என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கே.சித்ராதேவி முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டன.
    • இரண்டு மாதங்களில் 105 கிராம் தங்கத்தை காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி உள்ளனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 2 மாதங்களுக்குப் பின்னர் உண்டியல்கள் இன்று திறக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கை தொகை எண்ணப்பட்டது.

    இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கே.சித்ராதேவி, கோயில் நிர்வாக அதிகாரிகள் சிறுவாபுரி சோ.செந்தில்குமார், திருநின்றவூர் சரவணன், ஆய்வாளர் கலைவாணன் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. இதில், ரூ.56 லட்சத்து 76 ஆயிரத்து 634 ரொக்கம், 105 கிராம் தங்கம், 5 கிலோ வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

    • கருவூலங்களும், சார்நிலைக் கருவூலங்களும் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படவேணடும்.
    • விடுமுறை நாளை ஈடுசெய்யும் பொருட்டு 26ம் தேதி பணிநாளாக அறிவிக்கப்படுகிறது.

    திருத்தணியில் அமைந்துள்ள திருமுருகப்பெருமானின் ஐந்தாம்படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் 9ம் தேதி (புதன்கிழமை) நடைபெறவிருக்கும் ஆடிக்கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

    மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும், சார்நிலைக் கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு 9ம் தேதி செயல்படவேணடும்.

    இந்த விடுமுறை நாளை ஈடுசெய்யும் பொருட்டு 26ம் தேதி (சனிக்கிழமை) அன்று பணிநாளாக அறிவிக்கப்படுகிறது.

    இந்த உள்ளூர் விடுமுறையானது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

    • மண்ணடி தனியார் தங்கும் விடுதியில் கொள்ளையர்கள் இருப்பது தெரியவந்தது.
    • கோர்ட்டில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

    மாதவரம்:

    சென்னை மாதவரத்தை அடுத்த பொன்னியம்மன் மேடு ஸ்ரீராம் நகர் பகுதியை சேர்ந்தவர் கவிதா ( 36). கடந்த மாதம் 14-ந் தேதி தனது குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது 3 பேர் கொண்ட மர்மகும்பல் இரு சக்கர வாகனத்தில் வந்து, கவிதா கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பறித்து சென்றனர். இதுகுறித்து கவிதா போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர். 200-க்கும் மேற்பட்ட கண்கணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் சென்னை மண்ணடி தனியார் தங்கும் விடுதியில் கொள்ளையர்கள் இருப்பது தெரியவந்தது.

    அங்கு விரைந்து சென்ற போலீசார் மகேந்திரகுமார், என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வட மாநிலத்தினர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது அவர்களை பிடிக்க துணை கமிஷனர் சக்திவேல் உத்தரவிட்டார்.

    உதவி கமிஷனர் ஆதி மூலம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், ஜெயப்பிரகாஷ் ஆகி யோர் கொண்ட தனிப்படை போலீசார், ராஜஸ்தான் சென்றனர். அங்கு செல்போன் சிக்னலை வைத்து கொள்ளையர்களை 'தீரன்' பட பாணியில் பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து கைது செய்தனர். அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம் மர்வார் கிராமத்தை சேர்ந்த தினேஷ் புஜ்ஜாரா (28), ரமேஷ் பஞ்சாரா (28) ஆகிய 2 கொள்ளையர்கள் மீதும் அந்த மாநிலத்தில் உள்ள காவல் நிலையங்களில் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்தது.

    அவர்களிடம் இருந்து 8 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

    • திருவள்ளூர் நகருக்கு தினந்தோறும் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
    • திருவள்ளூர் ஜெ.என் சாலையில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா உத்தரவிட்டார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் இருந்து அனைத்து இடங்களுக்கும் செல்லும் வகையில் பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளது. நவீன வசதியுடன் அரசு ஆஸ்பத்திரி, பள்ளி, கல்லூரிகள், நீதிமன்றம், பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் இயங்கி வருகிறது. மேலும் புகழ்பெற்ற வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் உள்ளது.

    இதனால் திருவள்ளூர் நகருக்கு தினந்தோறும் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். ஆனால் திருவள்ளூரில் அதற்கேற்ப சாலை வசதிகள் இல்லை. குறுகிய சாலைகளே உள்ளன. அதுவும் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு தற்காலிக கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். நடைபாதைகளும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    இதேபோல் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை உள்ள ஜெ.என் சாலை, சி.வி. நாயுடு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

    இந்த நிலையில் திருவள்ளூர் ஜெ.என் சாலையில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து திருவள்ளூர் நகராட்சி சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்ட நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அதிரடியாக அகற்றினர். நடைபாதைகளை ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    • வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அலுவலர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.
    • வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களின் சந்தேகத்திற்கு தேர்தல் துணை வட்டாட்சியர் பதிலளித்தார்.

    பொன்னேரி:

    பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் ஆர்.டி.ஒ அலுவலகத்தில் வட்டாட்சியர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் பணியில் முதலில் குடும்ப நபர்கள் சரிபார்த்தல், பின்னர் தனி நபர்கள் சரி பார்த்தல் படிவம் 6,7,8, பதிவு செய்யப்பட்டு பதிவேற்றம் செய்வது தொடர்பாக அலுவலர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டன.

    முகாமில் கலந்துகொண்ட வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களின் சந்தேகத்திற்கு தேர்தல் துணை வட்டாட்சியர் பதிலளித்தார்.

    முகாமில் தேர்தல் துணை வட்டாட்சியர் கனகவள்ளி மற்றும் 50க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • எர்ணாகுப்பம் கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் கோதண்டன் என்பவர் நடத்தி வருகிறார்.
    • கோதண்டன் பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள வேம்பேடு கிராமத்தில் அரசு அனுமதியுடன் சவுடு மண் குவாரி இயங்கி வருகிறது. இதனை எர்ணாகுப்பம் கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் கோதண்டன் என்பவர் நடத்தி வருகிறார்.

    இந்தநிலையில் மண் குவாரிக்கு கீழானூரை சேர்ந்த திருவள்ளூர் மேற்கு மாவட்ட பகுஜன்சமாஜ் கட்சியின் தலைவர் பிரேம்குமார் என்பவர் தனது ஆதரவாளர்களுடன் சென்று பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து கோதண்டன் பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் இன்று அதிகாலை பகுஜன் சமாஜ்கட்சியின் மாவட்ட தலைவர் பிரேம்குமாரை அதிரடியாக கைது செய்தனர். இவரது மனைவி கீழானூர் ஊராட்சி தலைவியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. பகுஜன்சமாஜ் கட்சி பிரமுகர் கைது செய்யப்பட்டு உள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆக்கிரமிப்புகளை அகற்றி கட்டிடங்களுக்கு சீல் வைத்தனர். மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.
    • கோவில் நிலத்தின் மதிப்பு ரூ.10 கோடி என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லியில் உள்ள திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலம் பூந்தமல்லி- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளது.

    இந்த நிலத்தை சிலர் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டி பயன்படுத்தி வந்தனர். இடத்தை காலிசெய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் இடத்தை காலி செய்யாமல் இருந்தனர்.

    இதைத்தொடர்ந்து இன்று காலை திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜப் பெருமாள் கோவில் அதிகாரிகள் மேற்பார்வையில் கோவில் ஊழியர்கள், வருவாய் துறையினர் அங்கிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி கட்டிடங்களுக்கு சீல் வைத்தனர். மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. மீட்கப்பட்ட கோவில் நிலத்தின் மதிப்பு ரூ.10 கோடி என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • நிறுத்தப்பட்ட மின்பஸ் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    • கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் என அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    திருநின்றவூர்:

    ஆவடி பஸ்நிலையத்தில் இருந்து தினந்தோறும் மொத்தம் 177 பஸ்கள் இயங்கி வருகிறது.இதில் 14 மினி பஸ்கள் ஆகும். ஆவடியில் இருந்து கோயம்பேடு, தாம்பரம், அம்பத்தூர், பாரிமுனை,பல்லாவரம், ஆகிய இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இந்த நிலையில் ஆவடியில் இருந்து பெரும்பாலான பஸ்போக்குவரத்து குறைக்கப்பட்டு இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

    இதற்கிடையே ஆவடி பஸ் நிலையத்தில் இருந்து திருவேற்காட்டிற்கு இயக்கப்பட்ட மினிபஸ்(எஸ்52) திடீரென நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். அந்த பஸ்சை நம்பி வரும் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த மினபஸ் சேவை கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.ஆவடி சந்தை, வசந்தம் நகர், கோவர்தனகிரி, ஐயங்குளம், பருத்திப்பட்டு, சுந்தரசோழபுரம் வழியாக திருவேற்காடு வரை சென்று வந்தது. திருவேற்காடு கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், மாணவர்கள் உட்பட அனைவரும் இந்த மினி பஸ்சை அதிகம் பயன்படுத்தினர். தற்போது இந்த பஸ் நிறுத்தப்பட்டு உள்ளதால் பயணிகள் அவதி அடைந்து உள்ளனர்.

    தற்போது ஆடி மாதம் என்பதால், திருவேற்காடு கருமாரி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே, இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நிறுத்தப்பட்ட மின்பஸ் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ஆவடியில் இருந்து அண்ணா சதுக்கம் வரை செல்லக்கூடிய 40ஏ, 24 சி ஆகிய பஸ்களும் தற்போது இயங்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதனால் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் என அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    ஆவடி பஸ்நிலையத்தில் இருந்து திருவேற்காடு, கோவில் பதாகை, சேக்காடு அண்ணாநகர், காமராஜர் உள்ளிட்ட இடங்களுக்கு இயங்கி வந்த மினிபஸ் சேவைகளும் குறைக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கடந்த ஜூன் 1-ந்தேதி செல்வத்தின் தாய் தெய்வானை இறந்து போனார்.
    • மாமியார் இறப்பால் மணிமேகலை மிகவும் மனவேதனையில் இருந்தார்.

    திருவள்ளூர்:

    திருத்தணி அடுத்த ஆர்.கே.பேட்டை அருகே உள்ள விளக்கணாம்பூடி மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி மணிமேகலை(வயது56).

    கடந்த ஜூன் 1-ந்தேதி செல்வத்தின் தாய் தெய்வானை இறந்து போனார். மாமியார் இறப்பால் மணிமேகலை மிகவும் மனவேதனையில் இருந்தார்.

    இந்த நிலையில் அன்று இரவே மணிமேகலை தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் உடல் கருகிய அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    அவரது உடல் நிலை மோசம் அடைந்ததால் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிசிச்சை பலனின்றி மணிமேகலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • 10 ஆயிரம் மீனவர்களுக்கு இது முக்கிய வாழ்வாதார இடமாக உள்ளது.
    • பழவேற்காடு ஏரியில் பிடிக்கப்படும் நண்டு, இறால்களுக்கு தனி சுவை உண்டு.

    பொன்னேரி:

    பழவேற்காடு ஏரி இந்தியாவின் மிகப்பெரிய 2-வது உவர்ப்பு நீர் ஏரி ஆகும். இதனை சுற்றி 60-க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் சுமார் 1500 க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடித்து வருகின்றனர். சுமார் 10 ஆயிரம் மீனவர்களுக்கு இது முக்கிய வாழ்வாதார இடமாக உள்ளது.

    இங்கு 150-க்கும் மேற்பட்ட வகையான மீன்கள்,இறால்,நண்டுகள், பிடிபட்டு வருகிறது. பழவேற்காடு மீனுக்கு என்று தனி மவுசு உண்டு. பெரும்பாலும் இங்கு பிடிக்கப்படும் மீன்கள் உடனடியாக விற்பனைக்கு கரைக்குகொண்டு வரப்படுவதால் ஐஸ்கட்டிகளில் பதப்படுத்தாமல் உடனடியாக விற்பனை செய்யப்படுகிறது.

    இதனால் பழவேற்காடு மீன்களை வாங்க சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். இதனால் பழவேற்காட்டில் மீன்விற்பனை களைகட்டி காணப்படுகிறது.

    மேலும் பழவேற்காடு ஏரியில் பிடிக்கப்படும் நண்டு, இறால்களுக்கு தனி சுவை உண்டு. இதனால் இங்குள்ள நண்டு, இறால்களை வாங்க அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள்.

    ஏரியில் பிடிக்கப்படும் நண்டுகள் சணல் மூலம் உயிருடன் கட்டப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த கட்டு நண்டு மிகவும் பெயர் போனவை. ஒரு நண்டு 50 கிராம் முதல் 11/2 கிலோவிற்கு மேல் இருக்கும்.

    பழவேற்காடு நண்டுக்கு தற்போது மவுசு மேலும் அதிகரித்து உள்ளது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பழவேற்காடு பகுதிக்கு வந்து தங்களுக்கு பிடித்தமான பெரிய நண்டுகளை வாங்கி செல்கிறார்கள். ஒரு கிேலா நண்டு ரூ.400 முதல் ரூ.800 வரை விற்கப்படுகிறது.

    ஒரு கிலோவுக்கு மேல் உள்ள நண்டு ரூ.2 ஆயிரத்து 200 வரை விலை போகிறது.

    இதுகுறித்து நண்டு வியாபாரி ராஜா, சங்கீதா ஆகியோர் கூறும்போது, பழவேற்காடு நண்டுக்கு என தனி சுவை உண்டு. இதனால் இங்கு பிடிபடும் நண்டுகளை அதிகம் பேர் விரும்பி வாங்கி செல்கிறார்கள். இப்போது பழவேற்காடு நண்டுகளை வாங்க அதிகாமானோர் வந்து செல்கிறார்கள். நண்டு மிளகு ரசம் வைத்து சாப்பிட்டால் நாள்பட்ட சளி குறையும்.ஒரு நண்டு ஒரு கிலோவிற்கு மேல் இருந்தால் கிலோ 2200 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. பெரியவகை நண்டுகளின் கொடுக்குகளை அதன் உடம்புடன் சனலை வைத்து கட்டி விற்பனை செய்யப்படுகின்றன. இவை மிகவும் ஆபத்தானது. விரலை கடித்தால் துண்டாகி விடும் ஆபத்து உள்ளது. பழக்கம் உள்ளவர்கள் இதனை எளிதில் கையாள முடியும் என்றனர்.

    • பூஜையின் நிறைவாக அனைத்து பெண் பக்தர்களுக்கும் மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்பட்டது.
    • சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையத்தில் உள்ள ஆரணி ஆற்றங்கரையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு பவானி அம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடித்திருவிழா துவங்கி நடைபெற்று வருகிறது. இத்திருவிழா 14 வாரங்கள் நடைபெறும்.

    இத்திருவிழாவுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து தங்களதுநேர்த்தி கடனை செலுத்தி விட்டு செல்வர்.

     இந்நிலையில், ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு இன்று இரவு இக்கோவிலில் விளக்கு பூஜை மற்றும் சுவாமி பிரகார புறப்பாடு நடைபெற்றது. 108 பெண் பக்தர்கள் விளக்கு பூஜையில் கலந்து கொண்டனர். முன்னதாக சுவாமிக்கு மகா அபிஷேகம், மகா அலங்காரம், மகா தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றது. உற்சவர் வெள்ளிக்கவசத்தில் பிரகார புறப்பாடு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பூஜையின் நிறைவாக அனைத்து பெண் பக்தர்களுக்கும் மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சிகளில், சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவிலின் பரம்பரை அறங்காவலர் அஞ்சன் லோகமித்ரா தலைமையில் திருக்கோவிலின் செயல் அலுவலர் பிரகாஷ் மற்றும் ஊழியர்கள்,பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

    • மூலவர் முத்தங்கி அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
    • பக்தர்கள் கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்டநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு ஆறு வாரங்கள் தொடர்ச்சியாக வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை நாட்களில் சிறுவாபுரி கோவிலுக்கு சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விடியற் காலை முதலே நீண்ட வரிசையில் இருந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.

    அவ்வகையில் இன்று ஆடி மாத பௌர்ணமி மற்றும் செவ்வாய்க்கிழமை என்பதால் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மூலவருக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மூலவர் முத்தங்கி அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    முருகப்பெருமானை தரிசனம் செய்வதற்காக இன்று காலை முதலே பொது தரிசனம், ரூ.50, ரூ.100 கட்டண தரிசனம் என அனைத்து வரிசைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கோவிலுக்கு வெளியேயும், காத்திருப்பு மண்டபம் உள்ளிட்ட இடங்களில் கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் சுமார் 1 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட வசதிகளை கோயில் செயல் அலுவலர் செந்தில்குமார் தலைமையில் திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

    ×