என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுவன் உடல் வீசப்பட்டிருந்த கோவில் வளாகம்
    X
    சிறுவன் உடல் வீசப்பட்டிருந்த கோவில் வளாகம்

    ஆம்பூரில் 5 வயது சிறுவன் அடித்துக்கொலை - கோவில் வளாகத்தில் பிணம் வீச்சு

    ஆம்பூர் அருகே 5 வயது சிறுவனை கொடூரமாக அடித்துக்கொன்று கோவில் வளாகத்தில் வீசிச்சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    ஆம்பூர்:

    வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூரில், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் தோல் பதனிடுவதற்கான தமிழக அரசின் டால்கோ தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. நஷ்டம் காரணமாக இந்த தொழிற்சாலை பல ஆண்டுகளுக்கு முன்பே மூடப்பட்டுவிட்டது.

    இந்த தொழிற்சாலைக்கு அருகே உள்ள விநாயகர் கோவில் வளாகத்தில், இன்று காலை 5 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவனின் பிணம் அடித்துக்கொல்லப்பட்ட நிலையில் போர்வையில் சுற்றி வீசப்பட்டு கிடந்தது. அந்த வழியாக சென்றவர்கள் சிறுவன் உடலை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    இதுப்பற்றி உடனடியாக ஆம்பூர் தாலுகா போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவனின் உடலை பார்வையிட்டனர். சிறுவன் யார்? எந்த ஊரை சேர்ந்தவன்? என்பது தெரியவில்லை.

    கொல்லப்பட்ட சிறுவன் வெளியூரை சேர்ந்தவனாக இருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது. மர்ம நபர்கள், பெற்றோரை மிரட்டி பணம் பறிப்பதற்காகவும் அல்லது கள்ளக்காதல் போன்ற வேறு விவகாரத்தில் சிறுவனை கடத்திச் சென்று கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.



    சிறுவன் சில நாட்கள் அடித்து துன்புறுத்தப்பட்டதைபோல் தெரிகிறது. ஏனெனில், சிறுவன் உடல் மிகவும் நெளிந்து காணப்படுகிறது. துன்புறுத்தப்பட்டதற்கான ரத்தக்காயங்களும் சிறுவன் உடலில் உள்ளன.

    கொடூர தாக்குதலில் கொல்லப்பட்ட சிறுவனின் உடலை எங்கு வீசுவது என்று தெரியாமல் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள கோவில் வளாகத்தில் வீசி சென்றுவிட்டு மர்மநபர்கள் தப்பியுள்ளனர்.

    இந்த பகுதி சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ் சாலைக்கு இடைப்பட்ட பகுதி என்பதால் நள்ளிரவில் யார் வருகிறார்கள் என்பதை கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதையடுத்து, சிறுவனின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்குப்பதிந்து, நாட்டறம்பள்ளி டோல்கேட், பள்ளிகொண்டா மற்றும் வாலாஜாபேட்டை டோல்கேட்டுகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

    நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை சந்தேகப்படும்படியான வெளியூர் பதிவெண் கொண்ட கார்களை கண்டறிந்து, அவர்கள் யார்? என விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    மேலும் மோப்ப நாயை கொண்டும், தடயவியல் நிபுணர்களை கொண்டும் சிறுவனை கொன்று வீசி சென்ற கொலையாளிகளின் அடையாளங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். அருகேயுள்ள குடியிருப்புவாசிகளிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவம் ஆம்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×