என் மலர்tooltip icon

    செய்திகள்

    3-வது கணவருடன் கைதான தாய்.
    X
    3-வது கணவருடன் கைதான தாய்.

    வேலூர் அருகே 3-வது கணவருடன் சேர்ந்து குழந்தையை கொன்று வீசிய தாய்

    வேலூர் அருகே திருமணத்திற்கு இடையூறாக இருந்ததால் 3-வது கணவருடன் சேர்ந்து 2 வயது குழந்தையை தாய் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    கண்ணமங்கலம்:

    வேலூர் கணியம்பாடி அடுத்த கம்மவான்பேட்டை அருகே மொட்டைமலை உள்ளது. மலை மீது முருகன் கோவில் கட்டப்பட்டு வருகிறது. கோவில் வேலை பணிகளை பார்க்க அந்த வழியாக மக்கள் சென்று வருகின்றனர்.

    மலையின் பாதி வழியில் உள்ள பள்ளத்தில் 2 வயது பெண் குழந்தை பிணம் ஒன்று நேற்று அழுகிய நிலையில் கிடந்தது. வேலூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராமச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    குழந்தையை கொலை செய்து மலையடிவாரத்தில் வீசி சென்றது தெரியவந்தது. குழந்தையை கொலை செய்து 4 நாட்கள் ஆகியிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். குழந்தை பிணத்தின் மீது பெரிய பாறாங்கல்லை போட்டு மூடியுள்ளனர்.

    இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தை யாருடையது? எதற்காக குழந்தையை கொலை செய்து வீசினர் என விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் தங்கமணி என்பவர் ஆற்காடு அடுத்த தாழனூரை சேர்ந்த குழந்தை காணாமல் போனதாக தகவல் தெரிவித்தார். மேலும் குழந்தையின் தாய் மீது சந்தேகம் உள்ளது என வேலூர் தாலுகா போலீசில் தெரிவித்தார்.

    இதையடுத்து ஆற்காடு அருகே உள்ள தாழனூரை சேர்ந்த மஞ்சுளா (வயது23) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் சில நாட்களுக்கு முன்பு ராஜாமணி என்பவரை 3-வது திருமணம் செய்தது தெரியவந்தது. அவரது குழந்தையை எங்கே என கேட்டபோது முன்னுக்குப்பின் பதிலளித்தார்.

    இதனையடுத்து மஞ்சுளாவிடம் கிடுக்கிப்பிடியாக விசாரித்தனர். அதில் 3-வது திருமணம் செய்வதற்காக மஞ்சுளா குழந்தையை கொன்று மலையில் வீசியது தெரியவந்தது.

    மஞ்சுளா முதலாவதாக அவரது தாய் மாமாவை திருமணம் செய்தார். பின்னர் தேனி மாவட்டத்தை சேர்ந்த பாண்டியனை 2-வது திருமணம் செய்தார். அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.

    இந்த நிலையில் கணவரை பிரிந்து குழந்தையுடன் தாழனூரில் வசித்து வந்தார். அப்போது ஆற்காடு வரகூர்புதூரை சேர்ந்த ராஜாமணியுடன் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

    இதற்கு மஞ்சுளாவின் குழந்தை இடையூறாக இருக்கும் என நினைத்தனர். இதனால் கடந்த 22-ந் தேதி குழந்தையை கொலை செய்து கம்மவான்பேட்டை மலையில் வீசினர். அதற்கு மறுநாள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

    போலீசார் விசாரணை நடத்திய போது குழந்தை பற்றி எதுவும் தெரியாதது போல நாடகமாடினர். பின்னர் போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் 2 பேரும் சிக்கினர். இதையடுத்து மஞ்சுளா, ராஜாமணியை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×