என் மலர்tooltip icon

    வேலூர்

    விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை கலெக்டர் தினகரன் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வாங்கி குவித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
    வேலூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா இரும்புலி கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 31). விவசாயி. இவர் தனது பூர்வீக நிலத்தை கடந்த ஆண்டு அவரது பெயருக்கு மாற்றும்போது முத்திரைதாள் கட்டணம் குறைவாக செலுத்தியிருந்தார். இதுதொடர்பான விசாரணைக்காக ரஞ்சித்குமார், வேலூரில் உள்ள முத்திரைத்தாள் கட்டண அலுவலகத்துக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தார்.

    அப்போது அங்கிருந்த தனித்துணை கலெக்டர் தினகரன் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் நிலப்பத்திரத்தை விடுவிக்கிறேன் என்று கூறி உள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ரஞ்சித்குமார் இதுகுறித்து வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூ.50 ஆயிரத்தை ரஞ்சித்குமாரிடம் வழங்கினர்.

    போலீசார் கூறியபடி, ரஞ்சித்குமார் ரசாயனம் தடவிய பணத்தை துணை கலெக்டரிடம் வழங்கினார். அதனை பெற்றுக்கொண்டு காரில் சென்ற துணை கலெக்டர் தினகரனையும் (வயது 47), அவரது டிரைவர் ரமேஷ்குமார் (45) என்பவரையும் லஞ்சஒழிப்பு போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    மேலும் துணை கலெக்டர் வீட்டில் நடந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.76 லட்சத்து 64 ஆயிரத்து 600 மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. லஞ்சப்பணம் மற்றும் கணக்கில் வராத பணம் என்று ரூ.79 லட்சத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் வேலூர் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியதாவது:-

    திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூரை சேர்ந்த துணை கலெக்டர் தினகரன் கடந்த 2001-ம் ஆண்டு அரசுப்பணியில் சேர்ந்துள்ளார். வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் சுமார் 19 ஆண்டுகள் பணிபுரிந்திருக்கிறார். கடந்த 2015-ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்ட கேபிள் டி.வி. தாசில்தாராக பணியாற்றியபோது சில இணைப்புகளை தனியாருக்கு கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார்.

    இதுதொடர்பாக திருவண்ணாமலை லஞ்சஒழிப்பு போலீசார் 2018-ம் ஆண்டு தினகரன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையே 2018-ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாசில்தாராக பணிபுரிந்தவர் அங்கிருந்து துணை கலெக்டராக பதவி உயர்வு பெற்று வேலூருக்கு வந்தார்.

    சுமார் 1¼ ஆண்டுகள் முத்திரைத்தாள் கட்டண துணை கலெக்டராக பணியாற்றி உள்ளார். இந்த காலக்கட்டத்தில் தான் அவர் முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வரும் விவசாயிகளிடம் உரிய பணத்தை பெறாமல், ஏராளமாக லஞ்சம் பெற்றுள்ளார். அவற்றில் ஒரு பகுதியை வீட்டில் இரும்பு பெட்டியில் பதுக்கி வைத்துள்ளார். அந்த பணத்துக்கு உரிய கணக்கை அவரால் காட்ட முடியவில்லை.

    பணம்

    இதைத்தவிர லஞ்சப்பணத்தில் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் விவசாய நிலங்கள், வீட்டுமனைகள் வாங்கி குவித்துள்ளார். அதுகுறித்த விவரங்களை சேகரித்து வருகிறோம். அவர் வாங்கி குவித்த சொத்துகள் கோடிக்கணக்கில் இருக்கும். மேலும் அவருடைய வீட்டில் இருந்து சொத்து பத்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    முத்திரைத்தாள் கட்டணம் தொடர்பாக பல விவசாயிகளிடம் தினகரன் லஞ்சம் பெற்றுள்ளார். இது தொடர்பாக அந்த அலுவலக ஊழியர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளோம்.

    மேலும் குடியாத்தம் வருவாய் கோட்ட பகுதிகளில் காளைவிடும் திருவிழா அனுமதி அளிப்பது தொடர்பாக லஞ்சம் பெற்றாரா என்பது குறித்து விழாக்குழுவினரிடம் விசாரணை நடத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    வேலூர், காட்பாடியில் ஷோரூம்களின் ‌ஷட்டரை உடைத்து ரூ.45 லட்சம் மதிப்பிலான செல்போன்களை கொள்ளையர்கள் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    வேலூர்:

    வேலூர்-காட்பாடி சாலையில் உள்ள ஒரு செல்போன் ஷோரூமில் இரவு வேலை நேரம் முடிந்ததும் அதனை ஊழியர்கள் பூட்டிவிட்டு சென்றனர். இந்த நிலையில் நேற்று காலை 2 அடி உயரத்தில் ஒரு நபர் உள்ளே செல்லும் வகையில் ஷோரூம் ‌ஷட்டர் உடைக்கப்பட்டு திறக்கப்பட்டிருந்தது.

    இதைப்பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த 70 நவீன செல்போன்கள் திருடப்பட்டிருந்தது.

    இது குறித்து வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    போலீசார் கூறுகையில் நள்ளிரவு நேரத்தில் ‌ஷட்டரை மர்மநபர்கள் நவீன கருவிகள் மூலம் 2 அடி உயர்த்தி சிறு வழி ஏற்படுத்தி இந்த சம்பவத்தை அரங்கேற்றி உள்ளதாக தெரியவருகிறது. அங்குள்ள கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்துள்ளது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து முறையான புகார் வரவில்லை. எனினும் இந்த சம்பவத்தில் வடமாநில கொள்ளையர்கள் ஈடுபட்டுள்ளார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

    இதேபோல் காட்பாடி சித்தூர் சாலையில் உள்ள ஒரு ஷோரூமிலும் ‌ஷட்டரை உடைத்த கொள்ளையர்கள் உள்ளே சென்று செல்போன்களை கொள்ளையடித்து கொண்டு தப்பி விட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் திருட்டு நடந்த இடத்தை பார்வையிட்டனர்.

    கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கொள்ளையர்கள் ஷோரூமின் ‌ஷட்டரை உடைத்து 58 செல்போன்களை திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

    இது குறித்து காட்பாடி போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த இரு செல்போன் ஷோரூம்களில் திருடப்பட்ட செல்போன்களின் மதிப்பு ரூ.45 லட்சத்துக்கு மேல் இருக்கும் என மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அரக்கோணம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அரக்கோணம்:

    அரக்கோணம் அருகே நாகவேடு கிராமத்தில் கடந்த 6 மாதமாக சரிவர தண்ணீர் வரவில்லை. இதனால் நேற்று நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அரக்கோணம் நெமிலி சாலையில் மறியல் செய்தனர்.

    சம்பவ இடத்திற்கு நெமிலி தாசில்தார் சுரேஷ், சவுந்தர்ராஜன், தாலுகா போலீஸ், அரக்கோணம் சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், மற்றும் போலீசார் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று சாலை மறியல் செய்தவர்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை செய்தனர்.

    உடனடியாக தண்ணீர் வருவதற்கு ஏற்பாடு செய்வதாக கூறி இதன்பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.

    இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திருப்பத்தூர், வேலூர், அரக்கோணம், ராணிப்பேட்டை, வாணியம்பாடி ஆகிய 5 கல்வி மாவட்டங்களில் உள்ள 274 உயர்நிலைப் பள்ளிகளில் பிளஸ்-2 படிக்கும் 40 ஆயிரத்து 531 மாணவ- மாணவிகள் பொதுத்தேர்வு எழுதுகிறார்கள்.
    வேலூர்:

    தமிழ்நாடு முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் மாதம் 2-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

    தேர்வுக்கான வினாத்தாள் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வுக்கான முன்னேற்பாடுகளை, கல்வி அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகின்றனர்.

    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், வேலூர், அரக்கோணம், ராணிப்பேட்டை, வாணியம்பாடி ஆகிய 5 கல்வி மாவட்டங்கள் உள்ளன.

    இந்த மாவட்டங்களில் உள்ள 274 உயர்நிலைப் பள்ளிகளில் பிளஸ்-2 படிக்கும் 40 ஆயிரத்து 531 மாணவ- மாணவிகள் பொதுத்தேர்வு எழுதுகிறார்கள். அவர்கள் தேர்வு எழுதுவதற்காக மொத்தம் 171 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையத்திலும் தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளராக பணியாற்றுபவர்கள்.

    தேர்வு மையங்களைக் கண்காணிக்கவும், காப்பியடிப்பவர்களை பிடிக்கவும் 350 பேர் அடங்கிய பறக்கும் படை நிலையான படை அமைக்கப்பட்டு உள்ளது. அதுதவிர கலெக்டர், முதன்மைக்கல்வி அதிகாரி, மாவட்டக் கல்வி அதிகாரிகள் மற்றும் வருவாய் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மையங்களை கண்காணிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்துக்கான வினாத்தாள்கள் ஏற்கனவே வந்து சேர்ந்து விட்டன. வினாத்தாள்கள் 16 இடங்களில் தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டு, அந்த அறைக்கதவுகள் பூட்டி சீல் வைக்கப்பட்டு உள்ளன. அத்துடன் அந்த அறையின் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அந்த வளாகத்திற்குள் எந்தக் காரணத்தைக் கொண்டும் தனி நபர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். வினாத்தாள்கள் 44 வழித்தடத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்படும்.

    தமிழ் பாடத்துக்கான தேர்வு வருகிற 2-ந்தேதி நடக்கிறது. தேர்வு தொடங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு மாணவ-மாணவிகள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். சரியாக காலை 10 மணிக்கு மாணவ-மாணவிகளுக்கு வினாத்தாள்கள் வழங்கப்படும்.

    முதல் 10 நிமிடம் கேள்வித்தாளை படித்துப் பார்ப்பதற்கும், பின்னர் விடைத்தாளை பூர்த்தி செய்வதற்கு 5 நிமிடமும் அனுமதி வழங்கப்படும். தேர்வுகள் காலை 10.15 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிவரை நடைபெறும். தேர்வு மையங்களில் இருந்து முன் கூட்டியே மாணவர்கள் வெளியேறக்கூடாது.

    அனுமதிக்கப்பட்ட நேரம் முழுவதும் தேர்வு மையத்தில் மாணவர்கள் இருக்க வேண்டும்.

    மாணவ-மாணவிகள் தேர்வு மையத்தில் காப்பி அடிக்கவோ, மற்றவர்கள் விடைத்தாளை பார்த்து எழுதுவது போன்ற தவறான செயல்களில் ஈடுபட முயற்சிக்க வேண்டாம். மீறி தவறாக நடக்க முயன்றால், நிச்சயமாக கண்காணிப்பாளர்களால் கையும், களவுமாகப் படிபடுவதுடன், தேர்வு மையத்தை விட்டு வெளியேற்றப்படுவார்கள். மாணவர்கள் தன்னம்பிக்கையோடு தேர்வு எழுதிட வேண்டும்.

    இவ்வாறு மாவட்ட கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
    திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக வேலூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பேரணி நடைபெற்றது.
    வேலூர்:

    வேலூரில் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பாஜக சார்பில் இன்று பேரணி நடைபெற்றது. வேலூர் மாவட்ட பா.ஜ.க சார்பில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரத்தை கண்டித்தும் பேரணி நடந்தது.

    வேலூர் காகிதப்பட்டறை திரவுபதி அம்மன் கோவில் திடலில் இருந்து பேரணி தொடங்கியது. வேலூர் மாவட்ட தலைவர் தசரதன் தலைமை தாங்கினார்.

    மாநில பொதுச்செயலாளர் பொன் பால கணபதி பேரணியை தொடங்கி வைத்தார். மாவட்ட துணை தலைவர் ஜெகன்நாதன், பாபு, பாஸ்கர், பொருளாளர் மனோகரன் மாவட்ட செயலாளர்கள் ஏழுமலை, சரவணகுமார், மண்டல தலைவர் ஜெகன்மோகன், சீனிவாசன், கமல விநாயகம், நந்தகுமார் உள்பட 500க்கும் மேற்பட்டோர் இந்த பேரணியில் பங்கேற்றனர்.

    வேலூர் அருகே அரசு போக்குவரத்து கழக ஊழியர் வீட்டில் 9 பவுன் நகைகளை திருடிய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் அடுத்த பெரிய சேக்கனூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் தீனதயாளன் (வயது 52). இவர் வேலூர் ரங்காபுரத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு அதேபகுதியில் உள்ள அவரது மற்றொரு வீட்டுக்கு குடும்பத்துடன் தூங்கச் சென்றார். நேற்று காலை எழுந்து தனது வீட்டுக்கு சென்று பார்த்தபோது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் அறை முழுவதும் சிதறி கிடந்தது. பீரோவில் இருந்த 9 பவுன் நகைகள் திருட்டு போய் இருந்தது. வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து அவர் அரியூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அசோக், வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன.

    இதுகுறித்து தீனதயாளன், போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
    உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குடியாத்தம் தி.மு.க. எம்.எல்.ஏ. காத்தவராயன் இன்று காலமானார்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் (தனி) தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் காத்தவராயன்.

    தி.மு.க.வை சேர்ந்த இவர் கடந்த ஆண்டு மே மாதம் 18 தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் குடியாத்தம் தொகுதியில் நின்று வெற்றி பெற்றவர்.

    இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. பேரணாம்பட்டு சின்ன பஜார் வீதியில் சகோதரர் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.



    இந்த நிலையில் அவருக்கு இருதயத்தில் பிரச்சனை ஏற்பட்டது. அதற்காக சிகிச்சை எடுத்து வந்தார். அது குணமாகாததால் கடந்த மாதம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    டாக்டர்கள் தொடர் சிகிச்சை அளித்தும் அவரது உடல்நிலை சீரடையவில்லை. அவரது உடல் மிகமோசமான கட்டத்தில் இருப்பதாக மருத்துவ குழுவினர் நேற்று எம்.எல்.ஏ.வின் உறவினர்களை அழைத்து தகவல் கூறினார்கள். இதனை கேட்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

    இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை காத்தவராயன் எம்.எல்.ஏ.வின் உடல்நிலை மேலும் மோசம் அடைந்தது. அவரது உயிரை காப்பாற்ற டாக்டர்கள் போராடினார்கள். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.

    காலை 9.30 மணிக்கு காத்தவராயன் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 59. அவரது மரணச் செய்தி கேட்டதும் தி.மு.க. மூத்த தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    தி.மு.க. நிர்வாகிகள் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். அவரது உடல் சொந்த ஊரான போரணம்பட்டுக்கு எடுத்து செல்லப்படுகிறது.

    அங்கு நாளை (சனிக் கிழமை) இறுதி சடங்குகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    குடியாத்தம் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காத்தவராயன் 9 மாதங்களே எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். திடீரென ஏற்பட்ட இருதய நோய் அவரது மரணத்துக்கு காரணமாகி விட்டது.

    இதன் காரணமாக குடியாத்தம் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு 2 எம்.எல்.ஏ.க்களை அந்த தொகுதி பறிகொடுத்துள்ளது.

    சென்னை திருவொற்றியூர் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த கே.பி.பி.சாமி உடல் நலக்குறைவு காரணமாக நேற்று மரணம் அடைந்தார். இந்த நிலையில் மேலும் ஒரு தி.மு.க. எம்.எல்.ஏ. இன்று மரணம் அடைந்து இருப்பது தி.மு.க.வினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    சட்டசபையில் தி.மு.க. வுக்கு 100 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். கே.பி.பி.சாமி மரணம் காரணமாக அது 99 ஆக குறைந்து இருந்தது. தற்போது குடியாத்தம் தி.மு.க. எம்.எல்.ஏ. காத்தவராயன் மரணம் அடைந்ததால் சட்டசபையில் தி.மு.க.வின் பலம் 98 ஆக குறைந்து விட்டது.

    காத்தவராயன் 1961-ம் ஆண்டு ஜூலை மாதம் 8-ந்தேதி பிறந்தார். 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவருக்கு பெரிய தம்பி, சின்ன தம்பி, ஜெய்சங்கர் என்ற சகோதரர்கள், செல்வி என்ற சகோதரி உள்ளனர்.

    1980-ம் ஆண்டு தி.மு.க. வின் அடிப்படை உறுப்பினராக சேர்ந்தார். 1984-ம் ஆண்டு பேரணாம்பட்டு நகர தி.மு.க. இளைஞரணி அமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.

    1986-ம் ஆண்டில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை பெற்றவர்.

    பின்னர் 1987-ல் பேரணாம்பட்டு ஒன்றிய தி.மு.க. இளைஞரணி அமைப்பாளராக இருந்தார்.

    1990-ல் மாவட்ட பிரதிநிதி. 2013-ம் ஆண்டில் வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. துணை செயலாளராக நியமிக்கப்பட்டார்.

    2011- ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று  பேரணாம்பட்டு நகராட்சி தலைவராக இருந்தார்.

    வேலூர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் துரைமுருகனுடன் இணைந்து பல்வேறு கட்சி பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

    பேராணாம்பட்டு தனி தொகுதியாக இருந்த போதும் மற்றும் தொகுதி சீரமைப்புக்கு பின்னர் குடியாத்தம் தனி தொகுதியாக அறிவிக்கப்பட்ட பிறகும் தொடர்ந்து 8 முறை தி.மு.க.வில் போட்டியிட சீட் கேட்டார்.

    9-வது தடவையாக அவருக்கு இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் அந்த பதவியில் முழுமையாக இருக்க இயலாமல் மரணம் அவரை வீழ்த்தி விட்டது.

    மே மாதம் நடந்த குடியாத்தம் தொகுதி இடைத்தேர்தலில் கிடைத்த ஓட்டு விவரம்:-

    (தி.மு.க.)- 1,06,137

    (அ.தி.மு.க.)- 78,296

    (அ.ம.மு.க.)- 8,186

    (நாம்தமிழர்)- 4,670

    (மக்கள் நீதிமய்யம்)-3,287.
    குடியாத்தம் அருகே 10-ம் வகுப்பு மாணவிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். சிறுமியை மீட்டு அரசு பிற்காப்பு இல்லத்தில் தங்க வைத்தனர்.
    வேலூர்:

    குடியாத்தம் பகுதியில் பள்ளி மாணவிக்கு திருமணம் நடைபெற இருப்பதாக சைல்டுலைன் (1098) எண்ணிற்கு நேற்று முன்தினம் புகார் வந்தது. அதன்பேரில் வேலூர் மாவட்ட சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் தேவேந்திரன், சமூக நலத்துறை ஊழியர்கள் பிரியங்கா, ரம்யா, சைல்டுலைன் அணி உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் குடியாத்தம் போலீசார் ஆகியோர் இரவு 10 மணியளவில் அப்பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது, 10-ம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுமிக்கும், பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் நேற்று அதிகாலை வாலிபரின் வீட்டில் வைத்து திருமணம் நடைபெற இருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அதிகாரிகள் அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து 18 வயது நிரம்பிய பின்னரே சிறுமிக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த சிறுமியின் பெற்றோரிடம் எழுதி வாங்கிக் கொண்டனர்.

    பின்னர் அதிகாரிகள், சிறுமியை மீட்டு வேலூர் அல்லாபுரத்தில் உள்ள அரசு பிற்காப்பு இல்லத்தில் தங்க வைத்தனர்.

    குடியாத்தம் அருகே குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த பரதராமி ரங்கசமுத்திரத்தை சேர்ந்தவர் டெல்லிகுமார் (28). ஆந்திர மாநிலம் பங்காரு பாளையம் அடுத்த ராகிமான பெண்டாவை சேர்ந்த ரவி மகள் விஜயகுமாரி (24).

    டெல்லி குமாருக்கும், விஜயகுமாரிக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    நேற்று முன்தினம் மீண்டும் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த விஜயகுமாரி வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    இதனை கண்ட அவரது உறவினர்கள் விஜயகுமாரியை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து குடியாத்தம் டி.எஸ்.பி. சரவணன், பரதராமி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
    ஆம்பூர், வாணியம்பாடியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக முஸ்லிம்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக மேலும் 36 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    ஆம்பூர்:

    குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    வாணியம்பாடி ஆற்றுமேடு பகுதியில் இன்று 9-வது நாளாக முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு நேரங்களில் செல்போன்களில் ஒரே நேரத்தில் அனைவரும் வெளிச்சத்தை ஒளிர விட்டபடி குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினர்.

    மேலும் வாயில் கருப்பு துணி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இது தொடர்பாக 50 பேர் மீது வாணியம்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனாலும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஆற்று மேட்டுப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

    ஆம்பூர் பூந்தோட்டம் ஓ.ஏ.ஆர். தியேட்டர் அருகில் நேற்று முஸ்லிம்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம் தொடர்ந்து நடத்துவோம் என தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 36 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் போராட்டக்காரர்கள் அமைத்து இருந்த கூடாரத்தை அகற்றினர். அங்கிருந்த ஸ்பீக்கர் மற்றும் நாற்காலிகளை போலீசார் கைப்பற்றி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இன்று காலையிலும் முஸ்லிம்கள் அங்கு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு தங்களின் எதிர்ப்பை தெரிவிக்க நினைக்கும் அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகள் முறையாக உரிய அதிகாரியிடம் விண்ணப்பம் கொடுத்து முன் அனுமதி பெறவேண்டும். அனுமதி பெறாமல் செயல்படுபவர்கள் மீது குற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

    சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுபவர்கள் பற்றி 9442992526 என்ற எண்ணில் வாட்ஸ்-அப் மூலம் புகார் தெரிவிக்கலாம் என திருப்பத்தூர் மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர்.

    வாணியம்பாடியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 50 பேர் மீது ஏற்கனவே வழக்கு பதிவு செய்த நிலையில் இன்று ஆம்பூரில் மேலும் 36 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    வேலூரில் உள்ள பள்ளியில் சிறுமிக்கு மிட்டாய் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த நபர் குறித்து விசாரிக்க சென்ற பெற்றோரிடம் பள்ளி நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    வேலூர்:

    வேலூர் அண்ணா சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8 வயது சிறுமி 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று பள்ளியின் மதிய உணவு இடைவேளையின்போது சிறுமியிடம் ஒருவர் சென்று மிட்டாய் வாங்கி தருவதாக ஏமாற்றி கழிவறைக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் சென்று கேட்டுள்ளனர். அப்போது அங்கு ஏற்பட்ட தகராறில் பள்ளி நிர்வாகத்தினர் அவர்களை ஆபாசமாக பேசியதாக தெரிகிறது. இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.

    பின்னர் சிறுமியின் பெற்றோர் இந்த சம்பவம் குறித்து வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் புனிதா, போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட நபரை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர் கோட்டை முன்பு உள்ள பூங்காவில் மர்ம நபர்கள் தீ வைத்ததால் பல ஏக்கர் புல்வெளி எரிந்து நாசமானது.

    வேலூர்:

    வேலூர் பழைய மீன் மார்க்கெட் எதிரே கோட்டை முன்பு மைதானமாக செயல்பட்டு வந்த இடம் 5 ஏக்கர் பரப்பளவில் பூங்காவாக மாற்றப்பட்டது. இதில் மண் கொட்டப்பட்டு செழித்து வளரக்கூடிய புற்கள் நடப்பட்டன. இவை அனைத்தும் செழிப்பாக வளர்ந்து தரையில் பச்சை நிற போர்வை போர்த்தியது போல பசுமையாக காட்சியளித்தது.

    தற்போது வேலூரில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக பூங்காவில் உள்ள புல்வெளிகளில் பல இடங்களில் பட்டுப்போய் இருந்தன.

    இந்த நிலையில் இன்று காலை மர்ம நபர்கள் புல்வெளிக்கு தீவைத்தனர். காற்றின் வேகத்தில் வேகமாக பரவிய தீ புல்வெளிகளில் பற்றி எரிந்தது.

    இதுபற்றி வேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து பூங்காவில் பரவிய தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இந்த அசம்பாவிதத்தால் பூங்காவில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் இருந்த புல்வெளிகள் கருகி நாசமானது.கடந்த சில நாட்களாக வேலூரில் உள்ள மலைகளுக்கு மர்ம கும்பல் தீ வைத்து வருகின்றனர். இந்த நிலையில் நகரின் மத்தியில் உள்ள பூங்காவில் இன்று காலை தீ வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தீ வைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ×