என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் அருகே லாரி டிரைவரை கொடூரமாக தாக்கி ரூ.30 ஆயிரம் பறிப்பு
    X

    வேலூர் அருகே லாரி டிரைவரை கொடூரமாக தாக்கி ரூ.30 ஆயிரம் பறிப்பு

    வேலூர் அருகே லாரியில் லிப்ட் கேட்டு ஏறிய மர்ம நபர்கள் 2 பேர், டிரைவரை கொடூரமாக தாக்கி விட்டு ரூ.30 ஆயிரத்தை பறித்து சென்றனர்.

    வேலூர்:

    திருவண்ணாமலையை சேர்ந்தவர் தினேஷ் (வயது 28), லாரி டிரைவர். இவர், சிங்கப்பூருக்கு அனுப்பப்பட இருந்த சரக்கு பொருட்களை பெங்களூருவில் இருந்து லாரியில் ஏற்றிக் கொண்டு சென்னை துறைமுகத்திற்கு நேற்றிரவு புறப்பட்டு வந்து கொண்டிருந்தார்.

    பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு 1 மணியளவில் வேலூர் பள்ளிகொண்டா அருகே வந்தார். அப்போது டோல்கேட் பகுதியில் நின்று இருந்த மர்ம நபர்கள் 2 பேர் லாரிக்கு கை காட்டி லிப்ட் கேட்டனர். தினேசும் பரிதாபபட்டு லாரியை நிறுத்தி லிப்ட் கொடுத்தார்.

    லாரி 100 மீட்டர் தூரம் வந்தபோது, திடீரென மர்ம நபர்கள் 2 பேரும் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து டிரைவரை மிரட்டினர். ஆள் நடமாட்டம் இல்லாத சாலை ஓர பகுதியில் கத்தி முனையில் லாரியை நிறுத்த செய்தனர். பிறகு, டிரைவர் தினேஷை லாரிக்குள் வைத்து கொடூரமாக 2 பேரும் மாறிமாறி தாக்கினர்.

    இதில் பலத்தகாயமடைந்த டிரைவர் அலறி துடித்தார். டிரைவரிடம் இருந்த ரூ.30 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு மர்ம நபர்கள் லாரியில் இருந்து கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டனர்.

    இதையடுத்து, ரத்தம் சொட்ட சொட்ட டிரைவர் தினேஷ், பள்ளி கொண்டா போலீஸ் நிலையத்திற்கு நடந்தே சென்றார். அவரை போலீசார் பார்த்ததும், அதிர்ச்சியடைந்தனர். சம்பவம் குறித்து டிரைவர் தெரிவித்தவுடன் போலீசார், அவரை மீட்டு குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு டிரைவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த சரக்கு லாரியை போலீசார் கைப்பற்றினர். லாரி உரிமை யாளருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. மேலும், வழக்குப்பதிவு செய்து லிப்ட் கேட்டு தாக்கி பணம் பறித்த மர்ம நபர்களை பிடிக்க தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

    Next Story
    ×