என் மலர்tooltip icon

    வேலூர்

    நாட்டறம்பள்ளி அருகே வாகனங்களை நிறுத்தி பணம் வசூலித்த போலி சப்-இன்ஸ்பெக்டரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாட்டறம்பள்ளி:

    நாட்டறம்பள்ளியில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி அருகே நேற்று இரவு போலீஸ் உடை அணிந்த வாலிபர் ஒருவர் அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி பணம் வசூல் செய்து கொண்டிருந்தார்.

    வாகன ஓட்டிகள் அனைத்து ஆவணங்களும் வைத்திருந்த போதும் அவர்களிடம் கட்டாய பணம் வசூல் செய்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த சிலர் இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போலீஸ் உடையில் பணம் வசூலில் ஈடுபட்டிருந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் போலி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் என்பதும் அவர் குடியாத்தம் அடுத்த ஓலக்காசியை சேர்ந்த முருகதாஸ் (வயது 28)என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் முருகதாசை கைது செய்தனர். மேலும் இதுபோல் வேறு எங்காவது பணம் வசூலில் ஈடுபட்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர் அருகே 18 வயது நிரம்பாத மாணவிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
    வேலூர்:

    வேலூரை அடுத்த அரப்பாக்கத்தில் பள்ளி மாணவிக்கு திருமணம் நடைபெற உள்ளதாக நேற்று முன்தினம் இரவு மாவட்ட சைல்டுலைன் அலுவலகத்துக்கு தகவல் வந்தது. அதன்பேரில் சமூகநலத்துறை, சைல்டுலைன், சத்துவாச்சாரி போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். அப்போது 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமிக்கும், அதே பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபருக்கும் நேற்று காலை அப்பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் வைத்து திருமணம் நடைபெற இருந்தது தெரியவந்தது. மாணவிக்கு 18 வயது நிரம்பாததால் அந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

    மேலும் அதிகாரிகள் இருதரப்பு பெற்றோரிடமும், மாணவிக்கு 18 வயது நிரம்பிய பின்னரே திருமணம் செய்ய வேண்டும் என்று எழுதி வாங்கினர்.

    பின்னர் அந்த மாணவி, குழந்தைகள் நலக்குழுமத்தின் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார்.
    வேலூர் மாவட்ட எல்லையில் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி சசிகலாவை வரவேற்க அனுமதிக்க வேண்டும் என கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
    வேலூர்:

    பெங்களூரிலிருந்து சென்னை திரும்பும் சசிகலாவுக்கு அ.ம.மு.க.வினர் பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர். வழிநெடுகிலும் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி வரவேற்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    வேலூர் மாவட்ட எல்லையான மாதனூரில் சசிகலாவுக்கு அ.ம.மு.க அமைப்பு செயலாளர் ஜெயந்திபத்மநாபன் தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. அப்போது ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்படுகிறது.

    இதுகுறித்து ஜெயந்தி பத்மநாபன் வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரத்திடம் நேற்று மனு ஒன்று அளித்தார்.

    அதில் சசிகலா பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி வருவதை முன்னிட்டு அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ. என்ற முறையில் மாதனூர் அடுத்த கூத்தம்பாக்கத்தில் வரவேற்பு அளிக்க உள்ளேன்.

    அப்போது காலை 11 மணி முதல் 1 மணி வரை தனியார் வாடகை ஹெலிகாப்டர் மூலமாக மலர் தூவி வரவேற்பு அளிக்க தேவையான அனுமதியை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    சசிகலாவுக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மினிவேனில் இருந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்தனர்.
    அணைக்கட்டு:

    பள்ளிகொண்டா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் விநாயகம், மணிவண்ணன், சுரேஷ் குமார் உள்ளிட்ட போலீசார் பள்ளிகொண்டா சுங்கச் சாவடியில் நேற்று முன்தினம் நள்ளிரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூருவில் இருந்து வேலூரை நோக்கி சென்ற மினி வேன் ஒன்று சுங்கச்சாவடியில் வந்து நின்றது. சந்தேகம் அடைந்த போலீசார் வேன் டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணான பதில் தெரிவித்தார்.

    இதனையடுத்து போலீசார் வேனில் சோதனை செய்தனர். அப்போது வேனில் பண்டல்களில் சுமார் ஒரு டன் குட்கா, புகையிலை பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்து வேனுடன் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.6 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

    விசாரணையில் வேன் டிரைவர் பெங்களூரு ஜே.சி.ரோடு 2-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த பாண்டு மகன் மருது (வயது 34) என்பதும், பெங்களூருவிலிருந்து சென்னைக்கு குட்கா, புகையிலை பொருட்களை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மருதுவை கைது செய்தனர்.
    வேலூர் ஜெயிலில் உள்ள நளினியுடன் நேரடியாக சந்தித்து பேச அனுமதி வழங்க வேண்டும் என ஜெயில் சூப்பிரண்டிடம் முருகன் மனு அளித்துள்ளார்.
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும் அவருடைய மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். கோர்ட்டு உத்தரவுபடி இருவரும் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து வந்தனர்.

    கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த மார்ச் மாதம் முருகன் நளினி நேரடி சந்திப்பு நிறுத்தப்பட்டது. இதனையடுத்து இருவரும் செல்போனில் வீடியோ கால் மூலம் பேச அனுமதி அளித்தனர்.

    இதற்கிடையே முருகன் வேலூர் ஜெயிலில் இருந்து அனுமதி இன்றி வெளிநாட்டில் உள்ள அவருடைய உறவினர்களிடம் பேச முயன்றார். இதனை தடுத்து நிறுத்திய சிறைக்காவலர்கள் முருகன் மீது அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.

    இதனால் முருகன் நளினியுடன் செல்போனில் பேச தடை விதிக்கப்பட்டது. இதனை கண்டித்து முருகன் 25 நாட்களுக்கு மேலாக வேலூர் ஜெயிலில் உண்ணாவிரதம் இருந்தார். அவருடைய உடல்நிலை மோசமானதால் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். டாக்டர்கள் அறிவுரையை ஏற்று முருகன் உண்ணாவிரதத்தை கைவிட்டார்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து முருகனுக்கு ஜெயிலில் சலுகைகள் ரத்து செய்யப்பட்டன.

    தற்போது ஜெயில் கைதிகள் சந்தித்து பேச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் முருகன் வேலூர் ஜெயில் சூப்பிரண்டு ருக்மணி பிரியதர்ஷினியிடம் மனு அளித்துள்ளார். அதில் தனக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும். நளினியுடன் நேரடியாக சந்தித்து பேச அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    வேலூர் மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,759 ஆக உயர்ந்துள்ளது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,759 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 20,310 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 348 பேர் உயிரிழந்துள்ளனர்.
    வருகிற சட்டமன்ற தேர்தலில் ஆம்பூர் தொகுதியில் போட்டியிடப்போவதாக தே.மு.தி.க. துணைச்செயலாளர் எல்.கே.சுதீஷ் சூசகமாக தெரிவித்துள்ளார்.
    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே ஆலாங்குப்பம் கிராமத்தில் நடந்த திருப்பத்தூர் மாவட்ட தே.மு.தி.க. தேர்தல் ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்க வந்த, கட்சியின் துணைச் செயலாளர் எல்.கே. சுதீஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க தே.மு.தி.க. புதிய உத்வேகத்துடன் திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. தமிழக சட்டமன்ற தொகுதிகள் 7 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதில் வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வேலூர் மண்டலத்துக்கு நான் தேர்தல் பொறுப்பாளராகச் செயல்பட்டு வருகிறேன்.

    ராணிப்பேட்டைக்கு அடுத்தப்படியாக ஆம்பூரில் திருப்பத்தூர் மாவட்ட தே.மு.தி.க. தேர்தல் ஆலோசனைக்கூட்டம் இன்று (நேற்று) நடக்கிறது. 32 சட்டமன்ற தொகுதிகள் உள்ளடக்கிய இந்த மண்டலத்தில் 2011-ல் நடந்த தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட்டோம். வரும் சட்டமன்ற தேர்தலில் 12 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டு உள்ளோம்.

    2006-ல் நடந்த தேர்தலில் குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் நான் போட்டியிட்டேன். வேலூர் எனது சொந்த மாவட்டம் என்பதால், எப்போதும் வேலூர் மாவட்டம் மீது எனக்கு ஒரு ஆர்வம் உண்டு. கட்சி தலைவர் விஜயகாந்த் விருப்பப்படி கடந்த மக்களவை தேர்தலில் சேலம் தொகுதியில் போட்டியிட்டேன். தலைவர் மற்றும் தொண்டர்கள் விருப்பப்படி வாய்ப்பு கிடைத்தால் அடுத்த 5 ஆண்டுகள் ஆம்பூரில் என்னை நீங்கள் பார்க்கலாம். அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. நீடிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    5 ஆண்டுகள் ஆம்பூரில் என்னை பார்க்கலாம் என்று கூறியிருப்பது, அவர் ஆம்பூர் தொகுதியில் போட்டியிட இருப்பதை சூசகமாக தெரிவித்துள்ளார்.
    காட்பாடி அருகே காளை விடும் திருவிழா நடைபெற்றது. அப்போது பள்ளியின் அருகே மது குடித்துக்கொண்டிருந்த மாணவர்கள் பாட்டிலை வீசியதில் ஆசிரியை காயம் அடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    காட்பாடி:

    காட்பாடியை அடுத்த வண்டறந்தாங்கல் பகுதியில் காளை விடும் திருவிழா நடைபெற்றது. அங்கு சென்று வந்த காட்பாடி அரசு பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பள்ளியின் அருகே அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.

    அப்போது மது போதையில் பீர் பாட்டிலை பள்ளியில் சுவர் மீது வீசி உள்ளனர். இந்த நேரத்தில் வகுப்பறையில் இருந்து வெளியே வந்த ஆசிரியை முத்தேஸ் சர்மில் (45) மீது பீர் பாட்டில் உடைந்த பாகம் பட்டு முகத்தில் காயம் ஏற்பட்டது. இதற்கு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

    இந்த சம்பவம் குறித்து காட்பாடிபோலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி பள்ளியின் முன்னாள் மாணவர்கள் 17 வயதுடைய ஒருவர் மற்றும் யுவராஜ் (19) ஆகியோரை கைது செய்தனர்.
    இட ஒதுக்கீட்டு கொள்கையில் ராமதாஸ் உடன் துணை நிற்பேன் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

    வேலூர், ஜன.31-

    ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் உள்ள 13 சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிட உள்ள நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நேற்று நடந்தது. இதில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார்.

    பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை என்பது 25 ஆண்டுகால போராட்டத்துக்கு பிறகு தற்போது ஆளுநர் கையெழுத்திடவுள்ளார். எப்படியும் போராடி விடுதலையை சாத்தியப் படுத்துவோம்.

    தேர்தல் லாபத்துக்காக என்றாலும் 7 பேரை தயவு செய்து விடுதலை செய்யுங்கள். இந்த முறை வெற்று அறிவிப்பாக இல்லாமல் ஆக்கப்பூர்வமான செயலாக்கத்துக்கு கொண்டு வர வேண்டும்.

    இட ஒதுக்கீட்டு கொள்கையில் ராமதாஸ் உடன் துணை நிற்பேன். இட ஒதுக்கீட்டில் அவர் எப்போதுமே உறுதியாக இருப்பார். மக்களுக்கு பிரச்சினையே அ.தி.மு.க., தி.மு.க. என்ற 2 கட்சிகள் தான். இத்தனை ஆண்டுகளாக மக்கள் பிரச்சினையை தீர்க்க முடியாதவர்கள் 100 நாட்களில் தீர்க்கப் போகிறார்கள்.

    பா.ஜ.க. ஆட்சியின் சாதனைகளை பற்றி பேச ஒன்றும் இல்லை. அவர்கள், கொண்டு வந்த திட்டங்கள் எல்லாமே கொடுந்திட்டங்கள். வட இந்தியாவில் ராமர், கேரளாவில் அய்யப்பன், தமிழகத்தில் முருகன், பாஜகவும், ஸ்டாலினும் வேல் எடுத்தது தேர்தலுக்காக மக்களை இழுக்கத்தான்’’ என்றார். * * * நிகழ்ச்சியில் சீமான் பேசிய காட்சி. * * * வேலூர் - 02

    திமுக ஆட்சிக்கு வந்ததும் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்று முக ஸ்டாலின் கூறியுள்ளார்.

    வேலூர்:

    வேலூர் மாநகர தி.மு.க. சார்பில் வேலூர் அண்ணாசாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர்கள் அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோரின் உருவ சிலைகளை நேற்று இரவு மு.க.ஸ்.டாலின் திறந்து வைத்தார்.

    வேலூர் என்பது வீரம், விவேகம் நிறைந்த மண். சுதந்திரத்திற்கு பெயர் பெற்றது. இப்படிப்பட்ட ஊரில் இரு முக்கிய தலைவர்களின் சிலைகள் திறக்கப்பட்டுள்ளது.

    நேற்று முன்தினம் ஒரு நினைவிடம் திறந்து வைக்கப்பட்டது. ஜெயலலிதா நினைவிடம். கொள்கை, லட்சியத்தில் மாறுபாடு இருந்தாலும் அதை விமர்சிக்க நாங்கள் தயாராக இல்லை.

    அவர் மறைந்து 4 ஆண்டுகள் ஆகிறது. அவர் மறைந்தபோது பன்னீர்செல்வம் முதல்-அமைச்சர் பதவி ஏற்றார். பின்னர் திடீரென அவரது பதவி பறிக்கப்பட்டது.

    பின்னர் சசிகலா முதல்-அமைச்சர் பொறுப்பேற்க கவர்னர் ஒப்புதலுக்காக காத்திருந்தபோது சொத்துகுவிப்பு வழக்கு தீர்ப்பு வந்தது. ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் அவரும் 27-ந் தேதிதான் விடுதலை ஆகி இருப்பார்.

    அவர் மறைந்த பின்னர் நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் தியானம் செய்தார். அவரது ஆவியுடன் பேசினார்.

    மரணத்தில் மர்மம் இருக்கிறது என்றும், விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

    ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது சிகிச்சைகள் குறித்த செய்தி வெளியிடவில்லை. மாறாக அவர் இட்லி சாப்பிட்டார் என்று கூறினார்கள்.

    மரணம் குறித்து அமைக்கப்பட்ட விசாரணை கமி‌ஷனில் ஏன்? ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகவில்லை.

    ஜெயலலிதாவை அவர்கள் அடிக்கடி பல இடங்களில் நினைவு கூறுகிறார்கள். ஆனால் அவரது மரணத்தை கண்டுபிடிக்க யோக்கியதை இல்லை.

    ஆனால் அவர்களுக்கு அவரது நினைவிடத்தை திறந்து வைக்க என்ன யோக்கியதை உள்ளது. வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

    கொரோனா காலத்திலும் மக்களை சந்தித்த ஒரே கட்சி தி.மு.க. தான். இதை எந்த கட்சியும் செய்யவில்லை.

    நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் 100 நாட்களில் மக்களின் அடிப்படை பிரச்சினைகளான சாலை வசதி, போக்குவரத்து, ஓய்வூதியம், பட்டா, குடிநீர் போன்றவற்றுக்கு தீர்வு காணப்படும். இதை நான் உறுதியோடு கூறுகிறேன்.

    நான் முதல்-அமைச்சர் ஆன பிறகு மக்கள் அளித்த மனுக்கள் உள்ள பெட்டிகளின் பூட்டை நானே திறப்பேன். அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பேரணாம்பட்டு அருகே விடுமுறையில் சொந்த கிராமத்துக்கு வந்த ராணுவ அதிகாரி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
    பேரணாம்பட்டு:

    பேரணாம்பட்டு அருகே உள்ள கிருஷ்ணம்பல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி (வயது 49), இவர் இந்திய ராணுவ பிரிவில் அதிகாரியாக கடந்த 29 ஆண்டுகளாக பணி புரிந்து வந்தார். அரியானா மாநிலத்திலுள்ள ராணுவ முகாமில் பணிபுரிந்த இவர் விடுமுறையில் கடந்த 10-ந் தேதி குடும்பத்தினரை பார்ப்பதற்காக சொந்த கிராமத்திற்கு வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் முனுசாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் உடனடியாக குடியாத்தத்திலுள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மேல்பட்டி போலீஸ் நிலையத்தில் அவரது மனைவி நிலாவேணி கொடுத்த புகாரின் சப-இன்ஸ்பெக்டர் குமரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    வேலூர் அருகே நகை அடகுக்கடை உரிமையாளரை தாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
    வேலூர்:

    வேலூர் பெரிய அல்லாபுரத்தை சேர்ந்தவர் தேவாரம் (வயது 42). இவர் சதுப்பேரி மெயின் தெருவில் நகை அடகுக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவருடைய கடையின் அருகே அதே பகுதியை சேர்ந்த கவியரசு (25) என்பவர் மது அருந்தியுள்ளார். இதற்கு தேவாரம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

    அதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கவியரசு கையால் தேவாரத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் அரியூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவியரசை கைது செய்தனர்.

    ×