என் மலர்
திருவள்ளூர்
- புதுவாயல்-பழவேற்காடு இடையே உள்ள 4 கிலோமீட்டர் தூரம் 4 வழி சாலையாக விரிவாக்க திட்டப்பணி நடைபெற்று வருகிறது.
- 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் 4 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் வாக்குவாதம் செய்தனர்.
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த சின்னக்காவனம், பெரிய காவனம் பகுதியில் புதுவாயல்-பழவேற்காடு இடையே உள்ள 4 கிலோமீட்டர் தூரம் 4 வழி சாலையாக விரிவாக்க திட்டப்பணி நடைபெற்று வருகிறது.
இந்த சாலையில் பெரிய காவனம் ரெயில்வே கேட் முதல் சின்னக்காவனம் வரை சாலையின் இருபுறமும் 100-க்கு மேற்பட்ட வீடுகள் பழமைவாய்ந்த 5 கோவில்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் செல்வகுமார், நில எடுப்பு தனி தாசில்தார் ரமேஷ், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் பாலச்சந்தர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் 4 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் வாக்குவாதம் செய்தனர்.
- விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா இரவு விமரிசையாக நடைபெற்றது.
- முதியவர் ராஜேசும், அவரது பேத்தியும் உடல் கருகி துடித்தனர்.
திருவள்ளூர்:
ஊத்துக்கோட்டை அடுத்த தராட்சி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் விழா கடந்த 21-தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா இரவு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் ஊர்வலமாக வந்து தீமிதித்தனர்.
அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் (வயது 50) என்ற முதியவர் அவரது 1 வயது பேத்தியுடன் தீயில் இறங்கினார். அவர் தீயில் ஓடியபோது திடீரென கால் தவறி பேத்தியுடன் தீக்குள் விழுந்தார்.
இதில் முதியவர் ராஜேசும், அவரது பேத்தியும் உடல் கருகி துடித்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர்களை மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தீமிதி திருவிழாவில் பேத்தியுடன் முதியவர் தவறி விழுந்து உடல் கருகிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு குழந்தைக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- கணவர் இறந்த நிலையில் கள்ளக்காதலில் குழந்தை பிறந்ததால் அவர் குழந்தையை தரை பள்ளத்தில் வீசி சென்று உள்ளார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த கொசவம்பாளையம் சுடுகாடு அருகே உள்ள காலி இடத்தில் இன்று காலை பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை உயிருடன் பள்ளத்தில் போடப்பட்டு இருந்தது.
குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அவ்வழியாக சென்ற பொதுமக்கள் வந்து பார்த்தபோது பச்சிளம் குழந்தை உயிருக்கு போராடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்ததும் திருவள்ளூர் தாலுகா போலீசார் விரைந்து வந்து குழந்தையை மீட்டு விசாரணை நடத்தினர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு குழந்தைக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். குழந்தையின் முகத்தில் சிறிய காயங்கள் இருந்தன.
இதற்கிடையே காலை 10 மணியளவில் அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்து போனது. விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த கணவரை இழந்த இளம்பெண் ஒருவர் குழந்தை பிறந்ததும் அதனை வீசி சென்று இருப்பது தெரிந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கணவர் இறந்த நிலையில் கள்ளக்காதலில் குழந்தை பிறந்ததால் அவர் குழந்தையை தரை பள்ளத்தில் வீசி சென்று உள்ளார். இதில் குழிக்குள் விழுந்த குழந்தை காயம் அடைந்து இறந்து உள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மாணவன் பிரவீன் குமாருக்கு விடுதியில் தங்கி படிக்க விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருத்தணி:
திருத்தணி அடுத்த சீனிவாசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் பிரவீன்குமார் (வயது11). இவர், பொதட்டூர் பேட்டை அருகே உள்ள பாண்டரவேடு கிராமத்தில் உள்ள புனித இதய மேல் நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி 6-ம் வகுப்பு படித்து வந்தார். ஆனால் மாணவன் பிரவீன் குமாருக்கு விடுதியில் தங்கி படிக்க விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சனி, ஞாயிறு விடுமுறை நாளில் விடுதியில் இருந்து வீட்டுக்கு வந்திருந்தார். பின்னர் அவர் பள்ளிக்கு செல்ல மறுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவரை பெற்றோர் பள்ளியில் விட்டு வந்து உள்ளனர்.
இந்த நிலையில் பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த மாணவன் பிரவீன்குமார் திடீரென வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
விடுதியில் தங்கி படிக்க விருப்ப மில்லாத நிலையில் பெற்றோரின் வற்புறுத்தலால் மனம் உடைந்த மாணவன் தற்கொலை செய்து இருக்கலாம் என்று தெரிகிறது. இது குறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பள்ளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதயசூரியனை கைது செய்தனர்.
- பாதிக்கப்பட்ட மூதாட்டி பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பள்ளிப்பாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே காடச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் உதயசூரியன் (வயது 65) பெயிண்டர். இவர், சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த 70 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடினார்.
இது குறித்து பள்ளிப்பாளையம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் பள்ளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதயசூரியனை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட மூதாட்டி பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- வருவாய்த்துறை அதிகாரிகள், திருப்பாலைவனம் காவல்துறையினர் விசாரித்தனர்.
- தேனாம்பட்டை பணியாளர் இழப்பீடு ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்டது.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த குன்னமஞ்சேரி நரிக்குறவர் காலனி பகுதி சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (17). இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு திருப்பாலைவனம் அடுத்த பாக்கம் கிராமத்தில் தனியார் இறால் வளர்ப்பு பண்ணையில் காகம் விரட்டும் பணி செய்து வந்தார். அங்கு வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென 6/9/2010 அன்று இறந்துவிட்டதால் இதுகுறித்து பெற்றோர்களிடம் தெரிவிக்காமல் பொன்னேரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு சேர்த்ததால் உறவினர்கள் ஆர்டிஓ அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
வருவாய்த்துறை அதிகாரிகள், திருப்பாலைவனம் காவல்துறையினர் விசாரித்தனர். பிரேத பரிசோதனையில் விஷத்தன்மையுடன் கலந்த உணவு சாப்பிட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பாலகிருஷ்ணனின் தந்தை கொள்லானுர்சிங், சிபிஐ விசாரிக்க கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இதுகுறித்து இழப்பீடு வேண்டி தேனாம்பட்டை பணியாளர் இழப்பீடு ஆணையம் 11-ல் வழக்கு தொடர்ந்தார். பன்னிரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் விசாரணை நிறைவடைந்ததையடுத்து, இழப்பீடு தொகையாக 9 லட்சத்து 14 ஆயிரத்து 960 ரூபாய் வழங்க உத்தரவிட்டு இழப்பீடு ஆணையம் தீர்ப்பளித்தது.
இவ்வழக்கில் வாதாடிய வழக்கறிஞர் கார்த்திகேயனை பொன்னேரி நீதிமன்றம் முன்பு நரிக்குறவர்கள் குடும்பமாக வந்து மலர் மாலையிட்டு ஊசிமணி பாசி மாலை வழங்கி ஆடல் பாடலுடன் நன்றி தெரிவித்தனர்.
- சவுடு மண் மூன்று அடி மட்டுமே அள்ள வேண்டும் என்பது கனிமவளத்துறையின் விதி ஆகும்.
- போராட்டத்தால் சாலையில் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் அருகே உள்ள வெள்ளியூர் ஏரியில் திருவள்ளூர் மாவட்ட கனிமவளத் துறை சார்பாக சவுடு மண் எடுக்க அனுமதி அளித்தது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை முதல் இந்த ஏரியில் ஹிட்டாச்சி இயந்திரங்கள் மூலம் லாரிகளுக்கு சவுடு மண் அள்ளப்படுகிறது. இவ்வாறு அள்ளப்படும் சவுடு மண் மூன்று அடி மட்டுமே அள்ள வேண்டும் என்பது கனிமவளத்துறையின் விதி ஆகும்.
ஆனால், நாள்தோறும் பல அடி அழத்துக்கு மண் அள்ளப்பட்டதாகவும், இந்த ஏரிக்கு அருகிலே உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி மற்றும் மகளிர் உயர்நிலைப்பள்ளி கட்டிடங்கள் பாதிக்கப்படுவதாகவும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டி இன்று மதியம்
சவுடு மண் குவாரியை முற்றுகையிட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், குவாரியை உடனடியாக மூட வேண்டும் என கோரிக்கை வைத்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
சம்பவ இடத்துக்கு வெங்கல் காவல் நிலைய போலீசார் விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இருப்பினும், கிராம மக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சவுடு மண் குவாரிக்கு வந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வருவாய்த்துறை, கனிமவளத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வருவதற்கு காலதாமதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் திடீரென தாமரைப்பாக்கம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பிரச்சினையால் சாலையில் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன.
இதன் பின்னர், சம்பவ இடத்துக்கு திருவள்ளூர் தாசில்தார் சுரேஷ்குமார் தலைமையில் வருவாய் துறையினர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அப்போது கிராம மக்கள் குவாரியை உடனடியாக மூடினால் மட்டுமே தொடர் போராட்டத்தை கைவிடுவோம்! என உறுதியுடன் கூறினர். இதனை ஏற்று வருவாய்த்துறை அதிகாரிகள் தங்களது மேலதிகாரிகளிடம் பேசிவிட்டு தற்காலிகமாக சவுடுமண் குவாரியை மூட உத்தரவிட்டனர். இதனால் ஏரியில் இருந்த லாரிகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டன. இதன்பின்னர், ஏரிக்குள் லாரிகள் செல்லாத வண்ணம் பள்ளம் வெட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.
இப்பிரச்சனையால் இன்று மதியம் இப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
- விகிதாவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருத்தணி:
திருத்தணி அடுத்த வி.சி. ஆர். கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி (வயது30). கட்டிட தொழிலாளி. இவரது மகள் விகிதா(7). கடந்த வாரம் பாலாஜி குடும்பத்துடன் குடிசை வீட்டில் தூங்கினார்.
நள்ளிரவில் பாலாஜி, அவரது மகள் விகிதா ஆகிய 2 பேரையும் பாம்பு கடித்து சென்று விட்டது.
இதில் உயிருக்கு போராடிய அவர்கள் 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மேல்சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பாலாஜி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகள் விகிதாவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
- கழிவுகளை அகற்ற ரூ.47 லட்சத்து 50 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்றார்.
வடகிழக்கு பருவமழையில் புழல் ஏரி நிரம்பும்போது கொசஸ்தலை ஆற்றில் உபரிநீர் திறந்துவிடப்படும். அதிக அளவு உபரிநீர் திறந்து விடப்படும்போது கொசஸ்தலை ஆற்றின் கரையோர குடியிருப்புகளில் புகுந்து பலத்த சேதமும் ஏற்படும்.
இந்நிலையில் புழல் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றின் ஒரு பகுதி திருவள்ளூர் நகர பஞ்சாயத்துகளில் வசிக்கும் மக்கள் குப்பை கொட்டும் இடமாக மாறி உள்ளது. இதுகுறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
கடந்த வாரம் நாரவாரி குப்பம் ஊராட்சியை சேர்ந்த லாரி ஒன்று புழல் நீர்தேக்கப்பகுதியில் கழிவுகளை கொட்டியதால் சுமார் 250 மீட்டர் தூரத்துக்கு துர்நாற்றம் வீசியது. இந்நிலை நீடித்தால் புழல் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்படும்போது கழிவுகளும் அடித்து செல்லப்பட்டு குடியிருப்புகளுக்குள் வர வாய்ப்பு இருப்பதாக அப்பகுதியில் குடியிருப்பவர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து மாதவரம் குடியிருப்பு நலசங்க தலைவர் நீலகண்ணன் கூறும்போது, கடந்த 2017-ம் ஆண்டு முதல் இதேநிலை தான் நீடிக்கிறது. 2019-ல் இப்பகுதியில் பூங்கா ஒன்று அமைக்க திட்டம் வகுக்கப்பட்டு அது கிடப்பில் போடப்பட்டது. பிறகு மீண்டும் இப்பகுதி குப்பை கூடமாக மாறியது. 2020-ல் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பொதுபணித் துறைக்கு நீர்தேக்கத்தை தூர்வாரி அப்பகுதியை சுற்றி வேலி அமைக்க உத்தரவிட்டது. நாரவாரி குப்பம் பஞ்சாயத்து அதிகாரிகள் குப்பைகளை தரம் பிரிக்கும் பகுதி அருகே ஒரு மயானம் உள்ளது. தற்போது அவர்கள் நீர்தேக்கத்தின் அருகிலேயே கழிவுகளை கொட்டுகின்றனர். பெரும்பாலும் அவர்கள் இரவு நேரங்களில் தான் கழிவுகளை கொட்டுகின்றனர் என்றார்.
இதுகுறித்து நாரவாரி குப்பத்தின் நிர்வாக அதிகாரி கூறும்போது, கழிவுகளை அகற்ற வேறு இடங்களை தேடி வருகிறோம். இதற்கான இடம் பாடிய நல்லூரில் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. மேலும் கழிவுகளை அகற்ற ரூ.47 லட்சத்து 50 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்றார்.
இந்த விவகாரம் குறித்து பரிசீலித்து வருவதாக கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் தெரிவித்துள்ளார்.
- மதுபோதையில் இருந்த ராஜேசிடம் சம்பளம் பாக்கி கேட்டு தொழிலாளர்கள் மோதலில் ஈடுபட்டனர்.
- தலையில் பலத்த காயம் அடைந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த புதுச்சத்திரம் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள். அவர்களை சத்தீஷ்கர் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளியான ராஜேஷ்(வயது30) என்பவர் சம்பளம் பேசி அழைத்து வந்திருந்ததாக தெரிகிறது. அவர் மொத்தமாக சம்பளத்தை வாங்கி மற்ற தொழிலாளர்களுக்கு பிரித்து கொடுத்து வந்தார்.
இந்நிலையில் அங்கு பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் சிலருக்கு ரூ.20 ஆயிரம்வரை சம்பள பணத்தை ராஜேஷ் கொடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கும் மற்ற தொழிலாளர்களுக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் மதுபோதையில் இருந்த ராஜேசிடம் சம்பளம் பாக்கி கேட்டு தொழிலாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். திடீரென அவர்கள் இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினர்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் வெள்ளவேடு போலீசார் சம்பவ இடதுக்கு விரைந்து வந்து ராஜேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களாள நிஷாத் (20) சச்சின் ( 20 ) மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
- சுமார் 1 லட்சம் பேர் திருவள்ளூர் ரெயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.
- மாற்றுத்திறனாளிகள் ரெயில் நிலையத்திற்கு வந்து செல்ல சாய்தளம் அமைக்க வலியுறுத்தியும் அது சம்மந்தமான எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என தெரிகிறது.
திருவள்ளூர் ரெயில் நிலையம் வழியாக தினந்தோறும் சென்னையில் இருந்து அரக்கோணம், திருத்தணி மற்றும் காட்பாடி வழியாக திருப்பதி, மும்பை, பெங்களூர் செல்லும் விரைவு ரெயில்களும், மின்சார புறநகர் ரெயில்கள் மற்றும் சரக்கு ரெயில்கள் என நாள் ஒன்றுக்கு 350-க்கும் மேற்பட்ட ரெயில்கள் கடந்தும் செல்கின்றன.
மாவட்டத் தலைநகரான திருவள்ளூரில் இருந்து நாள்தோறும், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள், வியாபாரிகள், வேலைக்கு செல்லும் பெண்கள், ஆண்கள் என சுமார் 1 லட்சம் பேர் திருவள்ளூர் ரெயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.
திருவள்ளூரில் இருந்து சென்னைக்கும், அரக்கோணத்திற்கும் செல்லும் ரெயில்களில் அதிகளவில் பயணிகள் செல்வதால் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த ரெயில் நிலையமாக இந்த திருவள்ளூர் ரெயில் நிலையம் உள்ளது.
திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் உள்ள 6 நடைமேடைகளில் இரு புறமும் மேம்பாலம் இருந்தும் ஒரு சிலரைத் தவிர ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர் என அனைத்து பொது மக்களும் ரெயில் தண்டவாளத்தை கடந்து தான் செல்கின்றனர். இதனால் அடிக்கடி ரெயில்கள் மோதி விபத்துக்களும் உயிரிழப்பும் ஏற்படுகிறது. மணவாளநகர் பகுதியில் இருந்து பெரிய குப்பம் செல்லும் பொது மக்களும் ரெயில் தண்டவாளங்களை கடந்து செல்கின்றனர்.
இதனை தடுக்கும் வகையில் கடந்த 2019-ல் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் சுரங்கப்பாதை, மற்றும் எஸ்கலேட்டர் தானியங்கி நடை மேடை, முதியவர்கள் படிக்கட்டுகளில் ஏறி இறங்க முடியாததால் அவர்களின் வசதிக்காக லிப்ட் வசதி, ஆகியவை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.
2019 - ல் கொரோனா தொற்று காரணமாக சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் காலதாமதமாக தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது. ஆனால் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்த நிலையில் ரெயில் பயணிகள் பாதுகாப்பு நடவடிக்கை, மழை நீர் ஒழுகுதல், மின் விளக்கு, ஒலி பெருக்கி வசதி, சி.சி.டிவி கேமரா வசதி, மின்சாரம் தடைபடும் நேரங்களில் பயன் படுத்தக் கூடிய தடை இல்லா மின்சார விளக்கு வசதி, நடைமேடை செல்லும் வழி காட்டி பலகைகள், மின்னணு தகவல் பலகை, டைல்ஸ் பதிக்கப்பட்ட நடந்து செல்லும் பாதை, நீர் வடிகால் அமைப்பு, குப்பை தொட்டிகள் போன்ற ஒரு சில பணிகள் நிறைவடையாததால் மக்கள் பயன்பாட்டிற்குகொண்டு வர தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
ரூ. 6 கோடி மதிப்பில் தொடங்கப்பட்ட இந்த பணியானது 2 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்த்த நிலையில் ரெயில் பயணிகளின் அத்தியாவசிய பணிகள் முடிவடையாமல் இருப்பதால் ரெயில் பயணிகள் ஆபத்தான நிலையில் ரெயில் தண்டவாளத்தை கடந்து செல்லும் நிலையே மேலும் தொடர்கிறது.
அதே நேரத்தில் மாற்றுத்திறனாளிகள் ரெயில் நிலையத்திற்கு வந்து செல்ல சாய்தளம் அமைக்க வலியுறுத்தியும் அது சம்மந்தமான எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என தெரிகிறது.
இதனால் சாய்தளம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே பொது மக்கள் பயணிகள் ரெயில் தண்டவா ளத்தை ஆபத்தான முறையில் கடக்கும் போது ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க மீதமுள்ள சுரங்கப்பாதைப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் முதிய வர்கள் படியில் ஏறி இறங்க முடியாத காரணத்தால் லிப்ட் வசதியும் ஏற்படுத்த வேண்டும் என்றும், எஸ்கலேட்டர் எனப்படும் தானியங்கி நடைமேடையை முதல் பிளாட்பாரத்திலும் அமைக்க வேண்டும் என்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- காப்பு கட்டி விரதம் இருந்த 350 பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.
- நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆத்துப்பாக்கம் கிராம பொதுமக்களும், விழா குழுவினர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இத்திருகோவிலில் 13 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று இரவு தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில், காப்பு கட்டி விரதம் இருந்த 350 பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.
தீமிதி திருவிழாவை முன்னிட்டு கடந்த 21-ம் தேதி வெள்ளிக்கிழமை கோவிலில் கொடியேற்றும் நிகழ்ச்சியும், பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அன்றிலிருந்து நாள்தோறும் பல்வேறு வகையான பூஜைகள்,கரகம் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி, கூழ் ஊற்றும் நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெற்றது.நேற்று மாலை ஆத்துப்பாக்கம் கிராமத்தில் உள்ள முனுசாமி தாத்தா கோவில் அருகே காப்பு கட்டி விரதம் இருந்த குமார மக்கள் புனித நீராடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதன் பின்னர், பூக்களாலும்,மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட அம்மன் ஊர் எல்லைக்கு சென்று பக்தர்களை கோவிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி வானவேடிக்கையுடன் நடைபெற்றது.இதன் பின்னர், கோவிலின் எதிரே அமைக்கப்பட்டு இருந்த தீக்குண்டத்தில் ஒருவர் பின், ஒருவராக இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.
இதன் பின்னர், மங்கள வாத்தியம் இசைக்க பூக்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட அம்மன் வானவேடிக்கையுடன் முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.இன்று மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் ஆத்துப்பாக்கம் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆத்துப்பாக்கம் கிராம பொதுமக்களும், விழா குழுவினர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.






