search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வேலூரில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்ற வாலிபர் கைது

    வேலூரில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். அலாரம் ஒலித்ததால் பல லட்சம் தப்பியது.
    வேலூர்:

    வேலூர் விருப்பாட்சிபுரத்தில் இந்தியன் வங்கியின் ஏ.டி.எம்.மையம் உள்ளது. நேற்று நள்ளிரவில் இந்த ஏ.டி.எம். மையத்தின் அலாரம் திடீரென ஒலித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் பாகாயம் போலீசார் உடனடியாக அங்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அதில், ஏ.டி.எம். எந்திரத்தை மர்மநபர் உடைக்க முயன்றதும், அலாரம் ஒலித்ததால் மர்மநபர் அங்கிருந்து தப்பிச் சென்றதும் தெரியவந்தது.

    இதுகுறித்து வங்கி மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை வங்கி மேலாளர் பிரதீபா பாகாயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அதில், நள்ளிரவு 2 மணிஅளவில் ஏ.டி.எம். மையத்துக்குள் நுழையும் வாலிபர் பெரிய கருங்கல்லால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயற்சி செய்கிறார். உடனடியாக அங்கிருந்த அலாரம் ஒலிக்கிறது. அதனால் பயந்துபோன வாலிபர் கல்லை அங்கேயே போட்டுவிட்டு ஓட்டம் பிடிக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

    கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த வாலிபர் விருப்பாட்சிபுரத்தை சேர்ந்த லோகேஷ் (20) என்று தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து வீட்டின் அருகே பதுங்கியிருந்த அவரை நேற்று காலை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் மதுபோதையில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்றதாக தெரிவித்தார். அதையடுத்து லோகேசை போலீசார் கைது செய்தனர்.

    அலாரம் ஒலித்ததால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த பல லட்சம் தப்பியது. லோகேஷ் மீது பாகாயம் போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.
    Next Story
    ×