search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுமிக்கு கட்டாய திருமணம்
    X
    சிறுமிக்கு கட்டாய திருமணம்

    ராணிப்பேட்டையில் சிறுமிக்கு கட்டாய திருமணம்- 5 பேர் மீது வழக்கு

    சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்தது தொடர்பாக அளித்த புகாரின் பேரில் 5 பேர் மீது மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    ராணிப்பேட்டை:

    திருவள்ளூர் மாவட்டம் பள்ளிபட்டு தாலுகா ஈச்சம்பாடி ராமச்சந்திரா புரம் கிராமத்தை சேர்ந்த ஜெயவேலு. இவரது 17 வயது மகள் பிளஸ் 2 படித்து முடித்திருந்த நிலையில் கல்லூரியில் சேர்ப்பதாக கூறி இவரின் தாயார் லட்சுமி வாலாஜா அருகே உள்ள வள்ளுவம்பாக்கம் கிராமத்துக்கு அழைத்து வந்துள்ளார்.

    அங்கு ஒரு கோவிலில் வைத்து கடந்த ஜூன் மாதம் 13-ந் தேதி வாலாஜா தாலுகா எடப்பாளையம் கிராமத்தை சேர்ந்த மோகன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

    பின்னர் பெண்ணின் பெரியம்மா குப்பம்மாள் என்பவருடன் ஆற்காட்டுக்கு அனுப்பி தங்க வைத்துள்ளனர். திருமணம் பிடிக்காத சிறுமி அங்கிருந்து தப்பிச்சென்று திருப்பதியில் தங்கியுள்ளார். பிறகு தாய் வீடு திரும்பியுள்ளார்.

    இதைத்தொடர்ந்து தனக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த தாயார், உறவினர்கள் மற்றும் தாலி கட்டிய மோகன் மீது திருத்தணி போலீசில் புகார் செய்தார். அவர்கள் விசாரித்து கட்டாய திருமணம் நடந்த இடம் ராணிப்பேட்டை மகளிர் போலீஸ் எல்லை என்பதால் ராணிப்பேட்டைக்கு அனுப்பினர்.

    இதைத்தொடர்ந்து புகார் மீது ராணிப்பேட்டை மகளிர் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி விசாரணை நடத்தி சிறுமியின் தாயார் லட்சுமி, பெரியம்மா கஸ்தூரி, குப்பம்மாள், கணவர் மோகன், உறவினர் ரேகா ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×