என் மலர்tooltip icon

    வேலூர்

    ஓச்சேரி அருகே ஆசிரியை திடீரென மாயமானார். இது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
    காவேரிப்பாக்கம்:

    ஓச்சேரியை அடுத்த மாமண்டூர் பகுதியைச் சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தர்மநீதி கிராமத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். 24-ந்தேதி வழக்கம்போல் கல்லூரிக்குப் போவதாகக் கூறி விட்டுச் சென்றவர், பின்னர் வீடு திரும்பவில்லை. அவர் திடீரென மாயமாகி விட்டார். அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் காணவில்லை.

    இது குறித்து பெண்ணின் தந்தை அவளூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான ஆசிரியையை தேடி வருகின்றனர்.
    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தேமுதிக யாருடன் கூட்டணி என்பதை விஜயகாந்த் அறிவிப்பார் என்று மாநில துணைப் பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் கூறினார்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் நடுப்பேட்டையில் நகர தே.மு.தி.க. அலுவலகத்தையும், கே.வி.குப்பத்தை அடுத்த கீழ் ஆலத்தூரில் மாவட்ட தே.மு.தி.க. அலுவலகத்தையும் தே.மு.தி.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் திறந்து வைத்தார்.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், கட்சியின் செயற்குழு, பொதுக்குழுவை கூட்டி யாருடன் கூட்டணி என்பது குறித்து தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார்.

    தற்போது வரை தே.மு.தி.க. அ.தி.மு.க. கூட்டணியில் தான் உள்ளது. விஜயகாந்த் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்வார்.

    சிறையில் இருந்து விடுதலையான சசிகலாவுக்கு தே.மு.தி.க. சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். தே.மு.தி.க. எந்தக் கூட்டணியில் பங்கேற்கிறதோ, அந்த கூட்டணி தான் தேர்தலில் அமோக வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வேலூர் சத்துவாச்சாரியில் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி வீட்டில் நகை, பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.
    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி பேங்க் நகர் விரிவு வினோபாஜி தெருவைச் சேர்ந்தவர் ராஜீவ் (வயது 32). இவர், வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருகிறார்.

    20-ந்தேதி திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்றார். அதைப் பயன்படுத்தி கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.

    பீரோவில் வைத்திருந்த 5 பவுன் நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கம், ரூ.10 ஆயிரம் மதிப்பிலான செல்போன் ஆகியவற்றை திருடிச் சென்று விட்டனர். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ஆகும்.

    நேற்று முன்தினம் வீடு திரும்பிய ராஜீவ் தனது வீட்டில் திருட்டு நடந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். கைரேகைகள் சேகரிக்கப்பட்டது.

    அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    சத்துவாச்சாரி பகுதியில் பூட்டிய வீடுகளில் தொடர்ந்து மர்மகும்பல் கொள்ளையடித்து வருகின்றனர். தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்களும் நடந்து வருகிறது. இதனால் பெண்கள் கடும் அச்சமடைந்துள்ளனர். பேங்க்நகர் பகுதியில் மேலும் 2 வீடுகளில் மர்மநபர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.

    வீட்டில் நகைகள் ஏதும் இல்லாததால் திரும்பி சென்று விட்டனர். திருட்டுப் போகாததால் போலீசில் புகார் அளிக்கப்படவில்லை. இப்பகுதியில் மர்மநபர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. திருட்டுச் சம்பவங்களை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.
    வேலூரில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். அலாரம் ஒலித்ததால் பல லட்சம் தப்பியது.
    வேலூர்:

    வேலூர் விருப்பாட்சிபுரத்தில் இந்தியன் வங்கியின் ஏ.டி.எம்.மையம் உள்ளது. நேற்று நள்ளிரவில் இந்த ஏ.டி.எம். மையத்தின் அலாரம் திடீரென ஒலித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் பாகாயம் போலீசார் உடனடியாக அங்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அதில், ஏ.டி.எம். எந்திரத்தை மர்மநபர் உடைக்க முயன்றதும், அலாரம் ஒலித்ததால் மர்மநபர் அங்கிருந்து தப்பிச் சென்றதும் தெரியவந்தது.

    இதுகுறித்து வங்கி மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை வங்கி மேலாளர் பிரதீபா பாகாயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அதில், நள்ளிரவு 2 மணிஅளவில் ஏ.டி.எம். மையத்துக்குள் நுழையும் வாலிபர் பெரிய கருங்கல்லால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயற்சி செய்கிறார். உடனடியாக அங்கிருந்த அலாரம் ஒலிக்கிறது. அதனால் பயந்துபோன வாலிபர் கல்லை அங்கேயே போட்டுவிட்டு ஓட்டம் பிடிக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

    கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த வாலிபர் விருப்பாட்சிபுரத்தை சேர்ந்த லோகேஷ் (20) என்று தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து வீட்டின் அருகே பதுங்கியிருந்த அவரை நேற்று காலை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் மதுபோதையில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்றதாக தெரிவித்தார். அதையடுத்து லோகேசை போலீசார் கைது செய்தனர்.

    அலாரம் ஒலித்ததால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த பல லட்சம் தப்பியது. லோகேஷ் மீது பாகாயம் போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.
    வாக்காளர்கள் தங்கள் செல்போனில் வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்யும் வசதி புதிதாக கொண்டு வரப்பட்டுள்ளது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    வேலூர்:

     வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 25-ந்தேதியை தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான தேசிய வாக்காளர் தினம் இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்தத் தினத்தையொட்டி இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் நடைமுறையில் புதுமைகளை புகுத்தி வருகிறது.

    அதன்படி இந்தாண்டு e-EPIC (இ-எபிக்) என்ற புதிய சேவையை வழங்க உள்ளது. அதன்படி வாக்காளர் தனது வாக்காளர் அடையாள அட்டையை அவருடைய செல்போனில் அல்லது கம்ப்யூட்டரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    இந்தச் சேவையின் மூலம் வாக்காளர் அடையாள அட்டையை வேகமாக பதிவிறக்கம் செய்யலாம். வாக்காளர் அடையாள அட்டை அனைத்து இடத்திலும் செல்லத்தக்கதாகும். வாக்காளர் பதிவிறக்கம் செய்து எங்கு வேண்டுமானலும் அச்சிட்டுக் கொள்ளலாம். இ-எபிக் கியூ.ஆர்.கோடு மூலம் வாக்காளர் பெயர், வாக்காளர் பட்டியலில் வரிசை எண், பாகம் எண் மற்றும் தேர்தல் தொடர்பான இதர தகவல்களை பெறலாம்.

    https://nvsp.in/ மற்றும் https://voterportal.eci.gov.in/ ஆகிய இணையதள முகவரி மூலமும், voter Helpline என்ற செல்போன் செயலி மூலமும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்துள்ள வாக்காளர்கள் இன்று முதல் வருகிற 31-ந் தேதி வரை செல்போனில் வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்யலாம். பிப்ரவரி மாதம் 1-ந் தேதி முதல் அனைத்து வாக்காளர்களும் செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    வேலூர் மாவட்டத்தில் நடந்த ஊரக திறனாய்வு தேர்வை 497 மாணவர்கள் எழுதினர். தேர்வு மையத்தை மாவட்ட கல்வி அலுவலர் அங்குலட்சுமி பார்வையிட்டார்.
    வேலூர்:

    தமிழகத்தில் ஊரக பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை பெறும் வகையில் தகுதியை நிர்ணயிக்கும் வகையிலான திறனாய்வு தேர்வு நேற்று நடந்தது.

    வேலூர் மாவட்டத்தில் இந்தத் தேர்வை எழுத 536 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். அவர்கள் தேர்வு எழுத காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பொய்கை, சேர்க்காடு, கே.வி.குப்பம், கணியம்பாடி, அணைக்கட்டு அரசு மேல்நிலைப்பள்ளி உள்பட 7 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. தேர்வு காலை 10 முதல் 12 மணி வரை நடந்தது.

    தேர்வு மையங்களுக்கு மாணவ-மாணவிகள் காலை 9 மணி முதல் வரத் தொடங்கினர். சோதனைக்கு பின்னர் 9.30 மணி அளவில் தேர்வு அறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். செல்போன், கால்குலேட்டர், எலக்ட்ரானிக் கைக்கெடிகாரம் உள்ளிட்டவை கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    அனைத்து மாணவ-மாணவிகளும் முகக்கவசம் அணிந்திருந்தனர். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஒரு அறையில் 10 பேர் அமர்ந்து தேர்வு எழுதினர். ஊரக திறனாய்வு தேர்வை 497 மாணவ-மாணவிகள் எழுதினர். 39 பேர் பங்கேற்கவில்லை.

    காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தை வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் அங்குலட்சுமி பார்வையிட்டார். தேர்வு அறை மற்றும் மையங்களை கண்காணிக்கும் பணியில் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டிருந்தனர். தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
    வேலூர் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சளிமாதிரி பரிசோதனையில் மேலும் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது. கடந்த 20 நாட்களாக தினமும் 20-க்கும் குறைவான நபர்களே தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

    மாவட்டம் முழுவதும் நேற்று மேற்கொள்ளப்பட்ட சளிமாதிரி பரிசோதனையில் மேலும் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

    இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக அரசு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    32-வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் நேற்று நடந்தது
    வேலூர்:

    32-வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் நேற்று நடந்தது. சென்னை மண்டல அலுவலர் பவன்குமார் தலைமை தாங்கினார். திட்ட இயக்குனர் (கிருஷ்ணகிரி) பகவத்சிங் முன்னிலை வகித்தார். எல்.அன்.டி இணை பொதுமேலாளர் துரைராஜ் வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைதுறை இணை மந்திரி வி.கே.சிங் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு வீடியோ ஒளிபரப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினார். இதில், தேசிய நெடுஞ்சாலை துறை ஊழியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
    வாக்காளர்கள் தங்கள் செல்போனில் வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்யும் வசதி புதிதாக கொண்டு வரப்பட்டுள்ளது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    வேலூர்:

    வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 25-ந்தேதியை தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான தேசிய வாக்காளர் தினம் இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்தத் தினத்தையொட்டி இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் நடைமுறையில் புதுமைகளை புகுத்தி வருகிறது.

    அதன்படி இந்தாண்டு e-EPIC (இ-எபிக்) என்ற புதிய சேவையை வழங்க உள்ளது. அதன்படி வாக்காளர் தனது வாக்காளர் அடையாள அட்டையை அவருடைய செல்போனில் அல்லது கம்ப்யூட்டரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    இந்தச் சேவையின் மூலம் வாக்காளர் அடையாள அட்டையை வேகமாக பதிவிறக்கம் செய்யலாம். வாக்காளர் அடையாள அட்டை அனைத்து இடத்திலும் செல்லத்தக்கதாகும். வாக்காளர் பதிவிறக்கம் செய்து எங்கு வேண்டுமானலும் அச்சிட்டுக் கொள்ளலாம். இ-எபிக் கியூ.ஆர்.கோடு மூலம் வாக்காளர் பெயர், வாக்காளர் பட்டியலில் வரிசை எண், பாகம் எண் மற்றும் தேர்தல் தொடர்பான இதர தகவல்களை பெறலாம்.

    https://nvsp.in/ மற்றும் https://voterportal.eci.gov.in/ ஆகிய இணையதள முகவரி மூலமும், voter Helpline என்ற செல்போன் செயலி மூலமும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்துள்ள வாக்காளர்கள் இன்று முதல் வருகிற 31-ந் தேதி வரை செல்போனில் வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்யலாம். பிப்ரவரி மாதம் 1-ந் தேதி முதல் அனைத்து வாக்காளர்களும் செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    மு.க.ஸ்டாலின் கையில் வேலை எடுத்தது அதிமுகவை சூரசம்ஹாரம் செய்யத்தான் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
    வேலூர்:

    திருத்தணி அருகே உள்ள அம்மையார்குப்பம் கிராமத்தில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முக ஸ்டாலினுக்கு, மாலை அணிவித்து வெள்ளி வேல் பரிசாக அளிக்கப்பட்டது. பரிசாக அளிக்கப்பட்ட வெள்ளி வேலுடன் மு.க.ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

    இதுகுறித்து இன்று கோவையில் பரப்புரையில் ஈடுபட்ட முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு முருகன் வரம் கொடுக்கமாட்டார். அதிமுகாவுக்குத்தான் வரம் தர போகிறார். கடவுளை இழிவாக பேசியவர்கள் கையில் கடவுளே வேலை கொடுத்த காட்சியை பார்க்கிறோம். திமுக தலைவர் முக ஸ்டாலின் கையில் வேல் எடுத்தாலும் வரம் தரமாட்டார் என முதல்வர் விமர்சனம் செய்திருந்தார்.

    இதுபோல பாஜக மாநில தலைவர் எல் முருகன் கூறுகையில், பாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு வெற்றி கிடைத்துள்ளது. ஸ்டாலின் வேல் தூக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ஓட்டுக்காகத்தான் ஸ்டாலின் இரட்டை நிலைப்பாடு காட்டுகிறார். என்னதான் இரட்டை வேடம் போட்டாலும் மக்கள் நம்பமாட்டார்கள் என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், வேலூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், மு.க.ஸ்டாலின் கையில் வேலை எடுத்தது அதிமுகவை சூரசம்ஹாரம் செய்யத்தான். திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வந்தால் சேர்த்துக் கொள்வதில் தவறு இல்லை. இப்போதாவது, தனித்துப் பிரசாரம் செய்வதாக முடிவெடுத்ததற்கு காங்கிரசுக்கு பாராட்டு என தெரிவித்துள்ளார்.
    குடியாத்தம் அருகே அமைச்சர்களை சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியதாக முன்னாள் திமுக பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.

    குடியாத்தம்:

    குடியாத்தம் சொர்ணலட்சுமி கார்டன் பகுதியை சேர்ந்தவர் குடியாத்தம் குமரன் (வயது45). முன்னாள் தி.மு.க. மாநில கொள்கை பரப்பு துணை செயலாளராக பதவியில் இருந்தவர்.

    கட்சிக்கு எதிராக நடந்ததாக கூறி ஒழுங்கு நடவடிக்கை காரணமாக கடந்த ஆண்டு தி.மு.க.வில் இருந்து அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

    இந்த நிலையில் குடியாத்தம் குமரன் அ.தி.மு.க. கட்சி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோரை சமூக வலைதளங்களில் அவதூறாக பேசி பதிவிட்டிருந்தார்.

    இதுகுறித்து குடியாத்தம் சந்தப்பேட்டை ஆலந்தூர் முனுசாமி தெருவை சேர்ந்த அ.தி.மு.க. 35-வது வட்ட பிரதிநிதி கோல்ட் குமரன் (43). குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளித்தார்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து இன்று காலை குடியாத்தம் குமரனை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    காவேரிப்பாக்கத்தில் லாரி டிரைவர் திடீர் மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் பஜார் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 36), லாரி டிரைவர். இவர், நேற்று திடீரென இறந்து விட்டார். இதுகுறித்து மனைவி காவேரிப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×