என் மலர்
வேலூர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை கோடியூரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 32) இவர் கோடியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே செல்போன் கடை நடத்தி வருகிறார் .
நேற்று இரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு சென்றார் இன்று காலை செல்போன் கடை பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து ரமேசுக்கு தகவல் தெரிவித்தனர்.
ரமேஷ் கடைக்கு வந்து பார்த்தபோது கடையில் இருந்த 12 செல்போன்கள் ரூ.20 ஆயிரம் பணம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து ரமேஷ் ஜோலார்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கடையில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
அரியூர் அருகே உள்ள புலிமேடு கிராமம் கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவருடைய மகன் ரஞ்சித்குமார் (வயது21) மெக்கானிக் வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் அந்த பகுதியில் நடந்த மாடு விடும் விழாவிற்கு சென்று விட்டு தாமதமாக வீட்டுக்கு வந்தார்.
இதனை கண்டித்து அவரது தந்தை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ரஞ்சித்குமார் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்துக் கொண்டு அருகிலிருந்த பூந்தோப்புக்கு சென்று பூச்சி மருந்தை குடித்து விட்டார்.
மேலும் இது குறித்து அவருடைய நண்பருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். அவரது நண்பர் சம்பவ இடத்திற்கு சென்று ரஞ்சித்குமாரை மீட்டு அரியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ரஞ்சித்குமார் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அரியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் பாகாயத்தில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலை அகலப்படுத்தப்பட்டு சாலையின் நடுவில் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இரவு நேரங்களில் வரும் வாகனங்கள் இந்த தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
நேற்று ஆற்காடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட கர்ப்பிணியை பிரசவத்திற்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆம்புலன்சை டிரைவர் சரவணன் (வயது 36) என்பவர் ஓட்டி வந்தார்.
கர்ப்பிணி பெண்ணுடன் அவரது தாயார் பிரம்மதேசத்தை சேர்ந்த தெய்வானை என்பவரும் வந்தார்.
வேலூர் பாகாயம் சாலையில் சென்ற போது நடுவே அமைக்கப்பட்டு வரும் தடுப்பு சுவரில் ஆம்புலன்ஸ் மோதியது. இந்த விபத்தில் டிரைவர் சரவணன் மற்றும் அதில் வந்த தெய்வானை படுகாய மடைந்தனர்.அதிர்ஷ்டவசமாக கர்ப்பிணிக்கு காயம் ஏற்படவில்லை. பாகாயம் போலீசார் அவர்களை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டிரைவர், காயமடைந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பிரசவ வார்டில் சேர்க்கப்பட்ட கர்ப்பிணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
இந்த சம்பவத்தால் வேலூர் திருவண்ணாமலை சாலையில் இரவில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து தொடர்பாக பாகாயம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பள்ளிகொண்டா அருகே உள்ள பள்ளி குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் மகாதேவன் (வயது 52). பூமலையில் இவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது.
இதில் கரும்பு, வேர்க்கடலை பயிரிட்டுள்ளார். இரவு நேரங்களில் மலையிலிருந்து வரும் காட்டு பன்றிகள் கீரிப்பிள்ளை உள்ளிட்ட விலங்குகள் விவசாய நிலத்திற்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்கின்றன.
இதனை தடுக்க மகாதேவன் அனுமதி இல்லாமல் திருட்டுத்தனமாக விவசாய நிலத்தை சுற்றி மின்வேலி அமைத்தார்.
இந்த நிலையில் பள்ளிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த சரவணன் மகன் சந்தோஷ்குமார் (22) கூலித்தொழிலாளி. இன்று காலை பூமலையில் உள்ள அவரது விவசாய நிலத்திற்கு சென்றார். மகாதேவன் நிலத்தின் வழியாக சென்றபோது திருட்டுத்தனமாக வைத்திருந்த மின்வேலியில் சிக்கினார். அப்போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட சரவணன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
இன்று காலை சரவணன் இறந்து கிடந்ததை கண்டு திடுக்கிட்ட அப்பகுதி பொதுமக்கள் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். கிராம நிர்வாக அலுவலர் ரஞ்சித்குமார் இதுபற்றி பள்ளிகொண்டா போலீசில் புகார் அளித்தார்.
இன்ஸ்பெக்டர் மனோன்மணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சந்தோஷ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து அனுமதியின்றி மின்வேலி அமைத்த மகாதேவனை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அனுமதியின்றி திருட்டுத்தனமாக மின் வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆந்திராவில் இருந்து வடமாநில லாரிகள் மூலம் வேலூருக்கு மணல் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் நேற்றிரவு பாகாயம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது சரக்கு வாகனம் போல் தார்பாய் போட்டு மூடியபடி வந்த வடமாநில லாரியை மடக்கி சோதனையிட்டனர்.
அதில் ஆந்திராவில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. தனிப்படை போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர்.
அதனை பாகாயம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் லாரி டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் அடுத்த மேல்மொணவூரை சேர்ந்தவர் குமரன். இவரது மனைவி ஜெயந்தி (வயது35). இந்த தம்பதிக்கு சுவேதா (7), நிஷா (5) என்ற 2 மகள்களும், ஜீவத் (6) மகனும் உள்ளனர்.
ஜெயந்தி இன்று வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு 3 குழந்தைகளுடன் வந்தார். கலெக்டர் அலுவலக வாசலில் அவர் கேனில் கொண்டு வந்திருந்த மண்எண்ணையை எடுத்து குழந்தைகள் மற்றும் அவரது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசார் தடுத்து நிறுத்தி தண்ணீர் ஊற்றி அவர்களை மீட்டனர்.
பின்னர் ஜெயந்தி கூறியதாவது:-
என்னுடைய கணவர் குமரன் மேஸ்திரி வேலை செய்து வந்தார். கடந்த 3 ஆண்டுக்கு முன்பு அவரது தலை முடியில் ஜடை ஏற்பட்டது.
இதனையடுத்து புடவை கட்டிக்கொண்டு சாமியார்போல் குறி சொல்லி வருகிறார். அவர் புடவை கட்டி சுற்றி திரிவதால் எனக்கும் எனது குழந்தைகளுக்கும் அவமானமாக உள்ளது.
அவர் புடவை கட்டி சுற்றுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் விட்டு கதறியபடி தெரிவித்தார்.
போலீசார் ஜெயந்திக்கு தண்ணீர் கொடுத்தனர். குழந்தைகளுக்கு டிபன் வாங்கி கொடுத்தனர். தாயுடன் தீக்குளிக்க வந்தது கூட தெரியாமல் பசியில் இருந்த குழந்தைகள் போலீசார் கொடுத்த உணவை வாங்கி சாப்பிட்டனர். போலீசார் ஜெயந்தியை எச்சரிக்கை செய்தும் அறிவுரை கூறியும் அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் வணிக நோக்கத்திற்காக நிலத்தடி நீரை உறிஞ்சுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பெரும்பாலான மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் 300 அடி முதல் 500 அடிக்கும் கீழே சென்றுவிட்டது.
இதையடுத்து சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்யும் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் குடிநீர் உற்பத்தி நிறுவனங்களை மூடி சீல் வைத்து மார்ச் 3-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது.

இதில் காட்பாடி அருகே உள்ள கசம் கண்டிப்பேடு பகுதியில் இயங்கி வரும் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் மகனும் வேலூர் எம்.பி.யுமான கதிர் ஆனந்த் குடும்பத்துக்கு சொந்தமான அருவி என்ற குடிநீர் நிறுவனத்தில் போர்வெல் பம்ப் குழாய் ஆகியவற்றுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இந்த நிறுவனம் கதிர்ஆனந்தின் மனைவி சங்கீதா பெயரில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கதிர்ஆனந்த் எம்.பி. குடும்பத்திற்கு சொந்தமான இந்த நிறுவனம் கடந்த 2003-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. 17 ஆண்டுகளாக இந்த நிறுவனத்தில் இருந்து குடிநீர் போர்வெல் மூலம் உறிஞ்சி விற்பனை செய்து வந்தது அம்பலமாகியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் காவிரி கூட்டுக் குடிநீர் கிராமங்களுக்கு இன்னும் முழுமையாக சென்றடையவில்லை. ஆனால் மாவட்டத்தில் 37 குடிநீர் நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 90 நிறுவனங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
இந்த நிலையில் வேலூர் எம்.பி.யாக உள்ள கதிர் ஆனந்த் குடும்பத்துக்கு சொந்தமான குடிநீர் நிறுவனத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் முத்திரைத்தாள் தனித்துணை கலெக்டர் தினகரன். இவர் போளூர் அருகே உள்ள இரும்புலி கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் குமார் என்ற விவசாயியிடம் அவரது பத்திரத்தை விடுவிக்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டார். இதுபற்றி ரஞ்சித்குமார் வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
கடந்த 27-ந் தேதி இரவு வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே காரில் இருந்தபடி ரஞ்சித்குமாரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை கலெக்டர் தினகரனை லஞ்ச ஒழிப்பு போலீசார் விரட்டி பிடித்து கைது செய்தனர்.
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அவருடைய அறையில் சோதனை நடத்தப்பட்டது. இதில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் பணம் சிக்கியது. மேலும் காட்பாடி அருகே உள்ள தாங்கல் கிராமத்தில் உள்ள துணை கலெக்டர் தினகரன் வீட்டில் சோதனை செய்தனர்.
அங்கு இருந்த டிரங்க் பெட்டியில் கட்டு கட்டாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்த பணம் சிக்கியது. மொத்தம் ரூ.79 லட்சத்து 9 ஆயிரத்து 200 பறிமுதல் செய்தனர்.
மேலும் போளூரில் உள்ள அவரது வீட்டில் நடந்த சோதனையில் அவர் வாங்கிக் குவித்துள்ள சொத்து ஆவணங்கள் சிக்கின. அவற்றையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

தினகரன் 5 வங்கிகளில் வங்கி கணக்கு வைத்துள்ளார். அதில் பல லட்சம் பணம் இருப்பதாக தெரிகிறது. இந்த வங்கி கணக்குகளை முடக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதனையடுத்து வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
மேலும் தினகரன் வாங்கிய சொத்துக்கள் குறித்தும் ஆய்வு செய்துவருகின்றனர். வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பத்திரப் பதிவு அலுவலகங்களில் இதுதொடர்பான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.
தினகரன் கடந்த 2018-ம் ஆண்டு வேலூர் முத்திரைத்தாள் தனித்துணை கலெக்டராக பதவி உயர்வு பெற்று பணிக்கு வந்தார். அவர் பணியில் சேர்ந்த நாள் முதலே லஞ்சம் வாங்குவதில் கை தேர்ந்தவராக செயல்பட்டுள்ளார்.
இதற்காக அவர் முன்கூட்டியே கார் ஒன்றை வாங்கி அதற்கு தனியாக ரமேஷ் குமார் என்பவரை டிரைவராக நியமித்தார். காலையில் காரில் வெளியே செல்லும் தினகரன் மாலையில்தான் அலுவலகத்திற்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
குறிப்பாக அவர் திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகளவில் காரில் சென்று வந்துள்ளார். அலுவலகத்திலும் அல்லது மற்ற இடங்களிலும் இருந்து லஞ்சம் வாங்கினால் எளிதில் சிக்கவைத்து விடுவார்கள் என்பதால் காரில் இருந்தபடியே லஞ்சப் பணம் வசூல் செய்துள்ளார். 2 ஆண்டுகளில் அவர் கோடிக்கணக்கிலான சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார்.
குவித்து வைத்த லஞ்ச பணத்தில் பெண், மது உள்ளிட்ட உல்லாச வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளார்.
தினகரனை சஸ்பெண்டு செய்வதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.
துணை கலெக்டர் தினகரனுக்கு உதவியவர்கள் யார்? என்பது குறித்தும் ரகசியமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதனால் அவருக்கு உதவியாக இருந்த அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர். முழுமையான விசாரணைக்குப் பின்னர் வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பலர் சிக்குவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.
ஆற்காடு:
ஆற்காடு அருகே கலவையில் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்ட அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
தமிழக அரசு காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து இருப்பது மக்களை ஏமாற்றும் வேலை.
ஏற்கனவே அங்கு ஹைட்ரோகார்பன், மீத்தேன் எடுக்கும் திட்டங்களுக்கு அனுமதி கொடுத்து பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.
அதுகுறித்து அரசு எதுவும் சொல்லாமல் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என அறிவித்துவிட்டோம் என கூறுகின்றனர்.
சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதை காரணம் காட்டி நாங்கள் சட்டத்தை மத்திய அரசுக்கு அனுப்பி விட்டோம். அவர்கள் அதை கிடப்பில் வைத்திருக்கிறார்கள் என கூறி மத்திய அரசு மீது பழி போட்டு மக்களை ஏமாற்றுவதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு எடுத்துள்ள தந்திரமான நடவடிக்கை இது.
போராட்டங்கள் நடைபெறுவதற்கு காரணமே தி.மு.க. தான். தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவை பாதிக்கின்ற, மக்களை பாதிக்கின்ற எந்த சட்டங்கள் வருகின்ற போதும் அதை உடனிருந்து கையெழுத்து போட்டு ஆதரிப்பது தி.மு.க.
வாஜ்பாய் ஆட்சியில் கூட்டணியில் இருந்த தி.மு.க. அப்போது கொண்டு வரப்பட்ட குடியுரிமை சட்ட திருத்தத்தை ஆதரித்தது. அதே போல் மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்கள் தமிழகத்தில் வருவதற்கு கையெழுத்து போட்டது தி.மு.க. தான். இவற்றை மறைப்பதற்காகவும், மக்களை ஏமாற்றுவதற்காகவும் போராட்டங்களை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நடத்தி வருகிறார்.
மதச்சார்பற்ற நாட்டில், மதத்தின் அடிப்படையில் சிலருக்கு உரிமை கிடைக்காதது தவறு. குடியுரிமை சட்ட திருத்தத்தால் இலங்கை தமிழர்களும் பாதிக்கப்படுகிறார்கள். மக்களை பாதிக்காத வகையில் மசோதாக்கள் இருக்க வேண்டும்.
இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. பொது தேர்தலில் தோல்வியை சந்திக்கும்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் கூட்டணியில் உள்ள கட்சிகள் இருக்கின்ற இடம் தெரியாமல் போகும். அ.தி.மு.க. ஆட்சியில் உள்ள காரணத்தினாலே சில கட்சிகள் அ.தி.மு.க.வோடு கூட்டணி வைத்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமம் இல்லாமல் செயல்படும் குடிநீர் ஆலைகளை மூடி ‘சீல்’ வைக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிகாரிகள் உரிமம் இல்லாத மற்றும் உரிமத்தை புதுப்பிக்காத தனியார் குடிநீர் ஆலைகளை கண்டுபிடித்து ‘சீல்’ வைத்து வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் 3 ஆலைகள் மட்டுமே நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமம் பெற்றிருப்பதும், 37 ஆலைகள் உரிமம் பெறாமல் இயங்கி வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து உரிமம் பெறாத 37 குடிநீர் ஆலைகளின் ஆழ்துளை கிணறுகளை மூடி ‘சீல்’ வைக்கும்படி கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில் 29 குடிநீர் ஆலைகளில் உள்ள ஆழ்துளை கிணறுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
இந்த நிலையில் 2-வது நாளாக நேற்று மீதமுள்ள 8 குடிநீர் ஆலைகளின் ஆழ்துளை கிணறுக்கு அதிகாரிகள் சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்பாடி அருகே உள்ள உள்ளிப்புதூரில் இயங்கி வரும் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மகனும், தி.மு.க. எம்.பி.யுமான கதிர்ஆனந்துக்கு சொந்தமான குடிநீர் ஆலை நிலத்தடி நீர் எடுக்க அனுமதி பெறாதது தெரிய வந்தது. அந்த ஆலை ஆழ்துளை கிணறுக்கு வருவாய்துறையினர், பொதுப்பணித்துறையினர் சீல் வைத்தனர். தொடர்ந்து மீதமுள்ள 7 ஆலைகளின் குடிநீர் கிணறுகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.
வேலூர்:
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு இன்று தொடங்கியது வருகிற 24-ந் தேதி வரை பிளஸ் - 2 தேர்வு நடக்கிறது.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 369 மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 40 ஆயிரத்து 531 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.
இதற்காக 170 மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இன்று தேர்வு தொடங்கியது. ஒவ்வொரு மையத்திலும் 2 ஆசிரியர்கள் தேர்வு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தவிர தேர்வு மையங்களை கண்காணிக்கவும் காப்பி அடிப்பவர்களை பிடிக்கவும் 200 பேர் அடங்கிய சிறப்பு கண்காணிப்புக் குழு பள்ளிக்கல்வி இயக்குனர் தலைமையில் 10 பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு பணியில் 41 ஆயிரத்து 500 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தமுள்ள 245 அரசு மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 27 ஆயிரத்து 860 பேர் பொதுத் தேர்வு எழுதினர்.
இதற்காக மாவட்டத்தில் 109 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. தனித்தேர்வு எழுதுபவர்களுக்கு 2 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு தேர்வு நடந்தது.
1785 அறை கண்காணிப்பாளர்கள் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 218 பேர் கொண்ட பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தினர்.
தேர்வு மையங்களில் கலெக்டர், முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அனைத்து தேர்வு மையங்களிலும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.
எழுதுபொருட்கள் தவிர மற்ற எதுவும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
பிளஸ் - 1 பொதுத்தேர்வுகள் நாளை மறுதினம் தொடங்கி 27-ந் தேதி முடிவடைகிறது.
இதனால் மேல்நிலைப்பள்ளிகள் பரபரப்பாக காணப்படுகின்றன.
வேலூர், திருவண்ணாமலை மாவட்ட முத்திரைக் கட்டணம் தனித்துணை கலெக்டராக தினகரன் பணியாற்றி வந்தார்.
இவர் போளூரை சேர்ந்த விவசாயி ரஞ்சித்குமாரிடம் பத்திரப்பதிவின்போது நிலத்துக்கு உரிய முத்திரைக் கட்டணம் செலுத்தாத விவகாரத்தில் பத்திரத்தை விடுவிக்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கினார்.
அப்போது வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து, கைது செய்தனர். அன்று இரவும், மறுநாளும் தினகரன் அலுவலகம் மற்றும் வீட்டில் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் கட்டுக்கட்டாக பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
அவர் பதுக்கி வைத்திருந்த 78 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் மற்றும் சொத்து பத்திரங்கள் முக்கிய ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
துணை கலெக்டர் தினகரன் சில நாட்களுக்கு முன்பு ஆய்வுக்குழு அலுவலராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அங்கு பணிக்கு சேராமல், நிலுவையில் உள்ள வழக்குகளை உடனடியாக தீர்ப்பதாக அதற்காக, சம்பந்தபட்டவர்களிடம் லஞ்சம் வாங்கி இந்த பணத்தை குவித்திருக்கிறார். இந்த பணம் அனைத்தும் அவர் கடைசி ஒரு மாதத்தில் லஞ்சமாக வாங்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கைப்பற்றிய கணக்கில் வராத பணத்தை கருவூலத்தில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒப்படைக்கின்றனர்.
வேலூர் கலெக்டர் ஆபீசில் செயல்பட்டு வந்த தினகரன் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் உட்பட மொத்தம் 11 பேரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிக்க உள்ளனர். அதற்கு பிறகு இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உண்டா என்ற முழு விவரம் தெரியவரும்.
மார்ச் மாதத்துக்கு பிறகு 2 ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு வரும் என்று வதந்தி பரவியதால் அதை நம்பிய தினகரன் லஞ்சம் வாங்கியவர்களிடம் 500, 200, 100 ரூபாய் நோட்டுகளையே லஞ்சமாக தரவேண்டும் என்று கட்டாயப்படுத்தி வாங்கியுள்ளார். இந்த பணத்தை தனது வீட்டில் உள்ள டிரங்க் பெட்டியில் பதுக்கி வைத்துள்ளார்.
தினகரனிடம் விசாரணைக்கு பிறகே இன்னும் பலர் இந்த வழக்கில் சிக்குவார்கள். இது தொடர்பாக தினகரனை போலீஸ் காவலில் விசாரிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர்.






