என் மலர்
வேலூர்
வேலூர் மாநகராட்சி விருதம்பட்டு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவனுக்கும் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. சிறுமி, கணவர் வீட்டில் வசித்து வந்துள்ளாள். குழந்தை திருமணம் நடத்தி வைக்கப்பட்ட நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்தவர்கள் வேலைக்கு சென்று விட்டனர். பகலில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமி மாடிக்கு சென்று அங்கு தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாள். மாலையில் வேலை முடிந்து வந்தவர்கள் சிறுமியை தேடியபோது வீட்டின் மாடியில் அவள் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து விருதம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தை திருமணம் நடந்தது குறித்து சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீபுரம் தங்கக்கோவிலில் சக்திஅம்மா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஸ்ரீபுரத்தில் கடந்த 2000 ஆண்டில் நாராயணி கோவிலும், 2007-ம் ஆண்டு தங்கக்கோவிலும் கட்டப்பட்டது. தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் இடமாக ஸ்ரீபுரம் உள்ளது. தொடர்ச்சியாக ஸ்ரீனிவாசப்பெருமாளுக்கு தனி ஆலயம் அமைக்கப்பட்டது.
பக்தர்களின் கோரிக்கைக்கு ஏற்ப தங்கக்கோவில் வளாகத்தில் முக்கிய கடவுளான விநாயகருக்கு கோவில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 700 டன் கருங்கற்களால் தங்கக்கோவில் வளாகத்தில் ஸ்ரீசக்தி கணபதி கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் இடம்பெற உள்ள விநாயகர் சிலை 1,700 கிலோ வெள்ளியால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை சுமார் 5 அடி உயரம் கொண்டது. விநாயகரை வணங்கினால் நல்லது கிடைக்கும். அமைதி மற்றும் செழிப்பு உண்டாகும்.
இந்த கோவிலின் மகாகும்பாபிஷேகம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் 10.20 மணிக்குள் நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விக்கிரகத்துக்கு கீழ் வைக்கப்படும் யந்திரத்திற்கு கடந்த ஒரு ஆண்டாக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, நாளை (இன்று) பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
இதைமுன்னிட்டு கடந்த 15-ந் தேதி முதல் வருகிற 25-ந் தேதி வரை நவதானியங்களால் ஆன 1 லட்சத்து 8 ஆயிரம் லட்டுகளால் தமிழ் முறைப்படி யாகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. வேதமுறைப்படியும் பூஜைகள் தொடங்கப்பட்டுள்ளது. எனவே இந்த கும்பாபிஷேகம் தமிழ் மற்றும் வேதமுறைப்படி நடைபெறுகிறது. இந்தகோவில் முழுவதும் கட்டி முடிக்க ரூ.15 கோடி செலவானது.
கும்பாபிஷேகத்துக்கு முக்கிய பிரமுகர்கள், ஆன்மீகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும் பலர் கலந்து கொள்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது ஸ்ரீபுரம் இயக்குனர் சுரேஷ்பாபு மற்றும் பலர் உடன் இருந்தனர்.
வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரி அருகே உள்ள காந்தி ரோடு, பாபுராவ் தெரு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மூதாட்டியுடன் இளம்பெண் ஒருவர் சுற்றித்திரிந்தார். இவர்கள் இரவு நேரங்களில் அங்குள்ள கடைகள் முன்பு படுத்து தூங்கினர். வெளி மாநிலத்தவர்கள் அதிகம் நடமாடக்கூடிய அந்த பகுதியில் மூதாட்டிகள் சுற்றி திரிந்ததை யாரும் கண்டுகொள்ளவில்லை.
நேற்று பகுதியைச் சேர்ந்த சிலர் இளம்பெண்ணிடம் யார் நீங்கள் இங்கே ஏன் சுற்றுகிறீர்கள் என கேட்டனர். அப்போது அந்த இளம்பெண் ஆங்கிலத்தில் சரளமாக பேசினார். தங்களுக்கு யாரும் இல்லை சிகிச்சைக்காக வந்துள்ளோம் என தெரிவித்தார். இதுபற்றி வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக இளம்பெண் மற்றும் மூதாட்டியை மீட்க கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார். இதனையடுத்து சமூகநலத்துறை அதிகாரிகள் காந்தி ரோட்டுக்கு சென்று மூதாட்டி மற்றும் இளம்பெண்ணை தேடினர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு ஒரு கடையின் அருகில் அமர்ந்து இருந்த இருவரையும் மீட்டனர்.
அவரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த லக்னாபாய்(வயது 65) அவருடைய பேத்தி தேஜாஸ்ரீ (19) என்பது தெரியவந்தது.
தேஜாஸ்ரீ அங்குள்ள கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாமாண்டு படித்து வருகிறார். ஆங்கிலத்தில் சரளமாக பேசிக்கொண்டே இருந்தார். தனது பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை சொத்து தகராறு சம்பந்தமாக என்னுடைய அப்பா, அம்மா மற்றும் உறவினர்கள் வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டனர்.
இதனால் பாட்டியுடன் வேலூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தோம். இங்குள்ள உறவினர்களும் எங்களை ஆதரிக்கவில்லை .எனவே இங்கே இருக்கிறோம் என கூறினர். மேலும் அவர்கள் முன்னுக்குப்பின் பதில் கூறினர். இதனால் சந்தேகம் அடைந்த சமூக நலத்துறை அதிகாரிகள் இருவரையும் வாலாஜா அரசு மனநல மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அன்றைய தினம் முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் தொடர்பான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.
இந்த முகாம்களில் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 38, 854 பேரும், பெயர் நீக்கம் செய்ய 9,176 பேரும், பெயர் திருத்தம் செய்ய 5, 626 பேரும் முகவரி மாற்றம் செய்ய 3,398 பேரும் விண்ணப்பித்திருந்தனர்.
இந்த நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வெளியிடப்பட்டது. கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி, இறுதி வாக்காளர் பட்டியலை அனைத்து கட்சியினர் முன்னிலையில் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இறுதி வாக்காளர் பட்டியலில் காட்பாடி, வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம் (தனி), குடியாத்தம் (தனி) ஆகிய 5 தொகுதிகளில் 6 லட்சத்து 12 ஆயிரத்து 857 ஆண் வாக்காளர்களும், 6 லட்சத்து 51 ஆயிரத்து 91 பெண் வாக்காளர்களும், 140 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 12 லட்சத்து 64 ஆயிரத்து 88 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த முறை வெளியிடப்பட்ட பட்டியலை விட 29, 224 வாக்காளர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
சிறப்பு முகாம்களில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய, முகவரி மாற்றம், திருத்தம் என மொத்தம் 57 ஆயிரத்து 54 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இந்த இறுதி பட்டியல் அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். மேலும் www.nvsp.in என்ற இணையதள முகவரியிலும் பொதுமக்கள் பார்க்கலாம். இளம் வாக்காளர்களுக்கு பட்டியலில் பெயர் சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பெயர் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யும் கடைசி நாள் வரையும், திருத்தம், முகவரி மாற்றம் விண்ணப்பங்கள் தேர்தல் தேதி அறிவிக்கும் வரையும் விண்ணப்பிக்கலாம். மாவட்டத்திலுள்ள மொத்த மக்கள் தொகையில் 72 சதவீதம் பேர் வாக்காளர்களாக உள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் 1,301 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. 1000 வாக்காளர்களுக்கு ஒரு மையம் அமைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் கூடுதலாக 520 மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
வேலூர் பிஷப்டேவிட் நகரை சேர்ந்தவர் பிரவீன் அந்தோணி (வயது 39). இவர் செதுவாலை அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று அதில் இருந்து மீண்டார். எனினும் அவர் மன உளைச்சலிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
சமீப நாட்களாக பள்ளிக்கும் சென்று வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் மாடி அறைக்கு சென்று டி.வி. பார்த்துள்ளார். இரவு மாடியிலேயே படுத்து தூங்கி உள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலையில் அவரது மனைவி ஆரோக்கியசித்ரா, மாடியில் சத்தம்கேட்டதால் அங்கு சென்று பார்த்தார். அப்போது அறையில் பிரவீன் அந்தோணி தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் பிரவீன் அந்தோணி இறந்து விட்டது தெரிந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் தெற்கு போலீசார், அவரது உடலை கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஆரோக்கியசித்ரா வேலூர் தெற்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் கூறுகையில், பிரவீன் அந்தோணி கொரோனா தாக்கியதில் இருந்து மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார். அதன்காரணமாக வீட்டில் இருந்த ஊஞ்சலை கழற்றி வைத்து விட்டு இரும்பு சங்கிலியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.
பெங்களூருவில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டுக்கு குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜசேகர், ஜெகநாதன் மற்றும் போலீசார் கிரீன் சர்க்கிள் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை மறித்து விசாரணை செய்தனர். ஆட்டோவில் இருந்தவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் கூறியதால் சந்தேகம் அடைந்த போலீசார் சரக்கு ஆட்டோவை சோதனை செய்தனர்.
அப்போது, ஆட்டோவில் டிரேக்களுக்கு அடியில் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
பின்னர் போலீசார் டிரைவர் மற்றும் கிளீனரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர்கள், திருவண்ணாமலை மாவட்டம், சோமாசிபாடியை சேர்ந்த ஹைதர்அலி (வயது 36), பெங்களூரு கே.ஜி.ஹள்ளி பகுதியை சேர்ந்த பர்தான் (35) என்பதும், ஆற்காட்டுக்கு குட்கா பொருட்களை கடத்திச் சென்றதும் தெரியவந்தது.
இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து, ஆட்டோவுடன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களின் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. தினமும் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. நேற்று வெளியான முடிவில் 8 பேருக்கு தொற்று இருப்பது தெரியவந்தது. அவர்களை சுகாதார துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
குடியாத்தம்:
குடியாத்தம் டவுன் கோபாலபுரம் மசூதி தெருவை சேர்ந்தவர் உஸ்மான். இவர் அங்குள்ள மசூதி அருகே 3 அடுக்கு மாடி கொண்ட கட்டிடத்தில் பாத்திரக் கடை நடத்தி வருகிறார்.
கடையின் 3-வது மாடியில் தகரத்திலான கூரை அமைத்து உள்ளனர். உஸ்மான் நேற்று இரவு வழக்கம்போல் வியாபாரம் முடித்து வீட்டுக்கு சென்றார்.
நள்ளிரவு பக்கத்து மாடி வழியாக வந்த கொள்ளையர்கள் தகரக் கூரையை பிரித்து உள்ளே சென்றனர். அங்கிருந்த ரூ.3 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இன்று காலை கடையை திறப்பதற்காக உஸ்மான் மற்றும் கடை ஊழியர்கள் வந்தனர். அப்போது கடையில் இருந்த பணப்பெட்டி திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து உஸ்மான் குடியாத்தம் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு குடியாத்தம் டி.எஸ்.பி. சரவணன் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் சப்இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உள்ளிட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






