என் மலர்tooltip icon

    வேலூர்

    • வெளிநாடுகளில் உள்ள ரெயில் சேவைகளை போன்று அழகிய நவீன முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த சேர் கார் பிரிவு ரெயில் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
    • குறைந்த கட்டணத்தில் சாமானிய மக்களும் டபுள் டக்கர் ரெயிலில் பயணிக்கும் வசதி கிடைத்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    வேலூர்:

    சென்னை-பெங்களூரு இடையே டபுள் டக்கர் ஏசி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.

    சென்னை சென்ட்ரல், அரக்கோணம், காட்பாடி, ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, குப்பம், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு கண்டோன்மென்ட் பெங்களூர் சிட்டி ஜங்ஷன் ஆகிய இடங்களில் நின்று செல்கிறது.

    வெளிநாடுகளில் உள்ள ரெயில் சேவைகளை போன்று அழகிய நவீன முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த சேர் கார் பிரிவு ரெயில் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    360 கிலோமீட்டர் தூரத்தை 6 மணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில் டபுள் டக்கர் ரெயில் சென்றடைகிறது. பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே சாத்தியம் என மாறிய டபுள் டக்கரில் பொது பிரிவு என்று அழைக்கப்படும் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்க வேண்டும்.

    ஏசி இல்லாத சேர் கார் பெட்டிகளையும் இணைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி ரெயில்வே நிர்வாகம் டபுள் டக்கர் ரெயிலில் புதிய வசதிகளை ஏற்படுத்தி உள்ளது.

    அதன்படி டபுள் டக்கரில் ஏசி வசதி இல்லாத 5 சாதரண பெட்டிகள் மற்றும் முன்பதிவு இல்லாத ஒரு பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. இது தவிர சரக்குகளை கையாள ஒரு பெட்டி என மொத்தம் 15 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய வசதியுடன் இன்று முதல் சென்னை பெங்களூர் டபுள் டக்கர் ரெயில் இயக்க படுகிறது.

    குறைந்த கட்டணத்தில் சாமானிய மக்களும் டபுள் டக்கர் ரெயிலில் பயணிக்கும் வசதி கிடைத்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் நொருங்கி போனது.
    • ஆந்திரா மாநில கிராம மக்களின் போக்குவரத்து கடுமையாக பாதித்தது.

    மேல்பட்டி:

    வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பரதராமி அருகே உள்ள ரங்கசமுத்திரம் கிராமம் தாசராபள்ளி கொல்லை மேடுவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 55), முன்னாள் ராணுவ வீரர்.

    இவருக்கு திருமணம் ஆகி மனைவி தேன்மொழி, 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    வெங்கடேசன் தனது வீட்டின் அருகேயுள்ள, தனக்கு சொந்தமான 8 ஏக்கர் விவசாய நிலத்தில் பயிரிட்டு வருகிறார்.

    இவர்களின் விவசாய நிலம் ஆந்திர மாநிலம் தண்டலாம்பள்ளி மற்றும் பாவதேசவூர் கிராமத்தை ஒட்டி உள்ளது.

    அந்த கிராம மக்கள் அத்தியாவசிய தேவைக்காக தமிழக எல்லையில் உள்ள பரதராமிக்கு, வெங்கடேசன் நிலத்தின் வழியாக சென்று வந்ததாக கூறப்படுகிறது.

    இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்டலாம்பள்ளியை சேர்ந்தவர்கள், வெங்கடேசனின் நிலத்தின் வழியாக அத்துமீறி சாலை அமைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு வெங்கடேசன் எதிர்ப்பு தெரிவித்து, முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் அளித்தார்.


    இது சம்பந்தமாக வெங்கடேசன் மற்றும் எதிர் தரப்பினரை பரதராமி போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர்.

    இதனை தொடர்ந்து வெங்கடேசன் தனது விவசாய நிலத்தை சுற்றி வேலி அமைத்தார். இதனால் ஆந்திரா மாநில கிராம மக்களின் போக்குவரத்து கடுமையாக பாதித்தது.

    இதனால் ஆத்திரமடைந்த தண்டலாம்பள்ளி மற்றும் பாவதேசவூர் கிராமத்தை சேர்ந்த சிலர், வெங்கடேசன் வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதில் வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் நொருங்கி போனது.

    இது குறித்து தகவல் அறிந்த பரதராமி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    இதில் வெங்கடேசன் தனது குடும்பத்தினர் உயிருக்கு ஆபத்து இருப்பதால், பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

    முன்னாள் ராணுவ வீரர் வீட்டை சூறையாடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பொருளாதாரத்தில் தமிழகம் பின்தங்கி உள்ளதாக அண்ணாமலை கூறினார்.
    • பெரிய, பெரிய வல்லுனர்களே எங்களுக்கு சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கே.வி.குப்பம் பகுதியில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டார்.

    அப்போது அவர் அளித்த பேட்டியில், 'விரைவில் அமலாக்கத்துறை வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த் வீட்டு கதவை தட்டும்' என்று கூறினார்.

    காட்பாடி அடுத்த காங்கேயநல்லூர் முதல் பாலாறு இணையும் வரை உள்ள பாண்டியன் மடுவு கால்வாய் புனரமைப்பு பணிகளை அமைச்சர் துரைமுருகன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    அவர்கள் ஒன்றும் எங்கள் கதவை தட்ட வேண்டாம். அந்த கஷ்டம் அவர்களுக்கு எதற்கு?. நாங்களே திறந்து வைத்திருக்கிறோம்.

    பொருளாதாரத்தில் தமிழகம் பின்தங்கி உள்ளதாக அண்ணாமலை கூறினார். அவர் என்ன வந்து பார்த்தாரா?. பெரிய, பெரிய வல்லுனர்களே எங்களுக்கு சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள்.

    பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான கூட்டணி குறித்து எழும் வதந்திகளுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது. பிறகு துரைமுருகன் சொன்னதாக எதையாவது ஒன்னு போட்டு குட்டையை குழப்பி விடுவீர்கள். கூட்டணி குறித்து முறையாக அறிவிப்பு வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இங்கிலாந்து அணியில் அதிக ரன் எடுத்தவர் கிராலி ஆவார்.
    • பும்ராவின் பந்து வீச்சு நம்ப முடியாத வகையில் அபாரமாக இருந்தது.

    இங்கிலாந்துக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் ஜெய்ஸ்வால் 209 ரன் குவித்து முத்திரை பதித்தார். தனது 6-வது டெஸ்டில் முதல் முறையாக இரட்டை சதத்தை பதிவு செய்தார். இதேபோல பும்ரா 45 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார்.

    இந்த இருவரது பங்களிப்பையும் இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் கிராலி பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஜெய்ஸ்வாலின் ஆட்டம் அபாரமாக இருந்தது. நம்ப முடியாத இன்னிங்ஸ் அவர் ஒரு அற்புதமான வீரராக திகழ்கிறார். அவர் நட்சத்திர வீரராக உருவெடுப்பார்.

    பும்ராவின் பந்து வீச்சு நம்ப முடியாத வகையில் அபாரமாக இருந்தது. இது மாதிரியான ஆடுகளத்தில் சிறப்பாக வீசியது பாராட்டத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இங்கிலாந்து அணியில் அதிக ரன் எடுத்தவர் கிராலி ஆவார். தனது 26-வது பிறந்தநாளில் அவர் 76 ரன்கள் எடுத்தார்.

    • தமிழகத்தை ஒப்பிட பா.ஜ.க. ஆளும் எந்த மாநிலத்திற்கும் தகுதி இல்லை என்று கூறினார்.
    • இந்தியா கூட்டணியில் அனைவரும் ஊழல்வாதிகள்.

    வேலூர்:

    கன்னியாகுமாரி மாவட்டத்தில் சாலை பணிகளை தமிழக பால் வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைத்தார்.

    அப்போது பீகாரை விட தமிழகத்தின் ராமேஸ்வரம் உட்பட பல மாவட்ட மக்கள் பொருளாதாரத்தில் பின் தங்கி உள்ளதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்தார்.

    அண்ணாமலைக்கு தைரியம் உள்ளதா?. அவருக்கு தைரியம் இருந்தால் மனிதவள மேம்பாட்டு குறியீட்டு அறிக்கையை வைத்து, தமிழகத்தின் ஒரு குக் கிரமாமோ அல்லது மலை வாழ் பகுதி கூட உதாரணமாக வைத்து என்னோடு பொது மேடையில் விவாதிக்கட்டும். அதற்கு அண்ணாமலைக்கு தைரியம் உள்ளதா?, யோக்கியம் உள்ளதா?. நான் தயாராக உள்ளேன்.

    மேலும் மனிதவள மேம்பாட்டு குறியீட்டில் தமிழகத்தை ஒப்பிட பா.ஜ.க. ஆளும் எந்த மாநிலத்திற்கும் தகுதி இல்லை என்று கூறினார்.

    பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை, யோக்கியம் இருக்கிறதா? என்று ஒருமையில் மனோ தங்கராஜ் பேசிய விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


    இந்நிலையில் வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கே.வி.குப்பம் பகுதியில் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    தேர்தலுக்கு நேரமும் காலமும் உள்ளது.

    அமைச்சர் மனோ தங்கராஜ் விவாதிக்க வருகிறார் என்றால், நான் எங்களின் பா.ஜ.க. செய்தி தொடர்பாளரை அனுப்பி வைக்கிறேன். விவாதிப்பதற்கான இடத்தையும் ,நேரத்தையும் மனோ தங்கராஜ் முடிவு செய்யட்டும். மனோ தங்கராஜ் வருவதாக இருந்தால் எங்களின் செய்தி தொடர்பாளர்தான் வருவார். எங்கள் கட்சியின் செய்தி தொடர்பாளர் எப்போது வேண்டுமானாலும் பேசுவார்.

    அவர்களின் தலைவர் மு.க.ஸ்டாலின் வருவதாக இருந்தால் பாஜக தலைவரான நான் வருகிறேன். அதற்கு நான் தயாராக உள்ளேன்.

    இதுவரை எந்த தலைவரும் வெளிநாட்டிற்கு 10 நாள் சுற்றுலா போய் பார்த்ததில்லை. ஸ்டாலின் 10 நாட்கள் ஸ்பெயின் சென்றிருந்தார். நம்மை முட்டாள்கள் என தி.மு.க. நினைத்துக் கொண்டிருக்கிறது.

    தற்போது உருவாகியுள்ள இந்தியா கூட்டணியில் அனைவரும் ஊழல்வாதிகள்.


    இதில் முக்கிய ஊழல்வாதிகள் உள்ள இந்த கூட்டணியில் இருந்து ஒவ்வொருவராக வெளியே வருகின்றனர். சிலர் கைதாகிறார்கள்.

    இதற்கு தமிழகத்தில் அமர்ந்து கொண்டு ஸ்டாலின் ஏன் பதறுகிறார் என்று தெரியவில்லை.

    தி.மு.க.வின் டெல்லி ஆசை நிராசையாக தான் இருக்கும். 2024-ம் ஆண்டு தேர்தல் முடிவுகளை பாருங்கள். இந்த முறை மக்கள் முடிவு செய்து விட்டார்கள் தனி பெரும்பான்மையுடன் பாரதிய ஜனதா கட்சியை 400 எம்.பி.க்களுக்கு தாண்டி அமர வைப்பார்கள்.

    இத்தனை நாட்களாக தி.மு.க., எம்.பி. க்கள் டெல்லியில் இருந்தார்கள். அவர்கள் வெள்ளை அறிக்கை கொடுக்கட்டும் பாராளுமன்றத்தில் எத்தனை கேள்வி கேட்டார்கள்?, அவர்கள் தமிழக பிரச்சினை குறித்து என்ன பேசினார்கள்?, அவர்கள் மூலம் தமிழகத்திற்கு என்ன ஆதாயம் கிடைத்தது? என்ற வெள்ளை அறிக்கையை தி.மு.க. கொடுக்கட்டும்.

    விரைவில் ஊழல் பட்டியல்களை வெளியிடுவோம். அண்ணாமலை லிமிட்டை தாண்டிவிட்டார் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறார்.

    நான் லிமிடுக்குள்ளே தான் உள்ளேன். ரோட்டில் கோடு போட்டு உள்ளார்களா?. இந்த கோட்டை தாண்டி நீ வரக்கூடாது, நானும் வரமாட்டேன் என்று கேட்பதற்கு.

    பங்காளி கட்சிகள்தான் லிமிட்டை கிராஸ் செய்கிறார்கள். 2 பங்காளிகளும் சமரசமாக வண்டியை ஓட்டிக்கொண்டு இருந்தார்கள். இந்த 5 ஆண்டுகளுக்கு நாங்கள், அடுத்த 5 ஆண்டு உனக்கு என்று. இப்போது பங்காளி கட்சிகளுக்கு கோபம். உண்மையை பேசினால் லிமிட்டை கிராஸ் செய்கிறார் என்பதா?

    2011-ம் ஆண்டு தி.மு.க கொடுத்த 511 வாக்குறுதிகளில், இதுவரை 20 வாக்குறுதிகள் கூட நிறைவேற்ற வில்லை இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவார்களா?


    இந்த முறை தி.மு.க. அரசு தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்கு முன்பு கடந்த 2011-ம் ஆண்டு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடட்டும். கூட்டணிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்

    பா.ஜ.க. கட்சி எங்களுக்கு பொருட்டு இல்லை என உதயநிதி ஸ்டாலின் கூறினார். அவர் சொல்லட்டும் நல்லது தானே. அவர்கள் கனவு உலகத்தில் வாழட்டும். இளைஞரணி மாநாட்டில் காவலா காவலா என்ற பாட்டை போட்டு நடனம் ஆடட்டும். நாங்கள் மக்களோடு நின்று கொண்டிருக்கிறோம். 2024 பாராளுமன்ற தேர்தலில் தெரியும் காவலா காவலா ஜெயிக்கிறதா?, இல்லை என் மண் என் மக்கள் ஜெயிக்கிறதா என்று பார்க்கலாம்.

    தேசிய ஜனநாயக கூட்டணிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், கதவு திறந்திருக்கிறது, ஜன்னல் திறந்திருக்கிறது யாரையும் வர வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை. விருப்பம் இருப்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம்.

    11-ந் தேதி தமிழகத்திற்கு ஜே.பி நட்டா வருகிறார். சத்தியமூர்த்தி பவனில் தற்போது யார் சட்டை, வேட்டியை கிழிப்பது? என்று போட்டி நடைபெற்று வருகிறது. நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள கட்சி பாரதிய ஜனதாவின் 'பி' டீம் என்று கூறப்படுகிறது. இருக்கட்டும், நாங்கள் மக்களோட 'ஏ' டீம், இந்திய மக்களுடைய 'ஏ' டீம், பாரதிய ஜனதா கட்சி தமிழக மக்களுடைய 'ஏ டீம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முல்லைபெரியாறு விவகாரம் குறித்து நீதிமன்ற உத்தரவுப்படி பேச்சு வார்த்தை நடத்துவோம்.
    • இந்தியா கூட்டணி இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

    வேலூர்:

    "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற தமிழ்நாடு அரசின் புதிய திட்டத்தின் கீழ் காட்பாடி வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் இன்று ஆய்வு செய்தார்.

    முல்லைபெரியாறு விவகாரம் குறித்து நீதிமன்ற உத்தரவுப்படி பேச்சு வார்த்தை நடத்துவோம். நாங்களும் கேரளா அரசு உடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்.


    மேகதாது அணை விவகாரத்தில் இன்னும் ஆய்வு மேற்கொள்வது குறித்து கேட்டதற்க்கு, அவர்கள் எதை செய்தாலும் சரி, ஆய்வு பண்ணாலும் சரி படம் வரைந்தாலும் சரி, செய்து போட்டோ எடுத்து போட்டாலும் சரி, டி.பி.ஆர் தயாரிக்கும் ரிப்போர்ட்டுக்கு தமிழ்நாடு அரசின் ஒப்புதல் வேண்டும், இரண்டாவது மத்திய அரசு ஒப்புதல் கொடுக்க வேண்டும், நாம் அதை ஒத்துக் கொள்ள வேண்டும் ஒத்துக் கொள்ளும் வரை அது நடக்காது.

    வெள்ள பாதிப்பில் இன்னும் நிதி வரவில்லை கேட்டிருக்கிறோம்.


    "உங்களை தேடி உங்கள் ஊரில்" திட்டத்தை இப்பதான் தொடங்கி கல்யாணம் பண்ணி இருக்கோம் அதுக்குள்ள குழந்தையை பற்றி கேட்டால் எப்படி தெரியும். எங்களிடம் திட்டங்கள் எந்த அளவுக்கு பயன் தந்துள்ளது என்பது மக்களுக்கு தெரியும்.

    இந்தியா கூட்டணியில் நிதிஷ்குமார் விலகியது ஒரு திருவிளையாடல் தான். இது மாதிரி திடீர் திடீர் செய்திகள் வரும் இதெல்லாம் எதிர்பார்த்துதான் கூட்டணி அமைக்கிறோம். எதிர்பார்த்துதான் தேர்தலை சந்திக்கிறோம். இதெல்லாம் எங்களுக்கு புதுசு அல்ல. எங்களுக்கு இது பழசு தான்.

    தி.மு.க கூட்டணி பேச்சு வார்த்தையை நாங்கள் இன்னும் ஆரம்பிக்கவில்லை. தமிழ்நாட்டில் காங்கிரஸ் மட்டும் தான் தற்போதைக்கு பேசிவிட்டு செல்கின்றார்கள்.

    சோசியல் மீடியாவில் தவறாக பரவும் தகவலை நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அரசியல் கட்சிகள் நிலைபாடு மாறிக்கொண்டே இருக்கும். என்றைக்கோ பேசியதை இன்றைக்கு பரப்பக்கூடியது என்பது ஆண்மை இல்லாத தனம்.

    இந்தியா கூட்டணி இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. தற்போதைக்கு வருவார்கள் போவார்கள் கூட்டணி இறுதி ஆகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பல்வேறு இடங்களில் அண்ணாமலையை வரவேற்று டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
    • அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வேண்டுமென்றே பா.ஜ.க. பேனர்களை சேதப்படுத்தி உள்ளனர்.

    வேலூர்:

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வேலூர் மாவட்டத்திற்கு நடைபயணம் வருகிறார். இதனை வரவேற்று பா.ஜ.க. நிர்வாகிகள் தொண்டர்கள் பேனர் மற்றும் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.

    வேலூர் மாநகர பகுதியில் பல்வேறு இடங்களில் அண்ணாமலையை வரவேற்று டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் வேலூர் அண்ணா சாலையில் ராஜா தியேட்டர் மற்றும் காட்பாடி ரோட்டில் உள்ள நேஷனல் சர்க்கிள் பகுதிகளில் இருந்த டிஜிட்டல் பேனர்கள் மற்றும் போஸ்டர்களை சேதப்படுத்தி உள்ளனர்.

    பா.ஜ.க டிஜிட்டல் பேனர்கள் இன்று காலையில் காட்பாடி சாலை ஓரம் உள்ள கால்வாயில் வீசப்பட்டு கிடந்தன.

    இதனைக் கண்டு பா.ஜ.க நிர்வாகிகள், தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    நள்ளிரவில் வேண்டுமென்றே மர்ம கும்பல் அதனை சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டி உள்ளனர்.

    இது தொடர்பாக பா.ஜ.க.வினர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வேண்டுமென்றே பா.ஜ.க. பேனர்களை சேதப்படுத்தி உள்ளனர்.

    அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    • இசுரேலின், நெகேவ் டிம்னா பூங்காவில் உள்ள காணப்படும் காளான் பாறைகள் இந்தியாவில் தார் பாலை வனப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன.
    • அதிசய காளான் பாறைகள் வேலூர் மாவட்டம்‌ சிவநாதபுரம் அருகில் உள்ள குருமலையில் கண்டறியப்பட்டுள்ளது.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் சிவநாதபுரத்தில் அதிசய காளான் பாறை கண்டறியப்பட்டுள்ளது.

    இசுரேலின், நெகேவ் டிம்னா பூங்காவில் உள்ள காணப்படும் காளான் பாறைகள் இந்தியாவில் தார் பாலை வனப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன.

    தமிழகத்தில் ஏற்கனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தின் எல்லை திருப்பத்தூர் மாவட்டம், கந்திலியை அடுத்த தோக்கியம் கிராமத்தில், கதிரியப்பன் கோவில் வட்டம் என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த அதிசய காளான் பாறைகள் தற்போது வேலூர் மாவட்டம் சிவநாதபுரம் அருகில் உள்ள குருமலையில் கண்டறியப்பட்டுள்ளது.

    • பூர்ணிமா கடந்த வாரம் பூஜை அறையில் பூஜை செய்து கொண்டிருந்தார்.
    • தீக்காயம் அடைந்த பூர்ணிமாவை தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    காரிமங்கலம்:

    தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் இவரது மகன் சசி மோகன் காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளி பகுதியில் வசித்து வருகிறார்கள். இவரது மனைவி பூர்ணிமா (வயது 30) கடந்த வாரம் பூஜை அறையில் பூஜை செய்து கொண்டிருந்தார். அப்பொழுது குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக திடீரென பூர்ணிமா மயங்கி விழுந்தார்.

    இதில் அவர் அணிந்திருந்த ஆடை விளக்கில் பட்டு தீ பற்றிக்கொண்டது. இதை பார்த்த அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டனர். பின்னர் தீக்காயம் அடைந்த அவரை தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பூர்ணிமா உயிரிழந்தார்.

    • சேமித்து வைக்கப்பட்டிருந்த பல ஆயிரம் கிலோ உப்பு வெள்ளத்தால் நாசமானது.
    • தூத்துக்குடியில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் உப்பு அளவு வெகுவாக குறைந்துவிட்டது.

    வேலூர்:

    தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்தியா மட்டுமின்றி இலங்கை, மலேசியா உள்ளிட்ட வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    தூத்துக்குடி, ஆறுமுகநேரி, முத்தையாபுரம், முள்ளக்காடு, வெள்ளப்பட்டி, தருவைகுளம், வேம்பார், பழையகாயல் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

    கடந்த மாதம் பெய்த புயல் மழையால் தாமிரபரணியில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல், ஆறுமுகநேரி மற்றும் உப்பளங்களில் வெள்ளம் புகுந்தது.

    அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த பல ஆயிரம் கிலோ உப்பு வெள்ளத்தால் நாசமானது.

    இதனால் தூத்துக்குடியில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் உப்பு அளவு வெகுவாக குறைந்துவிட்டது. வரத்து குறைவாக உள்ளதால் தூத்துக்குடியில் இருந்து விற்பனைக்கு வரும் உப்பு விலை உயர்ந்துள்ளது.

    50 சிறிய பாக்கெட்டுகள் கொண்ட ஒரு மூட்டை கடந்த மாதம் வரை ரூ.230-க்கு விற்பனையானது. ஆனால் தற்போது ரூ. 290 வரை விலை உயர்ந்துள்ளது.

    சில்லரை விலையில் கல் உப்பு ஒரு பாக்கெட் ரூ.7 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது இந்த கல் உப்பு ஒரு பாக்கெட் ரூ.15 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    தூத்துக்குடியில் இருந்து தமிழகம் முழுவதும் உப்பு விற்பனைக்கு வருகிறது. மழை வெள்ளத்தால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அங்கு தயார் செய்யப்பட்டிருந்த உப்பு வெள்ளத்தால் நாசமாகிவிட்டது. இதன் காரணமாக உப்பு விலை உயர்ந்துள்ளது.

    ஓட்டல்கள் மற்றும் தோசை, இட்லி மாவு தயாரிப்பவர்கள் உணவு தின்பண்டங்கள் தயாரிப்பவர்கள் மொத்தமாக கல் உப்பு வாங்கி செல்கிறார்கள்.

    மூட்டை மூட்டையாக உப்பு வாங்கிச் செல்லும் அவர்களுக்கு இந்த விலை உயர்வு கடினமாக அமைந்துள்ளது. இதன்மூலம் தின்பண்டங்கள் விலை உயரவும் வாய்ப்புள்ளது.

    தூத்துக்குடி பகுதியில் தற்போது உப்பளங்கள் செயல்பட தொடங்கி உள்ளன. ஆனால் மாவட்டத்தில் மற்ற இடங்களில் வெள்ள பாதிப்பால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்டு மாதத்திற்கு பிறகு உப்பு விலை குறைய வாய்ப்பு உள்ளது என தெரிவித்தனர்.

    • பல்வேறு இடங்களில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
    • சமூக வலைதளங்களில் எம்.ஜி.ஆர். படத்திற்கு பதிலாக நடிகர் அரவிந்தசாமி படம் இருப்பதை கண்டு நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் அ.தி.மு.க. மேற்கு ஒன்றியம் சார்பில் பல்வேறு இடங்களில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    இதில் மாதனூர் அடுத்த கீழ்மிட்டாளம் அ.தி.மு.க. கிளை சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனரில் எம்ஜிஆர் படத்திற்கு பதிலாக ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான தலைவி படத்தில் எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் அரவிந்த்சாமியின் படத்தை வைத்திருந்தனர்.

    இந்த படம் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பு ஏற்பட்டது. இன்று காலை எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கொண்டாட அ.தி.மு.க.வினர் வந்தனர். சமூக வலைதளங்களில் எம்.ஜி.ஆர். படத்திற்கு பதிலாக நடிகர் அரவிந்தசாமி படம் இருப்பதைக்கண்டு நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து சுதாரித்துக்கொண்ட அ.தி.மு.க.வினர் நடிகர் அரவிந்த்சாமி படத்தின் மீது எம்.ஜி.ஆர். படத்தை ஒட்டினர். தொடர்ந்து எம்.ஜி.ஆர். பிறந்தநாளை கொண்டாடினர்.

    • அண்ணாமலை அடுத்த ஊழல் பட்டியலை வெளியிடட்டும். நாங்கள் என்ன, அவர் கையையா பிடித்துள்ளோம்.
    • தோழமைக் கட்சிகள் எங்களுடன் இருப்பார்கள் என பலமாக நம்புகிறோம்.

    வேலுார்:

    பொங்கல் விழாவையொட்டி, தி.மு.க. பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் காட்பாடியில் தி.மு.க. தொண்டர்களை சந்தித்தார்.

    தேவகவுடா பிரதமர் ஆவதற்கு முன்பும், பிரதமராக இருந்தபோதும் மட்டுமின்றி, இப்போதும் கூட தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட காவிரியிலிருந்து தரக்கூடாது என்பதில் வைராக்கியமாக உள்ளார்.

    அவரிடமிருந்து தமிழகத்துக்கு சாதகமான வார்த்தைகள் வராது. இவர் தீர்ப்பாயம் அமைப்பதை எதிர்த்தார்.

    அரசிதழில் வெளியிடுவதை எதிர்த்தார். அவர் காலம் முழுவதும் தமிழகத்துக்கு எதிராகத்தான் பேசுவார்.

    மோடிக்கு சாதகமாக பேசினால்தான் அவருடைய பிள்ளைகளால் அரசியல் நடத்த முடியும் என்று நினைக்கிறார். அதை பற்றி எல்லாம் நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

    தேவகவுடா ஆதாயத்துக்காக பேசுகிறாரோ அல்லது வெறுப்பாக பேசுகிறாரோ, எப்படி இருந்தாலும் தமிழகத்துக்கு எதிர்ப்பாகத்தான் பேசுவார்.


    அண்ணாமலை அடுத்த ஊழல் பட்டியலை வெளியிடட்டும். நாங்கள் என்ன, அவர் கையையா பிடித்துள்ளோம். நாளைக்கே தேர்தல் வந்தாலும் தி.மு.க. சந்திக்கும்.

    இது கொள்கைக்காக உருவாக்கப்பட்ட இயக்கம். தேர்தல் நேரத்தில்தான் கூட்டணியை அறிவிப்போம். இப்போதைக்கு கூட்டணி பற்றி சொல்ல முடியாது. இப்போதுள்ள தோழமைக் கட்சிகள் எங்களுடன் இருப்பார்கள் என பலமாக நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து, "தமிழகத்தில் அதிகார மையங்கள் அதிகமாகிவிட்டது என பழனிசாமி கூறியுள்ளாரே" என கேட்டதற்கு, "அவர் எதிர்க்கட்சி, அப்படித்தான் கூறுவார்.

    என துரைமுருகன் பதிலளித்தார்.

    ×