search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    23 ஆண்டுக்கு பிறகு வேலூர் பாராளுமன்ற தொகுதியைக் கைப்பற்றிய திமுக

    23 ஆண்டுக்கு பிறகு வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. நேரடியாக போட்டியிட்டு வெற்றி வாகை சூடியுள்ளது.
    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தொகுதியை 23 ஆண்டுகளுக்குப் பிறகு தி.மு.க. கைப்பற்றியுள்ளது.

    1951-52ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை 16 முறை பாராளுமன்ற தேர்தலைச் சந்தித்த வேலூர் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் 5 முறையும், அ.தி.மு.க. 2 முறையும், ஜனதா கட்சி 2 முறையும், அ.தி.மு.க., தி.மு.க. அணிகளில் இடம்பெற்ற பா.ம.க. 2 முறையும், தி.மு.க. 3 முறையும், திமுக, காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன. முதல் 2 தேர்தல்களில் இரட்டை உறுப்பினர் முறையில் தேர்தல் நடைபெற்றது.

    1951-ல் நடந்த முதல் தேர்தலில் ராமசந்தர் (சி.டபுள்யூ.எல்) எம்.முத்துகிருட்டிணன் (காங்கிரஸ்) ஆகியோரும், 1957-ல் எம்.முத்துகிருட்டிணன், என்.ஆர்.முனிசாமி (காங்கிரஸ்) ஆகியோரும் வெற்றி பெற்றனர். 1962-ல் அப்துல் வாகித் (காங்கிரஸ்), 1967-ல் குசேலர் (தி.மு.க.), 1971-ல் ஆர்.பி.உலகநம்பி (தி.மு.க.), 1977- ல் வி.தண்டாயுதபாணி (ஜனதா), 1980-ல் ஏ.கே.ஏ.அப்துல் சமது (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), 1984-ல் ஏ.சி.சண்முகம் (அ.தி.மு.க.), 1989ம் ஆண்டு ஏ.கே.ஏ.அப்துல் சமது (காங்கிரஸ்), 1991இல் பி.அக்பர் பாட்சா (காங்கிரஸ்), 1996ம் ஆண்டு பி.சண்முகம் (தி.மு.க.), 1998-ல் என்.டி.சண்முகம் (பா.ம.க.), 1999இல் என்.டி.சண்முகம் (பா.ம.க.), 2004-ல் கே.எம்.காதர் முகைதீன் (தி.மு.க. சின்னத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), 2009-ல் அப்துல் ரஹ்மான் (தி.மு.க. சின்னத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்), 2014ம் ஆண்டு பி.செங்குட்டுவன் (அ.தி.மு.க.) ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், ரத்து செய்யப்பட்ட வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான 17-வது மக்களவை தேர்தல் கடந்த 5-ந் தேதி நடந்தது. நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில், தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த், அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தைவிட 8,141 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார். வேலூர் தொகுதியில் தி.மு.க. 1996ம் ஆண்டு கடைசியாக நேரடியாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது.

    அதன்பின்னர் 23 ஆண்டுக்கு பிறகு வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. நேரடியாக போட்டியிட்டு தற்போது வெற்றி வாகை சூடியுள்ளது.
    Next Story
    ×