என் மலர்tooltip icon

    வேலூர்

    ஆம்பூர் அருகே டீ கடைக்குள் மினி வேன் புகுந்து சிறுவன் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த சின்னவரிக்கம் பகுதியில் சாலையோரம் டீக்கடை உள்ளது.நேற்று இரவு சுமார் 7 மணியளவில் இந்த டீக்கடையில் சிலர் டீ குடித்துக் கொண்டிருந்தனர்.

    இந்த நிலையில் ஆம்பூரில் இருந்து பேரணாம்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்த மினிவேன் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த டீக்கடைக்குள் புகுந்து, அங்கிருந்த 7 பேர் மீது மோதியது.

    விபத்து ஏற்படுத்தியதும் மினி வேனில் இருந்த பாலூரை சேர்ந்த இளங்கோ என்ற டிரைவர் இறங்கி தப்பி ஓடி விட்டார்.

    இந்த விபத்தில் ஏ. கஸ்பாவைச் சேர்ந்த மணி என்ற 7 வயது சிறுவன் மற்றும் பெரியவரிகம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (வயது50) ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் கஸ்பா பகுதியைச் சேர்ந்த கணேசன்(18), கோகுல் (16), ஜோசப் (55), வேண்டா (43), தினேஷ் (17) ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த உமராபாத் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி ஆம்பூர் பி.கஸ்பாவை சேர்ந்த குமரன் மகன் தினேஷ் இன்று காலை பரிதாபமாக இறந்தார். இதனால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் இந்த சம்பவம் குறித்து உமராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் இளங்கோவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையையொட்டி 2 நாட்களில் ரூ.19½ கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.
    வேலூர்:

    தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும், தீபாவளி, புத்தாண்டு மற்றும் பொங்கல் போன்ற பண்டிகையின் போது மது பிரியர்கள் தங்களுக்கு பிடித்த மதுவகைகளை வாங்கி குடித்து மகிழ்வார்கள். இதனால் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை ஜோராக நடக்கும்.

    எனவே பண்டிகைகளின் போது தட்டுப்பாடின்றி ஒவ்வொரு டாஸ்மாக் கடைக்கும் அதிகளவில் சரக்குகள் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    மேலும் விற்பனை வருவாய் இலக்கும் முன்கூட்டியே நிர்ணயிக்கப்படுகிறது. அதே போல் இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி சில நாட்களுக்கு முன்பே ஒவ்வொரு கடைக்கும் அதிகளவில் மது வகைகள் அனுப்பி வைக்கப்பட்டன.

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நேற்றுமுன்தினம் மது பிரியர்கள் டாஸ்மாக் கடைகளுக்கு சென்று மது பானங்களை வாங்கினர். 3 மாவட்டங்களும் நிர்வாக வசதிக்காக வேலூர், அரக்கோணம் என 2 மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளது. நேற்று விடுமுறை அளிக்கப்பட்டதால் டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்களின் கூட்டம் அலைமோதியது.

    வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் 111 கடைகளும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 89 கடைகளும் உள்ளன. 13-ந் தேதி மற்றும் நேற்று முன்தினம் விற்பனை கணக்கிடப்பட்டுள்ளது.

    அதன்படி வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் 13-ந் தேதி ரூ.4 கோடியே 89 லட்சத்துக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.2 கோடியே 70 லட்சத்துக்கும், நேற்று முன்தினம் பொங்கல் அன்று வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.6 கோடியே 79 லட்சத்துக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.5 கோடியே 30 லட்சத்துக்கும் விற்பனை ஆனது.

    மொத்தம் 2 நாட்களில் ரூ.19 கோடியே 68 லட்சத்துக்கு மது விற்பனையானது. இந்தாண்டு பீர் வகைகளை விட மது வகைகள் அதிகம் விற்பனையானதாக டாஸ்மாக் நிர்வாக மேலாளர்கள் தெரிவித்தனர்.
    காட்பாடியை அடுத்த பனமடங்கி கிராமத்தில் நடந்த மாடு விடும் திருவிழாவில் கீழே விழுந்து காளை ஒன்று இறந்தது. காளைகள் முட்டியதில் 12 பேர் காயமடைந்தனர். இளைஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
    காட்பாடி:

    வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த பனமடங்கி கிராமத்தில் காளை விடும் திருவிழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு பனமடங்கி மெயின் ரோட்டில் சாலையின் இருபுறமும் மூங்கில் தடுப்பு கம்புகள் கட்டப்பட்டிருந்தன. காலை 10 மணிக்கு காளை விடும் திருவிழாவை குடியாத்தம் உதவி கலெக்டர் ஷேக் மன்சூர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கே.வி.குப்பம் தாசில்தார் ராஜேஸ்வரி, காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 127 காளைகள் கலந்து கொண்டன. திருவிழாவை பார்க்க வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்கள் மற்றும் பெண்கள் பலர் பனமடங்கி கிராமத்திற்கு வந்தனர். சாலைகளில் மட்டுமல்லாது கட்டிடங்கள் மேலேயும் நின்று வேடிக்கை பார்த்தனர். சாலையின் இருபுறமும் நின்று கொண்டிருந்த இளைஞர்கள் காளைகளை உற்சாகப்படுத்தினர். சாலை தடுப்பு கம்புகள் முன்னால் சில இளைஞர்கள் கும்பலாக நின்று கொண்டே ஓடும் காளைகளுக்கு தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தனர்.

    போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்தும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. இதனால் போலீசார் அந்த இளைஞர்கள் மீது லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

    திருவிழாவை முன்னிட்டு குறைந்த நேரத்தில் குறிப்பிட்ட தூரத்தை கடந்த காளைக்கு முதல் பரிசாக ரூ.65 ஆயிரமும் இரண்டாவது பரிசாக ரூ.50 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.40 ஆயிரமும், நான்காவது பரிசாக ரூ.30 ஆயிரம் உள்பட மொத்தம் 40 பரிசுகள் வழங்கப்பட்டது.

    திருவிழாவில் ஓடிய காளைகள் முட்டியதில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த 12 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு அங்கேயே அமைக்கப்பட்டிருந்த முதலுதவி சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது மேலும் மெயின் ரோட்டில் ஓடிய 3 காளைகள் சாலையில் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தது. இதில் காங்கேயநல்லூர் பகுதியை சேர்ந்த ஒருவரின் காளை பரிதாபமாக இறந்தது.

    லத்தேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    வேலூர் பாலாற்றில் நடந்த தொழிலாளி கொலையில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். முன்விரோதம் காரணமாக கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
    வேலூர்:

    வேலூர் தோட்டப்பாளையம் மாதாகோவில் தெருவைச் சேர்ந்தவர் வேலு (வயது 50), கம்பிக்கட்டும் தொழில் செய்து வந்தார். இவர் 4-ந்தேதி ரேஷன் கடையில் ரூ.2,500 மற்றும் பொங்கல் பரிசு வாங்க சென்றார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை.

    இதுகுறித்து வேலூர் வடக்குப் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. மாயமானதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலுவை தேடி வந்தனர்.

    இந்தநிலையில் 10-ந்தேதி மாலை வேலூர் புதிய பஸ் நிலையம் அருகில் பாலாற்றங்கரை சுடுகாட்டில் உள்ள எரியூட்டும் தகன மேடை அருகே பாதி உடல் புதைந்த நிலையில் வேலுவின் உடல் மீட்கப்பட்டது. அங்கேயே வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் அவரின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

    அவரின் உடலில் காயங்கள் இருந்ததால் அவரை மர்மநபர்கள் கொலை செய்து புதைத்தது போலீசாருக்கு தெரியவந்தது. அவர் மாயமான வழக்கை கொலை வழக்காக போலீசார் பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

    இந்த கொலை வழக்குத் தொடர்பாக தோட்டப்பாளையம் முத்து மண்டபம் பகுதியைச் சேர்ந்த ஜெகன் (32), அலெக்ஸ் (35), பாலகிருஷ்ணன் (55) மற்றும் 18, 17 வயதுடைய 2 வாலிபர்கள் என 5 பேரை போலீசார் கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து அவர்கள் அளித்த வாக்குமூலம் பற்றி போலீசார் கூறியதாவது:-

    கொலை செய்யப்பட்ட வேலு அப்பகுதியில் சில பெண்களை ஆபாசமாக பேசி உள்ளார். அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் அவதூறாகப் பேசி உள்ளதாக கூறப்படுகிறது. வேலு குடிபோதையில் அங்குள்ள பகுதி மக்களிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

    கைது செய்யப்பட்ட 5 பேரும் இதை கண்டித்துள்ளனர். இதனால் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் ஒருவர் சைதாப்பேட்டை கழிவுநீர் கால்வாயில் கடந்த மாதம் பிணமாக மிதந்தார். அவரை வேலு தான் கொலை செய்திருக்க வேண்டும் என 5 பேரும் கருதினர்.

    இந்த நிலையில் ரேஷன் கடைக்கு சென்ற வேலுவை அவர்கள் பாலாற்றங்கரைக்கு அழைத்துச் சென்று மது குடிக்க வைத்துள்ளனர். பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வேலுவை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர். உடலை யாருக்கும் தெரியாமல் அங்கேயே புதைத்தனர்.

    மேற்கண்டவாறு அவர்கள் கூறினர்.
    ஆந்திராவில் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக அரசு பஸ்கள், ஆவணங்கள் கொண்டு செல்லப்பட்டு ஆந்திர அதிகாரிகளிடம் காண்பிக்கப்பட்டது. அதற்கு பிறகும் தமிழக பஸ்கள் விடுவிக்கப்படவில்லை இதனால் மீண்டும் போக்குவரத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.

    வேலூர்:

    ஆந்திர மாநில அரசு பஸ்கள் அனுமதியின்றி வேலூர் மாவட்டத்திற்கு இயக்கப்படுவதாக துணை போக்குவரத்து ஆணையர் சுரேஷூக்கு புகார்கள் சென்றது.

    இதைத் தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் வேலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கருணாநிதி, சக்திவேல் அகியோர் கொண்ட குழுவினர் வேலூர் மக்கான் அருகே உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் கடந்த 13-ந் தேதி வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அனுமதியின்றி ஆந்திர மாநில 5 அரசு பஸ்கள் இயங்கியது தெரியவந்தது. பின்னர் 5 பஸ்களையும் பறிமுதல் செய்து, வேலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

    அதைத்தொடர்ந்து ஆந்திர மாநில போக்குவரத்து அதிகாரிகள், வேலூர் போக்குவரத்து அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் பழிக்கு பழியாக நேற்று தமிழகத்தில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூருக்கு இயக்கப்பட்ட தமிழக அரசு மற்றும் தனியார் பஸ்களில் உரிமம் உள்ளதா என அந்த மாநில போக்குவரத்து துறை அதிகாரிகள் குப்பம், பலமநேரி, சித்தூர், புத்தூர் ஆகிய இடங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    இந்த சோதனையில் தமிழக போக்குவரத்து கழக வேலூர் மண்டலத்துக்குட்பட்ட 4 பஸ்கள் மற்றும் காஞ்சீபுரம் போன்ற பகுதிகளில் இருந்து இயக்கப்பட்ட பஸ்கள் என 17 தமிழக அரசு பஸ்களும், 7 தனியார் பஸ்களும் என 24 பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதில் விரைவு பஸ்களும் அடங்கும். பறிமுதல் செய்யப்பட்ட பஸ்கள் அங்குள்ள போக்குவரத்து பணிமனைகளில் நிறுத்தப்பட்டுள்ளன.

    இதில் பெரும்பாலான தனியார் பஸ்கள் ஆந்திர மாநில பதிவெண் கொண்டதாகும். அந்த வாகனங்களில் உரிமையாளர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து தமிழக போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் அம்மாநில அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து நேற்று இரவு வேலூரில் பறிமுதல் செய்யப்பட்ட 5 ஆந்திர மாநில அரசு பஸ்கள் விடுவிக்கப்பட்டன.

    மேலும் ஆந்திராவில் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக அரசு பஸ்கள், ஆவணங்கள் கொண்டு செல்லப்பட்டு ஆந்திர அதிகாரிகளிடம் காண்பிக்கப்பட்டது.

    அதற்கு பிறகும் தமிழக பஸ்கள் விடுவிக்கப்படவில்லை இதனால் மீண்டும் போக்குவரத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.

    வேலூர் போக்குவரத்து மண்டல அதிகாரிகள் கூறுகையில், வேலூரில் நடந்த சம்பவத்தின் எதிரொலியாக அங்கு இந்த சோதனை செய்யப்பட்டுள்ளது.

    உரிமம் அசல் இல்லை, ஓட்டுனர் உரிமம் அசல் இல்லை போன்ற சிறு, சிறு குறைகளை வைத்துக்கொண்டு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து ஆவணங்களும் நம்மிடம் உள்ளது.

    அவற்றை காண்பித்தபிறகும் பஸ்கள் இன்று காலை வரை விடுவிக்கப்படவில்லை. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.

    பொங்கல் பண்டிகையின் போது நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

    திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உடல்நலக்குறைவால் வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    வேலூர்:

    திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உடல்நலக்குறைவால் வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் துரைமுருகனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜனவரி 4 ஆம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மேல்விஷாரம் அப்பல்லோ மருத்துவமனையில் ஏற்கனவே சிகிச்சை பெற்றார். தற்போது அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
    பனமடங்கி அணைக்கட்டு அருகே உள்ள அத்தியூர் ஆகிய இடங்களில் இன்று காளை விடும் விழா நடந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வீர செட்டிபள்ளி ஊராட்சி குட்லவாரிபல்லி கிராமத்தில் 106-ம் ஆண்டு காளை விடும் திருவிழா இன்று நடந்தது.

    இதில் குடியாத்தம், கே.வி.குப்பம், லத்தேரி, பேரணாம்பட்டு, மாதனூர், கிருஷ்ணகிரி வாணியம்பாடி, காட்பாடி மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சித்தூர், வி.கோட்டா, பங்காரு பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டன.

    காலை விடும் வீதியின் இரு பக்கமும் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டிருந்தன. விழா தொடங்குவதற்கு முன்பு கால்நடை மருத்துவர்கள் காளைகளை பரிசோதனை செய்தனர். தொடர்ந்து போட்டிகளில் பங்கு பெற்ற காளைகள் சீறிப் பாய்ந்து சென்றன.

    காளைகள் முட்டியதில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

    50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.

    இதேபோல் பனமடங்கி அணைக்கட்டு அருகே உள்ள அத்தியூர் ஆகிய இடங்களில் இன்று காளை விடும் விழா நடந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

    ஏராமான இளைஞர்கள் இந்த விழாவில் பங்கேற்று ஆரவாரம் செய்தனர்.

    அணைக்கட்டில் நடந்த காளை விடும் விழாவில் கலந்து கொண்ட காளைகளுக்கு அதன் உரிமையாளர்கள் வித்தியாசமான பெயர்களை சூட்டி ஓடவிட்டனர்.

    கொரோனா எக்ஸ்பிரஸ், நான் உன்னை காதலிக்கிறேன், மங்காத்தா, வர்தா புயல், தமிழ்நாடு போலீஸ், பில்லா, போலேரோ ஆகிய பெயர்கள் சூட்டப்பட்டிருந்தது. வித்தியாசமான பெயர்களில் காளைகள் அறிவிக்கப்பட்டபோது பலத்த ஆரவாரம் எழுந்தது.

    பந்தய தூரத்தை 8.6 வினாடிகளில் கடந்து சங்கீதா எக்ஸ்பிரஸ் என்ற காளை முதல் பரிசை தட்டிச்சென்றது.

    அதிமுகவினர் தேர்தலுக்காக அதிக வாக்குறுதிகளை அள்ளிவிடுகின்றனர் என்று திமுக பொதுச்செயலாளர் கூறினார்.
    வேலூர்:

    வேலூர் காட்பாடியில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் தொண்டர்களை சந்தித்தார்.

    அஞ்சல்துறையின் தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் நடத்துவது என்பது பா.ஜ.க. மக்களுக்கு அளித்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிடுவதாக உள்ளது.

    சென்றமுறை தமிழில் தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் தற்போது இந்தி திணிப்பு, சமஸ்கிருத அங்கீகாரம் என்பதில் பா.ஜ.க. தீவிரமாக உள்ளது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை நியமித்தது ஆளுநர் தான். ஊழல் தொடர்பாக விசாரணை கமி‌ஷனும் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அவரின் பதவியை நீட்டித்திருப்பது ஆளுநருக்கு அழகல்ல. மாணவர்களுக்கு தமிழக அரசு 2 ஜிபி டேட்டா அறிவித்துள்ளது.

    அ.தி.மு.க.வினர் தேர்தலுக்காக அதிக வாக்குறுதிகளை அள்ளிவிடுகின்றனர். அவர்கள் எதையும் நிறைவேற்ற போவதில்லை.

    தி.மு.க. அறிவித்த விவசாய கடன் தள்ளுபடி சாத்தியமில்லை என்று அ.தி.மு.க.வினர் கூறுகின்றனர்.

    நாங்கள் ஏற்கனவே ஒருமுறை ஆட்சியில் இருந்தபோது விவசாய கடனை தள்ளுபடி செய்து அதனை நிரூபித்துள்ளோம்.

    தேர்தல் கூட்டணி குறித்து இன்னும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. புதிய கட்சிகள் கூட்டணிக்கு வருவது குறித்து இப்போது எதையும் தெரிவிக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்களுக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
    வேலூர்:

    வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சக்திவேல், கருணாநிதி, வெங்கட்ராகவன் ஆகியோர் பொங்கல் பண்டிகையையொட்டி பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே சிறப்பு வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி பஸ்களில் கூடுதல் பயணிகள் பயணம் செய்கிறார்களா?, டிரைவர் சீருடை அணிந்துள்ளாரா?, தகுதிச்சான்று புதுப்பிக்கப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்தனர். மேலும் முகப்பு விளக்குகளில் எல்.இ.டி. லைட் மற்றும் பம்பர் கம்பிகள் பொருத்தப்பட்டிருந்த கார்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    இந்த சோதனையில் போக்குவரத்து விதிகளை மீறிய 17 வாகனங்களுக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தமிழக நுழைவு வரி செலுத்தாத கர்நாடக லாரி பறிமுதல் செய்யப்பட்டு பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த சிறப்பு வாகன சோதனை வருகிற 18-ந் தேதி இரவு வரை தொடரும் என்று போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
    பாகாயம், அரியூரில் கஞ்சா, மது விற்றவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபா மற்றும் போலீசார் நேற்று பாகாயம் மற்றும் அரியூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது பல்வேறு இடங்களில் சூதாட்டம், அரசு மதுபானங்களை வாங்கி, பதுக்கி வைத்து விற்பனை செய்தல் போன்ற சம்பவங்களில் ஈடுபட்ட 11 பேரை பிடித்தனர். விசாரணைக்கு பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர். இதேபோல் பாகாயம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ரவி (வயது 63) என்பவர் தனது வீட்டுக்கு பின்புறம் கஞ்சா பொட்டலங்களை புதைத்து வைத்து விற்பனை செய்வதாக வந்த தகவலை அடுத்து போலீசார் அங்கு சென்று கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஜோலார்பேட்டை அருகே மொபட் மீது பஸ் மோதிய விபத்தில் எலக்ட்ரீசியன் பலியானார்
    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டையை அடுத்த பெரியபொன்னேரி பகுதியை சேர்ந்தவர் கேசவன். இவரது மகன் சிங்காரவேல் (வயது37). எலக்ட்ரீசியன். நேற்று காலை சிங்காரவேல் வேலைநிமித்தமாக மொபட்டில் ஏலகிரி மலைக்கு சென்று கொண்டிருந்தார். சின்னபொன்னேரி அருகே உள்ள சோதனைச்சாவடி பகுதியில் சென்றபோது, ஏலகிரி மலையிலிருந்து திருப்பத்தூர் நோக்கி வந்த அரசு பஸ் அவர்மீது மோதியது. இதில் கீழே விழுந்த அவர் பஸ்சில் சிக்கி சுமார் 50 அடி தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டார்.

    இதைப்பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். படுகாயமடைந்த சிங்காரவேல் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இது குறித்து ஜோலார்பேட்டை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    வேலூரில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    வேலூர்:

    வேலூர் பாகாயம் இடையன்சாத்து கிராமத்தை சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி அனிதா (வயது 24). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு குழந்தை இல்லாததால் அனிதா மனவருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து அவரின் தாயார் லட்சுமி பாகாயம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் வேலூர் உதவி கலெக்டர் கணேஷ் விசாரணை நடத்தி வருகிறார்.
    ×