என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெரியபாளையம் பவானி அம்மன் திருக்கோவிலில் ஆடி பௌர்ணமி விளக்கு பூஜை
- பூஜையின் நிறைவாக அனைத்து பெண் பக்தர்களுக்கும் மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்பட்டது.
- சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையத்தில் உள்ள ஆரணி ஆற்றங்கரையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு பவானி அம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடித்திருவிழா துவங்கி நடைபெற்று வருகிறது. இத்திருவிழா 14 வாரங்கள் நடைபெறும்.
இத்திருவிழாவுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து தங்களதுநேர்த்தி கடனை செலுத்தி விட்டு செல்வர்.
இந்நிலையில், ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு இன்று இரவு இக்கோவிலில் விளக்கு பூஜை மற்றும் சுவாமி பிரகார புறப்பாடு நடைபெற்றது. 108 பெண் பக்தர்கள் விளக்கு பூஜையில் கலந்து கொண்டனர். முன்னதாக சுவாமிக்கு மகா அபிஷேகம், மகா அலங்காரம், மகா தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றது. உற்சவர் வெள்ளிக்கவசத்தில் பிரகார புறப்பாடு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பூஜையின் நிறைவாக அனைத்து பெண் பக்தர்களுக்கும் மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிகளில், சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவிலின் பரம்பரை அறங்காவலர் அஞ்சன் லோகமித்ரா தலைமையில் திருக்கோவிலின் செயல் அலுவலர் பிரகாஷ் மற்றும் ஊழியர்கள்,பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.






