என் மலர்
வேலூர்
வாணியம்பாடி அடுத்த நெக்னாமலை கிராமம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,500 மீட்டர் உயரத்தில் உள்ளது. இங்கு, 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.
இந்த கிராமத்திற்கு சாலை வசதி, மின்சார வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர், கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. நெக்னாமலை மக்கள் மலையிலிருந்து மழைநீர் வழிந்தோடும் பாதையைத்தான் பயன்படுத்தி வருகிறார்கள்.
பெண்களுக்குப் பிரசவ வலி ஏற்பட்டாலும் யாருக்காவது உடல்நிலை பாதிக்கப்பட்டாலும் டோலி கட்டி மலை அடிவாரத்துக்கு தூக்கி செல்கின்றனர். இந்த நிலையில் மலை கிராம மக்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக இன்று காலை பொங்கல் பரிசு தொகுப்பு அடங்கிய மூட்டைகள் நெக்னாமலை அடிவாரத்துக்கு கொண்டு வரப்பட்டன. சாலை வசதி இல்லாததால் அங்கிருந்து 4 கிலோ மீட்டர் தூரம் கழுதைகள் மூலம் பொங்கல் பரிசுபொருட்கள் இன்று கொண்டு செல்லப்பட்டன.
தாசில்தார் சிவப்பிரகாசம், வட்ட வழங்கல் அலுவலர் குமார், கூட்டுவு சங்க தலைவர் திருப்பதி ஆகியோர் முன்னிலையில் பொங்கல் பொருட்களை கழுதைகளில் ஏற்றி சென்றனர்.
சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றுவருகிறது. பொதுமக்களின் வசதிக்காக விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வருகிற 9-ந்தேதி மற்றும் 10-ந்தேதி 2 நாட்களுக்கு தேவைக்கு ஏற்ப சிறப்பு பஸ்கள் இயக்க முடிவு செய்துள்ளது.
குறிப்பாக வேலூர் மண்டலத்தில் உள்ள திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், ராணிப்பேட்டை, ஆற்காடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிதம்பரத்துக்கு செல்ல பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
இந்த சிறப்பு பஸ்கள் மக்களின் வசதிக்காக இயக்கப்படுவதால் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
வாலாஜா:
வாலாஜாவை சேர்ந்தவர் முத்து (வயது 62). வாலாஜா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே கூடை பின்னும் தொழில் செய்துவருகிறார். இன்று காலை பள்ளி முன்பு உள்ள பெட்டிக் கடையில் அமர்ந்து மது குடித்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த மாணவிகளின் பெற்றோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர் அவர்கள் முத்துவை அடித்து உதைத்தனர். மேலும் இதுபற்றி வாலாஜா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
முத்துவை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் வாலாஜாவில் பரபரப்பு ஏற்பட்டது.
பள்ளி பகுதிகளில் மது அருந்தும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகள் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
வேலூர்:
காட்பாடி அடுத்த லத்தேரி அருகே உள்ள வேப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன் (வயது 32). தனியார் நிறுவன ஊழியர். இவர் இன்று காலை அலமேலுமங்காபுரத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக காரில் புறப்பட்டு வந்தார்.
வேலூர் பழைய பாலத்தில் வந்தபோது முன்னால் சென்றுகொண்டிருந்த லாரியை முந்தி செல்ல முயன்றார். அப்போது லாரி உரசி கார் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தை உடைத்துக் கொண்டு பாலாற்றுக்குள் பாய்ந்தது.
இதில் கார் முழுவதும் சேதமடைந்தது. ராஜேஷ் கண்ணன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதனை கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சிலர் ஆற்றுக்குள் வேகமாக சென்று அவரை மீட்டனர். விருதம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். காரை மீட்கும் பணிகள் நடந்தது.
காட்பாடி-வேலூர் இடையே உள்ள இந்த பழைய பாலத்தில் இருபுறமும் உள்ள பக்கவாட்டு சுவர்கள் பலத்த சேதம் அடைந்தது. இடிந்து விழும் அபாய நிலையில் இருந்த இந்தச் சுவர்களை சீரமைக்க ரூ.4 கோடி ஒதுக்கப்பட்டது. ரூ.4 கோடியில் சீரமைப்பு பணிகளும் நடந்தது. ஆனாலும் சுவர்கள் தரமாக அமைக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இன்று காலை கார் மோதியதும் சுவர் இடிந்து ஆற்றுக்குள் சென்றுவிட்டது. சுவர் பலமாக இருந்திருந்தால் ஆற்றுக்குள் கார் செல்லாமல் சாலையிலேயே நின்றிருக்கும் என வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.
பாலாற்று பாலத்தின் பக்கவாட்டு சுவர்களை பலம் வாய்ந்ததாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
வேலூர் சைதாப்பேட்டை கோடையிடி குப்புசாமி முதலியார் மேல்நிலைப்பள்ளி அருகே தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக சைதாப்பேட்டையை சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவர் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்தார். அதில் அரசு பள்ளி அருகே தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மாணவர்கள் சீரழியும் நிலை ஏற்படும். குட்கா விற்பனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் அவரது தந்தை சிகிச்சைக்காக பரோலில் வந்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் தங்கி தந்தை உடல்நலனை கவனித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை அவரது தந்தை குயில்தாசன் உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து சென்னையில் உள்ள காவிரி மருத்துவமனைக்கு குயில்தாசனை அழைத்து செல்ல முடிவு செய்தனர்.
வாணியம்பாடி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா தலைமையில் ஜோலார்பேட்டை போலீசார் பாதுகாப்புடன் பேரறிவாளனை போலீஸ் வேனிலும், அவரது தந்தை குயில்தாசன் தனி கார் மூலம் சென்னை காவிரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
மேலும் பேரறிவாளனுக்கு சற்று உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவருக்கும் சென்னையில் மருத்துவ பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
2 பேரும் சிகிச்சை முடிந்து இன்று இரவு வீடு திரும்புவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.
பேரணாம்பட்டு நகராட்சி பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக பஜார்வீதி சந்திப்பு, ஆஸ்பத்திரிவீதி, இஸ்லாமியா பள்ளிவீதி, எம்.ஆர்.வீதி, மரீத்வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடிநீர் பைப்புதைப்பதற்காக சாலைகள் தோண்டப்பட்டது.
இதனால் சாலையில் பல இடங்களில் குழி, பள்ளம் ஏற்பட்டது.
பின்னர் இந்த இடங்களில் சாலையை புதுப்பித்து சிமெண்ட் சாலை அமைப்பதற்காக கடந்த ஆண்டு நகராட்சியில் நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின்கீழ் டெண்டர் விடப்பட்டது.
ஆனால் டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர் பணி மேற்கொள்ளாமல் இருந்து வந்ததால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
டெண்டர் விட்டும் சாலை அமைக்காததை கண்டித்து நேற்று பேரணாம்பட்டு டவுன் பஜார்வீதி சந்திப்பு சாலையில் தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் நகராட்சி கவுன்சிலர் மீராஞ்சி சலீம்பாஷா, நகர காங்கிரஸ் தலைவர் சுரேஷ்குமார், நகர இளைஞர் மன்ற செயலாளர் முத்தரசன் ஆகியோர் உள்பட 50 பேர் இணைந்து சாலையை அமைக்க கோரி தட்டிகளுடன் கோஷமிட்டு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த பேரணாம்பட்டு நகராட்சி கமிஷனர் நித்தியானந்தன், நகராட்சி பொறியாளர் மனோகரன் ஆகியோர் சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
தற்காலிகமாக சாலையை ஜே.சி.பி. மூலம் செப்பனிடுவதாகவும், ஒருமாத காலத்திற்குள் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கலைந்து சென்றனர்.
அரக்கோணம்:
அரக்கோணம் திருத்தணி இடையே உள்ள புதூர் ரெயில்வே கேட்டில் பீகார் மாநிலத்தை சேர்ந்த விஸ்வகுமார் யாதவ் (வயது 26). என்பவர் கேட் கீப்பராக வேலை செய்து வருகிறார்.
நேற்று வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கும்பல் விஸ்வகுமார் யாதவிடம் இருந்த பணம், செல்போன் ஆகியவற்றை கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஸ்வகுமார் யாதவை வெட்டினர். வலியால் துடித்தார். அவரிடம் இருந்த செல்போனை பறித்து கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
வெட்டுகாயம் அடைந்த விஸ்வகுமார் யாதவ் அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் கிசிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு அன்பழகன், சப்-இன்ஸ்பெக்டர் கிரி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர் அடுத்த சான்றோர் குப்பத்தை சேர்ந்தவர் சாம்பசிவம். இவரது மகன் நதி வாணன் (26). கூலி தொழிளாலி மது போதைக்கு அடிமையான இவர் சரிவர வேலைக்கு செல்லவில்லை.
இந்த நிலையில் நேற்றிரவு மது போதையில் வீட்டிற்கு வந்த நதி வாணன் அங்கிருந்த மது பாட்டிலை உடைத்து தனக்கு தானே கழுத்தை அறுத்து கொண்டார். ரத்தம் பீறிட்டு வலியால் துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் மற்றும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ஆம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் வேலூர் வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோரை இன்று காத்திருப்பு பட்டியலுக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி இன்று முதல் இருவரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். இதற்கான காரணம் என்ன என்பது வெளியிடப்படவில்லை. இவர்கள் உயர் அதிகாரிகளுக்கு தெரியாமல் சில நடவடிக்கைகள் எடுத்ததாக கூறப்படுகிறது.
மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் மற்றும் நகரத்தின் முக்கியமான பகுதியில் அமைந்துள்ள வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஒரே நேரத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ள சம்பவம் போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பேரணாம்பட்டை அடுத்த டி.டி.மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவர் டி.டி.மோட்டூர் அருகே உள்ள எர்த்தாங்கல் கிராமத்தில் இருந்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு இருமுடி கட்டிக்கொண்டு புறப்பட இருந்தார்.
இதனால் அதே கிராமத்தை சேர்ந்த முருகேசனின் உறவினர் வினோத் (வயது 30) என்பவர் முருகேசனின் மகள் சந்தியா (18) மற்றும் அவரது மைத்துனி ஆம்பூர் தாலுகா பள்ளிக்குப்பம் அருகே உள்ள பூமலைபுரம் கிராமத்தை சேர்ந்த ஆனந்தி (19) ஆகியோரை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு எர்த்தாங்கல் கிராமத்தை நோக்கி சென்றார்.
பேரணாம்பட்டு- குடியாத்தம் சாலையில் ஊசூரான்பட்டி கிராமம் அருகில் சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த ஆட்டோவை வினோத் முந்தி செல்ல முயன்றபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் வினோத் ஆனந்தி, சந்தியா ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இதனையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஆனந்தி, சந்தியா ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். வினோத் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
தர்மபுரியை சேர்ந்தவர் கங்கப்பா (வயது 50). கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இவர் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதனையடுத்து வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு கங்கப்பா இறந்தார்.
இதுதொடர்பாக பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






