search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்டபோது எடுத்த படம்.
    X
    இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்டபோது எடுத்த படம்.

    வேலூர் மாவட்டத்தில் 12 லட்சத்து 64 ஆயிரம் வாக்காளர்கள்

    வாக்காளர் இறுதிப்பட்டியலை வெளியிட்டு வேலூர் மாவட்டத்தில் 12 லட்சத்து 64 ஆயிரத்து 88 வாக்காளர்கள் உள்ளதாக கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அன்றைய தினம் முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் தொடர்பான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.

    இந்த முகாம்களில் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 38, 854 பேரும், பெயர் நீக்கம் செய்ய 9,176 பேரும், பெயர் திருத்தம் செய்ய 5, 626 பேரும் முகவரி மாற்றம் செய்ய 3,398 பேரும் விண்ணப்பித்திருந்தனர்.

    இந்த நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வெளியிடப்பட்டது. கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி, இறுதி வாக்காளர் பட்டியலை அனைத்து கட்சியினர் முன்னிலையில் வெளியிட்டார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இறுதி வாக்காளர் பட்டியலில் காட்பாடி, வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம் (தனி), குடியாத்தம் (தனி) ஆகிய 5 தொகுதிகளில் 6 லட்சத்து 12 ஆயிரத்து 857 ஆண் வாக்காளர்களும், 6 லட்சத்து 51 ஆயிரத்து 91 பெண் வாக்காளர்களும், 140 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 12 லட்சத்து 64 ஆயிரத்து 88 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த முறை வெளியிடப்பட்ட பட்டியலை விட 29, 224 வாக்காளர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    சிறப்பு முகாம்களில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய, முகவரி மாற்றம், திருத்தம் என மொத்தம் 57 ஆயிரத்து 54 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

    இந்த இறுதி பட்டியல் அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். மேலும் www.nvsp.in என்ற இணையதள முகவரியிலும் பொதுமக்கள் பார்க்கலாம். இளம் வாக்காளர்களுக்கு பட்டியலில் பெயர் சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பெயர் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யும் கடைசி நாள் வரையும், திருத்தம், முகவரி மாற்றம் விண்ணப்பங்கள் தேர்தல் தேதி அறிவிக்கும் வரையும் விண்ணப்பிக்கலாம். மாவட்டத்திலுள்ள மொத்த மக்கள் தொகையில் 72 சதவீதம் பேர் வாக்காளர்களாக உள்ளனர்.

    வேலூர் மாவட்டத்தில் 1,301 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. 1000 வாக்காளர்களுக்கு ஒரு மையம் அமைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் கூடுதலாக 520 மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×