன், கடலூர் சுரேஷ், உள்ளிட்ட 17 பேரும், காணை அரசு மருத்துவமனையில் 13 பேர்களும் என மொத்தம் 20 பெண்கள் உள்பட 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் வேடம்பட்டு கிராமத்தில் பதட்டம் அதிகரித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட காவல்துறை சார்பில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே இப்பிரச்சனை தொடர்பாக வேடம்பட்டு காலனி மக்கள் சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலை புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையான வாக்கினை செலுத்தி வருகின்றனர்.
- வாக்கு சாவடியில் அவரது மகள் சமியுத்தா, சங்கமித்ரா, சஞ்சித்ரா ஆகியோர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
திண்டிவனம்:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் விறுவிறுப்பாக தொடங்கி காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையான வாக்கினை செலுத்தி வருகின்றனர்.
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், அவரது குடும்பத்தினருடன் தனது சொந்த ஊரான திண்டிவனம் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள மரகதாம்பிகை பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார். இதே வாக்கு சாவடியில் அவரது மகள் சமியுத்தா, சங்கமித்ரா, சஞ்சித்ரா ஆகியோர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
- நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமர் ஆக வேண்டும். அதுவே இந்திய நாட்டுக்கு நன்மை பயக்கும்.
- அனைவரும் சமத்துவம், சகோதரத்துவத்துடன் வாழ தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும் .
திண்டிவனம்:
திண்டிவனம் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள ஸ்ரீமரகதாம்பிகை அரசு உதவி பெறும் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று காலை 8 மணிக்கு தனது வாக்கைப்பதிவு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அதனால் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும். நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமர் ஆக வேண்டும். அதுவே இந்திய நாட்டுக்கு நன்மை பயக்கும். அனைவரும் சமத்துவம், சகோதரத்துவத்துடன் வாழ தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும் .
பேட்டியின் போது மயிலம் தொகுதி எம்.எல்.ஏ. சிவக்குமார், பா.ம.க. விழுப்புரம் கிழக்கு மாவட்டச் செயலாளர் ஜெயராஜ், முன்னாள் நகர செயலர் சண்முகம், வக்கீல் பாலாஜி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- நாங்கள் எல்லோரும் கடமையை கண்ணாக செய்து கொண்டுள்ளோம்.
- எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
திண்டிவனம்:
திண்டிவனம், ரொட்டிக்கார தெருவில் உள்ள ஸ்ரீ மரகதாம்பிகை நிதி உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தர்மபுரி தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி குடும்பத்துடன் வாக்களித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மிக முக்கியமான நாள் இது. என் ஓட்டுரிமையை திண்டிவனத்தில் வாக்களித்த பின் தர்மபுரி தொகுதிக்கு செல்கிறேன். எங்கள் கூட்டணி வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தேர்தல் நியாயமான முறையில் நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அவரிடம் உங்கள் உடன்பிறந்த சகோதரர் வாழ்த்து தெரிவித்தாரா? என்ற கேள்விக்கு எல்லா தொகுதிகளிலும் என் உடன்பிறந்த சகோதரர்கள்தான் போட்டியிடுகிறார்கள். நாங்கள் எல்லோரும் கடமையை கண்ணாக செய்து கொண்டுள்ளோம். மகளிர் என் மேல் அன்புடன் உள்ளனர். எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
உள்ளூர் வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்று பா.ம.க.தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளாரே என்ற கேள்விக்கு அது முன்னாள் முதல்வரின் கருத்து. நீங்கள் நேரடி அரசியலுக்கு வருவீர்கள் என்று எதிர்பார்த்தீர்களா என்ற கேள்விக்கு நான் ஏற்கனவே அரசியலில்தான் உள்ளேன். தேர்தல் களத்தில் பிரசாரமெல்லாம் செய்துள்ளேன். தேர்தல் எனக்கு புதிதல்ல என்றார்.
அப்போது சிவகுமார் எம்எல்.ஏ., மாவட்ட செயலாளர் ஜெயராஜ், முன்னாள் நகர செயலாளர் சண்முகம், வக்கீல் பாலாஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி விளையாட்டுத்தனமாக உள்ளார்.
- திமுகவும், அதிமுகவும் இணைந்து சண்டை மூட்டி விட்டார்கள்.
விழுப்புரம் மாவட்டத்தில், விக்கிரவாண்டியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், விழுப்புரம் தொகுதி பாமக வேட்பாளர் முரளி சங்கரை ஆதிரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-
திமுக, அதிமுக வேண்டாம். மாற்றம் வேண்டுமென மக்கள் நினைக்கின்றனர்.
தமிழகத்தில் போதைப் பொருளால் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆளும் கட்சி வேண்டாம். ஆண்ட கட்சி வேண்டாம் என மக்கள் முடிவு செய்துவிட்டனர்.
ரவிக்குமார் எம்.பி., தொகுதி மக்களுக்கு என்ன செய்தார் ? ரவிக்குமார் தொகுதிக்கு எதுவும் செய்யாமல் மீண்டும் வாக்கு கேட்டு வருகிறார்.
பாமக வேட்பாளர் முரளி சங்கரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.
அதிமுக, திமுக என இருவரும் நம்மை ஏமாற்றிவிட்டார்கள். கல்வி, வேலை வாய்ப்பிற்காக பல ஆண்டுகளாக போராடி வருகிறோம்.
விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி விளையாட்டுத்தனமாக உள்ளார்.
தேர்தல் வந்தால் தான் திமுகவிற்கு மக்கள் நியாபகம் வருகிறது. திமுகவில், விசிகவுக்கு பொது தொகுதி கொடுக்காதது ஏன் ?
சமூக நீதி வழங்கி கொண்டிருக்கும் ஒரே கட்சி பாமக. திமுகவும், அதிமுகவும் இணைந்து சண்டை மூட்டி விட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சமூகத்தில் வாழும் அனைவரும் சமம் என்பதை வலியுறுத்துவதே திராவிடம்.
- பெண்கள் பள்ளிக்குச் செல்வதும், அனைத்து மக்களும் கோவிலுக்குள் நுழைவதும் தான் திராவிடம்.
விழுப்புரம்:
விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாரங்கியூர், ஏனாதிமங்கலம், சிறுவானூர், சிறுமதுரை, ஏமப்பூர், திருவெண்ணெய்நல்லூர் காந்தி நகர், சின்னசெவலை, டி.எடையார் பகுதியில் தேர்தல்பிரசாரம் மேற்கொண்டார்.
அவரது சொந்த ஊரான டி.எடையார் பகுதியில் கூடியிருந்த மக்களிடம் வாக்கு சேகரித்த போது பேசிய அமைச்சர் பொன்முடி, ஒரு காலத்தில் பெண்கள் படிக்க நினைத்தாலும் பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்து விடுவார்கள். ஆனால் இன்று நீங்கள் படிக்காவிட்டாலும் உங்கள் குழந்தைகளை படிக்க வேண்டும் என கண்டித்து பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் அனுப்பி வைப்பதற்கு காரணம் திராவிடம்.
ஏனெனில் பெண்கள் படிக்க வேண்டும் என்பதைத்தான் பெரியாரும் அண்ணாவும் திரும்பத் திரும்ப இந்த சமூகத்திற்கு கூறினார்கள். சமூகத்தில் வாழும் அனைவரும் சமம் என்பதை வலியுறுத்துவதே திராவிடம். பெண்கள் பள்ளிக்குச் செல்வதும், அனைத்து மக்களும் கோவிலுக்குள் நுழைவதும் தான் திராவிடம்.
ஆனால் எல்லோரும் சமம் என்பதை ஏற்காத பா.ஜ.க.வோடு பா.ம.க. கூட்டணி அமைத்துள்ளது. பா.ஜ.க. சமூகநீதிக்கும், இட ஒதுக்கீட்டுக்கும் எதிரான கட்சி. அதனால் தான் மோடி யாரும் வளரக்கூடாது என எண்ணுகிறார். குறிப்பாக தமிழர்கள் முன்னேற அவருக்கு விருப்பமில்லை. எனவே சென்ற முறை எனக்கு உதயசூரியனில் வாக்களித்தது போல இந்த முறை என் சகோதரர் ரவிகுமாருக்கு பானை சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார்.
தொடர்ந்து கூட்டத்தில் இருந்த பெண்களிடம் பேசினார். அதன் பின்னர் பிரசார வாகனத்தில் பானை சின்னம் பாடல் இசைக்கப்பட்டபோது அமைச்சர் பொன்முடி நடனமாடினார். இந்த வீடியோ சமூக வலைதளங்கில் வைரலாக பரவி வருகிறது.
- ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது.
- லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.
மேல்மலையனூர்:
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று இரவு பங்குனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடை பெற்றது.
இதை முன்னிட்டு நேற்று அதிகாலை மூலவர் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கும் சிவபெருமானுக்கும் பால், தயிர், மஞ்சள், குங்குமம், விபூதி, சந்தனம் இளநீர் பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் உள்ளிட்ட பூஜைப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து வெள்ளிக்க வசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து உற்சவர் அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு பலவித மலர்களை கொண்டு சர்வ லோகேஸ்வரி அலங்காரம் செய்யப்பட்டு உட்பிர காரத்தில் அருள்பாலித்தார். இரவு 11 மணிக்கு மேள தாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக உற்சவர் அங்காளபரமேஸ்வரி அம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார்.
அப்போது ஊஞ்சல் மண்டபம் எதிரில் இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அங்காளம்மா, அங்காளம்மா, என கரகோஷத்துடன தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து கோவில் பூசாரிகள் அங்காள பரமேஸ்வரி அம்மனை வாழ்த்தி தாலாட்டு பாடல்கள் பாடினர்.
இரவு ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து உற்சவர் அங்காள பரமேஸ்வரி அம்மனை கோவில் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.
ஊஞ்சல் உற்சவத்தில் விழுப்புரம், கடலூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, ஆகிய மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், புதுச்சேரியில் இருந்தும் மேல் மலையனூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
- முதலமைச்சர் அறிவாலயத்திற்கு வந்து புகழேந்தியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
- இந்தியா கூட்டணி கட்சி சார்பில் நகரச் செயலாளர் நைனா முகமது தலைமையில் மவுன ஊர்வலமும் நடைபெற்றது.
விக்கிரவாண்டி:
உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த புகழேந்தி எம்.எல்.ஏ. உடல் தகனம் செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி உடல்நல குறைவு காரணமாக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று மரணம் அடைந்தார். அவரது உடல் விழுப்புரம் அறிவாலயத்தில்பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிதம்பரத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு இரவு 9.30 மணிக்கு அறிவாலயத்திற்கு வந்து புகழேந்தியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் திண்டிவனம் வழியாக புதுச்சேரி சென்றடைந்தார் . மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்திய பின்னர் புகழேந்தியின் உடல் இரவு அவரது சொந்த ஊரான அத்தியூர் திருவாதியில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு ஏராளமான கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இன்று காலை 6 மணிக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான சி.வி. சண்முகம் அத்தியூர் திருவாதி வந்து புகழேந்தி எம்.எல்.ஏ. உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். காலை 9 மணி அளவில் புகழேந்தியின் சொந்த ஊரான அத்தியூர் திருவாதியில் அமைச்சர் பொன்முடி தலைமையில் தொண்டர்கள் இறுதி அஞ்சலி செலுத்திய பிறகு அவரது இறுதி ஊர்வலம் நடைபெற்று புகழேந்தி உடல் தகனம் செய்யப்பட்டது. புகழேந்தி எம்.எல்.ஏ. மறைவையொட்டி விக்கிரவாண்டி வர்த்தகர்கள் சங்கம் சார்பில் கடையடைப்பும், இந்தியா கூட்டணி கட்சி சார்பில் நகரச் செயலாளர் நைனா முகமது தலைமையில் மவுன ஊர்வலமும் நடைபெற்றது.
பின்னர் எம்.எல்.ஏ புகழந்தியின் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை அளிக்கப்பட்டது.
இதில் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி, கவுதம சிகாமணி எம்.பி., மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், ஒன்றிய சேர்மன்கள் சங்கீத அரசி ரவிதுரை, கலைச்செல்வி துணை சேர்மன் ஜீவிதா ரவி, பேரூராட்சி சேர்மன் அப்துல்சலாம், துணை சேர்மன் பாலாஜி, குழு உறுப்பினர் சர்க்கார் பாபு, ஒன்றிய செயலாளர்கள் வேம்பி ரவி,ரவிதுரை, ஜெயபால், முருகன், நகர தலைவர் தண்டபாணி, துணை செயலாளர் சுரேஷ்குமார், பிரசாந்த், மாணவரணி யுவராஜ் , சிவா,இளைஞர் அணி கார்த்திக்,ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
- மேடையில் அமர்ந்திருந்த எம்.எல்.ஏ. புகேழந்தி மயக்கம் ஏற்பட்டு மேடையிலேயே மயங்கி விழுந்தார்.
- அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் புகழேந்திக்கு முதல் உதவி செய்தனர்.
விக்கிரவாண்டி:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.
இதற்காக வேட்பாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் முன்னதாகவே வருகை தந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வருகைக்கு காத்திருந்தனர். நேற்று முன்தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்திருந்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருவதற்கு முன்பு மேடையில் அமர்ந்திருந்த எம்.எல்.ஏ. புகேழந்தி மயக்கம் ஏற்பட்டு மேடையிலேயே மயங்கி விழுந்தார். உடனே அருகில் இருந்த அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் புகழேந்திக்கு முதல் உதவி செய்தனர்.
இதையடுத்து லட்சுமணன் எம்.எல்.ஏ. பதட்டத்துடன் அங்கு ஓடி வந்து மேடைக்கு கீழே அமர்ந்திருந்த அவரது மகன் செல்வகுமாருக்கு தகவல் தெரிவித்து மேடைக்கு அழைத்தார்.
பின்னர் புகழேந்தி எம்.எல்.ஏ.வை கைத்தாங்கலாக அழைத்து சென்று முதலமைச்சருக்காக அமைக்கப்பட்டிருந்த சிறப்பு ஏ.சி. அறையில் ஓய்வெடுக்க வைத்தனர். ஆனாலும் அவருக்கு சரியாகாததால் பின்னர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரை அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை 10.35 மணியளவில் புகழேந்தி எம்.எல்.ஏ. பரிதாபமாக உயிரிழந்தார்.
மரணம் அடைந்த புகழேந்திக்கு கடந்த 4 வருடங்களாகவே கல்லீரல் பிரச்சனை இருந்து வந்தது. அதற்கு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் அவர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற பிறகுதான் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்றார். இந்த நிலையில்தான் அவர் மேடையில் மயங்கி விழுந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.
புகழேந்தி எம்.எல்.ஏ. தற்போது விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராகவும் பதவி வகித்து வந்தார்.
புகழேந்தி எம்.எல்.ஏ. மரணம் அடைந்ததை அறிந்ததும் அமைச்சர் பொன்முடி மருத்துவமனைக்கு விரைந்து சென்றார். அங்கு அவரது உடலை பார்வையிட்டார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
- விழுப்புரம், கடலூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.
- பா.ஜ.க.வுக்கு பா.ம.க. பல்லக்கு தூக்குகிறது என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
விழுப்புரம்:
விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை.ரவிக்குமார், கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணுபிரசாத் ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். அப்போது பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
நாடு ஆபத்தில் சிக்கியுள்ளது; இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
ஜனநாயகம், சமூக நீதியைப் பாதுகாக்கும் வகையில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தியாவை பா.ஜ.க.விடம் இருந்து மீட்க இந்தியா கூட்டணி வென்றாக வேண்டிய தேர்தல் இது.
அரசு பணிகளில் இட ஒதுக்கீட்டை போராடி பெறவேண்டிய நிலைக்கு பா.ஜ.க. அரசு தள்ளியிருக்கிறது.
போராடி பெற்ற இடஒதுக்கீடு, சமூக நீதிக்கு எதிரான கட்சி பா.ஜ.க.தான்.
பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் இட ஒதுக்கீடு முறை இருக்காது.
சமூக நீதிக்கு சவக்குழி தோண்டி விடுவர் பிரதமர் மோடி.
தி.மு.க.விற்கு சமூக நீதி என்பது உயிர்மூச்சான கொள்கை. சமூகநீதி, சமத்துவத்தை நோக்கி தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது.
பா.ஜ.க.வுக்கு பா.ம.க. பல்லக்கு தூக்குகிறது.
பா.ஜ.கவை கடுமையாக விமர்சித்த பா.ம.க. தற்போது அவர்களுடனேயே கூட்டணி வைத்துள்ளது.
நாம் செயல்படுத்திய காலை உணவு திட்டம் கனடா வரை சென்றுள்ளது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால், கிராம பொருளாதாரம் உயர்கிறது.
எடப்பாடி பழனிசாமி வாயை திறந்தாலே பொய் தான் வருகிறது. வெள்ளம் வந்தபோது தமிழகம் வராத பிரதமர் மோடி, தற்போது தேர்தலுக்காக வருகிறார் என தெரிவித்தார்.
- இந்த வருடம் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி இன்று நடந்த வார சந்தையில் ஆடுகள் விற்பனையானது.
- தேர்தல் நேரம் என்பதால் பறக்கும் படைக்கு பயந்து வியாபாரிகள் பணத்தை எடுத்து வருவது ஒரு பிரச்சனை மற்றும் ஆடுகளின் விலை எப்போதுமே இங்கு கூடுதலாக இருக்கும்.
செஞ்சி:
செஞ்சி வார சந்தை ஆட்டு விற்பனைக்கு மிகவும் பெயர் போனது. செஞ்சி பகுதி மலைகள் நிறைந்த பகுதி ஆகும். இப்பகுதியில் ஆடுகள் மலைகளில் உள்ள மூலிகை இலைகளை தின்று வளர்வதால் இப்பகுதி ஆடுகள் நன்றாக இருக்கும் என வெளியூர் வியாபாரிகள் இங்கு வந்து ஆடுகளை வாங்கிச் செல்வது வழக்கம்.
இதனால் ஒவ்வொரு வாரமும் கூடுதலாக ஆடுகள் விற்பனையாகும். ரம்ஜான், பக்ரீத், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் அதிக அளவில் ஆடுகள் விற்பனையாகும்.
வழக்கம்போல் இந்த வருடம் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி இன்று நடந்த வார சந்தையில் ஆடுகள் விற்பனையானது. ஆனால் கடந்த காலங்களைப்போல் ஆடுகள் அமோகமாக விற்பனையாகவில்லை மந்தமாகவே இருந்தது. தேர்தல் நேரம் என்பதால் பறக்கும் படைக்கு பயந்து வியாபாரிகள் பணத்தை எடுத்து வருவது ஒரு பிரச்சனை மற்றும் ஆடுகளின் விலை எப்போதுமே இங்கு கூடுதலாக இருக்கும். இதனால் இப்போது இந்த வார சந்தையில் வியாபாரிகள் வரத்து குறைவாகவே இருந்தது. இதனால் ரூ.2 கோடி அளவுக்கு ஆடுகள் விற்பனையாகியது என வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.






