search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஸ்கள்
    X
    பஸ்கள்

    ஆந்திராவில் பறிமுதல் செய்த 24 தமிழக பஸ்கள்விடுவிக்க படவில்லை- அதிகாரிகள் மீண்டும் பேச்சு வார்த்தை

    ஆந்திராவில் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக அரசு பஸ்கள், ஆவணங்கள் கொண்டு செல்லப்பட்டு ஆந்திர அதிகாரிகளிடம் காண்பிக்கப்பட்டது. அதற்கு பிறகும் தமிழக பஸ்கள் விடுவிக்கப்படவில்லை இதனால் மீண்டும் போக்குவரத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.

    வேலூர்:

    ஆந்திர மாநில அரசு பஸ்கள் அனுமதியின்றி வேலூர் மாவட்டத்திற்கு இயக்கப்படுவதாக துணை போக்குவரத்து ஆணையர் சுரேஷூக்கு புகார்கள் சென்றது.

    இதைத் தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் வேலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கருணாநிதி, சக்திவேல் அகியோர் கொண்ட குழுவினர் வேலூர் மக்கான் அருகே உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் கடந்த 13-ந் தேதி வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அனுமதியின்றி ஆந்திர மாநில 5 அரசு பஸ்கள் இயங்கியது தெரியவந்தது. பின்னர் 5 பஸ்களையும் பறிமுதல் செய்து, வேலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

    அதைத்தொடர்ந்து ஆந்திர மாநில போக்குவரத்து அதிகாரிகள், வேலூர் போக்குவரத்து அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் பழிக்கு பழியாக நேற்று தமிழகத்தில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூருக்கு இயக்கப்பட்ட தமிழக அரசு மற்றும் தனியார் பஸ்களில் உரிமம் உள்ளதா என அந்த மாநில போக்குவரத்து துறை அதிகாரிகள் குப்பம், பலமநேரி, சித்தூர், புத்தூர் ஆகிய இடங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    இந்த சோதனையில் தமிழக போக்குவரத்து கழக வேலூர் மண்டலத்துக்குட்பட்ட 4 பஸ்கள் மற்றும் காஞ்சீபுரம் போன்ற பகுதிகளில் இருந்து இயக்கப்பட்ட பஸ்கள் என 17 தமிழக அரசு பஸ்களும், 7 தனியார் பஸ்களும் என 24 பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதில் விரைவு பஸ்களும் அடங்கும். பறிமுதல் செய்யப்பட்ட பஸ்கள் அங்குள்ள போக்குவரத்து பணிமனைகளில் நிறுத்தப்பட்டுள்ளன.

    இதில் பெரும்பாலான தனியார் பஸ்கள் ஆந்திர மாநில பதிவெண் கொண்டதாகும். அந்த வாகனங்களில் உரிமையாளர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து தமிழக போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் அம்மாநில அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து நேற்று இரவு வேலூரில் பறிமுதல் செய்யப்பட்ட 5 ஆந்திர மாநில அரசு பஸ்கள் விடுவிக்கப்பட்டன.

    மேலும் ஆந்திராவில் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக அரசு பஸ்கள், ஆவணங்கள் கொண்டு செல்லப்பட்டு ஆந்திர அதிகாரிகளிடம் காண்பிக்கப்பட்டது.

    அதற்கு பிறகும் தமிழக பஸ்கள் விடுவிக்கப்படவில்லை இதனால் மீண்டும் போக்குவரத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.

    வேலூர் போக்குவரத்து மண்டல அதிகாரிகள் கூறுகையில், வேலூரில் நடந்த சம்பவத்தின் எதிரொலியாக அங்கு இந்த சோதனை செய்யப்பட்டுள்ளது.

    உரிமம் அசல் இல்லை, ஓட்டுனர் உரிமம் அசல் இல்லை போன்ற சிறு, சிறு குறைகளை வைத்துக்கொண்டு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து ஆவணங்களும் நம்மிடம் உள்ளது.

    அவற்றை காண்பித்தபிறகும் பஸ்கள் இன்று காலை வரை விடுவிக்கப்படவில்லை. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.

    பொங்கல் பண்டிகையின் போது நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

    Next Story
    ×