search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வேலூர் பாலாற்றில் உடல் புதைப்பு: தொழிலாளி கொலையில் 5 பேர் கைது

    வேலூர் பாலாற்றில் நடந்த தொழிலாளி கொலையில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். முன்விரோதம் காரணமாக கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
    வேலூர்:

    வேலூர் தோட்டப்பாளையம் மாதாகோவில் தெருவைச் சேர்ந்தவர் வேலு (வயது 50), கம்பிக்கட்டும் தொழில் செய்து வந்தார். இவர் 4-ந்தேதி ரேஷன் கடையில் ரூ.2,500 மற்றும் பொங்கல் பரிசு வாங்க சென்றார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை.

    இதுகுறித்து வேலூர் வடக்குப் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. மாயமானதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலுவை தேடி வந்தனர்.

    இந்தநிலையில் 10-ந்தேதி மாலை வேலூர் புதிய பஸ் நிலையம் அருகில் பாலாற்றங்கரை சுடுகாட்டில் உள்ள எரியூட்டும் தகன மேடை அருகே பாதி உடல் புதைந்த நிலையில் வேலுவின் உடல் மீட்கப்பட்டது. அங்கேயே வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் அவரின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

    அவரின் உடலில் காயங்கள் இருந்ததால் அவரை மர்மநபர்கள் கொலை செய்து புதைத்தது போலீசாருக்கு தெரியவந்தது. அவர் மாயமான வழக்கை கொலை வழக்காக போலீசார் பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

    இந்த கொலை வழக்குத் தொடர்பாக தோட்டப்பாளையம் முத்து மண்டபம் பகுதியைச் சேர்ந்த ஜெகன் (32), அலெக்ஸ் (35), பாலகிருஷ்ணன் (55) மற்றும் 18, 17 வயதுடைய 2 வாலிபர்கள் என 5 பேரை போலீசார் கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து அவர்கள் அளித்த வாக்குமூலம் பற்றி போலீசார் கூறியதாவது:-

    கொலை செய்யப்பட்ட வேலு அப்பகுதியில் சில பெண்களை ஆபாசமாக பேசி உள்ளார். அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் அவதூறாகப் பேசி உள்ளதாக கூறப்படுகிறது. வேலு குடிபோதையில் அங்குள்ள பகுதி மக்களிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

    கைது செய்யப்பட்ட 5 பேரும் இதை கண்டித்துள்ளனர். இதனால் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் ஒருவர் சைதாப்பேட்டை கழிவுநீர் கால்வாயில் கடந்த மாதம் பிணமாக மிதந்தார். அவரை வேலு தான் கொலை செய்திருக்க வேண்டும் என 5 பேரும் கருதினர்.

    இந்த நிலையில் ரேஷன் கடைக்கு சென்ற வேலுவை அவர்கள் பாலாற்றங்கரைக்கு அழைத்துச் சென்று மது குடிக்க வைத்துள்ளனர். பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வேலுவை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர். உடலை யாருக்கும் தெரியாமல் அங்கேயே புதைத்தனர்.

    மேற்கண்டவாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×