search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    பேரணாம்பட்டில் சாலை சீரமைக்காததை கண்டித்து திடீர் தர்ணா

    பேரணாம்பட்டு நகராட்சி பகுதியில் டெண்டர் விட்டு ஓராண்டாகியும் சாலை அமைக்கப்படாததை கண்டித்து திடீர் தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது.
    பேரணாம்பட்டு:

    பேரணாம்பட்டு நகராட்சி பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக பஜார்வீதி சந்திப்பு, ஆஸ்பத்திரிவீதி, இஸ்லாமியா பள்ளிவீதி, எம்.ஆர்.வீதி, மரீத்வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடிநீர் பைப்புதைப்பதற்காக சாலைகள் தோண்டப்பட்டது.

    இதனால் சாலையில் பல இடங்களில் குழி, பள்ளம் ஏற்பட்டது.

    பின்னர் இந்த இடங்களில் சாலையை புதுப்பித்து சிமெண்ட் சாலை அமைப்பதற்காக கடந்த ஆண்டு நகராட்சியில் நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின்கீழ் டெண்டர் விடப்பட்டது.

    ஆனால் டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர் பணி மேற்கொள்ளாமல் இருந்து வந்ததால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

    டெண்டர் விட்டும் சாலை அமைக்காததை கண்டித்து நேற்று பேரணாம்பட்டு டவுன் பஜார்வீதி சந்திப்பு சாலையில் தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் நகராட்சி கவுன்சிலர் மீராஞ்சி சலீம்பாஷா, நகர காங்கிரஸ் தலைவர் சுரேஷ்குமார், நகர இளைஞர் மன்ற செயலாளர் முத்தரசன் ஆகியோர் உள்பட 50 பேர் இணைந்து சாலையை அமைக்க கோரி தட்டிகளுடன் கோ‌ஷமிட்டு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த பேரணாம்பட்டு நகராட்சி கமி‌ஷனர் நித்தியானந்தன், நகராட்சி பொறியாளர் மனோகரன் ஆகியோர் சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தற்காலிகமாக சாலையை ஜே.சி.பி. மூலம் செப்பனிடுவதாகவும், ஒருமாத காலத்திற்குள் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கலைந்து சென்றனர்.
    Next Story
    ×