search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகை பறிப்பு
    X
    நகை பறிப்பு

    ஜோலார்பேட்டை அருகே ஆசிரியை, நர்ஸ் உள்பட 3 பெண்களிடம் நகை பறிப்பு

    ஜோலார்பேட்டை, கே.வி.குப்பம், திருவலத்தில் ஆசிரியை, நர்ஸ் உள்பட 3 பெண்களிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    ஜோலார்பேட்டை அடுத்த பெரியமோட்டூர், கவுண்டர் வட்டத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ், பெயிண்டர். இவரது மனைவி கோகிலா (வயது 40). இவர் வீட்டில் இருந்தபோது நேற்று இரவு 7 மணியளவில் பைக்கில் வந்த 2 பேர் வழிகேட்பது போல் கோகிலாவிடம் பேச்சு வார்த்தை கொடுத்தனர்.

    அப்போது திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் கோகிலா கழுத்தில் இருந்த 5 பவுன் நகையை பறித்து கொண்டு பைக்கில் வேகமாக தப்பி சென்றுவிட்டனர்.

    கோகிலாவின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் அவர்களை விரட்டி சென்றனர். பைக்கில் சென்ற மர்ம நபர்கள் வழி தெரியாமல் நிலப்பகுதியில் பைக்கை விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் பைக்கை பறிமுதல் செய்து நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    கே.வி.குப்பம் அடுத்த வடுகந்தாங்கல் புதுத்தெரு பகுதியை சேர்ந்தவர் பாலாஜி. இவரது மனைவி நிர்மலா (வயது 44). அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று நிர்மலா வீட்டின் அருகே உள்ள கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்மநபர்கள் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் நிர்மலா அணிந்திருந்த 6 பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பி விட்டனர். இதுகுறித்து கே.வி.குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவலம் அருகே உள்ள விண்ணம்பள்ளி திருவார்பள்ளி கிராமத்தை சேர்ந்த சக்கரவர்த்தி மனைவி ஆஷா (வயது 31). பள்ளிக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக வேலைபார்த்து வருகிறார்.

    நேற்று இரவு பணிக்கு சென்றுவிட்டு பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார். சேர்க்காடு ஏரிக்கரை அருகே வந்தபோது பைக்கில் வந்த 2 பேர் வேகமாக வந்து ஆஷா அணிந்திருந்த 3½ பவுன் தங்க செயினை பறித்து சென்றுவிட்டனர்.

    இதனால் திடுக்கிட்ட அவர் கூச்சலிட்டார். அதற்குள் மர்ம நபர்கள் தப்பி சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து திருவலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×