search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    வேலூர், காட்பாடியில் ஷோரூம்களின் ‌ஷட்டரை உடைத்து ரூ.45 லட்சம் செல்போன்கள் திருட்டு

    வேலூர், காட்பாடியில் ஷோரூம்களின் ‌ஷட்டரை உடைத்து ரூ.45 லட்சம் மதிப்பிலான செல்போன்களை கொள்ளையர்கள் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    வேலூர்:

    வேலூர்-காட்பாடி சாலையில் உள்ள ஒரு செல்போன் ஷோரூமில் இரவு வேலை நேரம் முடிந்ததும் அதனை ஊழியர்கள் பூட்டிவிட்டு சென்றனர். இந்த நிலையில் நேற்று காலை 2 அடி உயரத்தில் ஒரு நபர் உள்ளே செல்லும் வகையில் ஷோரூம் ‌ஷட்டர் உடைக்கப்பட்டு திறக்கப்பட்டிருந்தது.

    இதைப்பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த 70 நவீன செல்போன்கள் திருடப்பட்டிருந்தது.

    இது குறித்து வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    போலீசார் கூறுகையில் நள்ளிரவு நேரத்தில் ‌ஷட்டரை மர்மநபர்கள் நவீன கருவிகள் மூலம் 2 அடி உயர்த்தி சிறு வழி ஏற்படுத்தி இந்த சம்பவத்தை அரங்கேற்றி உள்ளதாக தெரியவருகிறது. அங்குள்ள கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்துள்ளது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து முறையான புகார் வரவில்லை. எனினும் இந்த சம்பவத்தில் வடமாநில கொள்ளையர்கள் ஈடுபட்டுள்ளார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

    இதேபோல் காட்பாடி சித்தூர் சாலையில் உள்ள ஒரு ஷோரூமிலும் ‌ஷட்டரை உடைத்த கொள்ளையர்கள் உள்ளே சென்று செல்போன்களை கொள்ளையடித்து கொண்டு தப்பி விட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் திருட்டு நடந்த இடத்தை பார்வையிட்டனர்.

    கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கொள்ளையர்கள் ஷோரூமின் ‌ஷட்டரை உடைத்து 58 செல்போன்களை திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

    இது குறித்து காட்பாடி போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த இரு செல்போன் ஷோரூம்களில் திருடப்பட்ட செல்போன்களின் மதிப்பு ரூ.45 லட்சத்துக்கு மேல் இருக்கும் என மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×