என் மலர்
வேலூர்
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூரில், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் தோல் பதனிடுவதற்கான தமிழக அரசின் டால்கோ தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. நஷ்டம் காரணமாக இந்த தொழிற்சாலை பல ஆண்டுகளுக்கு முன்பே மூடப்பட்டுவிட்டது.
இந்த தொழிற்சாலைக்கு அருகே உள்ள விநாயகர் கோவில் வளாகத்தில், இன்று காலை 5 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவனின் பிணம் அடித்துக்கொல்லப்பட்ட நிலையில் போர்வையில் சுற்றி வீசப்பட்டு கிடந்தது. அந்த வழியாக சென்றவர்கள் சிறுவன் உடலை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதுப்பற்றி உடனடியாக ஆம்பூர் தாலுகா போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவனின் உடலை பார்வையிட்டனர். சிறுவன் யார்? எந்த ஊரை சேர்ந்தவன்? என்பது தெரியவில்லை.

சிறுவன் சில நாட்கள் அடித்து துன்புறுத்தப்பட்டதைபோல் தெரிகிறது. ஏனெனில், சிறுவன் உடல் மிகவும் நெளிந்து காணப்படுகிறது. துன்புறுத்தப்பட்டதற்கான ரத்தக்காயங்களும் சிறுவன் உடலில் உள்ளன.
கொடூர தாக்குதலில் கொல்லப்பட்ட சிறுவனின் உடலை எங்கு வீசுவது என்று தெரியாமல் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள கோவில் வளாகத்தில் வீசி சென்றுவிட்டு மர்மநபர்கள் தப்பியுள்ளனர்.
இந்த பகுதி சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ் சாலைக்கு இடைப்பட்ட பகுதி என்பதால் நள்ளிரவில் யார் வருகிறார்கள் என்பதை கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதையடுத்து, சிறுவனின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்குப்பதிந்து, நாட்டறம்பள்ளி டோல்கேட், பள்ளிகொண்டா மற்றும் வாலாஜாபேட்டை டோல்கேட்டுகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை சந்தேகப்படும்படியான வெளியூர் பதிவெண் கொண்ட கார்களை கண்டறிந்து, அவர்கள் யார்? என விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மேலும் மோப்ப நாயை கொண்டும், தடயவியல் நிபுணர்களை கொண்டும் சிறுவனை கொன்று வீசி சென்ற கொலையாளிகளின் அடையாளங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். அருகேயுள்ள குடியிருப்புவாசிகளிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் ஆம்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர்:
வேலூர் தோட்டபாளையம் சோளாபுரி அம்மன் கோவில் பகுதியில் சுமார் 35 வயதுடைய வாலிபர் ஒருவர் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்தார்.
இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அவர் மீது சந்தேகம் அடைந்தனர். அவரை பிடித்து யார்? என்று விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அந்த நபர் சரியாக பதில் கூறவில்லை. அவர் வடமாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவரிடம் சில இரும்பு கம்பி துண்டுகள் இருந்தன. பூட்டிய வீடுகளின் பூட்டை திறக்க இவற்றை பயன்படுத்த வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு ஏற்பட்டது.
சரியாக பதில் கூறாததால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் அவரை சரமாரியாக தாக்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘பிடிபட்ட நபர் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் சென்று வரவே திருட்டு முயற்சியில் ஈடுபடலாம் என்ற சந்தேகத்தின்பேரில் நாங்கள் பிடித்தோம். உடனே போலீசாருக்கும் தகவல் அளித்தோம். ஆனால் உடனடியாக போலீசார் வரவில்லை. அவர்கள் 1 மணி நேரத்திற்கு பின்னர் தான் வந்தனர். பிடிபட்ட நபர் முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார். நாங்கள் தமிழில் பேசுவது அவனுக்கு புரிகிறது. ஆனால் புரியாதது போல நடிக்கிறார். பல இடங்களில் இதேபோன்று அடி வாங்கி உள்ளதாக எங்களுக்கு தெரியவந்துள்ளது. ஏற்கனவே வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் அடிக்கடி வந்து செல்கின்றனர்.
எனவே எங்கள் பகுதியில் போலீசார் இரவு ரோந்தை தீவிரப்படுத்த வேண்டும்’’ என்றனர்.
வாலாஜா:
பாணாவரம் அடுத்த புதுபட்டு கொன்னப் பந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 30). அதே பகுதியை சேர்ந்த சிதம்பரம் (30) மற்றும் வாலாஜா காமராஜ் நகரை சேர்ந்த குமார் (50) ஆகிய 3 பேரும் கூலி வேலைக்காக வாலாஜா நோக்கி இன்று காலை பைக்கில் சென்றனர்.
அப்போது எதிரே வந்து திருவண்ணாமலை மாவட்டம் வல்லம் பகுதியை சேர்ந்த முரளி (24). இவர் தனது நண்பர் சிவராஜன் (23) என்பவருடன் பைக்கில் வாலாஜாவிற்கு வந்து கொண்டிருந்தார். அம்மனஞ்சேரி என்ற இடத்தில் வந்த போது 2 பைக்கும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
இதில் வெங்கடேசன், குமார் மற்றும் சிவராஜன் ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயத்துடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். சிதம்பரம், முரளி படுகாயமடைந்தனர்.
வாலாஜா போலீசார் பலியான 3 பேரின் உடல்களை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயமடைந்த முரளியை வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியிலும், சிதம்பரத்தை வேலூர் தனியார் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குடியாத்தம் காமராஜர் பாலம் அருகே எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகள் உள்ளது. இதன் அருகே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டது.
அதில் அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் தினகரன் கொடி ஏற்றுவதாக இருந்தது. அந்த கொடிக்கம்பம் அமைக்கப்பட்டதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அனுமதியின்றி அமைக்கப்பட்டதால் அதிகாரிகள் அந்த கொடிக்கம்பத்தை அகற்றினர்.
இந்த நிலையில் நேற்று இரவு தினகரன் குடியாத்தம் வழியாக சென்றார். அவர் கொடி ஏற்றுவதற்காக எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலை அருகே கட்சியின் நகர செயலாளர் நித்யானந்தம் தலைமையில் நிர்வாகிகள் அவசர அவசரமாக கொடிக் கம்பம் அமைத்தனர். அதற்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து திடீரென அ.தி.மு.க.வினர் கொடிக்கம்பத்தை அகற்றக்கோரி மறியலில் ஈடுபட்டனர். அதேவேளையில் தினகரன் வந்த வாகனம் வந்தது.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று காலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில், ஜாலியன் வாலாபாக் படுகொலையை போல் பொதுமக்களை சுட்டுக்கொன்ற விவகாரத்திலேயே எடப்பாடி ஆட்சியை தக்க வைத்துக்கொண்டார். இந்த நிலையில் திருச்சி முக்கொம்பு அணை மதகுகள் உடைந்த சம்பவத்தில்போய் ஆட்சியில் இருந்து எடப்பாடி விலகுவார் என்பதை எதிர்பார்ப்பது வேடிக்கையாக உள்ளது.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கவழக்கில் தீர்ப்புக்கு பிறகு ஆட்சி கலைந்து எடப்பாடி மற்றும் அமைச்சர்கள் தங்கள் வீட்டிற்கு செல்வார்கள். ஒட்டன்சத்திரம்-தாராபுரம், அவினாசி சாலை போடும் திட்டத்தில் எடப்பாடியின் உறவினர் ராமலிங்கத்திற்கு டெண்டர் விட்டது குறித்து என்னுடைய எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேல் உள்ளிட்ட 2 பேர் 1½ ஆண்டிற்கு முன்பே சட்டசபையில் பேசினர்.

குருமூர்த்தி கூறியதால் தான் பதவி ஏற்றேன் என ஓ.பன்னீர்செல்வமே கூறினார். இந்த நிலையில் அவர் பதவிக்காக நடிக்கிறார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஆட்சி தமிழகத்தில் விரைவில் மலரும்.
இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #OPanneerSelvam #ADMK
வேலூர்:
வேலூர் பகுதிக்குட்பட்ட சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் லிப்ட் கேட்பதுபோல் இரவு முதல் விடியற்காலை வரை கொள்ளை கும்பல் வழிப்பறி கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
குறிப்பாக வேலூரில் இருந்து பள்ளிகொண்டா டோல்கேட் இடைப்பட்ட பகுதியில் வாகன ஓட்டிகளை மறித்து செல்போன், நகை, பணம் உள்பட உடமைகளை பறிக்கின்றனர். வழிப்பறியின் போது, வாகன ஓட்டிகளை தாக்குகின்றனர்.
2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் பெங்களூருவில் இருந்து தோல் மூலப்பொருள் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரியை, வேலூர் அடுத்த பொய்கை தேசிய நெடுஞ்சாலையில் 3 பேர் கும்பல் வழிமறித்தனர்.
லாரி டிரைவரை தாக்கி அங்கேயே கட்டிப்போட்டு விட்டு லாரியை கடத்திச் சென்றனர். இதுகுறித்து, விரிஞ்சிபுரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு காட்பாடி பகுதியில் அந்த லாரியை மீட்கப்பட்டது.
லாரியை விட்டுவிட்டு கடத்தல் கும்பல் தப்பிஓடி விட்டனர். இதுபோன்ற தொடர் சம்பவங்களால் வேலூர் மார்க்கமாக வந்து செல்லும் லாரி உள்ளிட்ட வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். அட்டூழியத்தில் ஈடுபட்டு வரும் கும்பலை பிடித்து கடும் நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
வேலூர்:
ஆற்காட்டை அடுத்த கலவையை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மனைவி முத்துலட்சுமி (வயது 23). இவருக்கு, 2015-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கு தொடர்பாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் கடந்த 10-ந்தேதி வேலூர் மத்திய பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு நேற்று முன்தினம் இரவு திடீரெனப் பிரசவ வலி ஏற்பட்டது.
பிரசவ வலியால் துடித்த அவரை, சிறை மருத்துவர்கள் பரிசோதனை செய்து, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்க பரிந்துரை செய்தனர். அதன்பேரில் முத்துலட்சுமி சிகிச்சைக்காக அடுக்கம்பாறையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு டாக்டர்கள் சோதனை செய்தனர்.
இதில் முத்துலட்சுமிக்கு சாதாரண வயிற்று வலிதான் பிரசவ தேதி இன்னும் ஒரு மாதம் உள்ளதால். அவரை சாதாரணவார்டுக்கு மாற்றியுள்ளோம். முத்துலட்சுமிக்கு ஏற்கனவே பிறந்த 2 குழந்தைகளும் அறுவை சிகிச்சை மூலமே நடந்துள்ளது.
எனவே 3-வது பிரசவமும் இன்னும் 2 வாரத்தில் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் செய்யப்படும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
வேலூர்:
திருவண்ணாமலையை சேர்ந்தவர் தினேஷ் (வயது 28), லாரி டிரைவர். இவர், சிங்கப்பூருக்கு அனுப்பப்பட இருந்த சரக்கு பொருட்களை பெங்களூருவில் இருந்து லாரியில் ஏற்றிக் கொண்டு சென்னை துறைமுகத்திற்கு நேற்றிரவு புறப்பட்டு வந்து கொண்டிருந்தார்.
பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு 1 மணியளவில் வேலூர் பள்ளிகொண்டா அருகே வந்தார். அப்போது டோல்கேட் பகுதியில் நின்று இருந்த மர்ம நபர்கள் 2 பேர் லாரிக்கு கை காட்டி லிப்ட் கேட்டனர். தினேசும் பரிதாபபட்டு லாரியை நிறுத்தி லிப்ட் கொடுத்தார்.
லாரி 100 மீட்டர் தூரம் வந்தபோது, திடீரென மர்ம நபர்கள் 2 பேரும் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து டிரைவரை மிரட்டினர். ஆள் நடமாட்டம் இல்லாத சாலை ஓர பகுதியில் கத்தி முனையில் லாரியை நிறுத்த செய்தனர். பிறகு, டிரைவர் தினேஷை லாரிக்குள் வைத்து கொடூரமாக 2 பேரும் மாறிமாறி தாக்கினர்.
இதில் பலத்தகாயமடைந்த டிரைவர் அலறி துடித்தார். டிரைவரிடம் இருந்த ரூ.30 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு மர்ம நபர்கள் லாரியில் இருந்து கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டனர்.
இதையடுத்து, ரத்தம் சொட்ட சொட்ட டிரைவர் தினேஷ், பள்ளி கொண்டா போலீஸ் நிலையத்திற்கு நடந்தே சென்றார். அவரை போலீசார் பார்த்ததும், அதிர்ச்சியடைந்தனர். சம்பவம் குறித்து டிரைவர் தெரிவித்தவுடன் போலீசார், அவரை மீட்டு குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு டிரைவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த சரக்கு லாரியை போலீசார் கைப்பற்றினர். லாரி உரிமை யாளருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. மேலும், வழக்குப்பதிவு செய்து லிப்ட் கேட்டு தாக்கி பணம் பறித்த மர்ம நபர்களை பிடிக்க தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஜோலார்பேட்டையை அடுத்த இடையம்பட்டியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் ஜோலார்பேட்டையில் ரெயில்வே தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மகாலட்சுமி (வயது 25). இவர் நேற்று முன்தினம் தனது குழந்தைகளுடன் சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார்.
அந்த ரெயில் சென்னை வந்ததும், மகாலட்சுமி தனது பணப்பையை பார்த்த போது மாயமாகி இருந்தது. அதனை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. அந்த பையில் 3½ பவுன் நகை, ரூ.3 ஆயிரம், ரேஷன் அட்டை உள்ளிட்ட 15 ஆவணங்களை மகாலட்சுமி வைத்திருந்தார்.
இதுகுறித்து மகாலட்சுமி ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
வேலூர்:
வேலூரில் வாணியம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையையொட்டி புத்தாடை அணிந்து கோலாகலமாக கொண்டாடினர்.
செட்டியப்பனூர், வளையாம்பட்டு, நேதாஜிநகர், ஜாப்ராபாத் ஆகிய ஈத்கா மைதானங்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகைநடத்தினர். பின்னர் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து பரிமாறிக் கொண்டனர்.
இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் சுமார் 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியார்கள் சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர். வாணியம்பாடி பெரியப்பேட்டை மசூதியில் இஸ்லாமியா பெண்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.
மெளலவி அப்துர் ரஹமான், முப்தி இக்பால், வாணியம்பாடி வாணிடெக் நிர்வாக இயக்குனர் படேல் முகமது யூசூப், தமிழக காங்கிரஸ சிறுபான்மை துறை மாநில தலைவர் ஜெ.அஸ்லம்பாஷா, உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதேபோல், திருவண்ணாமலை, ஆம்பூர், ஆலங்காயம், ஜாப்ராபாத், உதயேந்திரம் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடத்தினர்.
ஆண்டுதோறும் மலையாள மாதத்தின் முதல் 5 நாட்களில் அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படும். இதையொட்டி, அய்யப்பன் கோவிலுக்கு செல்வதற்காக இந்த ஆண்டும், வேலூர் மாவட்டம் உள்பட தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்தனர்.
இந்நிலையில் கேரளாவில் தொடர் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அய்யப்பன் கோவிலுக்குள் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. பம்பை ஆற்றிலும் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.இதனால் பக்தர்கள் சபரி மலைக்கு வர வேண்டாம் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
இதனால் தவித்த தமிழக பக்தர்கள், அந்தந்த பகுதி அய்யப்பன் கோவில்களில் இருமுடிக்கட்டி வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள அய்யப்பன் கோவில்களிலும், அந்தந்த பகுதி பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர்.
வேலூர், காட்பாடி மற்றும் ராணிப்பேட்டை, வாலாஜா ஆகிய பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள் இன்றுகாலை ராணிப்பேட்டை சிப்காட் சபரி நகரில் உள்ள ஸ்ரீநவ சபரி அய்யப்ப கோவிலில் இன்று காலை வேண்டுதலை செலுத்தினர்.
நெய் அபிஷேகம் செய்யலாம் என குருசாமி ஜெயச்சந்திரன் ஆலோசனை வழங்கினர். இதையடுத்து, அய்யப்ப பக்தர்கள் இரு முடியுடன் 18 படியேறி சாமி தரிசனம் செய்தனர். பிறகு மூலவருக்கு நெய் அபிஷேகம் செய்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி விரதத்தை முடித்தனர்.
இதற்காக கோவில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடு செய்திருந்தது. #AyyappaDevotees
ஆற்காடு சட்டமன்ற தொகுதி சார்பில் பாட்டாளி மக்கள் கட்சியின் 30-வது ஆண்டு தொடக்க விழா மற்றும் பொதுக்கூட்டம் ஆற்காடு பஸ் நிலையத்தில் நடந்தது. அப்போது ராமதாஸ் பேசியதாவது:-
ஆட்சியாளர்களுக்கு பணம் கொடுப்பது மணல் தான். பால் போல் ஓடும் ஆற்றை எப்போது பார்ப்பது. நாம் ஆட்சிக்கு வந்தால் தான் பார்க்கலாம். ஒரு கிலோ மணல் கூட எடுக்க விட மாட்டோம்.
பாலாற்றில் வெள்ளைக்காரன் காலத்தில் கட்டிய ஒரே ஒரு தடுப்பணை புதுப்பாடியில் தான் உள்ளது. பாலாற்றில் எப்போதும் தண்ணீர் செல்ல வேண்டும். விவசாயம் செழிக்க வேண்டும். தோல் கழிவுகளை பாலாற்றில் விட்டு பாழாக்கி விட்டனர். ஒரு சொட்டு சாராயம் கூட தமிழ்நாட்டில் இருக்கக் கூடாது. பெண்கள் வாழ்வில் வசந்தம் வீச வேண்டும். குடியை ஒழிக்க வேண்டும் என்பது எனது ஆசை. இப்போது நடைபெறுவது ஊழல் ஆட்சி. அன்புமணி முதல் அமைச்சராக வந்தால் தான் ஊழல் இல்லாத ஆட்சி இருக்கும். தமிழ்நாட்டிற்கு நிறைய திட்டங்கள் வைத்துள்ளார். வீட்டிற்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். ஒரு கோடி பேருக்கு வேலை வழங்க உள்ளார்.

இன்னும் கொஞ்சம் நாளில் தமிழ்நாடு திவாலாகும். ரூ.10 லட்சம் கோடி கடன் உள்ளது. ஒவ்வொரு தனி மனிதன் தலையிலும் ஒரு லட்சம் ரூபாய் கடன் உள்ளது. ஒரு நாளைக்கு ரூ.170 கோடி வட்டி கட்டுகின்றனர். இந்த அரசு தேவையா?, மாற்றம் வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். #PMK #Ramadoss #ADMK






