search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆம்பூரில் முஸ்லிம் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    X
    ஆம்பூரில் முஸ்லிம் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆம்பூர், வாணியம்பாடியில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து முஸ்லிம்கள் தொடர் போராட்டம்

    ஆம்பூர், வாணியம்பாடியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக முஸ்லிம்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக மேலும் 36 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    ஆம்பூர்:

    குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    வாணியம்பாடி ஆற்றுமேடு பகுதியில் இன்று 9-வது நாளாக முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு நேரங்களில் செல்போன்களில் ஒரே நேரத்தில் அனைவரும் வெளிச்சத்தை ஒளிர விட்டபடி குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினர்.

    மேலும் வாயில் கருப்பு துணி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இது தொடர்பாக 50 பேர் மீது வாணியம்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனாலும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஆற்று மேட்டுப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

    ஆம்பூர் பூந்தோட்டம் ஓ.ஏ.ஆர். தியேட்டர் அருகில் நேற்று முஸ்லிம்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம் தொடர்ந்து நடத்துவோம் என தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 36 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் போராட்டக்காரர்கள் அமைத்து இருந்த கூடாரத்தை அகற்றினர். அங்கிருந்த ஸ்பீக்கர் மற்றும் நாற்காலிகளை போலீசார் கைப்பற்றி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இன்று காலையிலும் முஸ்லிம்கள் அங்கு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு தங்களின் எதிர்ப்பை தெரிவிக்க நினைக்கும் அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகள் முறையாக உரிய அதிகாரியிடம் விண்ணப்பம் கொடுத்து முன் அனுமதி பெறவேண்டும். அனுமதி பெறாமல் செயல்படுபவர்கள் மீது குற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

    சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுபவர்கள் பற்றி 9442992526 என்ற எண்ணில் வாட்ஸ்-அப் மூலம் புகார் தெரிவிக்கலாம் என திருப்பத்தூர் மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர்.

    வாணியம்பாடியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 50 பேர் மீது ஏற்கனவே வழக்கு பதிவு செய்த நிலையில் இன்று ஆம்பூரில் மேலும் 36 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×