என் மலர்tooltip icon

    வேலூர்

    திருப்பத்தூரில் கணவர் வாங்கிய கடனை திருப்பி கேட்டதால் பெண் தற்கொலை செய்து கொண்டார். பெண் பிணத்தை யாரையும் தொட விடாமல் வளர்ப்பு நாய் பாதுகாத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    திருப்பத்தூர்:

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரத்தை சேர்ந்தவர் தனசேகர் (வயது 40). வாட்டர் கேன் சப்ளை செய்து வருகிறார். இவரது மனைவி ராதா (34). இவர்களுக்கு 1 மகனும், 1 மகளும் உள்ளனர்.

    தனசேகர் தொழில் காரணமாக பல இடங்களில் கடன் வாங்கி இருந்தார். அதை திருப்பி கொடுக்க முடியாமல் அவதிபட்டு வந்தார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு வந்தனர். இதனால் கடந்த 6 மாதத்திற்கு முன்பு தனசேகர் மனைவி மற்றும் பிள்ளைகளை விட்டு திடீரென தலைமறைவானார்.

    இதனால் கடன் கொடுத்தவர்கள் ராதவிடம் பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்தனர். நேற்று கடன் கொடுத்தவர்கள் மீண்டும் பணத்தை கேட்டு ராதாவிடம் நச்சரித்தனர். இதனால் மனவேதனை அடைந்த ராதா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

    இது குறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்க முயன்றனர். அப்போது ராதா பாசமாக வளர்த்த நாய் ராதாவின் உடலை எடுக்கவிடாமல் சடலத்தின் மீது படுத்து கண்ணீர் வடிந்தபடி போலீசாரை பார்த்து குரைத்தது.

    பின்னர் ஒரு வழியாக நாயை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தன்னை வளர்த்த எஜமானர் இறந்துவிட்டதை அறிந்த நாய் கண்ணீர்விட்டு அழுது யாரையும் பிணத்தை எடுக்கவிடாமல் செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நாங்கள் எதிர்பார்க்காத ஒன்று என்று கதிர் ஆனந்தின் தந்தையும், தி.மு.க.வின் பொருளாளருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
    வேலூர்:

    தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி 37 இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. ஒவ்வொரு தொகுதியிலும் ஓட்டு வித்தியாசம் லட்சக்கணக்கில் இருந்தது. இந்த சாதனை வெற்றிக்கு பின்னர் 3 மாதத்திற்கு பிறகு நடந்த வேலூர் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் ஒரு கடுமையான போரை எதிர்கொண்டு வெற்றி பெற்றுது போல், 8,141 ஒற்றைப்படை ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

    இந்த வெற்றிக்குறித்து அவரது தந்தையும், தி.மு.க.வின் பொருளாளருமான துரைமுருகன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    கேள்வி:- வேலூர் பாராளுமன்ற தொகுதியில் உங்கள் மகன் பெற்ற வெற்றியில் திருப்தியடைகிறீர்களா? இது எதிர்பார்த்த வழியில் இருந்ததா?

    பதில்:- நாங்கள் எப்போதும் வெற்றி பெறுவதில் உறுதியாக இருந்தோம். குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நாங்கள் எதிர்பார்க்காத ஒன்று.

    கேள்வி:- பொதுத்தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு பிறகு குறுகிய வெற்றி வித்தியாசத்திற்கு என்ன காரணம்?

    பதில்:- பொதுத்தேர்தலின் போது வாக்குப்பதிவு நடத்தப்பட்டிருந்தால் விளைவு வேறுபட்டிருக்கும்.

    இது கேரளாவில் அட்டுகலில் பொங்கலைக் கொண்டாடுவது போன்றது. எல்லோரும் திருவிழாவில் பங்கேற்கும்போதுதான் அது பண்டிகை தோற்றத்தை அளிக்கும்.

    ஒரு நபர் பொங்கலை வழங்கும்போது, ​​அந்த உணர்வு பொதுவான பொங்கலைப் போல மகிழ்ச்சியாக இருக்காது.

    மேலும், தொகுதியில் 30 அமைச்சர்கள் முகாமிட்டு, அதன் கீழ் வரும் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியும் 5 அமைச்சர்கள் மற்றும் 20 எம்.எல்.ஏ.க்களின் மேற்பார்வையில் கொண்டுவரப்பட்டது.

    மாதிரி நடத்தை விதிமுறை, அரசு அறிவிப்புகள் வெளியிடுவதைத் தடைசெய்தாலும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கே.வி.குப்பத்தில் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து அதை ஒரு தாலுகா தலைமையகமாக மாற்றுவதாக உறுதியளித்தார்.

    கே.வி.குப்பம் குடியாத்ததில் இருந்து 8 கி.மீ தூரத்திலும், காட்பாடியிலிருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ளது. குடியாத்தம் மற்றும் காட்பாடி ஆகிய 2 இடங்களிலும் தாலுகா அலுவலகங்கள் உள்ளன.

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    மேலும் முதலமைச்சர் மற்றொரு தாலுகாவை உருவாக்குவதாக உறுதியளித்தார்.

    ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியில், வேலூர் மாவட்டத்தை 2-ஆக பிரிப்பதாக அவர் உறுதியளித்தார்

    இந்த வாக்குறுதிகள் மாதிரி நடத்தை விதிகளை மீறும் வகையில் செய்யப்பட்டன. அவர்கள் தவறான வாக்குறுதிகளை அளித்து வாக்காளர்கள் மனதை குழப்பினர்.

    தி.மு.க. தவறான வாக்குறுதிகளை அளித்ததாக முதல்வர் குற்றம் சாட்டினார். உண்மையில், அவரும் அவரது அமைச்சர்களும் தான் தவறான வாக்குறுதிகளை அளித்தனர்.

    கேள்வி:- தி.மு.க.வின் வெற்றிக்கு முஸ்லிம்களின் வாக்குகள் பங்களித்தன என்று நீங்கள் நினைக்கிறீர்களா? வாக்குப்பதிவு நாளில் 370 வது பிரிவின் கீழ் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததும் காரணமா?

    பதில்:- பொதுத்தேர்தலில் கூட முஸ்லிம்கள் தி.மு.க.வுக்கு வாக்களித்தனர். எனவே காஷ்மீர் பிரச்சனைக்கும், தேர்தல் முடிவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இடைத்தேர்தல்களில் ஆம்பூர், குடியாத்தம் உட்பட 13 சட்டமன்ற இடங்களை நாங்கள் வென்றோம்.

    கேள்வி:- மாநிலத்தில் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளருக்கும், மத்திய அரசில் கூட்டணியாக இருக்கும் வேட்பாளருக்கும் வாக்களிப்பது தங்களுக்கு பயனளிக்கும் என்று வாக்காளர்கள் நம்பினார்களா?

    பதில்:- அமைச்சர்கள் ஒவ்வொரு கிராமமாக சென்று உள்ளூர் பகுதி மேம்பாட்டுக்கு வாக்குறுதிகள் அளித்தனர்.

    ஒரு பகுதியில், 8 நாட்களில் குடிநீர் தொட்டி கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்று அவர்கள் கூறினர். அமைச்சர்களால் அந்த வாக்குறுதி வழங்கப்பட்டதால் பொது மக்களிடையே நம்பகத்தன்மையை ஏற்படுத்தியது.

    கோர்ட்டில் வழக்கு இருந்தாலும் மேல்அரசம்பட்டில் அணை கட்டுவதாக அமைச்சர் ஒருவர் உறுதியளித்தார். ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு ஏற்ற திட்டங்கள் மற்றும் திட்டங்களை செயல்படுத்துவதாக உறுதியளித்ததன் மூலம் அவர்கள் வாக்காளர்களை ஏமாற்றினர்.

    கிராமங்களில் உள்ளவர்கள் பொதுவாக காஷ்மீர் போன்ற பிரச்சனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. உள்ளூர் பிரச்சனைகள் குறித்து அவர்கள் அதிக அக்கறை கொண்டுள்ளனர்.

    கேள்வி:- அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முதலியார் சமூகத்தின் வாக்குகளை ஒருங்கிணைப்பதில் வெற்றி பெற்றார் என்பது உண்மைதானா? அதே போல் வன்னியர்கள் கதிர்ஆனந்துக்கு முழுமையாக ஆதரவளிக்கவில்லையா?

    பதில்:- வாக்காளர்களை அவர்களின் சாதியின் அடிப்படையில் வேறுபடுத்த நான் விரும்பவில்லை. முதலியார்கள் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்திருந்தால், முதலியார்கள் அதிக மக்கள் தொகை கொண்ட வேலூர் சட்டமன்றத் தொகுதியில் நாங்கள் அதிக வாக்குகளை பெற்றிருக்க மாட்டோம். சுமார் 40,000 முதலியார்களைக் கொண்ட குடியாத்தத்தில் அவர் எதிர்பார்த்த ஓட்டு கிடைக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    நாட்டறம்பள்ளி அருகே விவசாய நிலத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த பெண்ணை பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    நாட்டறம்பள்ளி:

    நாட்டறம்பள்ளி அருகே உள்ள ஜங்கலாபுரத்தை சேர்ந்தவர் சிவா இவரது மனைவி செல்வி (வயது 38). இவர் இன்று காலை அவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.

    அப்போது ஒரு பாம்பு செல்வியை கடித்தது. வலியால் துடித்த அவர் மயங்கி கீழே விழுந்தார். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர். திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு செல்வி சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சுதந்திர தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டம் முழுவதும் 1,450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    வேலூர்:

    நாடு முழுவதும் வருகிற 15-ந் தேதி (வியாழக்கிழமை) சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி விமான நிலையம், ரெயில் நிலையம், முக்கிய கோவில்கள், சுற்றுலா தலங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    மேலும் அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த 5-ந்தேதி ஜம்மு- காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து திடீரென ரத்து செய்யப்பட்டது. அதன் எதிரொலியாக வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பணிக்காக வந்த 1,600 மத்திய துணை ராணுவப்படையினர் வேலூர் மாவட்டத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் இப்பணியில் வருகிற 31-ந் தேதி வரை ஈடுபட உள்ளனர்.

    சுதந்திர தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டம் முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாலசுப்பிரமணியன், விஜயகுமார் ஆகியோர் மேற்பார்வையில் 10 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட 1,450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    குறிப்பாக பொதுமக்கள் அதிகளவு வருகை தரும் வேலூர் கோட்டை, வழிபாட்டு தலங்களில் அசம்பாவிதங்களை தடுக்க போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    மேலும் காட்பாடி, அரக்கோணம், ஜோலார்பேட்டை உள்பட ரெயில் நிலையங்களிலும் பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்பட உள்ளன. இந்த பணிகளில் ரெயில்வே போலீசார் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் ஈடுபடுவார்கள்.

    மாநில எல்லையோர பகுதிகள் மற்றும் சோதனை சாவடிகளில் போலீசார் உஷார் நிலையில் இருக்கவும், ரோந்து பணியில் ஈடுபடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பணி வருகிற 13-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை தொடரும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ராணுவீரர் மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
    வேலூர்:

    வேலூர் அடுத்த கணியம்பாடி என்.எஸ்.கே. நகரை சேர்ந்தவர் மகேஷ் (வயது 30). ராணுவவீரர். இவரது மனைவி புவனேஸ்வரி கணியம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர்களுக்கு கடந்த 1 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. இன்று காலை இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்தனர். வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே வந்தபோது 2 பேருக்குமிடையே தகராறு ஏற்பட்டது.

    திடீரென அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. அவர்கள் இருவரும் சத்தமாக பேசிக்கொண்டனர்.

    அப்போது திடீரென ஆவேசம் அடைந்த மகேஷ் மோட்டர் சைக்கிளை நிறுத்திவிட்டு மேம்பால சுவற்றின் மீது ஏறி நின்று கீழே குதித்தார். அவர் கலெக்டர் அலுவலகம் ஒட்டி உள்ள பஸ் நிறுத்தம் அருகே வந்து தலைகீழாக விழுந்தார்.

    இதில் அவரது தலை இரண்டாக பிளந்து ரத்தம் கொட்டியது. துடிதுடித்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதனை கண்ட அவரது மனைவி புவனேஸ்வரி மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரது மனைவி மேம்பாலத்தில் நின்றபடி கதறி அழுதார். சாலையில் இருந்த வாகன ஓட்டிகள் அவரை அரவணைத்து சமாதானம் செய்தனர்.

    இதுபற்றி சத்துவாச்சாரி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராணுவ வீரர் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அவரது மனைவியை ஆட்டோவில் போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். வழியிலேயே அவர் மயக்கம் அடைந்தார். அவரை வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.

    மேலும் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சத்துவாச்சாரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    23 ஆண்டுக்கு பிறகு வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. நேரடியாக போட்டியிட்டு வெற்றி வாகை சூடியுள்ளது.
    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தொகுதியை 23 ஆண்டுகளுக்குப் பிறகு தி.மு.க. கைப்பற்றியுள்ளது.

    1951-52ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை 16 முறை பாராளுமன்ற தேர்தலைச் சந்தித்த வேலூர் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் 5 முறையும், அ.தி.மு.க. 2 முறையும், ஜனதா கட்சி 2 முறையும், அ.தி.மு.க., தி.மு.க. அணிகளில் இடம்பெற்ற பா.ம.க. 2 முறையும், தி.மு.க. 3 முறையும், திமுக, காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன. முதல் 2 தேர்தல்களில் இரட்டை உறுப்பினர் முறையில் தேர்தல் நடைபெற்றது.

    1951-ல் நடந்த முதல் தேர்தலில் ராமசந்தர் (சி.டபுள்யூ.எல்) எம்.முத்துகிருட்டிணன் (காங்கிரஸ்) ஆகியோரும், 1957-ல் எம்.முத்துகிருட்டிணன், என்.ஆர்.முனிசாமி (காங்கிரஸ்) ஆகியோரும் வெற்றி பெற்றனர். 1962-ல் அப்துல் வாகித் (காங்கிரஸ்), 1967-ல் குசேலர் (தி.மு.க.), 1971-ல் ஆர்.பி.உலகநம்பி (தி.மு.க.), 1977- ல் வி.தண்டாயுதபாணி (ஜனதா), 1980-ல் ஏ.கே.ஏ.அப்துல் சமது (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), 1984-ல் ஏ.சி.சண்முகம் (அ.தி.மு.க.), 1989ம் ஆண்டு ஏ.கே.ஏ.அப்துல் சமது (காங்கிரஸ்), 1991இல் பி.அக்பர் பாட்சா (காங்கிரஸ்), 1996ம் ஆண்டு பி.சண்முகம் (தி.மு.க.), 1998-ல் என்.டி.சண்முகம் (பா.ம.க.), 1999இல் என்.டி.சண்முகம் (பா.ம.க.), 2004-ல் கே.எம்.காதர் முகைதீன் (தி.மு.க. சின்னத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), 2009-ல் அப்துல் ரஹ்மான் (தி.மு.க. சின்னத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்), 2014ம் ஆண்டு பி.செங்குட்டுவன் (அ.தி.மு.க.) ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், ரத்து செய்யப்பட்ட வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான 17-வது மக்களவை தேர்தல் கடந்த 5-ந் தேதி நடந்தது. நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில், தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த், அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தைவிட 8,141 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார். வேலூர் தொகுதியில் தி.மு.க. 1996ம் ஆண்டு கடைசியாக நேரடியாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது.

    அதன்பின்னர் 23 ஆண்டுக்கு பிறகு வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. நேரடியாக போட்டியிட்டு தற்போது வெற்றி வாகை சூடியுள்ளது.
    வேலூர் பாராளுமன்றத் தொகுதி தேர்தலில் அதிமுக மற்றும் திமுகவின் ஓட்டு வங்கியை சீமானின் நாம் தமிழர் கட்சி பதம் பார்த்து கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது.
    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் மாதம் 18-ந்தேதி தேர்தல் நடந்த போது 39 தொகுதிகளிலும் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது.

    சீமான் மிக துணிச்சலாக புதுமுகங்களை களத்தில் இறக்கினார். கடந்த மே மாதம் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது சீமான் நிறுத்திய வேட்பாளர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் கணிசமான வாக்குகளை பெற்று இருந்தனர்.

    பணப்பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் மீண்டும் அறிவிக்கப்பட்டபோது நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தீபலட்சுமியை சீமான் அறிவித்தார். கமல்ஹாசன், டி.டி.வி.தினகரன் உள்பட முக்கிய கட்சிகள் அனைத்தும் ஒதுங்கிக் கொண்ட நிலையில் சீமான் மட்டும் தன்னம்பிக்கையுடன் தீபலட்சுமியை களம் இறக்கினார்.

    தீபலட்சுமியை ஆதரித்து அவர் வேலூர் பாராளுமன்ற தொகுதி முழுவதும் தீவிர பிரசாரம் செய்தார். தி.மு.க. - அ.தி.மு.க.வின் பிரமாண்ட பிரசாரத்திற்கு மத்தியில் அவரது பிரசாரம் எடுபடாமல் இருந்தது. ஆனால் தேர்தல் முடிவுகள் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை காட்டுவதாக அமைந்துள்ளது.

    நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி 26,995 வாக்குகளை பெற்றுள்ளார். அவரது இந்த வாக்குகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த நிலையில் தீபலட்சுமி பிரித்த வாக்குகள் அதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.

    தீபலட்சுமிக்கு கிடைத்த வாக்குகள் அ.தி.மு.க.வை மட்டுமே பதம் பார்க்கவில்லை. தி.மு.க.வையும் சேர்த்து பதம் பார்த்து விட்டதாக அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்.

    தி.மு.க.வின் வாக்கு வித்தியாசத்தை விட 3 மடங்கு அதிகமாக தீபலட்சுமி வாக்குகள் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

    நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானின் உணர்ச்சி பொங்க வைக்கும் பேச்சுகள் வழக்கமாக வாக்காளர்கள் மத்தியில் பேசப்படும். தமிழர், தமிழ்நாடு, தமிழ் மொழி குறித்து அவரது தட்டி எழுப்பும் பேச்சுகள் நகர பகுதி மக்களை மட்டுமின்றி கிராமப் பகுதி மக்களையும் சென்று சேர்ந்துள்ளது.

    குறிப்பாக இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் சீமானின் பிரசாரமும், பேச்சும் எடுபட்டுள்ளது. இதனால்தான் நாம் தமிழர் கட்சிக்கு சுமார் 27 ஆயிரம் பேர் வாக்களித்துள்ளனர்.

    சீமானுக்கு என்று தமிழக அரசியல் களத்தில் புதிய வாக்கு வங்கி உருவாகி வருவதை இது காட்டுவதாக அரசியல் நிபுணர் காசிநாதன் கூறியுள்ளார். இந்த வாக்கு வங்கி, தேர்தலுக்கு தேர்தல் அதிகரித்து வருவதாகவும் அவர் கூறி உள்ளார்.

    வேலூர் தேர்தலில் தீபலட்சுமி பெற்ற 27 ஆயிரம் வாக்குகளும் அதையே உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. பாலாற்றகங்கரையில் அமைந்துள்ள அம்பலூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த தீபலட்சுமி வேலூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதுமே கிராமம் கிராமமாக சென்று ஓட்டு சேகரித்தார். அப்போது அவர் தமிழ் தேசியம் பற்றி மக்கள் மத்தியில் முழங்கியது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

    இதுபற்றி அவர் கூறுகையில், “வேலூர் தொகுதியில் வாக்களித்த மக்களின் 9,417 பேர் நோட்டாவுக்கு வாக்களித்து உள்ளனர். அந்த 9,417 பேருக்கும் நாம் தமிழர் கட்சியின் கொள்கை கோட்பாடுகள் பற்றி முழுமையாக தெரிந்து இருந்தால் அவர்கள் தடம் மாறி சென்று இருக்க மாட்டார்கள். எனக்கு வாக்களித்து இருப்பார்கள்” என்றார்.

    தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 3 ஆயிரம் நாம் தமிழர் கட்சியினர் வேலூருக்கு வந்து தீபலட்சுமிக்கு ஆதரவாக தீவிரமாக பிரசாரம் செய்தனர். அது இளைஞர்கள் மத்தியில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியது.

    சீமான் 10 கூட்டங்களில் பேசினார். அந்த 10 கூட்டங்களிலும் அவர் இலவச கல்வி, இலவச மருத்துவம், சுத்தமான குடிநீர் ஆகிய மூன்றையும் வலியுறுத்தி பேசினார். இதுவும் இளைஞர்களை கவர்ந்தது. இதனால்தான் தீபலட்சுமிக்கு 27 ஆயிரம் வாக்குகளை மக்கள் வழங்கி உள்ளனர்.

    வேலூர் தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. இரு தரப்பிலும் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன. ஆனால் நாம் தமிழர் கட்சியினர் ஒரு இடத்தில் கூட எந்த வாக்காளருக்கும் லஞ்சமாக பணம் கொடுக்கவில்லை.

    வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது இல்லை என்பதை நாம் தமிழர் கட்சியினர் கொள்கையாக வைத்துள்ளனர். அவர்களது நேர்மைக்கு வேலூரில் 27 ஆயிரம் வாக்குகள் கிடைத்து உள்ளது.

    இந்த 27 ஆயிரம் வாக்குகளும் அ.தி.மு.க, தி.மு.க.விடம் இருந்து பிரிக்கப்பட்ட வாக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.

    வேலூர் தொகுதியில் மட்டுமின்றி மற்ற 37 (நீலகிரியில் போட்டியிடவில்லை) பாராளுமன்ற தொகுதிகளிலும் ஏற்கனவே நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளை பிரித்தது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை வாங்கி பிரமிக்க வைத்தனர்.

    திருவள்ளூர் தொகுதியில் வெற்றிசெல்வி 57,840 வாக்குகள், வடசென்னையில் காளியம்மாள் 60,454 வாக்குகள், தென்சென்னையில் செரீன் 50,222 வாக்குகள், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மகேந்திரன் 53,027 வாக்குகள், காஞ்சிபுரம் தொகுதியில் சிவரஞ்சனி 62,721 வாக்குகள், கோவையில் கல்யாணசுந்தரம் 60,400 வாக்குகள், திண்டுக்கல்லில் மன்சூர்அலிகான் 54,851 வாக்குகள், திருச்சியில் வினோத் 65,286 வாக்குகள்.

    பெரம்பலூரில் சாந்தி 53,545 வாக்குகள், நாகப்பட்டினத்தில் மாலதி 50,091 வாக்குகள், தஞ்சையில் கிருஷ்ணகுமார் 56,707 வாக்குகள், சிவகங்கையில் சக்திபிரியா 69,176 வாக்குகள், விருதுநகரில் அருள்மொழி தேவன் 52,591 வாக்குகள், தென்காசியில் மதிவாணன் 58,855 வாக்குகள் பெற்று பிரமிக்க வைத்து இருந்தனர்.

    இப்படி நாம் தமிழர் கட்சியினர் பிரித்த வாக்குகள் அனைத்துமே தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. இரண்டு கட்சிகளையும் பதம் பார்த்தன.

    டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி பிரித்ததை விட சீமானின் நாம் தமிழர் கட்சி பிரித்த வாக்குகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
    பேஸ்புக்கில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து ஆம்பூர் நகரம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
    ஆம்பூர்:

    காஷ்மீர் பிரச்சினை மற்றும் சுதந்திர தினத்தையொட்டி வேலூர் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

    மேலும் பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் கண்காணிக்கப்படுகிறது. நேற்று மாலை பேஸ்புக்கில் ஆம்பூருக்கு வெடிகுண்டு மிரட்டல் கொடுத்து போட்டோ ஒன்று வெளியானது.

    அதில் குண்டு ஒன்னு வச்சிருக்கேன். ஆம்பூருக்கு வெடிகுண்டு ஒன்னு வச்சு இருக்கேன் என கூறப்பட்டிருந்தது. இது வலைதளங்களில் வேகமாக பரவியது.

    ஆம்பூரில் வெடிகுண்டு சோதனை

    இதையடுத்து ஆம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரி கிருஷ்ணன் தலைமையில் ஆம்பூர் நகரம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இன்று காலை ஆம்பூர் ரெயில் நிலையத்தில் பயணிகளின் உடமைகள் சோதனை செய்யப்பட்டன.

    மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. மேலும் ஆம்பூர் நகரம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


    வேலூர் பாராளுமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றியை சாதாரணமாக நினைக்க முடியாது என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறினார்.
    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை ராணிப்பேட்டை என்ஜினீயரிங் கல்லூரியில் நடந்தது. இதில் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகள் பெற்று அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தைவிட 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    கதிர் ஆனந்த் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதும் கதிர் ஆனந்த்தின் தந்தையும், தி.மு.க பொருளாளருமான துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எந்த வெற்றியையும் சாதாரணமாக நினைக்க முடியாது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீது மக்கள் மீண்டும் நம்பிக்கையூட்டுவதாக இந்த வெற்றியை பார்க்கிறேன். இஸ்லாமியர்களின் ஆதரவு எப்போதும் தி.மு.க.வுக்கு உண்டு. அது இந்த தேர்தல் மூலம் நிரூபணமாகி உள்ளது என்றார்.

    கதிர் ஆனந்த்

    வெற்றி குறித்து வேட்பாளர் கதிர் ஆனந்த் கூறுகையில்:-

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி இது. இந்த வெற்றியை கலைஞருக்கு சமர்ப்பிக்கிறேன் என்று கூறினார்.

    வேலூர் கோட்டையை தி.மு.க. வசமாக்கிய வாக்காளர்களுக்கு அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    கடந்த 5-ம் தேதி வேலூர் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

    தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகளும், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 4,77,199 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி 26,995 வாக்குகளும் பெற்றனர்.  முடிவில் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    இதையடுத்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேலூர் மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    அவர் கூறியுள்ளதாவது:-

    வேலூர் தொகுதி


    வேலூர் கோட்டையை தி.மு.க. வசமாக்கிய வாக்காளர்களுக்கு மனமார்ந்த நன்றி. தாமதப்படுத்த முயற்சிக்கலாம் தடுக்க முடியாது என்பது போல் தி.மு.க.வின் வெற்றி உள்ளது. இந்தியா எதிர்பார்த்த வேலூர் தொகுதியின் முடிவு தி.மு.க.விற்கு சாதகமாகியுள்ளது.

    வாக்காளர்களின் ஆதரவால் ஆளுங்கட்சியின் அதிகார பலத்தை மீறி வேலூர் தி.மு.க.வின் கோட்டையாகியுள்ளது. ஜனநாயக வழியில் திராவிட இயக்க லட்சியங்களை வென்றெடுக்கும் பணியில் முன்னேறிச் செல்வோம்.

    மிட்டாய் கொடுத்து  பெற்ற வெற்றி என்ற அ.தி.மு.க.வின் பிரசாரத்தை மக்கள் நிராகரித்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    வேலூர் தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளர் கதிர் ஆனந்த், இந்த வெற்றி தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி என தெரிவித்தார்.
    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. துவக்கத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலை பெற்றார். பின்னர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை பெற்றார். இவ்வாறு சிறிது நேரம் இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்றதால் கடும் போட்டி நிலவியது.

    இறுதியில், மாலை 3.30 மணி நிலவரப்படி வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரியிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

    இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த கதிர் ஆனந்த், வேலூர் தொகுதியில் நான் பெற்ற வெற்றி, ஸ்டாலினின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி. இந்த வெற்றியை அவருக்கு சமர்ப்பிக்கிறேன் என தெரிவித்தார்.

    வேலூர் தொகுதியை தி.மு.க. கைப்பற்றியதன் மூலம் மக்களவையில்  தி.மு.க. உறுப்பினர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.
    வேலூர் பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஆரம்பத்தில் பின்தங்கியிருந்த திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தற்போது பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. துவக்கத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலை பெற்றார். பின்னர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை பெற்றார். இவ்வாறு சிறிது நேரம் இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்றதால் கடும் போட்டி நிலவியது.

    ஒருகட்டத்தில் திமுக வேட்பாளரை விட ஏ.சி.சண்முகம் 13250 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். அதன்பின்னர் அவரது வாக்குகள் சரிவதும், உயர்வதுமாக இருந்தது. 

    வாக்கு எண்ணும் பணி

    11.30 மணி நிலவரப்படி ஏ.சி.சண்முகம் 3896 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். அவர் 2 லட்சத்து 45 ஆயிரத்து 273 வாக்குகளும், கதிர் ஆனந்த் 2 லட்சத்து 41 ஆயிரத்து 377 வாக்குகளும் பெற்றிருந்தனர். அதன்பின்னர் கதிர் ஆனந்தின் கை ஓங்கியது. அதிமுக வேட்பாளரை பின்னுக்குத் தள்ளி முன்னிலை பெற்றார். படிப்படியாக அவரது வாக்குகள் அதிகரிக்கத் தொடங்கியது. 

    மதியம் 1.30 மணி நிலவரப்படி கதிர் ஆனந்த் 11 ஆயிரத்து 644 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். அவர் மொத்தம் 4 லட்சத்து 68 ஆயிரத்து 870 வாக்குகள் பெற்றிருந்தார். அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 4 லட்சத்து 57 ஆயிரத்து 226 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி 25 ஆயிரத்து 953 வாக்குகளும் பெற்றிருந்தனர். அதன்பின்னர் ஏ.சி.சண்முகத்தின் வாக்குகள் சற்று அதிகரித்தது. 
    ×