என் மலர்tooltip icon

    வேலூர்

    வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கணவன், மனைவி, குழந்தை ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
    ஆம்பூர்:

    பெங்களூர் மடவாளா பகுதியை சேர்ந்தவர் மயூர் (வயது 37). இவரது மனைவி மணி (30) மற்றும் 2 வயது மகளுடன் இன்று அதிகாலை காரில் சென்னைக்கு புறப்பட்டனர். காரை மயூர் ஓட்டினார். அவர்கள் வந்த கார் ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் மேம்பாலம் அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த மயூர் அவரது மனைவி, குழந்தை ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூரில் விபத்தில் சிக்கி இறந்த நாயின் வயிற்றில் இருந்து 5 குட்டிகளை கால்நடை டாக்டர் அவசர அறுவை சிகிச்சை மூலம் உயிருடன் மீட்டார்.
    வேலூர்:

    வேலூர் மக்கான் சிக்னல் அருகே நேற்று முன்தினம் காலை தெருநாய் ஒன்று சாலையை கடக்க முயன்றது.

    அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத கார் நாயின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் காயமடைந்த நாய், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியது.

    அப்போது அவ்வழியாக வந்த வேலூர் சலவன்பேட்டையை சேர்ந்த தண்டபாணி என்பவர் அந்த நாயை அருகில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்ல முயன்றார்.

    இந்த கருணையை பார்த்து அங்கிருந்தவர்கள் உதவி செய்ய தொடங்கினர். நாயை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

    அங்கு கால்நடை டாக்டர் ரவிசங்கர் பணியில் இருந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த நாய்க்கு, குளுக்கோஸ் ஏற்றி முதலுதவி சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் அந்த நாய் பரிதாபமாக பலியானது.

    விபத்தில் பலியான நாய்

    இந்நிலையில் பலியான பெண் நாயின் வயிற்றில் குட்டிகள் இருப்பது தெரியவந்தது. இதனால் கால்நடை டாக்டர் ரவிசங்கர் அவசர அறுவை சிகிச்சை மூலம் நாயின் வயிற்றில் இருந்த 5 குட்டிகளை உயிருடன் மீட்டார்.

    மேலும் அருகிலுள்ள மருந்து கடையில் இருந்து குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் பாட்டில் வாங்கி வந்து நாய் குட்டிகளுக்கு பால் கொடுத்தார்.

    இதைத்தொடர்ந்து சலவன்பேட்டையை சேர்ந்த தண்டபாணி அந்த 5 குட்டிகளையும் கொண்டு சென்று வீட்டில் பராமரித்து வருகிறார்.

    இதுகுறித்து கால்நடை டாக்டர் ரவிசங்கர் கூறுகையில்:-

    நாய் பலியான ஒரு சில நிமிடங்களில் வயிற்றில் இருந்த குட்டிகளும் ஆக்சிஜன் கிடைக்காமல் இறந்துவிடும்.

    ஆனால் 5 நிமிடத்தில் அறுவை சிகிச்சை மூலம் குட்டிகள் உயிருடன் வெளியே எடுக்கப்பட்டு விட்டது. தற்போது நாய்க்குட்டிகள் நலமாக இருக்கின்றன.

    தெருநாய் தானே என்று அலட்சியமாக விட்டு செல்லாமல், அவ்வழியாக சென்றவர் மீட்டு வந்திருப்பது வரவேற்கத்தக்கது.

    அவரின் நல்ல உள்ளத்துக்காக நானும் என்னுடைய கடமையை செய்துவிட்டேன். இந்த சம்பவம் இதுவரை நான் கால்நடைகளுக்கு செய்த அறுவை சிகிச்சையில் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்றாகிவிட்டது என்றார்.


    கே.வி.குப்பம் அருகே கிணற்றில் பெண் பிணம் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை அடுத்த கந்தனேரி கிராமத்தை சேர்ந்தவர் கார்மேகம். இவரது மனைவி வசந்தா (வயது 55). கூலி தொழிலாளர்கள். கணவன், மனைவி இருவரும் கே.வி.குப்பத்தை அடுத்த பசுமாத்தூரில் ஜெகநாதன் என்பவர் நிலத்தில் தங்கி வேலை செய்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலையில் நிலத்திற்கு வேலைக்கு சென்ற வசந்தாவை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. மாலையில் அதே நிலத்தில் உள்ள கிணற்றில் வசந்தா மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்தவர்கள் உடனடியாக கே.வி.குப்பம் போலீஸ் நிலையத்திற்கும், குடியாத்தம் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து வசந்தாவின் உடலை மீட்டனர். கே.வி.குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வசந்தாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வசந்தா கிணற்றில் தவறி விழுந்தாரா, அல்லது வேறு எதுவும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடியாத்தம் நகரில் 150 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த நகை வியாபாரிகள் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளனர்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் நகரில் குற்றச் சம்பவங்களைத் தடுக்க கண்காணிப்பு கேமராக்களை பொருத்த காவல்துறை சார்பில் 150 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த உள்ளது இதற்காக பல்வேறு வியாபார நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் , பல்வேறு சங்கங்கள் , பொதுமக்கள் , சமூக அமைப்புகளிடம் இருந்து நிதிகளை காவல்துறையினர் பெற்று வருகின்றனர்.

    குடியாத்தம் நகை அடகு வியாபாரிகள் சங்கம் சார்பில் கண்காணிப்பு கேமராக்களுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் சதாசிவன் தலைமை தாங்கினார். சங்க கவுரவ தலைவர்கள் ஜெயந்திலால் ஜெயின், மோகனவேல், சங்க ஆலோசகர் குணசேகரன், பொருளாளர் சுசில், செயற்குழு உறுப்பினர்கள் குமரன், கமல்ஹாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் மஞ்சுநாத் வரவேற்றார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் நகரில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கு நிதியாக குடியாத்தம் நகை அடகு வியாபாரிகள் சங்கத்தினர் காவல்துறை அதிகாரிகளிடம் ரூ.5 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் காவல்துறையினர், நகை அடகு வியாபாரிகள் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.
    வேலூர் சலவன்பேட்டை கட்டிட ஒப்பந்ததாரர் கொலையில் தொழிலாளி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

    வேலூர்:

    வேலூர் சலவன்பேட்டை திருப்பூர்குமரன் 2 வது தெருவை சேர்ந்தவர் குட்டி என்ற முருகவேல் (வயது45). கட்டிட ஒப்பந்ததாரர் மேஸ்திரியாகவும் பணியாற்றி வந்தார்.

    கடந்த 7-ந்தேதி இரவு ஆனைகுளத்தம்மன் கோவிலுக்கு முருகவேல் சாமி கும்பிட சென்றார். பின்னர் ஒத்தவாடை தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் (43) என்பவர் அங்கு வந்து முருகவேலை கத்தியால் குத்தினார். ரத்த காயத்துடன் தப்பி ஓடிய முருகவேல் நரசிங்க சாமி மடம் தெருவில் தரையில் விழுந்து இறந்தார்.

    வேலூர் டி.எஸ்.பி பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். முருகவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விஜயகுமாரை போலீசார் தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த விஜயகுமாரை இன்று காலை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    முருகவேல் வீட்டில் விஜயகுமார் அவரது மனைவி இருவரும் வேலை பார்த்தனர்.

    அப்போது விஜயகுமாரை வேலையிலிருந்து முருகவேல் நீக்கியுள்ளார். அவரது மனைவிக்கு மட்டும் வேலை கொடுத்துள்ளார் .

    இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார் முருகவேலை வெட்டி கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜோலார்பேட்டை அருகே பைக்கில் வேகமாக சென்றதில் ஏற்பட்ட தகராறில் கல்லூரி மாணவர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜோலார்பேட்டை:

    பெங்களூருவை சேர்ந்த பார்த்தசாரதியின் மகன் அபி (வயது 18). கல்லூரி மாணவர். இவர் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமத்தில் உள்ள உறவினர் எபிநேசர் (19) வீட்டுக்கு வந்தார்.

    இருவரும், நேற்று இரவு 8 மணியளவில் ஒரு மோட்டார் சைக்கிளில் அந்த பகுதி சாலையில் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது.

    அதே கிராமத்தை சேர்ந்த அண்ணன், தம்பியான குமார் (35), தயாளன் (30) ஆகியோர் அவர்களை தடுத்து நிறுத்தி மோட்டா ர்சைக்கிளில் ஏன் வேகமாக செல்கிறீர்கள், மெதுவாக செல்லவேண்டியது தானே? என கேட்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    ஆத்திரம் அடைந்த தயாளன் தன்னிடம் இருந்த கத்தியால் அபியை சரமாரியாக குத்தினார். அபியை காப்பாற்ற முயன்ற எபிநேசருக்கும் கத்திக்குத்து விழுந்தது. ரத்த வெள்ளத்தில் இருவரும் கீழே விழுந்தனர். இதில் அபி துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    அண்ணன்-தம்பி இருவரும் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகி விட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாலாஜா அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 17 பேரை போலீசார் கைது செய்தனர்.

    வாலாஜா:

    வாலாஜா அடுத்த வன்னிவேடு தென்றல் நகர், காந்தி நகர் பகுதியில் ஏற்கனவே 3 டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.

    இந்நிலையில் வன்னிவேடு அருகில் உள்ள ரபி நகரில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் 15 நாட்கள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது டாஸ்மாக் துணை மேலாளர் மற்றும் டாஸ்மாக் அலுவலக பணியாளர் தாசில்தார் பாலாஜி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி புதிதாக திறந்த டாஸ்மாக் கடையை வேறு பகுதிக்கு மாற்ற 15 நாட்களுக்கு கால அவகாசம் கேட்டனர்.

    அதன் பேரில் 15 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் நேற்று அப்பகுதி மக்கள் மீண்டும் கடையை அகற்ற வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதேசமயம் மது பிரியர்களும் கடையை அகற்றக் கூடாது டாஸ்மாக் கடை இங்கேயே இருக்க வேண்டும் என போட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த டாஸ்மாக் துணை மேலாளர் கண்ணப்பன், வாலாஜா இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீசார் விரைந்து வந்து அரசு டாஸ்மாக் கடை அகற்ற வேண்டும் என ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 17 பேரை கைது செய்தனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
    ஜோலார்பேட்டை அருகே ஏசி மெஷின் வெடித்து போலீஸ்காரர் அவரது மனைவி படுகாயம் அடைந்தனர்.

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம்பட்டியை சேர்ந்தவர் சண்முகம் (34). இவர் செங்கல்பட்டில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாக வேலை செய்து வருகிறார்.

    இவரது மனைவி வெற்றிசெல்வி (28). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். நேற்றிரவு ஏசியை ஆன் செய்துவிட்டு கணவன், மனைவி இருவரும் வீட்டில் தூங்கினர். மகள் அறைக்கு வெளியே தூங்கினார்.

    இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு அதிக சத்தத்துடன் ஏசி வெடித்தது. சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து பார்த்தபோது கணவன் மனைவி இருவரும் படுகாயம் அடைந்து இருந்தனர். அவர்களை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். ஏசியில் ஏற்பட்ட கியாஸ் கசிவு காரணமாக விபத்து நடந்தது தெரியவந்தது.

    வேலூர் மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை பின்பற்றாதவர்கள் மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக 115 நபர்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ரூ.50 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவின் பேரில் சாலை விபத்துக்களை கட்டுப்படுத்தவும் போக்குவரத்து விதிகளை பின்பற்றாதவர்கள் மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீதும் மோட்டார் வாகன சட்டத்தின்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 47,473 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.50,41,800 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

    மேலும் குடிபோதையில் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் வகையில் வாகனம் ஓட்டியதற்காக 115 நபர்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கோர்டில் 4 பேருக்கு தண்டனையாக தலா ரூ.11,250 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
    வேலூர் அருகே குடிக்க பணம் தராததால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் சலவன் பேட்டை அம்மனாங்குட்டை ரோடு பகுதியை சேர்ந்தவர் கோபால் (வயது 39). விவசாய பயிர்களுக்கு பூச்சி மருந்து அடிக்கும் தொழிலாளி.இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்தது.

    நேற்று முன்தினம் வீட்டில் இருந்த கோபால் அவரது மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டார். அவர் பணம் தராததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.இதனால் மனமுடைந்த கோபால் பூச்சி மருந்தை குடித்தார். இதனால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டது.

    இதனை கண்டு திடுக்கிட்ட அவரது மனைவி அவரை மீட்டு வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு கோபால் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சென்னையில் போராடியவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதை கண்டித்து வேலூர், செய்யாறு, ராணிப்பேட்டை, வாணியம்பாடியில் முஸ்லிம் அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    வேலூர்:

    இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று மாலை முஸ்லீம் அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் தடியடி நடத்தினர்.

    இதுகுறித்து தகவலறிந்த முஸ்லீம் அமைப்பை சேர்ந்தவர்கள் பல்வேறு இடங்களில் மறியலில் ஈடுபட்டனர். நேற்று இரவு வேலூர் அண்ணாசாலையில் உள்ள தெற்கு போலீஸ் நிலையத்தை முஸ்லீம்கள் முற்றுகையிட்டனர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட முஸ்லீம் நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பஸ் நிலையம் அருகில் இரவு சென்னையில் போலீசார் தடியடி நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்தும், கைது செய்தவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் இஸ்லாமியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் மத்திய மாநில அரசுகள் மற்றும் போலீசாருக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பினர்.

    இதனால் சுமார் ஒரு மணிநேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆம்பூரில் 2 இடங்களில் முஸ்லீம் அமைப்பினர் மறியலில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் பஸ் நிலையத்திலும் முஸ்லீம் அமைப்பினர் போராட்டம் செய்தனர்.

    ராணிப்பேட்டை முத்துக்கடையில் முஸ்லிம்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டு கோ‌ஷங்களை எழுப்பினர்.

    இதுகுறித்து தகவலறிந்து ராணிப்பேட்டை டிஎஸ்பி கீதா, இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் ஆற்காடு சாலையில் உள்ள அண்ணா சிலை எதிரே முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினர் 200-க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு சாலை மறியல் செய்தனர். மறியல் நீண்ட நேரம் நீடித்தது.

    செய்யாறு டவுன் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்ததை நடத்தியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

    ஆரணி எம்.ஜி.ஆர். சிலை அருகே மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லீம் லீக் கட்சியினர் உள்பட முஸ்லீம்கள் திரண்டு மறியல் செய்தனர்.

    திருவண்ணாமலையில் தண்டராம்பட்டு சாலையில் முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்ததை நடத்தியதை தொடர்ந்து கலைந்து சென்றனர். இதேபோல் வந்தவாசியிலும் முஸ்லீம்கள் போராட்டம் செய்தனர்.

    முஸ்லீம்கள் போராட்டத்தால் நேற்று இரவு பரபரப்பு ஏற்பட்டது.
    சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்தது தொடர்பாக அளித்த புகாரின் பேரில் 5 பேர் மீது மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    ராணிப்பேட்டை:

    திருவள்ளூர் மாவட்டம் பள்ளிபட்டு தாலுகா ஈச்சம்பாடி ராமச்சந்திரா புரம் கிராமத்தை சேர்ந்த ஜெயவேலு. இவரது 17 வயது மகள் பிளஸ் 2 படித்து முடித்திருந்த நிலையில் கல்லூரியில் சேர்ப்பதாக கூறி இவரின் தாயார் லட்சுமி வாலாஜா அருகே உள்ள வள்ளுவம்பாக்கம் கிராமத்துக்கு அழைத்து வந்துள்ளார்.

    அங்கு ஒரு கோவிலில் வைத்து கடந்த ஜூன் மாதம் 13-ந் தேதி வாலாஜா தாலுகா எடப்பாளையம் கிராமத்தை சேர்ந்த மோகன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

    பின்னர் பெண்ணின் பெரியம்மா குப்பம்மாள் என்பவருடன் ஆற்காட்டுக்கு அனுப்பி தங்க வைத்துள்ளனர். திருமணம் பிடிக்காத சிறுமி அங்கிருந்து தப்பிச்சென்று திருப்பதியில் தங்கியுள்ளார். பிறகு தாய் வீடு திரும்பியுள்ளார்.

    இதைத்தொடர்ந்து தனக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த தாயார், உறவினர்கள் மற்றும் தாலி கட்டிய மோகன் மீது திருத்தணி போலீசில் புகார் செய்தார். அவர்கள் விசாரித்து கட்டாய திருமணம் நடந்த இடம் ராணிப்பேட்டை மகளிர் போலீஸ் எல்லை என்பதால் ராணிப்பேட்டைக்கு அனுப்பினர்.

    இதைத்தொடர்ந்து புகார் மீது ராணிப்பேட்டை மகளிர் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி விசாரணை நடத்தி சிறுமியின் தாயார் லட்சுமி, பெரியம்மா கஸ்தூரி, குப்பம்மாள், கணவர் மோகன், உறவினர் ரேகா ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×