என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • பல நடிகர்கள் அரசியலுக்கு வந்தாலும் அவர்களால் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை.
    • தமிழக இளைஞர்கள் அரசியல் விழிப்புணர்வு உள்ளவர்களாக இருக்கிறார்கள்.

    வேங்கிக்கால்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருவண்ணாமலைக்கு வந்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தேசிய கல்விக் கொள்கை என்ற திட்டத்தின் மூலம் தமிழகத்தில் ஒன்றிய பா.ஜ.க. அரசு இந்தியை திணிக்க முயல்கிறது. இது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செயல் திட்டத்தில் ஒன்றானது. ஒரே நாடு ஒரே மொழி என்பதை அடையும் நோக்கத்தோடு மத்திய அரசு செயல்படுகிறது.

    தனி நபர்கள் இந்தியை கற்க வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை. நாங்கள் இந்தியை எதிர்க்கவில்லை. இந்தியா முழுவதும் ஒரே மொழியை பேச வேண்டும் என்ற நோக்கத்தோடு கொண்டுவரப்பட்டுள்ள தேசிய கல்விக் கொள்கையை தான் எதிர்க்கிறோம். கல்விக் கொள்கையை ஏற்றால்தான் கல்விக்கான நிதியை தருவோம் என்பது ஏற்புடையதல்ல.

    இது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது. விடுதலை சிறுத்தைகள் கட்சி இதனை கண்டிக்கிறது. மார்ச் 5-ந் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள அனைத்து கட்சி கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது.

    தமிழ்நாடு முதலமைச்சரின் இந்த முயற்சியை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு பாராளுமன்ற தொகுதி மறுவரையறை செய்யப்பட உள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் மறு வரையறை அமைந்தால் தமிழ்நாடு 8 பாராளுமன்ற தொகுதிகளை இழக்க நேரிடும். ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் தமிழகத்தில் திறக்கப்பட்டுள்ளது. ஆறுதல் அளிக்கிறது.

    நடிகர் விஜய் தேர்தலை சந்தித்தால் தான் அவரை மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களா, அங்கீகரிக்கிறார்களா என்பது தெரியவரும். பல நடிகர்கள் அரசியலுக்கு வந்தாலும் அவர்களால் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. தற்போது உள்ள சூழ்நிலையில் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் இல்லாத நிலையில் அ.தி.மு.க.வையோ, தி.மு.க.வையோ பலவீனப்படுத்த முடியும் என்று சிலர் கணக்கு போடுகிறார்கள். சினிமா புகழை மட்டும் வைத்து எல்லாவற்றையும் ஓரம் கட்டி விட முடியும் என்று சொல்லிவிட முடியாது. தமிழ்நாட்டு மக்கள் விவரமானவர்கள். தமிழக இளைஞர்கள் அரசியல் விழிப்புணர்வு உள்ளவர்களாக இருக்கிறார்கள்.

    தமிழக இளைய தலைமுறையினரை அவ்வளவு எளிதாக ஏமாற்ற முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நான் 2007 இல் வரைந்த கடைசி பிரமாதமான ஓவியம் பெரியார் ஓவியம் தான் என சிவகுமார் தெரிவித்தார்.
    • பெரியாரின் ஓவியத்தை திரையிட்டு மாணவர்கள் மத்தியில் நடிகர் சிவகுமார் பேசினார்.

    திருவண்ணாமலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகுமார் கலந்து கொண்டார்.

    அப்போது அவர் வரைந்த பெரியாரின் ஓவியத்தை திரையிட்டு மாணவர்கள் மத்தியில் பேசிய நடிகர் சிவகுமார், "இன்றைக்கும் ஒரு சாதிய கட்டமைப்பு உள்ளது. இவன் மேல்சாதிக்காரன், இவன் கீழ் சாதிக்காரன்.. பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என 4 வகைகளாக பிரித்து.. இதில் சூத்திரன் கடைசி ஆளு.

    இப்படி கீழ் சாதிக்காரன் என மக்கள் அவமானப்படுத்தப்பட்டிருக்கும்போது.. ஒடுக்கப்பட்ட மக்களில் இருந்து IAS, IPS வருவதற்கு போராடிய ஒரே போராளி பெரியார். நான் 2007 இல் வரைந்த கடைசி பிரமாதமான ஓவியம் பெரியார் ஓவியம் தான்" என்று தெரிவித்தார். 

    • டேங்கர் லாரியின் இருந்த கிளீனர் கீழே குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலையில் இருந்து சிமெண்டு கலவை ஏற்றி கொண்டு இன்று அதிகாலை டேங்கர் லாரி திருவண்ணாமலை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தர்மபுரி நோக்கி சென்று கொண்டிருந்தது.

    டேங்கர் லாரியை அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரகு என்பவர் ஓட்டிச் சென்றார்.

    பாச்சல் அருகே டேங்கர் லாரி சென்ற போது எதிரே வந்த மினி சரக்கு லாரி மீது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. மோதிய வேகத்தில் 2 வாகனங்களும் திடீரென தீப்பிடித்து எரிந்தன. மளமளவென தீ பரவியதால் 2 வாகனங்களும் தீயில் கருகின. வாகனங்களின் டயர்களும் வெடித்து சிதறின.

    இந்த கோர விபத்தில் மினி சரக்கு லாரியை ஓட்டி வந்த டிரைவர் பிரதாப் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். டேங்கர் லாரியின் இருந்த கிளீனர் கீழே குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    டேங்கர் லாரியை ஓட்டி வந்த ரகு தீயில் சிக்கி படுகாயம் அடைந்தார். இதுகுறித்து அந்தப்பகுதியில் சென்று கொண்டிருந்தவர்கள் பாய்ச்சல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தனிப்பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் பார்த்திபன், சக்திவேல் ஆகியோர் தீயில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ரகுவை மீட்டனர்.

    பின்னர் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் பலியான பிரதாபின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    தகவல் அறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் தீயில் எரிந்து கொண்டிருந்த 2 வாகனங்களையும் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மினி சரக்கு லாரி டிரைவர் தீயில் இருந்து தப்பிக்க தனது வாகனத்தின் வலது புற கதவை திறக்க முயன்றபோது கதவு திறக்க முடியாமல் போனதால் வாகனத்திலேயே உடல் கருகி பலியானது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இந்த விபத்தால் திருவண்ணாமலை-பெங்களூரு நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • வேலூர் மார்க்கமாக செல்லும் ரெயில்களில் முண்டியடித்துக் கொண்டு பக்தர்கள் ஏறினர்.
    • கிரிவலத்தையொட்டி சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமியையொட்டி நேற்று முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    சாமி தரிசனம் முடிந்து பக்தர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பினர். இதனால் திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    விழுப்புரம், வேலூர் மார்க்கமாக செல்லும் ரெயில்களில் முண்டியடித்துக் கொண்டு பக்தர்கள் ஏறினர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. குழந்தைகள் பெண்கள் ரெயிலில் ஏற முடியாமல் அவதி அடைந்தனர்.

    பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததால் திருவண்ணாமலை ரெயில் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. கிரிவலத்தையொட்டி சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. இதிலும் கூட்டம் அலைமோதியது.

    ஆட்டோக்களால் திருவண்ணாமலை நகரம் போக்குவரத்து நெரிசலால் திணறியது. பக்தர்கள் நடந்து செல்ல கூட வழியில்லாத அளவுக்கு அனைத்து சாலைகளையும் ஆட்டோ ஆக்கிரமித்து இருந்ததால் கிரிவல பக்தர்களும், நகர பொதுமக்களும் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர்.

    வெளியூர்களில் இருந்து வரும் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் நகருக்கு வெளியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக வாகன நிறுத்தும் இடத்தில் நிறுத்தப்படுவது வழக்கம். ஆனால் நேற்று திருவண்ணாமலை நகரம் வரை அனைத்து வாகனங்களும் அனுமதிக்கப்பட்டன.

    திருவண்ணாமலை நகருக்கு வரும் பக்தர்களின் கார்கள் அதற்காக அமைக்கப்பட்டுள்ள கார் நிறுத்தும் மையங்களில் நிறுத்தி, மாடவீதிகளில் ஆட்டோக்களை அனுமதிக்காமல் இருந்தால் மட்டுமே போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படும் என்பது அனைத்து தரப்பினரின் கருத்தாக உள்ளது.

    • தொழிலதிபர் சாம்பசிவ ராவ் என்பவர் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வந்தார்.
    • கோவிலில் இருந்த பக்தர்கள் அவரை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இந்த நிலையில் விஜயவாடாவை சேர்ந்த தொழிலதிபர் சாம்பசிவ ராவ் என்பவர் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வந்தார். இவர் துபாயில் ஓட்டல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

    அப்போது அவர் கழுத்து மற்றும் கை நிறைய சுமார் 3 கிலோ எடை கொண்ட தங்க நகைகள் அணிந்தபடி வந்தார். கோவிலில் இருந்த பக்தர்கள் அவரை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

    • கோவில் நடை திறக்கப்பட்டதும், சாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
    • ஆண்டுக்கு 2 முறை அண்ணாமலையார் கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடக்கும் விழாக்களில் திருவூடல் விழா முக்கியமானது.

    ஆண்டுதோறும் தை மாதம் 2-ம் நாள் இந்த விழா நடக்கும். அதன்படி, நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டதும், சாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து, அதிகாலை 6 மணிக்கு அபிதகுஜாம்பாள் சமேத அண்ணாமலையார் தனி வாகனத்தில் எழுந்தருளி, நந்தியம் பெருமானுக்கு அருளாசி வழங்கினார். பின்னர், திட்டிவாசலில் சூரியனுக்கு காட்சியளித்தார்.

    இதையடுத்து, அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சுந்தரமூர்த்தி நாயனார் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி, மாடவீதியில் 3 முறை வலம் வரும் வைபவம் நடந்தது.

    பின்னர், இரவு 7.30 மணிக்கு மேல் சாமி அம்பாள் இடையே திருவூடல் உற்சவம் நடந்தது. அப்போது சுந்தரர் தூது சென்றார்.

    இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர். பின்னர், பராசக்தி அம்மன் கோவிலுக்கு திரும்பினார்.

    அண்ணாமலையார் திருமஞ்சன கோபுரத்தெருவில் உள்ள குமரக்கோவில் சென்றார்.

    ஆண்டுக்கு 2 முறை அண்ணாமலையார் கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அதேபோன்று வருடம் தொடக்கத்தில் இன்று அதிகாலை கோவிலில் இருந்து புறப்பட்டு அண்ணாமலையார் 14 கிலோமீட்டர் தூரம் உள்ள அண்ணாமலையை வலம் வந்தார். கிரிவலம் வந்த அண்ணாமலையாரை வழிநெடுகிலும் பக்தர்கள் வழிபட்டனர். பகல் 11 மணி அளவில் கோவிலுக்கு திரும்பினார்.

    தொடர்ந்து, சாமியுடன் அம்பாள் சமாதானம் அடையும் மறுவூடல் உற்சவம் கோவில் 2-ம் பிரகாரத்தில் நடக்கிறது.

    • மகா தீப மை நடராஜருக்கு சாத்தப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும்.
    • திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ், ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

    திருவண்ணாமலையில் உள்ள மகா தீப மலையை பவுர்ணமி நாளில் பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். அதன்படி, மார்கழி மாத பவுர்ணமி வருகிற 13-ந்தேதி அதிகாலை 5.29 மணிக்கு தொடங்கி, மறுநாள் (14-ந்தேதி) அதிகாலை 4.46 மணிக்கு நிறைவு பெறுகிறது. அந்த நேரத்தில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    மேலும், ஆருத்ரா தரிசன வழிபாடும் 13-ந்தேதி நடைபெற உள்ளது. அப்போது மகா தீபம் ஏற்றப்பட்ட கொப்பரையில் சேகரிக்கப்பட்ட மகா தீப மை நடராஜருக்கு சாத்தப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும். அதன்பிறகு பக்தர்களுக்கு வழங்கப்படும்.

    பவுர்ணமி மற்றும் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ், ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

    • தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மிக, மிக கேள்விக்குறியாக உள்ளது.
    • கேப்டன் விஜயகாந்த் கூறுவதைப் போல தவறு செய்தவர் தண்டனை அனுபவித்தாக வேண்டும்.

    வேங்கிகால்:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று காலை சாமி தரிசனம் செய்தார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

    திருவண்ணாமலையில் இன்று ஒரு நாள் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் உள்ளது.

    நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் பார்வையிட உள்ளோம். மேம்பாலம் கட்டப்பட்ட 3 மாதத்தில் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. அந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளோம். தமிழகத்தில் நடக்கும் அவலங்கள் மற்றும் அனைத்து பிரச்சனைகளையும் சுட்டிக்காட்டி திருவண்ணாமலையில் இன்று மாலை மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது.

    தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மிக, மிக கேள்விக்குறியாக உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் முதல், விக்கிரவாண்டியில் பச்சிளம் குழந்தை கழிவுநீர் தொட்டியில் விழுந்து இறந்ததாக கூறப்படுவது வரை சிறிய குழந்தைகள் முதல் பெரிய பெண்கள் வரை எந்த பாதுகாப்பும் இல்லாத சூழல் உள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

    அரசு சட்ட ஒழுங்கை கையில் எடுத்து எல்லோருக்கும் பாதுகாப்பை உருவாக்கி தர வேண்டும். இது அரசின் கடமை. ஏற்கனவே உள்ள கட்சிக் கூட்டணியில் தே.மு.தி.க. தொடர்ந்து உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலை ஒட்டி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளோம். மிகப்பெரிய அளவில் கூட்டணி அமைந்தால் 234 பகுதிகளிலும் தே.மு.தி.க. கூட்டணி வெற்றி பெறும்.

    அமைச்சர் துரைமுருகன் வீட்டில் சோதனை செய்தது மிகவும் காலதாமதம். இந்த சோதனை முன்கூட்டியே நடந்திருக்க வேண்டும். லஞ்சம், ஊழல் தலை விரித்து ஆடுகிறது. நானும் வேலூர் மாவட்டம் தான். அங்கு என்ன என்ன பிரச்சனைகள் நடக்கிறது என்பது தெள்ளத்தெளிவாக தெரியும்.

    யாரை சரி கட்டுவதற்காக அமைச்சர் டெல்லி போகிறார் என்பது தெரியவில்லை.

    அந்த அளவிற்கு ஆளும் கட்சியில் லஞ்சம், ஊழல் தலை விரித்து ஆடுகிறது.

    அமைச்சர் வீட்டில் என்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது என்பது குறித்து மக்களுக்கு "உள்ளங்கையில் நெல்லிக்கனியாய்" தெளிவுபடுத்த வேண்டும்.

    சோதனையின் போது என்ன நடக்கிறது என்பது மக்களுக்கு தெரிவதில்லை.

    கேப்டன் விஜயகாந்த் கூறுவதைப் போல தவறு செய்தவர் தண்டனை அனுபவித்தாக வேண்டும். உப்பு தின்னவன் தண்ணி குடிக்க வேண்டும்.

    லஞ்சம், ஊழல் மட்டுமின்றி கனிம வள கொள்ளை மற்றும் மணல் கொள்ளை தலைவிரித்து ஆடுகிறது. இதை தடுக்கக்கூடிய வகையில் இந்த சோதனை அமைய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.


    அருணாசலேஸ்வரர் சன்னதி முன்பு அலங்கார ரூபத்தில் சாமி அம்பாள் எழுந்தருள, வேதமந்திரங்கள் முழங்க தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. முன்னதாக அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சம்பந்த விநாயகர், உண்ணாமலை சமேத அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவில் கோவில் இணை ஆணையர் சி.ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர். சுற்றியுள்ள பகுதிகளைச் சார்ந்த ஏராளமான பக்தர்கள் கொட்டும் பணியையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    உத்தராயண புண்ணிய கால பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு இன்று முதல் காலை மற்றும் மாலை வேளைகளில் சாமி அம்பாள் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் புரிவர்.

    மாட்டு பொங்கல் தினத்தன்று சாமி அம்பாள் அருணாசலேஸ்வரர் கோவில் திட்டிவாசல் வழியாக சூரிய பகவானுக்கு காட்சி தந்து மாட வீதியில் வலம் வருவர். மாடவீதியில் 3 முறை வலம் வந்த பின்னர் மாலையில் திருவூடல் நிகழ்ச்சி நடைபெறும்.

    மாட்டுப் பொங்கல் தினத்தில் அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள நந்தியம் பெருமான் பலகாரங்கள் மற்றும் காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி தருவார். 

    • வழக்கம் போல, சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டன.
    • தரிசனத்துக்கு அனுமதிப்பதில் பாரபட்சம் காட்டப்படுவதாக, அங்கிருந்த ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் பக்தர்கள் ஈடுபட்டனர்.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் தரிசனத்துக்காக அலைமோதுகிறது.

    இந்நிலையில், அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் வார இறுதி விடுமுறை தினமான நேற்று வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.

    குறிப்பாக, வெளிமாவட்ட மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக மாநில பக்தர்கள் வருகை அதிகரித்தது.

    அதோடு, சபரிமலை செல்லும் பக்தர்கள், மேல்மருவத்தூர் செல்லும் செவ்வாடை பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

    நேற்று மாட வீதி வரை 1 கி.மீ. தூரம் நீண்டிருந்தது. சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்த பிறகே தரிசனம் செய்தனர்.

    பொது தரிசன வரிசை ராஜகோபுரம் வழியாகவும், ரூ. 50 கட்டண தரிசன வரிசை அம்மணி அம்மன் கோபுரம் வழியாகவும் அனுமதிக்கப்பட்டது. தரிசனம் முடிந்ததும், தெற்கு கோபுரம் வழியாக வெளியே செல்ல ஏற்பாடு செய்திருந்தனர்.

    வழக்கம் போல, சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டன. விரைவு தரிசனத்துக்காக ஒற்றை வழி தரிசன முறை ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனாலும், அம்மணி அம்மன் கோபுரம் நுழைவு வாயில், கிளி கோபுரம் நுழைவு வாயில்களில் நெரிசல் காணப்பட்டது.

    தரிசனத்துக்கு அனுமதிப்பதில் பாரபட்சம் காட்டப்படுவதாக, அங்கிருந்த ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் பக்தர்கள் ஈடுபட்டனர்.

    மேலும், பக்தர்கள் வருகை அதிகரித்ததால், திருவண்ணாமலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. மாட வீதியில் கார் உள்ளிட்ட வாகனங்கள் தடை செய்யப்பட்டது.

    ஆனாலும், வட ஒத்தைவாடை தெரு, சின்னக்கடை தெரு, சன்னதி தெரு உள்ளிட்ட பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

    இந்நிலையில், நாளை மறுநாள் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையொட்டி, பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய தேவையான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது. மேலும், மாட வீதியில் கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

    • முதல் கட்ட விசாரணையில் 4 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவண்ணாமலை:

    சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் மகாகாலயாசர் (வயது45). இவரது மனைவி ருக்மணி பிரியா(40). மகள் ஜலந்தரி (17) மகன் ஆகாஷ்குமார் (15) ஆகியோர் திருவண்ணாமலைக்கு ஆன்மீக பயணமாக வந்தனர்.

    அவர்கள் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சூரியலிங்கம் அருகே தனியாருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் தங்கியிருந்தனர்.

    இன்று காலை நீண்ட நேரமாகியும் அவர்கள் வெளியே வரவில்லை. பண்ணை வீட்டில் வேலை செய்யும் பணியாளர்கள் சென்று பார்த்த போது அறை கதவு பூட்டப்பட்டிருந்தது. சந்தேகமடைந்த அவர்கள் இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    அப்போது வீட்டுக்குள் 4 பேரும் இறந்து கிடந்தனர். அவர்கள் உடல்களை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அவர்கள் தங்கியிருந்த அறையில் டைரி ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதில் நாங்கள் இறைவனிடம் செல்கிறோம் என எழுதப்பட்டுள்ளது. முதல் கட்ட விசாரணையில் 4 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

    தொடர்ந்து இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் திருவண்ணாமலையில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மகா தீபம் இன்று மாலை 11-வது நாளாக ஏற்றப்பட உள்ளன.
    • பக்தர்களுக்கு தீப மை பிரசாதம் வழங்கப்பட உள்ளன.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலையில் 2,668 அடி உயரம் உள்ள திரு அண்ணாமலையின் உச்சியில் மகா தீப தரிசனம் நாளை அதிகாலையுடன் நிறைவுபெற உள்ளது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா, துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த 1-ந்தேதி தொடங்கியது. பிடாரி அம்மன், விநாயகர் உற்சவங்கள் அடுத்தடுத்த நாட்களில் நடை பெற்றது.

    பின்னர், மூலவர் சன்னிதி முன்பு தங்கக் கொடி மரத்தில் கடந்த 4-ந்தேதி கொடியேற்றம் நடைபெற்றதும், 10 நாள் உற்சவம் ஆரம்பமானது. விழாவின் முக்கிய நிகழ்வாக கடந்த 10-ந்தேதி மகா தேரோட்டம் நடைபெற்றது.

    13-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு மூலவர் சன்னிதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டன. ஜோதிப்பிழம்பாக அருணாசலேஸ்வரர் காட்சி கொடுத்ததால், கோவில் நடை அடைக்கப்பட்டது.

    பின்னர் அண்ணாமலையாரைக் குளிர்விக்கும் வகையில், ஐயங்குளத்தில் 3 நாள் தெப்பல் உற்சவம் நடைபெற்றது. இதற்கிடையில், உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இந்த நிலையில் அண்ணாமலை உச்சியில் மகா தீபத்தை 11 நாட்கள் பக்தர்கள் தரிசிப்பது வழக்கம். அதன்படி, மகா தீபம் இன்று மாலை 11-வது நாளாக ஏற்றப்பட உள்ளன.

    இதையடுத்து மகா தீப மலையிலிருந்து, தீபக் கொப்பரை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு நாளை கொண்டு வரப்பட உள்ளது. பின்னர், அதிலிருந்து சேகரிக்கப்படும் கரு மையுடன், வாசனைத் திரவியம் சேர்க்கப்பட்டு, ஆரூத்ரா தரிசனத்தின்போது, ஸ்ரீ நடராஜருக்கு சாத்தப்படும். பிறகு, பக்தர்களுக்கு தீப மை பிரசாதம் வழங்கப்பட உள்ளன.

    ×