search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    சத்துவாச்சாரியில் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி வீட்டில் நகை, பணம் திருட்டு

    வேலூர் சத்துவாச்சாரியில் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி வீட்டில் நகை, பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.
    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி பேங்க் நகர் விரிவு வினோபாஜி தெருவைச் சேர்ந்தவர் ராஜீவ் (வயது 32). இவர், வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருகிறார்.

    20-ந்தேதி திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்றார். அதைப் பயன்படுத்தி கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.

    பீரோவில் வைத்திருந்த 5 பவுன் நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கம், ரூ.10 ஆயிரம் மதிப்பிலான செல்போன் ஆகியவற்றை திருடிச் சென்று விட்டனர். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ஆகும்.

    நேற்று முன்தினம் வீடு திரும்பிய ராஜீவ் தனது வீட்டில் திருட்டு நடந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். கைரேகைகள் சேகரிக்கப்பட்டது.

    அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    சத்துவாச்சாரி பகுதியில் பூட்டிய வீடுகளில் தொடர்ந்து மர்மகும்பல் கொள்ளையடித்து வருகின்றனர். தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்களும் நடந்து வருகிறது. இதனால் பெண்கள் கடும் அச்சமடைந்துள்ளனர். பேங்க்நகர் பகுதியில் மேலும் 2 வீடுகளில் மர்மநபர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.

    வீட்டில் நகைகள் ஏதும் இல்லாததால் திரும்பி சென்று விட்டனர். திருட்டுப் போகாததால் போலீசில் புகார் அளிக்கப்படவில்லை. இப்பகுதியில் மர்மநபர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. திருட்டுச் சம்பவங்களை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.
    Next Story
    ×