என் மலர்tooltip icon

    வேலூர்

    ஜி.எஸ்.டி. வரி கட்டுவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாகவும் இதில் வரக்கூடிய மாற்றங்களைப் பார்க்கும்போது நாம் ஏன் வரி கட்ட வேண்டும் என்ற நினைப்பு வருவதாகவும் விக்கிரமராஜா கூறியுள்ளார்.
    வேலூர்:

    வேலூர் மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் பதவியேற்பு விழா வேலூரில் நடந்தது. இதில் அமைச்சர் கே.சி.வீரமணி வி.ஐ.டி. வேந்தர் விசுவநாதன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    விழாவில் வேலூர் மாவட்ட புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றுக்கொண்டனர். இதனை தொடர்ந்து விக்கிரமராஜா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் அடிக்கடி மாற்றங்கள் கொண்டு வரப்படுகிறது ஜி.எஸ்.டி. வரி சட்ட விதிகளை எளிமைப்படுத்த வேண்டும். சாதாரண வியாபாரிகளும் இதுகுறித்த விவரங்களை தெரிந்து கொள்ளும் வகையில் இருக்க வேண்டும்.

    ஜி.எஸ்.டி. வரி கட்டுவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதில் வரக்கூடிய மாற்றங்களைப் பார்க்கும்போது நாம் ஏன் வரி கட்ட வேண்டும் என்ற நினைப்பு வருகிறது.

    தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட தடை விதிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்பவர்கள் யார் என்பது குறித்து அதிகாரிகளுக்கு தெரியும். நாடு முழுவதும் ஒரே தடைச்சட்டத்தை கொண்டு வந்தால் மட்டுமே பிளாஸ்டிக் குட்கா போன்றவற்றை ஒழிக்க முடியும்.

    சீன பொருட்களில் நச்சுத்தன்மை உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனை தடை செய்வது குறித்து அரசுக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அழுத்தம் கொடுக்கும். வியாபாரிகள் பொருட்களை வாங்கி விற்பனை செய்கிறோம்.

    இதனால் எங்களால் தரமற்ற பொருட்களை தடுக்க முடியாது. பொருட்கள் உற்பத்தி செய்யும் இடத்தில் தரத்தை ஆய்வு செய்தால்தான் பொருட்களின் தரத்தை கட்டுக்குள் கொண்டுவர முடியும். கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என வியாபாரிகளை அதிகாரிகள் மிரட்டுவதை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது வேலூர் மாவட்ட தலைவர் ஞானவேல், திருப்பத்தூர் மாவட்ட தலைவர் ஆம்பூர் கிருஷ்ணன், வேலூர் மாவட்ட இளைஞரணி தலைவர் அருண் பிரசாத் ஏ.வி.எம். குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.
    வாலாஜா அருகே கால்வாயில் விழுந்து ரெயில்வே ஊழியர் மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாலாஜா:

    வாலாஜா அடுத்த அனந்தலை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ரகு(28) இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். ரகு அம்மூர் ரெயில் நிலையத்தில் கேங்மேனாக வேலை செய்து வந்தார்.

    நேற்று நள்ளிரவு வேலை முடிந்து பைக்கில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அனந்தலை கிராம நிர்வாக அலுவலகம் அருகே வந்த போது தூக்க கலக்கத்தில் அங்குள்ள கால்வாயில் பைக்குடன் விழுந்து இறந்தார். இன்று காலை அந்த வழியாக வந்தவர்கள் ரகு கால்வாயில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    வாலாஜா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரகு பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரக்கோணம் அருகே மின்சாரம் தாக்கியதில் வடமாநில வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரக்கோணம்:

    உத்தரபிரேதச மாநிலத்தை சேர்ந்தவர் சிராஜ் (24). இவர் சென்னையில் உள்ள கோழி கறிக்கடையில் வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் அரக்கோணம் அருகேயுள்ள காவனூர் நரசிங்க புரத்தில் கோழி வாங்குவதற்காக லாரியில் இன்று காலை வந்தனர். அப்போது லாரியின் மேல் பகுதியில் உடகார்ந்து வந்த சிராஜ் மீது மின்சார கம்பி உரசியது.

    இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த அரக்கோணம் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி சம்பவ இடத்திற்கு சென்று சிராஜ் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்தரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வாலாஜா அருகே வீட்டில் கார் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வாலாஜா:

    வாலாஜா அனந்தலை ரோடு புது தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (24). கார் டிரைவர் இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

    நேற்றிரவு வீட்டில் தனியாக இருந்த மணிகண்டன் வீட்டில் உள்ள மின் விசிறியில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வாலாஜா போலீசார் மணிகண்டன் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆம்பூர் அருகே 108 ஆம்புலன்சில் சென்ற போது பிரசவ வலி ஏற்பட்டதால் இளம்பெண்ணுக்கு வயல்வெளியில் குழந்தை பிறந்தது. அங்கு கூடியிருந்த கிராம பெண்கள் அப்பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர்.
    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே உள்ள கீழ் மிட்டாளம் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 27), கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி சோனியா (23). இவர் 3-வதாக கர்ப்பமானார். இன்று காலை சோனியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

    இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை நரியம்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ரகுநாதபுரம் வயல்வெளி நடுவே உள்ள சாலையில் ஆம்புலன்ஸ் சென்றபோது சோனியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து ஆம்புலன்சை நடுவழியில் நிறுத்தினர்.

    அங்கு வயல் வெளியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண்களை ஆம்புலன்ஸ் உதவியாளர் உதவிக்கு அழைத்தார்.

    கிராம பெண்கள் ஆம்புலன்சில் இருந்த சோனியாவை இறக்கி வயல்வெளியில் சேலையால் சுற்றி மறைத்துக் கொண்டனர். சோனியாவுக்கு பெண்கள் பிரசவம் பார்த்தனர். இதில் அழகான பெண் குழந்தை பிறந்தது.

    இதனையடுத்து தாயும், குழந்தையும் நரியம்பட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ஜோலார்பேட்டை அருகே ரெயிலில் பயணிகளிடம் நகை திருடிய அசாம் வாலிபர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி, சப்–இன்ஸ்பெக்டர்கள் சிவகுமார், ஜெயக்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் உள்ள 2–வது பிளாட்பாரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின்பேரில் சுற்றித்திரிந்த 4 பேரை விசாரணை செய்ததில், முன்னுக்கு முரணாக பதில் கூறினர்.

    பின்னர் அவர்கள் 4 பேரையும் ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் அசாம் மாநிலம் கம்தூர் பகுதியை சேர்ந்த தீப்ஜோதிமேதி (வயது 21), சஞ்சுவ்ராவ் (26), அமர்கோட்டாபோரா (23), கிரேசர்குகே (23) என தெரியவந்தது.

    மேலும் இவர்கள் 4 பேரும் சபரி எக்ஸ்பிரஸ், எஸ்வந்தபூர் எக்பிரஸ், திருப்பதி எக்ஸ்பிரஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ், காவேரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 6 ரெயில்களில் பயணம் செய்த கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த கலிமுல்லா (52), ஆந்திர மாநிலம் ஐதராபாத் பகுதியை சேர்ந்த நிஷா நாயர் (35), பெங்களூருவை சேர்ந்த கீதா (54) கோவையை சேர்ந்த மகேஸ்வரி (29), ரோகிதபஷ்மா (40) சென்னையை சேர்ந்த மணி (70) உள்ளிட்ட 7 ரெயில் பயணிகள் ஜன்னலோரம் தூங்கி கொண்டிருந்த போது, 24 பவுன் தங்க நகைகள், செல்போன், மடிக்கணினி, பணம், ஏ.டி.எம். அட்டை உள்ளிட்ட பொருட்களை திருடியதை ஒப்புக்கொண்டனர்.

    அவர்களிடம் இருந்து 11 பவுன் நகைகள், 9 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் 4 பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
    ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி வேலூர் மாவட்டத்தில் ஒரேநாளில் ரூ.5¾ கோடிக்கு மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது.
    வேலூர்: 

    தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் பொங்கல்,தீபாவளி, ஆயுதபூஜை, புத்தாண்டு என பண்டிகைகளின்போது மதுவிற்பனை அதிக அளவில் நடக்கும். மதுபிரியர்கள் கூட்டம் கூட்டமாக சென்று மதுவாங்கி குடிக்கிறார்கள்.

    அதன்படி இந்த ஆங்கில புத்தாண்டு தினத்திலும் வேலூர் மாவட்டத்தில் மதுவிற்பனை அதிக அளவில் செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் நிறுவனத்தை பொருத்தமட்டில் வேலூர், அரக்கோணம் என இரண்டு மாவட்டங்களாக செயல்பட்டு வருகிறது.

    வேலூர் மாவட்டத்தில் 108 கடைகளும், அரக்கோணம் மாவட்டத்தில் 84 கடைகளும் உள்ளன. இந்த கடைகளில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேற்று முன்தினம் கூட்டம் அலைமோதியது. மதுபிரியர்கள் மதுவாங்கி குடித்துவிட்டு புத்தாண்டு கொண்டாடினர்.

    வேலூர் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் ஒரேநாளில் மட்டும் 5,593 பெட்டி பிராந்தி, 3,723 பெட்டி பீர் விற்பனையாகி இருக்கிறது. மொத்தம் ரூ.3 கோடியே 64 லட்சத்துக்கு மதுவிற்பனையாகி இருந்தது.

    அதேபோன்று அரக்கோணம் மாவட்டத்தில் 84 கடைகளில் 3,619 பெட்டி பிராந்தி, 1,975 பெட்டி பீர் என ரூ.2 கோடியே 23 லட்சத்துக்கு மது விற்பனையாகி உள்ளது. மொத்தம் ரூ.5 கோடியே 87 லட்சத்துக்கு மதுவிற்பனையாகி இருக்கிறது.
    அரக்கோணம் அருகே சென்னை வாலிபரை ரெயிலில் இருந்து தள்ளி கொல்ல முயற்சி செய்த அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    அரக்கோணம்:

    சென்னை ஆவடியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 30). அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி அஸ்வினி (26). தம்பதிக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். அஸ்வினியின் தாய் வீடு பெரம்பூர் செம்பியத்தில் உள்ளது. அந்த பகுதியை சேர்ந்த அனுரகுவம்சி (22) என்பவருக்கும் அஸ்வினிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

    இருவரும் அடிக்கடி போனில் பேசி வந்தனர். இதனை அறிந்த ராஜேந்திரன் மனைவியை கண்டித்தார். இதனால் தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டது. அஸ்வினி கள்ளகாதலை கைவிடாததால் இருவரும் பிரிந்தனர்.

    இதனையடுத்து செம்பியத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார். ஆனாலும் கணவன் மனைவியிடையே தகராறு தொடர்ந்தது.

    இது தொடர்பாக செம்பியம் போலீஸ் மற்றும் ஆவடி மகளிர் போலீஸ் நிலையத்தில் அவர்கள் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் கணவனை தீர்த்து கட்ட அஸ்வினி முடிவு செய்தார். இது பற்றி அனுரகுவம்சியிடம் கூறினார். இதற்கு அஸ்வினியின் தம்பி கமலேஸ்வரன் (21) உதவுவதாக தெரிவித்தார்.

    இதனையடுத்து அஸ்வினி அனுரகுவம்சி அவரது நண்பர் தினேஷ் மற்றும் கமலேஸ்வரன் ஆகியேர் கடந்த 30-ந்தேதி ராஜேந்திரனை கொலைசெய்ய திட்டமிட்டனர். அவரை ரகசியமாக பின் தொடர்ந்தனர். 30-ந்தேதி ராஜேந்திரன் ஆவடியில் இருந்து திருத்தணி செல்வதற்காக மின்சார ரெயிலில் ஏறினார். அவரை பின் தொடர்ந்து 3 பேரும் ஏறினர்.

    அஸ்வினி அதே ரெயிலில் மற்றொரு பெட்டியில் ஏறினார். அரக்கோணத்தில் ரெயில் பயணிகள் அதிகளவில் இறங்கியதால் பெட்டி காலியானது.

    அப்போது 3 பேரும் முகத்தை துணியால் மறைத்து கட்டிகொண்டு ராஜேந்திரனை தாக்கினர். அவரை இழுத்து ரெயிலில் இருந்து தள்ளி விட்டனர். அந்த நேரத்தில் ரெயில் கைனூர் ரெயில்வே கேட் அருகே மெதுவாக சென்று கொண்டிருந்தது. இதனால் லேசான காயமடைந்த ராஜேந்திரன் மயங்கினார்.

    சிறிது நேரம் கழித்து கண்விழித்த அவர் அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றார். இது தொடர்பாக அரக்கோணம் ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார்.

    அதில் அவரது மனைவி குடும்ப தகராறில் கூலிபடையை ஏவி கொலை செய்ய முயற்சி செய்ததாக கூறினார். போலீசார் செம்பியம் சென்று அஸ்வினியிடம் விசாரித்தனர்.

    அப்போது அவர் ராஜேந்திரனை கொலை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது. போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து அஸ்வினி அனுரகுவம்சி, கமலேஸ்வரன், தினேஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    அஸ்வினி வேலூர் பெண்கள் ஜெயிலிலும் மற்ற 3 பேரும் ஆண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டனர்.
    ராணிப்பேட்டையில் கிணற்றில் வீசி பெண் குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வாலாஜா:

    ராணிப்பேட்டை காரை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான விளையாட்டு மைதானம் உள்ளது.

    இங்கு பயனற்ற நிலையில் கிணறு இருக்கிறது. கிணற்றிலிருந்து இன்று காலை துர்நாற்றம் வீசியது. அப்பகுதி மக்கள் கிணற்றில் எட்டி பார்த்தபோது கிணற்றில் குழந்தையின் உடல் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது. இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி அசோக் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் மிதந்த குழந்தையின் பிணத்தை மீட்டனர்.

    குழந்தையின் உடல் முழுவதும் மீன்கள் கடித்து அழுகிய நிலையில் இருந்தது. குழந்தையை கிணற்றில் வீசி ஒரு வாரம் ஆகியிருக்கலாம் என தெரிகிறது.

    பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை கிணற்றில் வீசி சென்றது யார்? எதற்காக வீசி சென்றனர்? கள்ளக்காதலில் பிறந்ததா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஆந்திர எல்லையில் காட்டு யானை ஒன்று இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.
    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள பரதராமி கொத்தூர் ரெட்டியார் பள்ளம் கிராமம் ஆந்திர எல்லையையொட்டி உள்ளது.

    இந்த கிராமத்திலுள்ள விவசாய நிலத்தில் இன்று காலை ஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது.

    இதனை பார்த்த அந்த கிராமத்தினர் உடனடியாக வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் அளித்தனர். உடனடியாக இரு மாநில வனத்துறை அலுவலர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, வயது முதிர்ந்த நிலையில் நீளமான இரு தந்தங்களுடன் ஆண் யானை இறந்து கிடப்பது தெரியவந்தது.

    மேலும், அந்த பகுதியில் மிகக்குறைந்த உயரத்தில் மின்சார கம்பி சென்றதால் மின்சாரம் தாக்கி யானை இறந்திருக்கலாம் என்றும் வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து, ஆண் யானையின் உடலை கைப்பற்றிய வனத்துறையினர் அங்கேயே பிரேத பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடு செய்தனர்.

    இச்சம்பவம் தொடர்பாக இரு மாநில வனத்துறை அலுவலர்களும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர் ஜெயிலில் உணவு சாப்பிட மறுத்து வந்த முருகன் கோரிக்கை ஏற்கப்பட்டதால் போராட்டத்தை கைவிட்டார்.
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முருகன், தனக்கு சிறையில் இடையூறுகள் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டி கடந்த சில மாதங்களாக விட்டுவிட்டு தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    இதன் தொடர்ச்சியாக, கடந்த 21-ந்தேதி முதல் முருகன் மீண்டும் உண்ணாவிரதம் இருந்து வந்தார். தன்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும். உறவினர்கள் கொண்டு வரும் உணவை தர அனுமதிக்க வேண்டும் என கோரி அவர் 9 நாட்களாக ஜெயிலில் உணவை சாப்பிட மறுத்தார். உண்ணாவிரதத்தால் அவரது எடை 64 கிலோவிலிருந்து 42 கிலோவாக குறைந்தது.

    அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து நேற்று அவருக்கு 2 பாட்டில் குளுகோஸ் ஏற்றப்பட்டது.

    முருகனிடம் நேற்று மாலை ஜெயில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முருகன் ஜெயிலில் உணவு சாப்பிட அனுமதி அளித்தனர்.

    மேலும் அவரை பார்க்க வருபவர்கள் கொண்டு வரும் உணவு பொருட்கள் அனுமதிக்கப்படும் என உறுதியளித்தனர்.

    இதையடுத்து முருகன் போராட்டத்தை கைவிட்டார். ஜெயிலில் அவரே சமைத்து சாப்பிட அனுமதி அளித்தனர். இதையடுத்து அவரே சமைத்து சாப்பிட்டார்.

    வேலூர் அருகே திருமணத்திற்கு இடையூறாக இருந்ததால் 3-வது கணவருடன் சேர்ந்து 2 வயது குழந்தையை தாய் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    கண்ணமங்கலம்:

    வேலூர் கணியம்பாடி அடுத்த கம்மவான்பேட்டை அருகே மொட்டைமலை உள்ளது. மலை மீது முருகன் கோவில் கட்டப்பட்டு வருகிறது. கோவில் வேலை பணிகளை பார்க்க அந்த வழியாக மக்கள் சென்று வருகின்றனர்.

    மலையின் பாதி வழியில் உள்ள பள்ளத்தில் 2 வயது பெண் குழந்தை பிணம் ஒன்று நேற்று அழுகிய நிலையில் கிடந்தது. வேலூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராமச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    குழந்தையை கொலை செய்து மலையடிவாரத்தில் வீசி சென்றது தெரியவந்தது. குழந்தையை கொலை செய்து 4 நாட்கள் ஆகியிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். குழந்தை பிணத்தின் மீது பெரிய பாறாங்கல்லை போட்டு மூடியுள்ளனர்.

    இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தை யாருடையது? எதற்காக குழந்தையை கொலை செய்து வீசினர் என விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் தங்கமணி என்பவர் ஆற்காடு அடுத்த தாழனூரை சேர்ந்த குழந்தை காணாமல் போனதாக தகவல் தெரிவித்தார். மேலும் குழந்தையின் தாய் மீது சந்தேகம் உள்ளது என வேலூர் தாலுகா போலீசில் தெரிவித்தார்.

    இதையடுத்து ஆற்காடு அருகே உள்ள தாழனூரை சேர்ந்த மஞ்சுளா (வயது23) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் சில நாட்களுக்கு முன்பு ராஜாமணி என்பவரை 3-வது திருமணம் செய்தது தெரியவந்தது. அவரது குழந்தையை எங்கே என கேட்டபோது முன்னுக்குப்பின் பதிலளித்தார்.

    இதனையடுத்து மஞ்சுளாவிடம் கிடுக்கிப்பிடியாக விசாரித்தனர். அதில் 3-வது திருமணம் செய்வதற்காக மஞ்சுளா குழந்தையை கொன்று மலையில் வீசியது தெரியவந்தது.

    மஞ்சுளா முதலாவதாக அவரது தாய் மாமாவை திருமணம் செய்தார். பின்னர் தேனி மாவட்டத்தை சேர்ந்த பாண்டியனை 2-வது திருமணம் செய்தார். அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.

    இந்த நிலையில் கணவரை பிரிந்து குழந்தையுடன் தாழனூரில் வசித்து வந்தார். அப்போது ஆற்காடு வரகூர்புதூரை சேர்ந்த ராஜாமணியுடன் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

    இதற்கு மஞ்சுளாவின் குழந்தை இடையூறாக இருக்கும் என நினைத்தனர். இதனால் கடந்த 22-ந் தேதி குழந்தையை கொலை செய்து கம்மவான்பேட்டை மலையில் வீசினர். அதற்கு மறுநாள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

    போலீசார் விசாரணை நடத்திய போது குழந்தை பற்றி எதுவும் தெரியாதது போல நாடகமாடினர். பின்னர் போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் 2 பேரும் சிக்கினர். இதையடுத்து மஞ்சுளா, ராஜாமணியை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ×