என் மலர்tooltip icon

    வேலூர்

    வேலூர் வள்ளலாரில் இன்று காலை பைக் மோதியதில் வேளாண்மை அலுவலக ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி வள்ளலார் பகுதியை சேர்ந்தவர் ருத்ரமூர்த்தி (வயது43). தொரப்பாடியில் உள்ள வேளாண்மை அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி ஷூ கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

    இன்று காலை ருத்ரமூர்த்தி அவருடைய மனைவியை பஸ் ஏற்றி விட்டு வள்ளலார் பஸ் நிறுத்தம் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது வேலூரில் இருந்து ஆற்காடு நோக்கி சென்ற பைக் அவர் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயம் அடைந்த ருத்ரமூர்த்தியை வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரெட் கிராஸ் சார்பில் வேலூர் கோட்டை வளாகத்தை கல்லூரி மாணவ மாணவிகள் இன்று சுத்தம் செய்தனர்.

    வேலூர்:

    வேலூர் கோட்டையின் உட்பகுதியில் உள்ள மைதானத்தை சுற்றியும் அங்குள்ள கட்டிடங்களை சுற்றிலும் புதர்கள் மண்டிக் கிடந்தன. மேலும் பல இடங்களில் குப்பைகள் குவிந்து கிடந்தது.

    தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்ட ரெட்கிராஸ் சார்பில் இன்று கோட்டை வளாகத்தை சுத்தம் செய்யும் பணி நடந்தது. கல்லூரி மாணவ மாணவிகள் கோட்டை காந்திசிலை முன்பு திரண்டு அங்கிருந்து கோட்டைக்குள் ஊர்வலமாக சென்றனர்.

    இதனை கலெக்டர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார். வேலூர் மாவட்ட ரெட் கிராஸ் செயலாளர் டாக்டர் இந்தர்நாத் தொல்லியல் துறை அலுவலர் ஈஸ்வர், ரெட் கிராஸ் சேர்மன் பர்வதம் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.

    ஆக்சிலியம் மகளிர் கல்லூரி வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டு கோட்டை வளாகத்தை சுத்தம் செய்தனர்.

    அங்கிருந்த புதர்களை அகற்றினர். மேலும் குப்பைகளை அப்புறப்படுத்தினர்.

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 67-வது பிறந்த நாளை இளைஞர்கள் எழுச்சி நாளாக கொண்டாட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    வேலூர்:

    வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடந்தது. அவை தலைவர் முகமதுசகி தலைமை தாங்கினார். தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசினார்.

    மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. பொருளாளர் நரசிம்மன், கதிர்ஆனந்த் எம்.பி., அ.மா.ராமலிங்கம் முன்னாள் கவுன்சிலர் அன்பு மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் தி.மு.க. உள்ளாட்சி தேர்தல் குறித்தும், உள்ளாட்சி தேர்தலில் செயல்படுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    மேலும் மு.க.ஸ்டாலின் 67-வது பிறந்த நாளை இளைஞர்கள் எழுச்சி நாளாக கட்சி கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கியும், பொதுக்கூட்டங்கள் தெருமுனை கூட்டங்கள் நடத்தி கொண்டாட வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் ஒத்துழைப்பு வழங்குவது, குடியுரிமை சட்டத்திற்கு எதிராக 2 கோடிக்கு மேல் கையெழுத்து பெற்று சாதனை படைக்க உதவிய கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்தும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    வேலூரில் டாக்டர் தம்பதி வீட்டில் 16 பவுன் நகை திருட்டில் ஈடுபட்ட சமையல்காரி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர்-ஆற்காடு சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருபவர் லினு குருவில்லா (வயது 38). இவருடைய மனைவி ஜோமோல்சாராஜான் (35) அதே மருத்துவ மனையில் குழந்தை நலசிறப்பு டாக்டராக பணியாற்றி வருகிறார்.

    இவர்கள் இருவரும் மருத்துவமனை வளாகத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டில் வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த ராஜி மனைவி காயத்ரி (24) சமையல் வேலை செய்து வந்தார்.

    டாக்டர் தம்பதியினர் வேலைக்கு செல்லும்போது வீட்டு சாவியை காயத்ரியிடம் கொடுத்துவிட்டு செல்வதும், காயத்ரி சமையல் வேலையை முடித்து விட்டு பக்கத்து வீட்டில் சாவி ஒப்படைத்துச் செல்வதும் வழக்கம், கணவன், மனைவி இருவரில் வேலை முடித்து முதலில் வரும் நபர் வீட்டு சாவியை வாங்கி கொள்வார்கள்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே மருத்துவமனை வளாகத்தில் உள்ள மற்றொரு குடியிருப்பில் வீட்டு வேலை செய்யும் சைதாப்பேட்டையை சேர்ந்த ரவிவர்மா மனைவி சவுந்தர்யாவை (25) வீட்டு வேலை உதவிக்காக காயத்ரி அழைத்து வந்துள்ளார். அதைத்தொடர்ந்து அவ்வப்போது சவுந்தர்யா டாக்டர் தம்பதியினரின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி வேலை முடிந்து வீடு திரும்பிய ஜோமோல் சாராஜான், அவரின் பர்சில் வைத்திருந்த 4 தங்கவளையல்கள், செயின், கம்மல் உள்பட 16ž பவுன் நகைகள் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர், காயத்ரியிடம் கேட்டதற்கு சரிவரப் பதில் கூறவில்லை.

    இந்த திருட்டு சம்பவம் குறித்து ஜோமோல் சாராஜான் வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து காயத்ரியிடம் தீவிர விசாரணை மேற் கொண்டனர். அதில், காயத்ரி, சவுந்தர்யா ஆகியோர் சேர்ந்து நகையை திருடியதும், அவற்றில் சில நகைகளை ஒரு அடகுக்கடையில் வைத்து பணம் பெற்றதும் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 8½ பவுன் நகை, நகையை அடகுவைத்து பெற்ற ரூ.1லட்சம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன. 2 பேரும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் இன்று நடந்தது. இதில் மூதாட்டி ஒருவர் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் சண்முகம் சுந்தரம் தலைமையில் இன்று நடந்தது. இதில் பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

    குடியாத்தம் ஆர்.எஸ் நகரை சேர்ந்த அனுராதா (வயது 71 )அவருடைய மகன் அய்யப்பன் ஆகியோர் மனு கொடுக்க வந்திருந்தனர். அவர்கள் திடீரென குறைதீர்வு கூட்டம் நடந்த காயிதே மில்லத் அரங்கு முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது அனுராதா அவருக்கு சொந்தமான வீட்டை அவருடைய மகள் மருமகன் ஏமாற்றி எழுதி வாங்கிக் கொண்டதாகவும் அதனால் அவரும் அவருடைய மகனும் வீடு இல்லாமல் தவிப்பதாக தெரிவித்தார்.

    மேலும் அவருடைய மகள் ஏமாற்றி வாங்கிய வீட்டை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் .

    போலீசார் அவரை சமாதானம் செய்தனர். இதனையடுத்து அனுராதா கலெக்டரிடம் மனு கொடுத்துவிட்டு சென்றார்.

    குடியாத்தம் வங்கி அருகே 10 ரூபாய் நோட்டுகளை வீசி ரூ.50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபரை போலீசார் கைது செய்தனர்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த பரதராமி அங்கனாம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன் நேதாஜி (வயது21). வீட்டிலிருந்தே படித்து வருகிறார்.

    விவசாயம் செய்து வருகிறார். நேற்று மதியம் பரதராமியில் உள்ள இந்தியன் வங்கி கிளைக்கு சென்று வங்கி கணக்கில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் எடுத்துக் கொண்டு தனது பைக் டேங்க் சீட் கவரில் ரூ.50 ஆயிரம் பணத்தை வைத்து கொண்டு வீட்டுக்கு புறப்பட்டுள்ளார்.

    வங்கியில் இருந்து சற்று தொலைவு சென்ற நிலையில் மர்மநபர் ஒருவர் கீழே பத்து ரூபாய் நோட்டுகள் கீழே சிதறிக் கிடப்பதாகவும், உங்களுடையதா? என கேட்டுள்ளார்.

    இதனையடுத்து நேதாஜி வண்டியை நிறுத்திவிட்டு அந்த பத்து ரூபாய் நோட்டுகளை எடுத்துள்ளார். அதன் பின்னர் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சற்று தொலைவில் உள்ள வீட்டுக்கு வந்தார். அப்போது பார்க்கும் போது மோட்டார் சைக்கிள் சீட் கவரில் வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை காணவில்லை. மர்ம நபர்கள் கவனத்தை திருப்பி ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது.

    இதுகுறித்து உடனடியாக நேதாஜி பரதராமி போலீசில் புகார் செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் , பரதராமி சப்-இன்ஸ்பெக்டர் சத்தியவாணி ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரதராமியில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் ஆந்திர மாநில எல்லை வருகிறது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் சிலர் அடிக்கடி வங்கிக்கு வரும் நபர்களை நோட்டமிட்டு அவர்கள் கவனத்தை திசை திருப்பி பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அப்பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    போலீசார் தீவிரமாக கண்காணித்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    வாலாஜாவில் பெண் தீக்குளித்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாலாஜா:

    வாலாஜாபேட்டை திருஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சாந்தி (வயது41). கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது.

    இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த சாந்தி கடந்த 16-ந்தேதி வீட்டில் இருந்த மண்எண்ணை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ஜோலார்பேட்டை, கே.வி.குப்பம், திருவலத்தில் ஆசிரியை, நர்ஸ் உள்பட 3 பெண்களிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    ஜோலார்பேட்டை அடுத்த பெரியமோட்டூர், கவுண்டர் வட்டத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ், பெயிண்டர். இவரது மனைவி கோகிலா (வயது 40). இவர் வீட்டில் இருந்தபோது நேற்று இரவு 7 மணியளவில் பைக்கில் வந்த 2 பேர் வழிகேட்பது போல் கோகிலாவிடம் பேச்சு வார்த்தை கொடுத்தனர்.

    அப்போது திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் கோகிலா கழுத்தில் இருந்த 5 பவுன் நகையை பறித்து கொண்டு பைக்கில் வேகமாக தப்பி சென்றுவிட்டனர்.

    கோகிலாவின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் அவர்களை விரட்டி சென்றனர். பைக்கில் சென்ற மர்ம நபர்கள் வழி தெரியாமல் நிலப்பகுதியில் பைக்கை விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் பைக்கை பறிமுதல் செய்து நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    கே.வி.குப்பம் அடுத்த வடுகந்தாங்கல் புதுத்தெரு பகுதியை சேர்ந்தவர் பாலாஜி. இவரது மனைவி நிர்மலா (வயது 44). அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று நிர்மலா வீட்டின் அருகே உள்ள கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்மநபர்கள் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் நிர்மலா அணிந்திருந்த 6 பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பி விட்டனர். இதுகுறித்து கே.வி.குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவலம் அருகே உள்ள விண்ணம்பள்ளி திருவார்பள்ளி கிராமத்தை சேர்ந்த சக்கரவர்த்தி மனைவி ஆஷா (வயது 31). பள்ளிக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக வேலைபார்த்து வருகிறார்.

    நேற்று இரவு பணிக்கு சென்றுவிட்டு பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார். சேர்க்காடு ஏரிக்கரை அருகே வந்தபோது பைக்கில் வந்த 2 பேர் வேகமாக வந்து ஆஷா அணிந்திருந்த 3½ பவுன் தங்க செயினை பறித்து சென்றுவிட்டனர்.

    இதனால் திடுக்கிட்ட அவர் கூச்சலிட்டார். அதற்குள் மர்ம நபர்கள் தப்பி சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து திருவலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    காவேரிப்பாக்கம் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து 1 வயது ஆண் குழந்தை பரிதாபமாக இறந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பனப்பாக்கம்:

    வாலாஜா அடுத்த காவேரிப்பாக்கம் அருகே உள்ள கொண்டாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 28). சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஐஸ்வர்யா. தம்பதியின் மகள் தர்ஷினி (4). ஒரு வயது ஆண் குழந்தை எழிலன்.

    இவர்களது வீட்டின் வாசல் அருகே தண்ணீர் தொட்டி அமைத்துள்ளனர். நேற்று மாலை ஐஸ்வர்யா குழந்தை எழிலனை வீட்டில் தூங்க வைத்துவிட்டு அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.

    அந்த நேரத்தில் கண் விழித்த குழந்தை தவழ்ந்து தண்ணீர் தொட்டி அருகே வந்தது. திடீரென தொட்டிக்குள் தவறி விழுந்து தத்தளித்தது. அப்போது வீடு திரும்பிய ஐஸ்வர்யா குழந்தை தண்ணீர் தொட்டியில் கிடப்பதை கண்டு திடுக்கிட்டு தூக்கினார்.

    உடனடியாக குழந்தையை தூக்கிக்கொண்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மேல்விஷாரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் குழந்தையை சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை எழிலன் இரவு பரிதாபமாக இறந்தான்.

    இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    வீட்டின் அருகே தண்ணீர் தொட்டிகள் இருந்தால் அதனை மூடி வைக்க வேண்டும். குழந்தைகளை தண்ணீர் தொட்டி அருகே விளையாட அனுமதிக்கக் கூடாது என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
    பேரணாம்பட்டு அருகே 18 வயது நிரம்பாத சிறுமி திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

    வேலூர்:

    பேரணாம்பட்டு அருகே உள்ள ஒரு கிராம பகுதியில் 18 வயது நிரம்பாத சிறுமிக்கு திருமணம் நடைபெற உள்ளதாக வேலூர் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அப்பகுதி சமூகநல ஆர்வலர் அன்னபூரணி, சைல்டுலைன் உறுப்பினர் மணிசேகர் மற்றும் மேல்பட்டி போலீசார் துத்திப்பட்டு பகுதியில் விசாரித்தனர்.

    அப்போது பிளஸ்-1 படிப்பை பாதியில் நிறுத்திய 17 வயது சிறுமிக்கு அவருடைய பெற்றோர் எம்.பி.குப்பத்தை சேர்ந்த உறவினர் மகனுக்கு வருகிற 26-ந் தேதி திருப்பதியில் வைத்து திருமணம் நடத்த ஏற்பாடு செய்திருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அதிகாரிகள் 26-ந் தேதி அந்த சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணத்தை நிறுத்தினர். 18 வயது நிரம்பிய பின்னரே பெண்ணிற்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த சிறுமியின் பெற்றோரிடம் எழுதி வாங்கி கொண்டனர்.

    இதுகுறித்து மணமகனின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் அந்த சிறுமியை மீட்டு வேலூர் அல்லாபுரத்தில் உள்ள அரசு பிற்காப்பு இல்லத்தில் தங்க வைத்தனர்.

    திருப்பத்தூர் மற்றும் கணியம்பாடியில் கியாஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    வேலூர்:

    திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கியாஸ் விலை உயர்வை கண்டித்து கியாஸ் சிலிண்டர் மற்றும் அடுப்புகளுக்கு ரோஜா பூ மாலை அணிவித்து நூதன போராட்டம் நடத்தினர்.

    கியாஸ் சிலிண்டர் விலை ரூ.140 அதிகரித்ததை கண்டித்து திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் வேலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில்  மாவட்ட தலைவர் பிரபு தலைமையில் கியாஸ் சிலிண்டர் மற்றும் அடுப்புக்கு ரோஜா பூ மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கணியம்பாடி வட்டார காங்கிரஸ் சார்பில் கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கணியம்பாடி தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் பாபு தலைமை தாங்கினார்.

    கணியம்பாடி வடக்கு வட்டார தலைவர் பழனி முன்னிலை வகித்தார். இதில் வேலூர் மாவட்ட தலைவர் பஞ்சாட்சரம் கலந்து கொண்டு பேசினார். இதில் அரக்கோணம் நகர தலைவர் துரை சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர்கள் விநாயகம், பொன். நடராஜன், மாவட்ட துணை தலைவர் சிதம்பரம், மாவட்ட பொதுச்செயலாளர் மணி, அரக்கோணம் நகர பொருளாளர் லவக்குமார், மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ரவி, கம்ம சமுத்திரம் மணி, நஞ்சுகொண்டபுரம் கார்த்தி சிவகுமார் கீழ்அரசம்பட்டு, ஏழுமலை, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ஜோலார்பேட்டை அருகே டேங்க் ஆபரேட்டர் அடித்து கொலை செய்யப்பட்டார். கள்ளக்காதலி ஆசைப்பட்டதால் கொலை செய்தேன் என்று கைதான மேஸ்திரி போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே சின்ன மூக்கனூரை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் ரமேஷ் (43). டேங்க் ஆபரேட்டர். இவரது மனைவி நதியா (37). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ரமேஷ் கடந்த 4-ந்தேதி தாமலேரிமுத்தூர் பாட்டாளி நகரில் உள்ள டாஸ்மாக் கடை அருகே படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இது தொடர்பாக ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ் மனைவி நதியா, அவரது தம்பி அரவிந்தன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த கணபதி என்பவரை தேடி வந்தனர்.

    ஜோலார்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஜோலார்பேட்டை பஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த கணபதியை கைது செய்தனர்.

    ரமேஷ் மனைவி நதியா சித்தாளாக என்னிடம் வேலை செய்து வந்தார்.எங்கள் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.

    ரமேஷ் அடிக்கடி குடித்துவிட்டு ஊதாரியாக சுற்றிவந்தார். இதனால் ரமேசுக்கும், நதியாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நதியாவின் சகோதரர் அரவிந்தன் மனைவியிடம் ரமேஷ் செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார்.

    இதனால் அரவிந்தனுக்கும், ரமேசுக்கும் விரோதம் ஏற்பட்டது. ரமேசின் நடவடிக்கை மோசமாக இருந்து வந்தது.

    இதனால் அரவிந்தனும் நதியாவும் சேர்ந்து ரமேசை கொலை செய்ய திட்டமிட்டனர். என்னிடம் இது சம்பந்தமாக கூறினர். நதியா ஆசைப்பட்டதால் கொலைக்கு நான் சம்மதித்தேன்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த ரமேசை அரவிந்தன் செல்போன் மூலம் குடிக்க அழைத்தான். இதை நம்பி வந்த ரமேசை, பாட்டாளி நகரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு அழைத்து சென்று குடிக்க வைத்து ரமேசை கத்தியால் வெட்டி கொலை செய்தோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து கணபதியை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். 

    ×