என் மலர்tooltip icon

    வேலூர்

    காட்பாடியில் வாலிபர் காரில் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வேலூர்:

    காட்பாடி காந்திநகரை சேர்ந்தவர் ரமேஷ். வேலூரில் உள்ள லாரி சர்வீஸ் சென்டரில் மேலாளராக வேலைபார்த்து வருகிறார். இவரது மகன் டிஜோ ரமேஷ் (வயது 29). ஊட்டியில் விசுவல் கம்யூனிகே‌ஷன் படித்து முடித்தார்.

    வீட்டில் இருந்தபடி வேலை தேடி வருகிறார். நேற்று இரவு 9 மணிக்கு கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றார். அப்போது காரில் வந்த கும்பல் டிஜோ ரமேசை தூக்கி காரில் உள்ளே போட்டு கடத்தி சென்றனர்.

    இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் கூச்சலிட்டனர். அதற்குள் கார் வேலூர் நோக்கி வேகமாக சென்று விட்டது. டிஜோ ரமேஷின் பெற்றோர் பதறியபடி விருதம்பட்டு போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    மேலும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மூலம் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். அனைத்து சாலைகளிலும் போலீசார் வாகன சோதனை நடத்தினர். டிஜோ ரமேஷின் செல்போனை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

    இதற்கிடையே வாலிபர் டிஜோ ரமேஷ் மற்றொரு செல்போனில் இருந்து அவரது பெற்றோரிடம் பேசியுள்ளார். அப்போது என்னை தேட வேண்டாம் எனக் கூறிவிட்டு போனை துண்டித்ததாக கூறப்படுகிறது.

    அந்த செல்போன் எண் மூலம் போலீசார் விசாரணையை தொடங்கினர். இந்த நிலையில் கடத்தல் கும்பல் வேலூர் கொணவட்டம் பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நகராஜன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் கொணவட்டத்தில் குவிக்கப்பட்டனர். நள்ளிரவு 12 மணி முதல் கொணவட்டம், சேண்பாக்கம் பகுதியில் தெரு தெருவாக சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் சதுப்பேரி ஏரிக்கரை பகுதியிலும் தேடுதல் வேட்டை நடந்தது.

    அதிகாலையில் கடத்தல் கும்பல் கருகம்புத்தூர் பகுதியில் பதுங்கியிருந்ததை செல்போன் மூலம் போலீசார் கண்டு பிடித்தனர். போலீசார் அங்கு சென்று விசாரித்தனர்.

    அதற்குள் கும்பல் தலைமறைவாகி விட்டனர். இன்று காலை காட்பாடி, விருதம்பட்டு பகுதியில் போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

    வாலிபரை எதற்காக யார் கடத்தி சென்றார்கள் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை.

    வாலிபர் கடத்தல் சம்பவத்தில் காட்பாடி, விருதம்பட்டு ரவுடி கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    இதனையடுத்து ரவுடி கும்பலை சேர்ந்த 7 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் காட்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் போலீசார் பறிமுதல் செய்த வாகனங்களை வருகிற 21-ந் தேதி பொது ஏலத்தில் விடுகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அரசுக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவ்வாகனங்கள் உடைக்க தகுதியுள்ள நிலையில் உள்ளன. இந்த வாகனங்கள் வருகிற 21-ந் தேதி காலை 9 மணி முதல் வேலூர் நேதாஜி மைதானத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது.

    வாகனத்தை ஏலம் எடுக்க பார்வையிடுவோர் ரூ.50 நுழைவு கட்டணம் செலுத்தியபின் ஏலம் கேட்க அனுமதிக்கப்படுவர். ஏலத்தொகையுடன் 28 சதவீதம் விற்பனை வரியும் சேர்த்து செலுத்த வேண்டும். இதற்கு உண்டான இரசீது வழங்கப்படும். ஏலம் எடுத்த வாகனத்திற்குண்டான ரசீதே அவ்வாகனத்தின் உரிமை ஆவணமாகும்.

    விபரங்களுக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, மதுவிலக்கு அமல்பிரிவு, வேலூர் அலுவலகத்தில் நேரடியாகவோ, தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.
    வேலூரில் சுதந்திர தினத்தன்று தேசியகொடியை தலைகீழாக ஏற்றியது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு வாணியம்பாடி டி.எஸ்.பி.க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள திம்மாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் நேற்று சுதந்திரதினவிழா கொண்டாடப்பட்டது. போலீசார் தலைகீழாக தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கினர்.

    இதனை பார்த்த பொதுமக்கள் தலைகீழாக பறந்த தேசிய கொடியை படம் பிடித்து வாட்ஸ்-அப், பேஸ்புக்கில் பரவவிட்டனர். சில மணி நேரத்தில் இந்த படம் வைரலாக பரவியது. இதனையறிந்த போலீசார் தலைகீழாக பறந்த தேசிய கொடியை கீழே இறக்கி மீண்டும் சரியாக ஏற்றி வைத்தனர்.

    இந்த சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    தேசியகொடி தலைகீழாக ஏற்றியது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு பர்வேஸ்குமார் வாணியம்பாடி டி.எஸ்.பி. முரளிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். அதில் உரிய விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
    வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் இன்று ஒரே நாளில் 2 காதல் ஜோடிகள் தஞ்சமடைந்தனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே உள்ள பச்சூர் கவுண்டர் வட்டம் பகுதியை சேர்ந்தவர் மயில்வாணன். இவருடைய மகள் ஜெயஸ்ரீ (வயது 20). இவர் கிருஷ்ணகிரியில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி. இறுதியாண்டு படிக்கிறார். ஜெயஸ்ரீயும் வாணியம்பாடி பழைய பேட்டை பகுதியை சேர்ந்த மகேந்திரன் மகன் மயில்வாணன் (22) என்கிற வாலிபரும் 2 ஆண்டுகளாக காதலித்தனர்.

    மயில்வாணன், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டில் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜெயஸ்ரீக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஏற்பாடு செய்தனர்.

    இதையடுத்து, ஒடிசாவில் இருந்து சொந்த ஊருக்கு வந்த மயில்வாணன் காதலி ஜெயஸ்ரீயை எதிர்ப்பை மீறி கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஐகொந்தம் கொத்தப் பள்ளி கிராமத்தில் உள்ள ஸ்ரீனிவாச பெருமாள் சாமி கோவிலுக்கு அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டார்.

    இதையடுத்து, பாதுகாப்பு கேட்டு மயில்வாணன் தனது காதல் மனைவி ஜெயஸ்ரீயுடன் வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் இன்று தஞ்சமடைந்தார்.

    குடியாத்தம் அடுத்த கே.வி.குப்பம் சந்தைமேடு பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (21). இவர், ஜம்மு-காஷ்மீரில் கடந்த 2 ஆண்டுகளாக ராணு வீரராக பணியாற்றி வருகிறார். சதீஷூம், அதே பகுதியை சேர்ந்த ஜோதிகா (18) என்ற இளம்பெண்ணும் காதலித்தனர்.

    ஜோதிகா, குடியாத்தத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. கணினி அறிவியல் பட்டப்படிப்பு 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர்களும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டு தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    இதையடுத்து, விடுமுறை எடுத்து கொண்டு ஊருக்கு வந்த ராணுவ வீரர் சதீஷ், ஜோதிகாவை வெளியே அழைத்துச் சென்று வேலூர் அருகே அரியூரில் உள்ள மாரியம்மன் கோவிலில் வைத்து இந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார்.

    பிறகு, பாதுகாப்பு கேட்டு வேலூர் எஸ்.பி. அலுவல கத்தில் தஞ்சமடைந்தனர்.

    போலீசார், 2 காதல் ஜோடிகளிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று ஒரே நாளில் ஒரே நேரத்தில் 2 காதல் ஜோடிகள் தஞ்சமடைந்ததால் எஸ்.பி. அலுவலகத்தில் பரபரப்பு காணப்பட்டது.
    வாணியம்பாடி அருகே ஓடும் பஸ்சின் கண்ணாடி உடைந்து டிரைவர் உள்பட 10 பேர் காயமடைந்தனர்.
    வாணியம்பாடி:

    ஓசூரில் இருந்து சென்னை நோக்கி அரசு பஸ் இன்று காலை பயணிகளுடன் புறப்பட்டது. பஸ்சினை கிருஷ்ணகிரியை சேர்ந்த முரளி வேந்தன் (வயது 40) டிரைவர் ஓட்டி வந்தார்.

    வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் செட்டியப்பனூர் கூட்ரோடு அருகே பஸ் வந்து கொண்டிருந்த போது திடீரென பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து தூள்தூளாக சிதறியது.

    இதில் பஸ் டிரைவர் முரளி வேந்தன் படுகாயமடைந்தார். பயணிகள் 10 பேர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து தகவலறிந்த வாணியம்பாடி தாலுகா போலீசார் காயமடைந் தவர்களை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊசூர் அருகே போதையில் தகராறு செய்த வாலிபர் வெட்டிக்கொலை செய்யபட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    வேலூர்:

    வேலூர் அடுத்த ஊசூர் அருகே உள்ள வீசுவெட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மகன்கள் செந்தில் (வயது 29), ராஜேஷ்(24) கூலி தொழிலாளிகள்.

    ராஜேசுக்கு குடிபழக்கம் இருந்தது நேற்று மாலை மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்துள்ளார். இதனை செந்தில் தட்டிக்கேட்டார். இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செந்தில் கத்தியால் ராஜேசை வெட்டினார். வயிறு, கழுத்தில் வெட்டுக்காயமடைந்த ராஜேஷ் தரையில் சாய்ந்தார்.

    அரியூர் போலீசார் அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ராஜேஷ் இறந்தார்.

    அரியூர் போலீசார் இது தொடர்பாக வழக்குபதிவு செய்து செந்திலை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    வேறொரு பெண்ணுடன் கணவன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் காதல் திருமணம் செய்த கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    வேலூர்:

    காட்பாடி விருதம்பட்டு தண்டல கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் விஜயன். இவரது மகள் உதயலட்சுமி (வயது 18). இவரும், காட்பாடி அடுத்த திருவலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகே உள்ள சமத்துவபுரத்தை சேர்ந்த வெங்கடேசன் மகன் மணி என்கிற மணிகண்டன் (22) என்பவரும் காதலித்தனர்.

    பெண் வீட்டார் சம்மதம் இல்லாமல் திருமண வயதை எட்டாத உதயலட்சுமியை கடந்த ஆண்டு மணிகண்டன் வீட்டை விட்டு வெளியே அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டார். பிறகு, திருவலத்திலேயே காதல் மனைவியுடன் குடும்பம் நடத்தினார்.

    இந்நிலையில் உதயலட்சுமி 3 மாதம் கர்ப்பமடைந்தார். இதனிடையே, வேறொரு இளம்பெண்ணுடன் மணிகண்டனுக்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக்காதலியுடன் தினமும் போனில் பேசி கொஞ்சி மகிழ்ந்தார்.

    மணிகண்டன் போனுக்கு கள்ளக்காதலியிடம் இருந்து அழைப்பு வரும்போது, உதய லட்சுமி திடீரென எடுத்து விட்டால், அவரிடம் கள்ளக் காதலி பேசுவதில்லை. இதனால், காதல் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. ஆனாலும், கள்ளக்காதலை துண்டிக்காமல் மணிகண்டன் மனைவி முன்பே போனில் கள்ளக்காதலியிடம் பேச ஆரம்பித்தார்.

    இதனால் மனமுடைந்த கர்ப்பிணி உதயலட்சுமி நேற்று மாலை வீட்டில் தூக்குப் போட்ட தற்கொலை செய்து கொண்டார். திருவலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் குறித்து, உதயலட்சுமியின் தந்தை விஜயன் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து, மணிகண்டனை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதல் தகராறில் கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்குத்தண்டனை கொடுக்க வேண்டும் என்று மகளிர் சங்க தலைவி கூறியுள்ளார்.
    சித்தூர்:

    பெண்கள், குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் கொடுமையை கண்டித்து சித்தூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மகளிர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், பெண்கள் மீது நடத்தப்படும் தாக்குதல், பலாத்காரம், குழந்தைகள் பலாத்காரம், மாணவிகளை சில்மி‌ஷம் செய்தல் ஆகியவற்றை கண்டித்துக் கோ‌ஷம் எழுப்பினர்.

    மாவட்ட மகளிர் சங்க தலைவி ஜெயலட்சுமி பேசியதாவது:-

    ஆந்திர மாநிலத்தில் அதிகளவு பெண்கள், குழந்தைகள் மீது பாலியல் பலாத்காரம் நடக்கிறது. அதன் மீது மத்திய மாநில அரசுகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை. குழந்தைகளிடம் பலாத்காரம் முயற்சியில் ஈடுபட்டால், அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படும் என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சட்டம் நிறைவேற்றுவதாக தெரிவித்துள்ளார்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பீளேரைச் சேர்ந்த டாக்டர் ஷில்பா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு முக்கிய காரணம் திருப்பதியில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் வேலை பார்க்கும் பேராசிரியர்களின் துன்புறுத்தல் தான். அதேபோல் திருப்பதியைச் சேர்ந்த அதே மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

    இந்தியா முழுவதும் ஒரு நிமிடத்துக்கு 2 பெண்களை பலாத்காரம் செய்யப்படுவதாக கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் ஒரு நிமிடத்தில் 100 பேரை பலாத்காரம் செய்வார்கள். சிறுமிகளை அதிகளவு முதியோர்களே பலாத்காரம் செய்கிறார்கள். அவ்வாறு பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்பு அளிக்க வேண்டும்.

    அவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிப்பதன் மூலம் நாட்டில் பலாத்கார செயல்கள் குறையும். அரசு அலுவலகங்களிலும், தனியார் நிறுவனங்களிலும் ஏராளமான பெண்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அங்கு, பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களால் பெண்களுக்கு அதிகளவு துன்புறுத்தல் சம்பவங்கள் நடக்கின்றன. இதனால் பல பெண்கள் பெற்றோருக்குத் தெரிவிக்காமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

    குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தெரிவித்தால் மோதல் ஏற்படும் எனக் கருதி பல பெண்கள் வெளியில் சொல்லாமல் உள்ளுக்குள்ளேயே அவதிப்பட்டு வருகிறார்கள். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும். பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கெனக் காவல் உதவி மையம் அமைக்க வேண்டும்.

    பஸ், ரெயில் நிலையங்களில் போலீசாரை கூடுதல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும். மாணவிகளை யாராவது கேலி, கிண்டல் செய்தால் அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் தான் பெண்களுக்கும், பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கும் பாதுகாப்புக் கிடைக்கும். அதை மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    வேலூரில் இன்று நடந்த கோவில் திருவிழாவில் சாமி தேர் டிரான்ஸ்பார்மரில் உரசியதால் மின்சாரம் தாக்கி முதியவர் இறந்தார். 5 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் கொசப்பேட்டை சுந்தரேஸ்வரர் கோவில் தெருவில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 2 நாட்களாக வெகு விமரிசையாக நடந்தது.

    இன்று காலை சாமி ஊர்வலத்திற்கான ஏற்பாடுகள் செய்தனர். அலங்கரிக்கப்பட்ட சிறிய தேரில் அம்மன் திருவீதி உலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சுந்தரேஸ்வரர் கோவில் தெருவில் உள்ள டிரான்ஸ்பார்மர் அருகே வந்த போது தேர் டிரான்ஸ்பார்மரில் உரசியது. இதனால் தேரில் மின்சாரம் பாய்ந்தது. தீப்பொறியுடன் புகை மண்டலம் எழுந்தது.

    பக்தர்கள் அங்கும் இங்குமாக ஓடினர். தேரை அருகில் இருந்து பிடித்து கொண்டிருந்த தயாளன் (வயது 67). என்பவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் இறந்தார். சீனிவாசன், பரசுராமன், சதீஷ்குமார், முருகன், சுந்தர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    அவர்களது உறவினர்கள் சம்பவ இடத்தில் நின்று அழுதபடி கூச்சலிட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.சீனிவாசன் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    தெற்கு போலீசார் பலியான தயாளன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விழாக்கோலம் பூண்டிருந்த அப்பகுதி இந்த சம்பவத்தால் சோகத்தில் மூழ்கியது.

    மின் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் 20 ரூபாய் டோக்கன் சிஸ்டம் எடுபடாது என அமைச்சர் உதயகுமார் கூறினார். #thiruparankundramelection
    ஆரணி:

    ஆரணி அடுத்த சேவூரில், தமிழக அரசு சாதனைகளை விளக்கும் சைக்கிள் பேரணி வரும் 17-ந் தேதி நடக்கிறது. இதற்கான விளக்க கூட்டம் சேவூரில் நேற்றிரவு நடந்தது. வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் அறநிலைத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

    இதில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது:- 

    ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைப்பதற்கு எதிராக வழக்கிற்கு மேல் வழக்குகளை போட்டனர். தற்போது கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கேட்டு வலியுறுத்தினர். அதற்கு, நிறைய வழக்குகள் உள்ளது எனக்கூறி முதல்-அமைச்சர் இடம் தரமறுத்தார்.
    மறுநாள் காலையில் ஜெயலலிதா நினைவிடத்திற்கு எதிரான அத்தனை வழக்குகளையும் வாபஸ் பெற்று விட்டனர். இதில் இருந்து வழக்குகளை போட்டவர்களை பின்னால் இருந்து இயக்கியது தி.மு.க. தான் என தெரிகிறது. இனி ஜெயலலிதா நினைவிடம் அமைக்க எந்த தடையும் இல்லை என்றார்.

    இதைத்தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் வாக்காளர்களிடம் 20 ரூபாய் டோக்கன் சிஸ்டம் எடுபடாது. தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி சிஸ்டம் தான் வெற்றிபெறும் என்றார்.  #thiruparankundramelection
    அரக்கோணத்தில் நேற்று இரவு சாமி ஊர்வலத்தில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    அரக்கோணம்:

    அரக்கோணம் டவுன் எம்.ஆர். கண்டிகையில் நேற்று அம்மன் கோவில் திருவிழா நடந்தது. இரவு சாமி வீதி உலா நடந்தது. அங்குள்ள அப்பகுதி இளைஞர்கள் முன்னாள் ஆடிக்கொண்டு சென்றனர். அப்போது அவர்களுக்குள் திடீரென மோதல் ஏற்பட்டது.

    கட்டை, அரிவாளால் தாக்கி கொண்டனர். இதில் மணிவண்ணன் (வயது 22), லோகேஷ்குமார் (34), சம்பத் (43), பாலு (44) ஆகியோருக்கு அரிவால் வெட்டு விழுந்தது.

    படுகாயமடைந்த அவர்களை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றபட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கபடுகிறது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து எம்.ஆர். கண்டிகையில் போலீசார் குவிக்கபட்டனர். 4 பேரை வெட்டியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பதட்டம் நிலவுகிறது.
    திருப்பதியில் காதல் தோல்வியால் மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருப்பதி:

    திருப்பதி சிவஜோதி நகரை சேர்ந்தவர் கீதிகா (வயது19). திருப்பதி வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்நிலையில் கல்லூரி மாணவி கீதிகா நேற்று மாலை வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். திருப்பதி போலீசார் மாணவியின உடலை மீட்டு திருப்பதி ரூயா மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சித்தூர் கலெக்டர் பிரதியும்னா கூடுதல் இணை கலெக்டர் சந்திரமவுலி ஆகியோர் ரூயா ஆஸ்பத்திரிக்கு வந்து மாணவியின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    தற்கொலை செய்த கல்லூரி மாணவியும், வங்கியில் பணிபுரியும் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். வங்கி ஊழியர் ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து மாணவியை காதலித்து வந்துள்ளார். இது மாணவிக்கு தெரிய வரவே மாணவி விரக்தியில் இருந்துள்ளார். இதனால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவியின் தற்கொலைக்கும் கல்லூரி நிர்வாகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார்.

    இதே கல்லூரியில் எம்.டி. படித்து வந்த டாக்டர் ஷில்பா என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து விசாரணையே தொடங்கவில்லை. இந்நிலையில் மற்றொரு மாணவி தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×