search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாலாற்றுக்குள் பாய்ந்த கார் நொறுங்கி கிடக்கும் காட்சி.
    X
    பாலாற்றுக்குள் பாய்ந்த கார் நொறுங்கி கிடக்கும் காட்சி.

    வேலூரில் பாலத்தில் இருந்து பாலாற்றுக்குள் பாய்ந்த கார்

    வேலூரில் கார் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தை உடைத்துக் கொண்டு பாலாற்றுக்குள் பாய்ந்தது. இதில் கார் முழுவதும் சேதம் அடைந்தது.

    வேலூர்:

    காட்பாடி அடுத்த லத்தேரி அருகே உள்ள வேப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன் (வயது 32). தனியார் நிறுவன ஊழியர். இவர் இன்று காலை அலமேலுமங்காபுரத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக காரில் புறப்பட்டு வந்தார்.

    வேலூர் பழைய பாலத்தில் வந்தபோது முன்னால் சென்றுகொண்டிருந்த லாரியை முந்தி செல்ல முயன்றார். அப்போது லாரி உரசி கார் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தை உடைத்துக் கொண்டு பாலாற்றுக்குள் பாய்ந்தது.

    இதில் கார் முழுவதும் சேதமடைந்தது. ராஜேஷ் கண்ணன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதனை கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சிலர் ஆற்றுக்குள் வேகமாக சென்று அவரை மீட்டனர். விருதம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். காரை மீட்கும் பணிகள் நடந்தது.

    காட்பாடி-வேலூர் இடையே உள்ள இந்த பழைய பாலத்தில் இருபுறமும் உள்ள பக்கவாட்டு சுவர்கள் பலத்த சேதம் அடைந்தது. இடிந்து விழும் அபாய நிலையில் இருந்த இந்தச் சுவர்களை சீரமைக்க ரூ.4 கோடி ஒதுக்கப்பட்டது. ரூ.4 கோடியில் சீரமைப்பு பணிகளும் நடந்தது. ஆனாலும் சுவர்கள் தரமாக அமைக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இன்று காலை கார் மோதியதும் சுவர் இடிந்து ஆற்றுக்குள் சென்றுவிட்டது. சுவர் பலமாக இருந்திருந்தால் ஆற்றுக்குள் கார் செல்லாமல் சாலையிலேயே நின்றிருக்கும் என வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

    பாலாற்று பாலத்தின் பக்கவாட்டு சுவர்களை பலம் வாய்ந்ததாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×